சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

12.210   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்

-
திருநாவுக் கரசுவளர்
திருத்தொண்டின் நெறிவாழ
வருஞானத் தவமுனிவர்
வாகீசர் வாய்மைதிகழ்
பெருநாமச் சீர்பரவல்
உறுகின்றேன் பேருலகில்
ஒருநாவுக் குரைசெய்ய
ஒண்ணாமை உணராதேன்.

[ 1]


திருநாவுக்கரசர் எனவும், சிவபெருமானின் திருத் தொண்டு வளர்வதற்குக் காரணமான நெறியில் நின்று உலகம் வாழும் பொருட்டு வரும் ஞானத்தவ முனிவரான வாகீசர் எனவும், வாய்மை விளங்குவதற்கு ஏதுவான பெருமையுடைய திருப்பெயரின் சிறப்பு களை, இப்பேருலகின்கண் எடுத்துக் கூறுதற்கு ஒரு நாவுக்கும் இய லாமையை உணராதவனாகிய எளியேன், போற்றத் துணிகின்றேன். *** திருத்தொண்டு வளர்தற்கு ஏதுவாய நெறி, புற வழிபாடு (சரியை) முதலாய நான்குமாம். வாகீசர் - நாவரசர். வாய்மை - ஈண்டு ஞானத்தை உணர்த்திற்று. திருநாவுக்கரசு எனும் பெயரைச் சொல்லியும் எழுதியுமே துன்பில் பதம் பெற்ற அப்பூதி அடிகளாரை நினைவு கொள்ள இவ்வாய்மை விளங்கும். ஒருநாவுக்கு - ஒருநாவுக்கு, ஒருநாவுக்கும் என இருநிலையிலும் கொள்ளலாம். உரைசெய்ய ஒண்ணாமை உணராதேன், பெருநாமச் சீர்பரவல் உறு கின்றேன் எனக்கூட்டுக.
தொன்மைமுறை வருமண்ணின்
துகளன்றித் துகளில்லா
நன்மைநிலை ஒழுக்கத்தின்
நலஞ்சிறந்த குடிமல்கிச்
சென்னிமதி புனையவளர்
மணிமாடச் செழும்பதிகள்
மன்னிநிறைந் துளதுதிரு
முனைப்பாடி வளநாடு.

[ 2]


திருமுனைப்பாடி என்னும் வளமை பொருந்திய நாடு, பழைய முறைப்படி வருகின்ற மண்ணின் துகளான புழுதியே அல்லாது, வேறு குற்றம் இல்லாத ஒழுக்கத்தின் நன்மையால் நிலை பெற்ற குடிமக்கள் பெருகி, உச்சியில் பிறைச்சந்திரன் தவழுமாறு, உயர்ந்த அழகிய மாளிகைகளை உடைய செழும்பதிகள் நிலைத்து நிறைந்துள்ளதாகும்.
குறிப்புரை: 'துகள்' என வருவனவற்றுள் முன்னையது புழுதி யையும், பின்னையது குற்றத்தையும் குறிப்பன. மண்ணின் புழுதி இயற்கையாக எங்கும் இருப்பது; இந்நாட்டிலும் அது உள்ளது இயற்கையே ஆதலின் 'தொன்மைமுறை வருமண்ணின் துகள்' என்றார். ஆனால் மக்கள் முதலானோர் செய்யும் குற்றம் என்பதோ ஈண்டு அறவே இல்லை என்பதாம்.

புனப்பண்ணை மணியினொடும்
புறவின்நறும் புதுமலரின்
கனப்பெண்ணில் திரைசுமந்து
கரைமருங்கு பெரும்பகட்டேர்
இனப்பண்ணை உழும்பண்ணை
எறிந்துலவி எவ்வுலகும்
வனப்பெண்ண வரும்பெண்ணை
மாநதிபாய் வளம்பெருகும்.

[ 3]


குறிஞ்சி நிலத்தில் உள்ள மூங்கில்களில் உள்ள முத்துக்களுடன், முல்லைப் புறவத்திலுள்ள மணம் பொருந்திய புதிய மலர்களின் தொகுதியை அளவில்லாத அலைகளால் சுமந்து, இரு பக்கங்களிலுமுள்ள கரைகளில் பெரிய எருமைகள் பூட்டிய அள வொத்த கூட்டமான உழவுத் தொழில் செய்வதற்கு இடமான வயல் களிலே எறிந்து, எங்கும் பரவி, உலவி, எல்லா உலகங்களிலும் தன் அழகை மேலாக நினைக்கத்தக்கதாக ஓடி வரும் 'பெண்ணை' என்கின்ற பெரிய ஆறு பாய்தலால் அந்நாட்டில் வளமானது பெருகி நிற்கும்.
குறிப்புரை: புனம் - குறிஞ்சி, பண்ணை - மூங்கில்: பணை என்பது பண்ணையெனச் செய்யுள் நோக்கி வந்தது. மலரின் கனப்பு - மலரின் தொகுதி. ஏர் இனப்பண்ணை - தம்மில் ஒத்த ஏர்களின் தொகுதி. உழும் பண்ணை - உழுதற்குரிய வயல், பண்ணை என வருவனவற்றுள், முன்னையது மூங்கிலைக் குறித்தது, இரண்டாவது, கூட்டம் என்ற பொருளைக் குறித்தது. மூன்றாவது வயல் எனும் பொருளைக் குறித்தது.

காலெல்லாந் தகட்டுவரால்
கரும்பெல்லாங் கண்பொழிதேன்
பாலெல்லாங் கதிர்ச்சாலி
பரப்பெல்லாங் குலைக்கமுகு
சாலெல்லாந் தரளநிரை
தடமெல்லாஞ் செங்கழுநீர்
மேலெல்லாம் அகில்தூபம்
விருந்தெல்லாந் திருந்துமனை.

[ 4]


வாய்க்கால் எங்கும் தகடு போன்ற வரால் மீன்கள் காணப்படுவன. கரும்புகளின் கணுக்கள் எங்கும் பொழியும் தேன் விளங்கும். பக்கங்களில் எங்கும் கதிர்களையுடைய நெற்பயிர்கள் விளங்குவன. இடம் அகன்ற நிலம் எங்கும் குலைகளையுடைய பாக்கு மரங்கள் வளர்ந்திருப்பன. ஏர் உழுது பண்படுத்தப்பட்ட நிலங்கள் எங்கும் முத்துக்களின் கூட்டம் பொருந்தி விளங்குவன. பொய்கைகள் எங்கும் செங்கழுநீர் மலர்கள் மலர்ந்திருப்பன. விருந்துள்ள மனைகள் எங்கும் எப்பொழுதும் அகில் தூபம் கமழ்ந்து நிற்கும்.
குறிப்புரை: கால் - நீர் செல்லுதற்குரிய வாய்க்கால்கள். சால் - உழுது பண்படுத்தப்பட்ட நிலம்.

கடைஞர்மிடை வயற்குறைத்த
கரும்புகுறை பொழிகொழுஞ்சா
றிடைதொடுத்த தேன்கிழிய
இழிந்தொழுகு நீத்தமுடன்
புடைபரந்து ஞிமிறொலிப்பப்
புதுப்புனல்போல் மடையுடைப்ப
உடைமடையக் கரும்படுகட்
டியினடைப்ப ஊர்கள்தொறும்.

[ 5]


ஊர்கள் தோறும், உழவர்களால் வெட்டப்பட்ட நெருங்கிய கரும்புகள் பொழிகின்ற சாறு, அக்கரும்புகளின் இடை யிலே கட்டப்பட்டிருந்த தேன்கூடுகள் அழிவதால் ஒழுகும் தேனின் பெருக்குடனே கூடிப் பக்கங்களில் பரவி, வண்டுகள் மொய்த்து ஒலிக்கப் புதிய வெள்ள நிரை போல் மடையை உடைக்கவே, அவ்வாறு உடைக்கப்பட்ட மடைகளை அக்கருப்பஞ் சாற்றினால் காய்ச்சப்பட்ட வெல்லக்கட்டிகளைக் கொண்டு அடைப்பர்.
குறிப்புரை: கரும்போடு கூடிய தேன் கூட்டிலிருந்த தேன், கருப்பஞ் சாற்றுடன் கலந்து மடையை உடைத்தது. அவ்வெள்ளத்தை அக் கருப்பஞ் சாற்றினாலாய வெல்லக்கட்டியே அடைத்தது. இக்குறிப்பு திலகவதியாருடன் தோன்றிய மருணீக்கியார் சமண் சமயஞ்சார, பின் திலகவதியாரே அவரைத் தடுத்துச் சிவநெறிக்கு ஆளாக்கினமையைக் குறிப்பால் உணர்த்துவதாயுள்ளது.

Go to top
கருங்கதலிப் பெருங்குலைகள்
களிற்றுக்கைம் முகங்காட்ட
மருங்குவளை கதிர்ச்செந்நெல்
வயப்புரவி முகங்காட்டப்
பெருஞ்சகடு தேர்காட்ட
வினைஞர்ஆர்ப் பொலிபிறங்க
நெருங்கியசா துரங்கபல
நிகர்ப்பனவாம் நிறைமருதம்.

[ 6]


கருங்கதலி என்ற வாழையின் பெருங்குலைகள், யானைகளின் நீண்ட துதிக்கையையுடைய முகத்தைப் போன்று விளங்க, அவற்றின் அருகில் வளர்ந்த கதிர்களை உடைய நெற் பயிர்கள், வெற்றியையுடைய குதிரைகளின் முகம்போல் தோன்ற, பெருகிய வண்டிகள் தேர்களைப் போல் திகழ, உழவர்களின் பேரொலி, காலாட்படைகளின் ஒலியென விளங்க, மருதநிலக்காட்சிகள் நெருங் கிய நால்வகைப்படைகளைப் போன்றனவாயின.
குறிப்புரை: கருங்கதலி - வாழையின் ஒரு வகை. சாதுரங்கம் - நால்வகைப் படை. கதிர்களையுடைய நெற் பயிர்கள் வளைந்து கீழ் நோக்கியிருத்தலின், குதிரைகளை ஒப்பவாயின.

நறையாற்றுங் கமுகுநவ
மணிக்கழுத்தி னுடன்கூந்தல்
பொறையாற்றா மகளிரெனப்
புறம்பலைதண் டலைவேலித்
துறையாற்ற மணிவண்ணச்
சுரும்பிரைக்கும் பெரும்பெண்ணை
நிறையாற்று நீர்க்கொழுந்து
படர்ந்தேறு நிலைமையதால்.

[ 7]


ஒன்பான் மணிகளும் பதித்த அணிகள் அணிந்த கழுத்துடன் கூந்தலின் சுமையைப் பொறுக்க இயலாது அசைகின்ற மகளிரைப் போல, மணம் மிகவுடைய பாக்குமரங்கள், வெளியே அசைகின்ற சோலைகள் சூழ்ந்துள்ள இடங்களில், மிகுந்த அழகுடைய உடலையுடைய வண்டுகள் ஒலிக்கும் பெண்ணையின் நிறைந்த ஆற்று அலை மேலே படர்ந்து ஏறுகின்ற தன்மை உடையதாகும்.
குறிப்புரை: நறையாற்றும் கமுகு - நறுமணம் கமழும் பாக்கு மரம். பாக்கு மரங்களில் இருக்கும் மலரும், காயும், பழமும், பெண்களின் கழுத்தில் இருக்கும் ஒன்பான் மணிகளைப் போன்றுள்ளன. பாக்கு மரத்தின் இலைகள் பெண்களின் கூந்தலைப் போல்வதாயிற்று. அம்மரங்களின் அசைவு, மகளிர் அசைவு போன்றிருந்தது. புறம்பு அலை தண்டலை - புறம்பே அசைகின்ற சோலைகள். துறை - ஈண்டு இடம் எனும் பொருளது. பெண்ணை நிறையாற்றும் நீர்க் கொழுந்து - பெண்ணையாற்றில் பெருகி வரும் நீர் அலைகள் மேல் எழ எழுச்சி பெறும் அந்நீரின் தன்மை தாவரங்களின் கொழுந்தென நிற்கும்.

மருமேவு மலர்மேய
மாகடலின் உட்படியும்
உருமேகம் எனமண்டி
உகைத்தகருங் கன்றுபோல்
வருமேனிச் செங்கண்வரால்
மடிமுட்டப் பால்சொரியுங்
கருமேதி தனைக்கொண்டு
கரைபுரள்வ திரைவாவி.

[ 8]


கரிய கடலில் படியும் வடிவுடைய மேகங்களைப் போல மணம் கமழும் மலர்களை மேய்வதற்காகக் கரிய எருமைகள் உட்புக, நெருங்கிக் கரிய கன்றுகள் போல் வரும் பெருவடிவும் சிவந்த கண்களும் கொண்ட வரால் மீன்கள் மடியில் முட்டப், பாலைச் சொரி யும் கரிய எருமைகளால், குளங்களின் அலைகள் கரையில் புரளும்.
குறிப்புரை: எருமைகள் பாலைச் சொரிவதால், குளங்கள் நீர்ப் பெருக்குடன், நல்ல பாற்பெருக்கும் பெருகி விளங்குகின்றன. அப் பெருக்கின் அலைகள் கரைகளில் புரளும் பொழுது, அங்குள்ள எருமைகளும் புரளுகின்றனவாம். நீர்வளமும், அந்நிலத்து வாழும் உயிர்வளமும் ஒருங்கு குறித்தவாறு. மாகடலின் உட்படியும் உருமேக மென்னக் கருமேதி மருமேவு மலர்மேய எனக் கூட்டிப் பின், ஆற்றொழுக்காகப் பொருள் கொள்க.

மொய்யளிசூழ் நிரைநீல
முழுவலயங் களின்அலையச்
செய்யதளிர் நறுவிரலிற்
செழுமுகையின் நகஞ்சிறப்ப
மெய்யொளியின் நிழற்காணும்
ஆடியென வெண்மதியை
வையமகள் கையணைத்தால்
போலுயர்வ மலர்ச்சோலை.

[ 9]


நெருங்கிய வண்டுகள் சூழ்ந்த மர வரிசைகள், முழு நீல மணிகள் பதித்த வளையல்களை அணிந்த மண்மகளின் கைகள் என விளங்கவும், அம்மரங்களிலுள்ள சிவந்த தளிர்களும் அரும்பு களும் அம்மகளின் விரல்களும் நகங்களும் என விளங்கவும், அம் மரங்கள் வானளவும் உயர்ந்து அங்குள்ள பிறையைத் தழுவுவது, அம்மண்மகள், தன் மெய் ஒளியின் நிழலைக் காணும் கண்ணாடி இதுவாகும் என்று கருதுமாறு அமையவும் மதில்களையுடைய மலர்ச் சோலைகள் விளங்குகின்றன.
குறிப்புரை: உருவகமும் தற்குறிப்பேற்றமும் அமைந்த பாடல் இதுவாகும். வையம் - நிலமகள். சோலையில் நீண்டு நிற்கும் மரங்கள் அவள் கைகள். மரங்களைச் சூழ நிற்கும் வண்டுகள் - வளையல்கள். மரத்தளிர்கள் - கை விரல்கள். அரும்புகள் - விரலின் நகங்கள். மரங்கள் வானுற ஓங்கிப் பிறையைத் தொட்டு நிற்றல் - தன் ஒளியைக் காணக் கண்ணாடியைப் பார்ப்பது போல்வது. மரக்கிளைகள் பிறைதவழ அணைத்து நிற்றல், மண்மகள் தன்வடிவைத் தான் காணக் கண்ணாடி கொண்டு பார்ப்பது போலும் என்றது அரிய தற்குறிப்பேற்றமாம்.

எயிற்குலவும் வளம்பதிகள்
எங்குமணந் தங்கும்வயல்
பயிர்க்கண்வியல் இடங்கள்பல
பரந்துயர்நெற் கூடுகளும்
வெயிற்கதிர்மென் குழைமகளிர்
விரவியமா டமும்மேவி
மயில்குலமும் முகிற்குலமும்
மாறாட மருங்காடும்.

[ 10]


மதில்கள் சூழ விளங்கும் வளமைமிக்க நகரங்களில், மணம் பொருந்திய வயல்களில் பயிர் செய்யப்பட்ட மிக அகன்ற இடங்கள் பலவற்றின் கண்ணும் பரந்து உயர்ந்திருக்கும் நெல் கூடுகளிலும், ஒளி பொருந்திய காதணிகளை அணிந்த மென்மையான மகளிர் தங்கும் மாடங்களிலும், பொருந்திய மயில் கூட்டங்களும் மேகங்களும் எதிர் எதிராக ஒன்றை ஒன்று விஞ்சுவது போல், பக்கங்களிலே அசைவுற்று நிற்கும்.
குறிப்புரை: எயில் - மதில். நெற்கூடுகளில் முகிற் குலமும், மாடங் களில் மயில் குலமும் ஆடி நிற்கும் (அசைந்து நிற்கும்) என எதிர் நிரல் நிறையாகப் பொருள் கொள்க.

Go to top
மறந்தருதீ நெறிமாற
மணிகண்டர் வாய்மைநெறி
அறந்தருநா வுக்கரசும்
ஆலால சுந்தரரும்
பிறந்தருள உளதானால்
நம்மளவோ பேருலகில்
சிறந்ததிரு முனைப்பாடித்
திறம்பாடுஞ் சீர்ப்பாடு.

[ 11]


பாவத்தை விளைவிக்கும் தீயநெறியானது மாறுமாறு, கரியகழுத்தைக் கொண்ட சிவபெருமானின் மெய்ம்மை யான சிவநெறியை உலகிற்கு விளக்க வரும் திருநாவுக்கரசரும், ஆலாலசுந்தரரும் தோன்றியருளியது இந்நாடு என்றால், இப் பேருலகில் சிறந்த திருமுனைப்பாடி நாட்டின் திறத்தைப் பாடும் இயல், நம் அறிவளவில் அடங்குவதோ? அடங்காது.
குறிப்புரை: மறம் நீங்கவும், சிவநெறி தழையவும் இருவரும் தோன்றினர் என்பதால், உயிர் பாச நீக்கமும் சிவப்பேறும் ஒருங்கு பெறத் தோன்றியமை புலனாம்.

இவ்வகைய திருநாட்டில்
எனைப்பலவூர் களுமென்றும்
மெய்வளங்கள் ஓங்கவரும்
மேன்மையன ஆங்கவற்றுள்
சைவநெறி ஏழுலகும்
பாலிக்குந் தன்மையினால்
தெய்வநெறிச் சிவம்பெருக்குந்
திருவாமூர் திருவாமூர்.

[ 12]


இத்தகைய திருமுனைப் பாடி நாட்டில் பலவாக விளங்கும் எல்லா ஊர்களும், எக்காலத்தும் உண்மையைத் தரும் வளங்கள் பெருகும் மேன்மையைக் கொண்டவை; அவற்றுள் சிவ நெறியை ஏழுஉலகங்களுக்கும் அளிக்கும் தன்மையினால், தெய்வ நெறியின் விளைவாய சிவத்தைப் பெருக்கும் அருளாகிய திரு ஆகின்ற ஊர், திருவாமூர் என்பதாம்.
குறிப்புரை: திரு என்பது பல பொருள் குறிக்கும் ஒருசொல் ஆகும். அது ஈண்டுச் சிவம் பெருக்கும் 'திரு' என ஆசிரியர் குறிப்பிடுவதால், சிவம் பெருக்குதலையே திருவாகக் கொண்டிருக்கும் ஊர் என்பது விளங்குகின்றது.
சிவம் பெருக்குதல் அனைத்துயிர்களும் சிவநெறி யைப் பேணி அந்நெறியில் ஒழுகுதற்கு இடனாக நிற்றல்.
திருஆம் ஊர் - திருவாமூர் என்பதாம்.

ஆங்குவன முலைகள்சுமந்
தணங்குவன மகளிரிடை
ஏங்குவன நூபுரங்கள்
இரங்குவன மணிக்காஞ்சி
ஓங்குவன மாடநிரை
யொழுகுவன வழுவிலறம்
நீங்குவன தீங்குநெறி
நெருங்குவன பெருங்குடிகள்.

[ 13]


அத்திருவாமூரில் வருந்துவன அழகான கொங்கைகளைச் சுமந்து நிற்கும் மகளிரின் இடைகளேயாம். அங்கு ஒலிப்பன அவர்கள் அணிந்த காலணிகளேயாம். அங்கு ஏங்குவன அவர்கள் அணிந்த மணிகள் பதித்த மேகலையேயாம். அங்கு ஓங்கி நிற்பன மாளிகை வரிசைகளேயாம். அங்கு ஒழுகுவன குற்றம் இல்லாத அறங்களேயாம். அங்கு நீங்கி நிற்பன தீமையுடைய நெறிகளேயாம். அங்கு நெருங்கி இருப்பன பெருங்குடிமக்களின் இருக்கைகளேயாம்.
குறிப்புரை: அணங்குதல் - வருந்துதல்; எனவே இவ்வகையால் வருந்துதலும் இரங்குதலும் உடையன மகளிரின் அணிகளேயன்றி மக்கள் மாட்டு இவ்வவலங்கள் இல்லை என்பது பெறப்படுகின்றது. இவை போன்றே பளுவாக அமைந்து நிற்பனவும், அவற்றைச் சுமந்து நிற்பனவும் மகளிரின் மார்பகங்களும் இடைகளும் அன்றிப் பிற இலவாம். அங்கு ஒழுகுவது அறங்களும், நீங்கி நிற்பன அதற்கு மாறாய தீய நெறிகளும் அன்றிப் பிற இலவாம். ஒழுகுதல் - நற் பொருள்களைவிட்டு நெகிழ்தல், ஒழுக்கமுடன் வாழ்தல் என இரு பொருளையும் தரும்.

மலர்நீலம் வயல்காட்டும்
மைஞ்ஞீலம் மதிகாட்டும்
அலர்நீடு மறுகாட்டும்
அணியூசல் பலகாட்டும்
புலர்நீலம் இருள்காட்டும்
பொழுதுழவர் ஒலிகாட்டும்
கலநீடு மனைகாட்டும்
கரைகாட்டாப் பெருவளங்கள்.

[ 14]


வயல்கள் நீல மலர்களைப் பெற்று விளங்கும். மைபூசப் பெற்ற நீலம் போன்ற கண்களையும், பிறைச் சந்திரன் போன்ற நெற்றியையும் உடைய தாமரை மலர் போலும் முகமுடைய மங்கையர்கள் நெருங்கி இருக்கும் தெருக்கள், அவர்கள் ஏறி உந்தும் மணிகள் பதித்த பல ஊசல்களைக் காட்டும். இருள் புலர்தற்குரிய நீல நிறம் காட்டும் வைகறைப் பொழுதானது, உழவுத் தொழிற்குச் செல் வோரின் ஒலியைப் புலப்படுத்தும். பற்பல பண்டங்களும் நிறைந்து விளங்கும் மனைகள், அளவற்ற வளங்களைக் காட்டும்.
குறிப்புரை: மைந்நீலம் - மைதீட்டப் பெற்ற நீலமலர் போன்ற கண்கள். கலம் நீடும் - பல பண்டங்களும் நிறைந்திருக்கும். காட்டும் எனும் சொல் பல்காலும் வருதலின் சொற்பின் வருநிலையணியாம்.

தலத்தின்கண் விளங்கியஅத்
தனிப்பதியில் அனைத்துவித
நலத்தின்கண் வழுவாத
நடைமரபிற் குடிநாப்பண்
விலக்கின்மனை ஒழுக்கத்தின்
மேதக்க நிலைவேளாண்
குலத்தின்கண் வரும்பெருமைக்
குறுக்கையர்தங் குடிவிளங்கும்.

[ 15]


உலகில் விளங்கும் அவ்வொப்பற்ற பதியில், எவ்வகையான நன்மையினின்றும் வழுவாத ஒழுக்கத்தின் கண் நிற்கும் குடிகளுள், குற்றம் இல்லாத இல்லறத்தில் மேம்பட்ட நிலையில் உள்ள வேளாளர் குலத்துள் வரும் பெருமையுடைய குறுக்கையர் குடியானது சிறப்புற்றிருந்தது.
குறிப்புரை: நடை மரபில் குடி - ஒழுக்கத்தில் நிற்கும் குடிகள். குலம் - பெரும் பிரிவு; குடி - அதன் உட்பிரிவு. குறுக்கையர் குடி - வேளாண் மரபில் வரும் குடிகளுள் ஒன்று.

Go to top
அக்குடியின் மேல்தோன்றல்
ஆயபெருந் தன்மையினார்
மிக்கமனை அறம்புரிந்து
விருந்தளிக்கும் மேன்மையினார்
ஒக்கல்வளர் பெருஞ்சிறப்பின்
உளரானார் உளரானார்
திக்குநில வும்பெருமை
திகழவரும் புகழனார்.

[ 16]


எல்லாத்திசைகளிலும், நிலைபெற்று விளங்கும் பெருமை பொருந்திய 'புகழனார்' என்ற சான்றோர், அக்குடியின் பெருந்தலைவராவர், மேன்மை மிக்க இல்லறத்தை நடத்தி, விருந்து அளிக்கும் மேன்மை உடையவர். சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகும் பெருஞ்சிறப்பில் உள்ளவரானார். ஆதலால் அவரே இல்லற நெறிக் கண் கூறப்பெறும் அறங்கள் பலவும் உள்ளவர் (உடையவர்) ஆனார்.
குறிப்புரை: உளரானார் என வருவனவற்றுள், முன்னையது சுற்றச் சிறப்பையும், பின்னையது அவர்தம் பண்பும் பயனுமாய வளச் சிறப்பையும் குறித்தன.

புகழனார் தமக்குரிமைப்
பொருவில்குலக் குடியின்கண்
மகிழவரு மணம்புணர்ந்த
மாதினியார் மணிவயிற்றில்
நிகழுமலர்ச் செங்கமல
நிரையிதழின் அகவயினில்
திகழவருந் திருவனைய
திலகவதி யார்பிறந்தார்.

[ 17]


புகழனாருக்கு உரிமையான ஒப்பில்லாத குலமும் குடியும் கூடிய மரபில், மகிழ்ச்சி விளைதற்கு ஏதுவாய திருமணம் செய்து கொண்ட 'மாதினியார்' என்னும் அம்மையாரின் அழகிய வயிற்றில், செந்தாமரையின் நிரல்பட அமைந்த இதழ்களினிடையே உள்ள பொகுட்டில் விளங்கவரும் திருமகளைப் போன்று, 'திலக வதியார்' என்பவர் பிறந்தருளினார்.
குறிப்புரை: அகவயினில் - அழகிய இதழ்களினிடையே உள்ள பொகுட்டில்.

திலகவதி யார்பிறந்து
சிலமுறையாண் டகன்றதற்பின்
அலகில்கலைத் துறைதழைப்ப
அருந்தவத்தோர் நெறிவாழ
உலகில்வரும் இருள்நீக்கி
ஒளிவிளங்கு கதிர்போல்பின்
மலருமருள் நீக்கியார்
வந்தவதா ரஞ்செய்தார்.

[ 18]


திலகவதியார் பிறந்தபின், முறையாகச் சில ஆண்டுகள் கழிந்த பின்பு, அளவில்லாத கலைகளின் துறைகள் தழைக்கவும், அரியதவத்தவர் நெறி வாழவும், உலகில் புற இருளை நீக்கி வருகின்ற ஒளியுடைய ஞாயிற்றைப் போலப் பின்னர் அக இருளை நீக்கி மலர்விக்கும் 'மருள்நீக்கியார்' தோன்றி அருளினார்.
குறிப்புரை: புற இருளை ஞாயிறன்றிச் சந்திரனும் நீக்குமாயினும் அவ்வொளி ஞாயிற்றின் ஒளியேயாதலின் அதனை வேறுபட விதவாது கதிர் என ஒருமையால் கூறினார். மலரும் - மலர்விக்கும். ஞாயிறு தோன்றிய பொழுதன்றி அதுமேல் இவர்ந்து வர இருள் முழுமையாக நீங்குதலின் 'பின் மலரும்' என்றார். மருள் நீக்கியாரும் சமண் சமயத்தினின்றும் நீங்கிச் சைவ நெறியில் தலைப்பட்ட பின்னரே அந்நெறியை மலர்வித்தார் என்பதும் அறியத்தக்கதாம். திலகவதியார் பிறந்து சிலமுறை ஆண்டு அகன்றதற்பின் இவர் தோன்றினார் எனவே அவ்விடைவெளி ஐந்தாண்டு வரை ஆகலாம் என எண்ணலாம். 'சிலமுறை ஆண்டு செல்லச் சிலைபயில் பருவம்' (தி. 12 பு. 10 பா. 27) எனக் கண்ணப்பர் வரலாற்றில் முன்னும் இவ்வரிய தொடர் இடம் பெற்றிருக்குமாற்றான் இவ்வாண்டெல்லையை அறிய இயலுகிறது. மகப் பெற்றார், பின்பொரு மகவைப் பெறுதற்குப் போதிய இடை வெளி உளவாதல் வேண்டும் என்பது இதனால் அறியத்தக்கதாம். மருள் - பொருள் அல்லவற்றைப் பொருள் என்றுணர்வது. மருள்நீக்கியார் எனப் பெயர் பெற்றதற்கேற்ப, உலகவர் மருளைத் தம் வாழ்வானும் வாக்கானும் நீக்கிய நீர்மையைப் பின்வரும் அவர்தம் வரலாற்றால் அறியலாம்.

மாதினியார் திருவயிற்றின்
மன்னியசீர்ப் புகழனார்
காதலனார் உதித்ததற்பின்
கடன்முறைமை மங்கலங்கள்
மேதகுநல் வினைசிறப்ப
விரும்பியபா ராட்டினுடன்
ஏதமில்பல் கிளைபோற்ற
இளங்குழவிப் பதங்கடந்தார்.

[ 19]


மாதினியாரின் அழகிய திருவயிற்றில், தோன்றிய பின்னர், செயத்தகும் செயல் முறைமையால் வரும் மங்கலச் செயல்கள் பலவற்றையும் செய்து, மேம்பட்ட அச்செயல்கள் சிறக்குமாறு, விரும்பிய பாராட்டுடன், குற்றமில்லாத உறவினர் செய்திட, புகழனார் தம் திரு மகனாரான மருள்நீக்கியார் இளம் குழவிப்பருவத்தைக் கடந்தார்.
குறிப்புரை: கடன் முறைமை மங்கலங்கள் - செயத்தகும் நற் செயல்கள்; அவை இறைவழிபாடு செய்தல், பெயர் சூட்டுதல், சோறு ஊட்டுதல் முதலாயினவாம், விரும்பிய பாராட்டு - சுற்றத்தினரும் ஊரவரும் செய்யும் சிறப்புகள்.

மருணீக்கி யார்சென்னி
மயிர்நீக்கும் மணவினையுந்
தெருணீர்ப்பன் மாந்தரெலாம்
மகிழ்சிறப்பச் செய்ததற்பின்
பொருணீத்தங் கொளவீசிப்
புலன்கொளுவ மனமுகிழ்த்த
சுருணீக்கி மலர்விக்குங்
கலைபயிலத் தொடங்குவித்தார்.

[ 20]


மருணீக்கியார் என்று பெயர் சூட்டப் பெற்ற அவருக்கு, தலைமயிரை நீக்குதலான மணவினையையும் அறி வுடைய மக்கள் பலரும் மகிழ்ச்சிமிகுமாறு செய்த பின்பு, தம் பொருள்களை வெள்ளம் என ஆசிரியருக்குப் பெருக உதவி, அறிவைப் பெருக்கச் செய்தலால், உள்ளம் சுருண்டிருந்த நிலையை நீக்கி மலரச் செய்கின்ற கலைகளைப் பயிலத்தொடங்குவிக்கும் நற் செயலையும் செய்தனர்.
குறிப்புரை: குழந்தை பிறந்தபொழுது நின்ற தலைமயிரை உரிய பருவத்தில் களைதல் மரபு. இது தெய்வம் பராவியும் பலர் கூடியும் செய்யப் பெறும் நல்வினையாதலின் இதனை மணவினை என்றார். நீத்தம் கொள - வெள்ளம் என. மனம் முகிழ்த்த சுருள் - இதழ்கள் சுருண்டு குவிந்த மொட்டென இருக்கும் மனம். அம்மனம் விரிதலாவது, கற்கப்படும் பொருளை ஐயந்தீரக் கற்றலும் அதன் வழிநிற்கும் உணர்ச்சியும் எழுச்சியும் பெறுதலுமாம். 'உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் . . . . . கற்றல் நன்றே' (புறநா. 183) என்பதால், அப்பொருள் வெள்ளம் எனத் தொடர்ந்து ஆசிரியருக்கு வழங்கப் பெற்றமை அறியலாம். கலை பயிலத் தொடங்கும் நாளில், பலர்க்கும் பொருள் வழங்கி அவர்களின் மகிழ்வும் ஆசியும் பெற்றுத் தொடங்கல் மரபு, அந்நிலையில் பொருளை வெள்ளம் என வழங்கினர் என்றலும் ஒன்று.

Go to top
தந்தையார் களிமகிழ்ச்சி
தலைசிறக்கும் முறைமையினால்
சிந்தைமலர்ந் தெழும்உணர்வில்
செழுங்கலையின் திறங்களெல்லாம்
முந்தைமுறை மையிற்பயின்று
முதிரஅறி வெதிரும்வகை
மைந்தனார் மறுவொழித்த
இளம்பிறைபோல் வளர்கின்றார்.

[ 21]


தந்தையார் கொண்ட பெருமகிழ்ச்சி மேன் மேலும் வளரும் முறைமையால், சிந்தை மலர்ந்து எழும் உணர்வால், செழுமையான கலைகள் எல்லாவற்றையும் முன்னைய தொடர்பினால் எளிதில் கற்று, முதிர்ந்த அறிவு வெளிப்படும் தன்மையால், மைந்தனாரான மருணீக்கியார் களங்கம் நீங்கப் பெற்ற இளம்பிறை போல வளர்ந்து வருவாராயினர்.
குறிப்புரை: 'சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே', (புறநா. 312) 'தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து முந்தி யிருப்பச் செயல்' (குறள், 67) எனவரும் திருவாக்குகளால் 'தந்தையார் களி மகிழ்ச்சி தலைசிறக்க' என விதந்தோதினார். 'ஈன்ற பொழுதின் பெரிதுஉவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்' (குறள், 69) என்பவாகலின் தாய் களி மகிழ்ச்சி கோடலும் இயல்பேயாம். 'ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து' (குறள், 398) என்பவாகலின், 'முந்தை முறைமையிற் பயின்று' என்றார். இம்முறை மையால் எளிதாகவும் நிறைவாகவும் இனிதாகவும் கற்றமை புலனாகும்.

அந்நாளில் திலகவதி
யாருக்காண் டாறிரண்டின்
முன்னாக ஒத்தகுல
முதல்வேளாண் குடித்தலைவர்
மின்னார்செஞ் சடையண்ணல்
மெய்யடிமை விருப்புடையார்
பொன்னாரும் மணிமவுலிப்
புரவலன்பால் அருளுடையார்.

[ 22]


அக்காலத்தே திலகவதி அம்மையாருக்குப் பன்னிரண்டு ஆண்டுகள் நெருங்கிவர, குலம், குணம் முதலியவற்றால் ஒப்புடைய முதன்மையான வேளாண் குலத்திலும் குடியிலும் வந்த தலைவரும், மின்போல் ஒளிவிடும் சிவந்த சடையையுடைய அண்ண லாரான பெருமானாரிடம் மெய் அடிமைத் திறம் செய்வதில் விருப்பம் உடையவரும், பொன்னால் ஆகிய மணிகள் பதிக்கப் பெற்ற முடி தாங்கிய மன்னரிடம் அருள் உடையவரும்.
குறிப்புரை: 'முறையுறக் கிளந்த ஒப்பினது வகை' (தொல். மெய்ப். 25) பத்தானும் ஒத்தவர் என்பார், 'ஒத்தகுலம்' என அதற்குத் தோற்றுவாய் செய்தார்.

ஆண்டகைமைத் தொழிலின்கண்
அடலரியே றெனவுள்ளார்
காண்டகைய பெருவனப்பிற்
கலிப்பகையார் எனும்பெயரார்
பூண்டகொடைப் புகழனார்
பாற்பொருவின் மகட்கொள்ள
வேண்டியெழுங் காதலினால்
மேலோரைச் செலவிட்டார்.

[ 23]


வீரம் மிக்க போர்த் தொழிலில் வலிய ஆண் சிங்கத்தைப் போன்றவரும், காண்டற்கினிய தக்க பேரழகுடையவரும், ஆன கலிப்பகையார், கொடைத்தன்மை பூண்ட புகழனாரிடம் அவரு டைய ஒப்பில்லாத மகளாரைத் தாம் மணமகனாராகக் கொள்ளும் பொருட்டு விரும்பி எழும் காதலால் உரிய பெரியோர்களை அனுப்பினார்.
குறிப்புரை: பூண்ட கொடை - கொடை செய்தலையே விரதமாகக் கொண்ட. பூணுதல் - விரதமாகக் கோடல்;
'ஈண்டுஅறம் பூண்டார்' (குறள் - 23) என்புழிப்போல.
இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

அணங்கனைய திலகவதி
யார்தம்மை யாங்கவர்க்கு
மணம்பேசி வந்தவரும்
வந்தபடி அறிவிப்பக்
குணம்பேசிக் குலம்பேசிக்
கோதில்சீர்ப் புகழனார்
பணங்கொளர வகல்அல்குல்
பைந்தொடியை மணம்நேர்ந்தார்.

[ 24]


அங்ஙனம் மணம் பேச வந்த மேலோர், திருமகளைப் போன்ற திலகவதியாரை, அங்கு அக்கலிப்பகையாருக்கு மணம் செய்யும் திறத்தைப் பேசித் தாம் வந்த செய்தியைத் தெரிவிக்க, குணங்களையும் குல முறைமையையும் பேசிக் குற்றமற்ற சிறப்புடைய புகழனார், பாம்பின் படத்தைப் போன்ற அல்குலையுடைய பசுமை யான வளையல்களை அணிந்த தம் மகளாரை, மணம் செய்து தர இசைவு அளித்தார்.
குறிப்புரை:

கன்னிதிருத் தாதையார்
மணமிசைவு கலிப்பகையார்
முன்னணைந்தார் அறிவிப்ப
வதுவைவினை முடிப்பதன்முன்
மன்னவற்கு வடபுலத்தோர்
மாறேற்க மற்றவர்மேல்
அன்னவர்க்கு விடைகொடுத்தான்
அவ்வினைமேல் அவரகன்றார்.

[ 25]


இளம் கன்னியராய திலகவதியாரின் தந்தையார், இங்ஙனம் மணம் கொள இசைந்ததை, அவரிடம் முன் வந்தவர்கள் சென்று கலிப்பகையாரிடம் அறிவிக்க, அங்ஙனமே மணச் செய்கை முடிப்பதற்கு முன்னமேயே, மன்னனுடன் வட நாட்டரசர்கள் பகை மேற்கொண்டு போர் செய்ய வந்தனராக, அப்பகைவருடன் போர் செய்யும் பொருட்டாகக் கலிப்பகையாருக்கு விடைதந்து அனுப்பி னான் அரசன். அக்கலிப்பகையாரும் அவ்வினைமேற் சென்றார்.
குறிப்புரை: இங்குக் குறிக்கப் பெற்ற மன்னன் மகேந்திரவர்மன் அல்லது அவன் கீழ் வாழ்ந்த குறுநில மன்னன் ஆகலாம் என்பர் சிவக்கவிமணியார் (பெரிய. பு. உரை).

Go to top
வேந்தற்குற் றுழிவினைமேல்
வெஞ்சமத்தில் விடைகொண்டு
போந்தவரும் பொருபடையும்
உடன்கொண்டு சிலநாளில்
காய்ந்தசினப் பகைப்புலத்தைக்
கலந்துநெடுஞ் சமர்க்கடலை
நீந்துவார் நெடுநாள்கள்
நிறைவெம்போர்த் துறைவிளைத்தார்.

[ 26]


மன்னனுக்கு என இவ்வாறு போர் செய்ய நேர்ந்ததால், போர் மேற் சென்ற கலிப்பகையாரும் விடை பெற்றுக் கொண்டு, போரியற்றும் படைகளையும் உடன் கொண்டு சென்று, சில நாள்களில் சினத்துடன் அடர்த்து வந்த பகைவரை அடைந்து, அவர்களுடன் பொரும் போர்க் கடலை நீந்தி, வெற்றி பெறும் எண்ணத்தினராய் நெடு நாள்கள் நிறைவான கொடிய போரைச் செய்தார்.
குறிப்புரை: ''வேந்துவினை இயற்கை, வேந்தனின் ஒரீஇய
ஏனோர் மருங்கினும் எய்திடன் உடைத்தே. ''
-தொல். -அகத். , 32
''மன்னர் பாங்கின் பின்னோ ராகுப. '' -தொல். -அகத். , 30
என்பவாகலின், அரசன் பகைமேற் சென்று பொரும் போரை அவனுக்கு உற்றுழி உதவும், வேளாண் மக்களும் செய்துவந்தனர் எனத் தெரிகிறது. அவ்வகையிலேயே கலிப்பகையாரும் சென்றார்.

ஆயநா ளிடைஇப்பால்
அணங்கனையாள் தனைப்பயந்த
தூயகுலப் புகழனார்
தொன்றுதொடு நிலையாமை
மேயவினைப் பயத்தாலே
இவ்வுலகை விட்டகலத்
தீயஅரும் பிணியுழந்து
விண்ணுலகில் சென்றடைந்தார்.

[ 27]


அத்தகைய நாள்களில், இங்குத் திருமகள் அனைய திலகவதியாரைப் பெற்ற, தூய குலத்தில் தோன்றிய புகழனார், வழிவழி வரும் நிலையாமையைப் பொருந்திய வினைப் பயனால், இவ்வுலகத்தை விட்டு நீங்குமாறு, தீயதாய நீக்குதற்கரிய நோயினால் வருந்தி, விண்ணுலகத்தைச் சென்று அடைந்தார்.
குறிப்புரை: ''பாங்கரும் சிறப்பின் பல்லாற்றானும்
நில்லா உலகம் புல்லிய நெறித்தே'' -தொல். -புறத். , 23
நெருநல் உளன்ஒருவன் இன்றுஇல்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு. -திருக்குறள், 336
என்பனவாகிய திருவாக்குகளை உட்கொண்டு, 'தொன்று தொடு நிலையாமை' என்றார்.

மற்றவர்தாம் உயிர்நீப்ப
மனைவியார் மாதினியார்
சுற்றமுடன் மக்களையும்
துகளாக வேநீத்துப்
பெற்றிமையால் உடனென்றும்
பிரியாத உலகெய்தும்
கற்புநெறி வழுவாமல்
கணவனா ருடன்சென்றார்.

[ 28]


அந்நிலையில் அவர் உயிர்துறக்க, அவருடைய மனைவியாரான மாதினியாரும், சுற்றத்தாருடன் மக்களையும் தூசா கவே கருதி, நீத்து, மேன்மையுடைய தன்மையினால் என்றும் உடன் பிரியாத உலகில் அடைதற்குரிய கற்பு நெறியினின்றும் திறம்பாமல், கணவனாருடன் சென்றார். (உயிர் துறந்தார்).
குறிப்புரை: 'உடம்பொடு உயிரிடை என்ன' (குறள், 1122), 'வாழ்தல் உயிர்க் கன்னள் ஆயிழை'(குறள், 1124), 'இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனா'(குறள், 1315) என்பனவாகிய குறட்பாக்களை நினைவு கூருமாறு, இந்நிகழ்ச்சி அமைந்து உள்ளது.

தாதையா ரும்பயந்த
தாயாரும் இறந்ததற்பின்
மாதரார் திலகவதி
யாரும்அவர் பின்வந்த
காதலனார் மருணீக்கி
யாரும்மனக் கவலையினால்
பேதுறுநற் சுற்றமொடும்
பெருந்துயரில் அழுந்தினார்.

[ 29]


தந்தையாரும் பெற்ற தாயாரும் இறந்த பின்பு, மங்கையாரான திலகவதி அம்மையாரும், அவருக்குப் பின்பு தோன்றிய மருணீக்கியாரும் உள்ளத்தில் கொண்ட கவலையினால் வருந்தும் நல்ல சுற்றத்துடனே பெருந்துன்பத்தில் ஆழ்ந்தனர்.
குறிப்புரை:

ஒருவாறு பெருங்கிளைஞர்
மனந்தேற்றத் துயரொழிந்து
பெருவானம் அடைந்தவர்க்குச்
செய்கடன்கள் பெருக்கினார்
மருவார்மேல் மன்னவற்கா
மலையப்போங் கலிப்பகையார்
பொருவாரும் போர்க்களத்தில்
உயிர்கொடுத்துப் புகழ்கொண்டார்.

[ 30]


அருகிருந்த பெருஞ்சுற்றத்தார், அவர்தம் உள்ளத்தைத் தேற்ற, ஒருவகையால் வருத்தம் நீங்கிய அவ்விருவரும் பெரிய விண்ணுலகை அடைந்த பெற்றோர்க்குச் செய்ய வேண்டிய கடன்கள் எல்லாம் செய்தனர். மன்னனுக்காகப் போர் செய்யச் சென்ற கலிப்பகையார், பகைமை நிறைந்த போர்க்களத்தில் உயிரைக் கொடுத்துப் புகழைக் கைக்கொண்டார் (இறந்தார்).
குறிப்புரை: 'புகழெனில் உயிரும் கொடுப்பர்'(புறநா. 182) 'இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே பிழைத்தது ஒறுக்கிற் பவர்?' (குறள்,779) எனவரும் திருவாக்குகளால், 'உயிர்கொடுத்துப் புகழ்கொண்டார்' என்றார்.

Go to top
வெம்முனைமேற் கலிப்பகையார்
வேல்வேந்தன் ஏவப்போய்
அம்முனையில் பகைமுருக்கி
அமருலகம் ஆள்வதற்குத்
தம்முடைய கடன்கழித்த
பெருவார்த்தை தலஞ்சாற்றச்
செம்மலர்மேல் திருவனைய
திலகவதி யார்கேட்டார்.

[ 31]


கலிப்பகையார் அரசன் ஏவலின் படியே பகைவர் மீது சென்று, அப்போர் முகத்தில் பகைவரை அழித்து, விண்ணு லகத்தை ஆட்சி கொள்வதற்காகத் தம் கடனை நிறைவேற்றிய பெரு வார்த்தையை ஊரார் கூறச், செந்தாமரை மீது இருக்கும் திருமகள் போன்ற திலகவதியார் கேட்டறிந்தார்.
குறிப்புரை: பெருவார்த்தை - இறந்தார் என்பதைக் கூறும் மங்கல வழக்கு.

எந்தையும்எம் அனையும்அவர்க்
கெனைக்கொடுக்க இசைந்தார்கள்
அந்தமுறை யால்அவர்க்கே
உரியதுநான் ஆதலினால்
இந்தவுயிர் அவருயிரோ
டிசைவிப்பன் எனத்துணிய
வந்தவர்தம் அடியிணைமேல்
மருணீக்கி யார்விழுந்தார்.

[ 32]


'என்னுடைய தந்தையாரும் தாயாரும் என்னை அவர்க்குத் தர இசைந்தனர். அம் முறையால் நான் அவர்க்காக உரியது (உரியவள்) ஆதலால், இந்த என் உயிரை அவருடைய உயிருடன் சேரச் செய்வேன்' என்று துணிவுகொள்ள, அவருடைய திருவடிகளில் மருணீக்கியார் விழுந்தனராகி.
குறிப்புரை: அவர்க்கே உரியவள் நான் எனக் கூறாது, அவர்க்கே உரியது நான் என்றது, தான் என்றோ, தனக்கென ஒன்றுடையது என்றோ கருதுதல் இன்றித் தன்னைத் தன் கணவருக்கே முற்றிலும் உடைமையாக்கிக் கொண்டிருத்தலினாலேயாம். 'இவனுக்காகத் தாங்கிய உடம்பு'( தி. 12 பு. 24 பா. 49) எனப் பின் காரைக்கால் அம்மையார் அருளுவதும் காண்க.

அந்நிலையில் மிகப்புலம்பி
அன்னையும்அத் தனும்அகன்ற
பின்னையுநான் உமைவணங்கப் பெறுதலினால் உயிர்தரித்தேன்
என்னையினித் தனிக்கைவிட்
டேகுவீர் எனில்யானும்
முன்னம் உயிர் நீப்பனென
மொழிந்திடரின் அழுந்தினார்.

[ 33]


அந்நிலையில் மிகவும் புலம்பித் தாயும் தந்தையும் இறந்த பின்னும் நான் உம்மை வணங்கப் பெறுவதனால் உயிர் வாழ்ந்தேன். இனி என்னைத் தனியாக விட்டு நீவிர் செல்வீராயின் நானும் உமக்கு முன்னர் உயிர் விடுவேன் எனக் கூறித் துன்பத்தால் வருந்தினார்.
குறிப்புரை: தனிக் கைவிட்டு - தனித்திருக்குமாறு நீத்து.

தம்பியார் உளராக
வேண்டுமென வைத்ததயா
உம்பருல கணையவுறு
நிலைவிலக்க உயிர்தாங்கி
அம்பொன்மணி நூல்தாங்கா
தனைத்துயிர்க்கும் அருள்தாங்கி
இம்பர்மனைத் தவம்புரிந்து
திலகவதி யாரிருந்தார்.

[ 34]


தம் தம்பியார் உயிர் வாழ வேண்டும் என்று உளம் கொண்ட கருணையானது, தேவர் உலகம் செல்லும் துணிவு கொண்ட நிலையை விலக்க, உயிரைத் தாங்குவாராகி, அழகிய பொன்னும் மணியும் உடைய மணிமாலைகளைத் தாங்காது, எவ்வுயிரும் தம் முயிர் போல் இரங்கியருளும் அருளைத் தாங்கி, நின்று, இவ்வுலகத்தில் மனையில் இருந்து தவத்தைச் செய்து கொண்டு திலகவதியார் இருந்தார்.
குறிப்புரை: அழகிய பொன்னும் மணியும் செறிந்த திருமங்கல நாணைத் தாங்காது, எல்லா உயிர்களுக்கும் அருளைத் தாங்கி என்றார், இரக்க மீதூர்வு தோன்ற. மனைத் தவம் - மனையைவிட்டுப் புறம் போதலன்றி, சிவ வழிபாட்டையும் உரிய நோன்புகளை மேற்கொண்டும் ஒருமையுணர்வு கொண்டு திருவைந்தெழுத்தை எண்ணியும் வாழும் நிலை. இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

மாசின்மனத் துயரொழிய
மருணீக்கி யார்நிரம்பித்
தேசநெறி நிலையாமை
கண்டறங்கள் செய்வாராய்க்
காசினிமேல் புகழ்விளங்க
நிதியளித்துக் கருணையினால்
ஆசில்அறச் சாலைகளும்
தண்ணீர்ப்பந் தரும்அமைப்பார்.

[ 35]


குற்றமற்ற தம் உள்ளத்தின் துன்பம் நீங்க, பின் மருணீக்கியார் வயது நிரம்பி வளர்ச்சி பெற்ற அளவில், உலக வாழ்க்கை நிலையாமையுடையது என்பதை உணர்ந்து, அறங்களைச் செய்வாராய், உலகில் புகழ் விளங்குமாறு செல்வத்தைத் தந்து, குற்றமற்ற அறச்சாலைகளையும் தண்ணீர்ப் பந்தலையும் அருளுடன் அமைப்பாராகி.
குறிப்புரை: நிரம்பி - வயது நிரம்பிய அளவில். 'அன்றுஅறிவாம் என்னாது அறஞ்செய்க' (குறள், 36) 'நாளைச் செய்குவம் அறம் எனில்' 'இன்றே கேள்வி நல்லுயிர் நீங்கினும் நீங்கும்' (சிலப். வஞ்சிக். நடுகல். , 179-180) என்பன வாய்மையாதலின், 'நிலையாமை கண்டு அறங்கள் செய்வாராய்' என்றார். உணவு, உடை, மருத்துவம், அறிவு முதலான அனைத்தையும் வழங்க, அவ்வவற்றிற்குரிய அறச் சாலைகள் வைத்தமை தோன்ற 'ஆசில் அறச்சாலைகள்' என்றார்.

Go to top
காவளர்த்தும் குளந்தொட்டும்
கடப்பாடு வழுவாமல்
மேவினர்க்கு வேண்டுவன
மகிழ்ந்தளித்தும் விருந்தளித்தும்
நாவலர்க்கு வளம்பெருக
நல்கியும்நா னிலத்துள்ளோர்
யாவருக்குந் தவிராத
ஈகைவினைத் துறைநின்றார்.

[ 36]


பூஞ்சோலைகளை வளர்த்தும், குளங்களைத் தோண்டியும், நேர்மையில் தவறாது ஒழுகி வருவார்க்கு வேண்டும் பொருள்களைத் தந்தும், விருந்தினரைப் பேணியும், நாவலர்களுக்கு வளம் பெருகுமாறு செல்வம் முதலியவற்றைக் கொடுத்தும், இன்னும் இவ்வுலகில் உள்ளார் யாவர்க்கும் பாகுபாடின்றித் தவிராத ஈகைச் செயலில் காணும் துறைதொறும் ஒழுகி மாறாது நின்றார்.
குறிப்புரை: தொடுதல் - தோண்டுதல், 'தொட்டனைத்து ஊறும் மணற்கேணி' (குறள், 396) எனவருவதும் காண்க. ஈகை பற்றிக் கூறுபவர் பலர். அதனை வகைப்படுத்திப் பல துறைகளாக அமைத்து, அவற்றை 'ஈகை வினைத் துறை' என்று குறித்த பெருமை சேக்கிழாரையே சாரும். காவளர்த்தலும் குளம் தொடுதலும், மனித இனத்திற்கன்றி ஏனைய மன்னுயிர்களுக்கும் பயன்படவாம். வீட்டிற்கு ஒரு மரம் நடுவோம் என ஆரவார நீர்மையில் விளங்கும் இந்நாளைய உலகு, நாவரசரின் இவ்வரிய தொண்டுகளை நினைவு கூர்க.

நில்லாத உலகியல்பு
கண்டுநிலை யாவாழ்க்கை
அல்லேன்என் றறத்துறந்து
சமயங்க ளானவற்றின்
நல்லாறு தெரிந்துணர
நம்பர்அரு ளாமையினால்
கொல்லாமை மறைந்துறையும்
அமண்சமயம் குறுகுவார்.

[ 37]


நிலையில்லாத இவ்வுலகியல்பைக் கண்டு, 'நிலையற்ற இந்த நிலவுலக வாழ்வில் நின்று உழலகில்லேன்' என முற்றத் துறந்து, சமயங்களின் நல்ல நெறியைத் தெரிந்து உணர்வதற்கு நம்பரான சிவபெருமான் அருள் செய்யாமையால், கொல்லாமையை மேற்கொண்டு அதனுள் மறைந்து வாழும் சமண சமயத்தைச் சார்பவர் ஆகி.
குறிப்புரை: 'அவன் அருளாலே அவன் தாள் வணங்கி' (தி. 8 ப. 1 வரி. 18) என்பர் மணிவாசகர். ஆதலின் சைவமாம் சமயம் சாரும் ஊழ் பெறவும் பெருமானின் திருவருள் வேண்டும். அந்நிலை கைகூடாமையின் 'நம்பர் அருளாமையினால்' என்றார்.

பாடலிபுத் திரமென்னும்
பதிஅணைந்து சமண்பள்ளி
மாடணைந்தார் வல்லமணர்
மருங்கணைந்து மற்றவர்க்கு
வீடறியும் நெறியிதுவே
எனமெய்போல் தங்களுடன்
கூடவரும் உணர்வுகொளக்
குறிபலவுங் கொளுவினார்.

[ 38]


பாடலிபுத்திரம் என்ற பதியைச் சேர்ந்து, அதன்கண் உள்ள சமண்பள்ளியைச் சென்றடைந்தார். வலியச் சமணர்கள் அவரைச் சூழ்ந்து, அவருக்கு, வீடுபேற்றை அறியும் நெறி இதுவேயாகும் என வெளிப்பார்வையில் மெய்போல் காட்டி, தம்முடன் அவர் கூடவரும் உணர்ச்சியுண்டாகத் தக்கவாகப் பல செய்திகளையும் அவருக்குப் புகட்டினர்.
குறிப்புரை: பாடலிபுத்திரம் - இப்பெயரால் அமைந்த நகரம் இதுபொழுது அழிந்துவிட்டது. இதற்கு அண்மையில் உள்ள நகரம் திருப்பாதிரிப்புலியூர் ஆகும். பாடலம் - பாதிரி. இம்மரப் பெயரால் இப்பதி அழைக்கப்பெற்று வருகிறது. அசோக மன்னன், பாடலி புத்திரம் எனும் பெயர் அமைந்த தலைநகரில் ஆண்டான் என்றும், அப்பெயரால் தமிழகத்தில் கண்ட பதியே இப்பாடலிபுத்திரம் என்றும் கூறுவார் சிவக்கவிமணியார் (பெரிய. பு. உரை).

அங்கவரும் அமண்சமயத்
தருங்கலைநூ லானவெலாம்
பொங்கும்உணர் வுறப்பயின்றே
அந்நெறியிற் புலன்சிறப்பத்
துங்கமுறும் உடற்சமணர்
சூழ்ந்துமகிழ் வார்அவர்க்குத்
தங்களின்மே லாந்தரும
சேனரெனும் பெயர்கொடுத்தார்.

[ 39]


மருணீக்கியாரும் அங்குச் சமண சமயத்தின் கண்ணுள்ள அரிய நூல்களாய் உள்ளவற்றையெல்லாம், பெருகி எழும் உணர்ச்சியால் நன்கு பயின்றவராயும், அந்நெறியின் அறிவிற் சிறந்தவராயும் விளங்கினார். அதனால் பருத்த உடலை உடைய அச்சமணர்கள், மருணீக்கியாரைச் சூழ்ந்து மகிழ்வாராகி, அவருக்குத் தங்களின் மேம்பட்ட 'தருமசேனர்' என்ற பட்டத்தைத் தந்தனர்.
குறிப்புரை: நீதி நூல்கள், மந்திர நூல்கள், புராண நூல்கள் முதலிய பலவும் அவர்கள் செய்திருத்தலின் அவற்றை 'அருங்கலை நூல்' என் றார். துங்கம் - பெரிது; உடலால் பெரியர். எனவே பருத்தவுடல் என்ற வாறாயிற்று.

அத்துறையின் மீக்கூரும்
அமைதியினால் அகலிடத்தில்
சித்தநிலை அறியாத
தேரரையும் வாதின்கண்
உய்த்தவுணர் வினில்வென்றே
உலகின்கண் ஒளியுடைய
வித்தகராய் அமண்சமயத்
தலைமையினில் மேம்பட்டார்.

[ 40]


அவ்வத் துறையிலும் மிக்குப் பெருகிய சிறப்பி னால், அகன்ற உலகத்தில், உயிரது நிலையை அறியாத புத்தர்களை யும், வாதில் ஆராய்ந்து தெளிந்த உணர்வினால் வெற்றி கண்டு, உலகத்தில் அறிவொளி மிக்க பெரியோராய்ச் சமண சமயத் தலைமை யில் அவர் மேம்பட்டனர்.
குறிப்புரை: சித்த நிலை - உயிரது நிலை: சித்தமும், அதன் உட்பகுதி யாய அகக் கருவிகளின் கூட்டமுமே உயிர் என்பர் புத்தர். ஆதலின் அவரைச் 'சித்த நிலை அறியாத தேரர்' என்றார்.

Go to top
அந்நெறியின் மிக்கார்
அவரொழுக ஆன்றதவச்
செந்நெறியின் வைகும்
திலகவதி யார்தாமும்
தொன்னெறியின் சுற்றத்
தொடர்பொழியத் தூயசிவ
நன்னெறியே சேர்வதற்கு
நாதன்தாள் நண்ணுவார்.

[ 41]


அவர் அவ்வாறு அந்நெறியில் மேம்பட்டவராய் ஒழுக, பொருந்திய தவமாய செந்நெறியில் நின்ற திலகவதி அம்மை யாரும், பழமையான சுற்றத் தொடர்பு நீங்கத், தூய்மை தரும் சிவ நன்னெறியையே சேர்வதற்குச் சிவபெருமானின் திருவடிகளை வணங்குவாராகி,

குறிப்புரை: தூய சிவநன்னெறி - மெய்யுணர்வு; இதனை ஞானம் என்பர். பாசநீக்கமும் சிவப் பேறுமே ஞானத்தின் பயனாகப் பெறத் தக்கனவாம். அவற்றைப் பெறும் நிலையில் திலகவதியார் நின்றார்.

பேராத பாசப்
பிணிப்பொழியப் பிஞ்ஞகன்பால்
ஆராத அன்புபெற
ஆதரித்த அம்மடவார்
நீராரும் கெடிலவட
நீள்கரையில் நீடுபெருஞ்
சீராரும் திருவதிகை
வீரட்டா னஞ்சேர்ந்தார்.

[ 42]


நீங்காத பாசக் கட்டு நீங்குமாறு, சிவபெரு மானிடத்தே மீதூர்ந்த அன்பு கொண்ட அவ்வம்மையார், புண்ணியத் தன்மை வாய்ந்த, 'திருக்கெடிலம்' என்ற ஆற்றின் நீண்ட வடகரையில் அமைந்திருக்கும் நீடும் பெருஞ்சிறப்பு மிக்க திருவதிகை வீரட் டானத்தை அடைந்தார்.
குறிப்புரை: இப்பேராறு, 'தென் திசையில் கங்கை எனும் திருக் கெடிலம்' (தி. 12 சரு. 1-5 பா. 89) எனச் சிறப்பிக்கப்படுவது.
நீர்மை ஆகும் என்பது நீராகும் என நின்றது. நீர்மை - புண்ணியத் தன்மை.

சென்றுதிரு வீரட்டா
னத்திருந்த செம்பவளக்
குன்றை அடிபணிந்து
கோதில் சிவசின்னம்
அன்று முதல்தாங்கி
ஆர்வமுறத் தம்கையால்
துன்று திருப்பணிகள்
செய்யத் தொடங்கினார்.

[ 43]


திலகவதியார் அங்குச் சென்று வீரட்டானத்தில் எழுந்தருளியிருக்கும் செம்பவள மலை என விளங்கும் வீரட்டா னேசுவரரை அடிபணிந்து, குற்றம் இல்லாத சிவசின்னங்களை அன்று முதல் அணிந்து கொண்டு, அன்பு பொருந்தத் தம் கையால் பொருந் திய திருப்பணிகளைச் செய்யத் தொடங்கினார்.
குறிப்புரை: சிவசின்னம்: திருநீறும், கண்டிகையும். துன்று - பொருந்திய; பெண்பால் ஆதலின் தமக்கியன்ற பணியைச் செய்தார் என்பார்; பொருந்திய பணி என்றார்.

புலர்வதன்முன் திருவலகு
பணிமாறிப் புனிறகன்ற
நலமலிஆன் சாணத்தால்
நன்குதிரு மெழுக்கிட்டு
மலர்கொய்து கொடுவந்து
மாலைகளும் தொடுத்தமைத்துப்
பலர்புகழும் பண்பினால்
திருப்பணிகள் பலசெய்தார்.

[ 44]


பொழுது விடிவதற்கு முன், அக்கோயில் திரு முற்றத்தில் திருவலகு இடுதல் முதலான திருப்பணியைச் செய்தும், ஈன்றணியதல்லாத நல்ல பசுவின் சாணத்தால் நன்கு திருமெழுக் கிட்டும், மலர்களைக் கொய்து கொண்டு வந்து, மாலைகள் தொடுத்து அமைத்துக் கொடுத்தும், அன்பர் பலரும் பாராட்டுகின்ற பண்பினால் இவ்வாறு பல திருப்பணிகளையும் செய்து வந்தார்.
குறிப்புரை: திருவலகு பணிமாறுதல் - திருக்கோயிலின் திரு முற்றத்தைப் பெருக்கித் தூய்மைப் படுத்துதல். திருமெழுக்கிடுதல் - பசுவின் சாணத்தால் எவ்வுயிர்க்கும் ஊறுபாடு நேராதவாறு மெழுகுதல். புனிறு அகன்ற - கன்று ஈன்ற அண்மைக் காலம் அல்லாத; அஃதாவது கன்று ஈன்று 10 நாள்கள் வரை அப்பசுவின் பாலையோ சாணத்தையோ பயன்படுத்தலாகாது ஆதலின், கன்று ஈன்ற 10 நாள்கள் ஈன்ற அணிமைக் காலம் ஆகும். நலம் மலி ஆன் - நன்மை அமைந்த பசு. அஃதாவது மலட்டுப் பசு, சினைப்பசு, மலந்தின்னும் பசு அல்லாத பசுக்களாம். இப்பாடற்கண் கூறப்பெறும் நெறி சரியை நெறியாகும். 'நிலைபெறுமாறு எண்ணுதியேல்' (தி. 6 ப. 31 பா. 3) எனத் தொடங்கும் அப்பர் திருவாக்கில் இச்சரியைநெறி நன்கு விளக்கப்பட் டுள்ளது. எனவே இப்பணியைத் தம்பியாருக்கு முன் செய்து காட்டியவர் திலகவதியார் ஆவர். 'தாச மார்க்கம் சாற்றின்' (சிவஞா. சித்தி. சுபக். சூ. 8 பா. 19) எனத் தொடங்கும் சித்தியார் திருவாக்கு, அப்பர், சேக்கிழார் ஆகிய இருவர் தம் திருவாக்கையும் நிலைக் களனாகக் கொண்டு விளக்கப்பட்டதாகும்.

நாளும்மிகும் பணிசெய்து
குறைந்தடையும் நன்னாளில்
கேளுறும்அன் புறவொழுகுங்
கேண்மையினார் பின்பிறந்தார்
கோளுறுதீ வினைஉந்தப்
பரசமயங் குறித்ததற்கு
மூளுமனக் கவலையினால்
முற்றவரும் துயருழந்து.

[ 45]


சிவனடியார்களான சுற்றத்தார்களிடம் அன்பு மீதூர்ந்து ஒழுகும் கேண்மையுடைய திலகவதியார், நாள்தோறும் இவ்வாறாய பணிகளைச் செய்து, தாழ்வெனும் தன்மையுடன் ஒழுகி வரும் நாள்களில், தமக்குப் பின் பிறந்தவரான மருணீக்கியார் தம்மைப் பற்றிய தீவினையின் விளைவால் சமண் சமயம் புகுந்ததால் உண்டான மனக் கவலையால் மிக்க பெருந்துன்பத்தை அடைந்து.
குறிப்புரை: குறைந்தடைதல் - அடியார்களிடம் மிகப் பணிவுடன் சார்தல். கேள் - சுற்றம், இங்கு அடியவர்களாகிய சுற்றம். அடியவர் களையே சுற்றமாகக் கருதியது, அவர்தம் அருளியல் வயப்பட்ட அன்பை விளக்கும். 'சுற்றம் மாசிலா ஈசன் அன்பர்' (திருவிளை. வாதவூர். 84) எனவரும் பரஞ்சோதியார் திருவாக்கும் காண்க.

Go to top
தூண்டுதவ விளக்கனையார்
சுடரொளியைத் தொழுதென்னை
ஆண்டருளின் நீராகில்
அடியேன்பின் வந்தவனை
ஈண்டுவினைப் பரசமயக்
குழிநின்றும் எடுத்தருள
வேண்டுமெனப் பலமுறையும்
விண்ணப்பஞ் செய்தனரால்.

[ 46]


திருவருள் சார்பிலேயே திளைக்குமாறு தூண்டப் படும் தவ விளக்கைப் போன்ற அவ்வம்மையார், வீரட்டானத்து எழுந் தருளி இருக்கும் இறைவரை வணங்கித், தொழுது, 'பெருமானே! என்னை ஆண்டருளுவீராகில், எனக்குப் பின் தோன்றியவனைச், சேர்கின்ற தீவினையையுடைய சமண் சமயமான படுகுழியினின்றும் எடுத்தருளி அடிமை கொள்ள வேண்டும்' என்று பல முறையும் விண் ணப்பம் செய்தார்.
குறிப்புரை: இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

தவமென்று பாயிடுக்கித்
தலைபறித்து நின்றுண்ணும்
அவமொன்று நெறிவீழ்வான்
வீழாமே அருளுமெனச்
சிவமொன்று நெறிநின்ற
திலகவதி யார்பரவப்
பவமொன்றும் வினைதீர்ப்பார்
திருவுள்ளம் பற்றுவார்.

[ 47]


'தவத்தை மேற்கொண்டதாக எண்ணிக் கொண்டு, பாயை உடுத்தியும், தலைமயிரைப் பறித்தும், நின்றவாறே உணவு உண்டும் வருந்துகின்ற அவநெறியாய சமண நெறியில் விழுந்த என் தம்பியை, அவ்வாறு விழாமல் அருள் செய்ய வேண்டும்' என்று சிவத்தையே சார்ந்து நிற்கும் திருநெறியில் வாழும் திலகவதியார் வேண்ட, பிறவி வயப்பட்டு உழலும் வினைகளைத் தீர்ப்பவரான சிவபெருமானும் அதனைத் திருவுள்ளம் பற்றுவாராய்,

குறிப்புரை: சிவம் ஒன்று நெறி - ஈண்டுச் சரியை நெறியைக் குறிக்கும்.

மன்னுதபோ தனியார்க்குக்
கனவின்கண் மழவிடையார்
உன்னுடைய மனக்கவலை
ஒழிநீஉன் உடன்பிறந்தான்
முன்னமே முனியாகி
எமையடையத் தவம்முயன்றான்
அன்னவனை இனிச்சூலை
மடுத்தாள்வம் எனஅருளி.

[ 48]


நிலைபெற்ற தவமுடைய அப்பெருமாட்டி யார்தம் கனவில், இளமையான ஆனேற்றை உடைய சிவபெருமான் எழுந்தருளி, 'நீ உன்னுடைய மனக் கவலையை ஒழிவாயாக, உன் தம்பி முன்னமே ஒரு முனிவனாக இருந்து எம்மை அடைவதற்குத் தவம் செய்தனன், இனி அவனுக்குச் சூலை நோய் தந்து ஆட் கொள் வோம்' என அருளிச் செய்து,

குறிப்புரை:

பண்டுபுரி நற்றவத்துப்
பழுதினள விறைவழுவும்
தொண்டரைஆ ளத்தொடங்கும்
சூலைவே தனைதன்னைக்
கண்தருநெற் றியரருளக்
கடுங்கனல்போல் அடுங்கொடிய
மண்டுபெருஞ் சூலைஅவர்
வயிற்றினிடைப் புக்கதால்.

[ 49]


முற்பிறவியில் செய்த நற்றவத்தில் சிறிதளவு பிழை செய்த தொண்டரான மருணீக்கியாரை, ஆட்கொள்ளத் தொடங்கும் சூலை நோயை, நெற்றிக் கண்ணராகிய சிவபெருமான் அருள் செய்ய, கொடிய தீயைப் போல் சுடுகின்ற அம்மிகப் பெருஞ் சூலைநோய் அவருடைய வயிற்றுள் புகுந்தது.
குறிப்புரை: இவ்விரு பாடல்களாலும், நாவரசர் முற்பிறவியில் ஒரு முனிவராய்த் தவம் இயற்றி இருந்தமையும், அதில் நேர்ந்த ஒரு சிறு பிழையால் இப்பிறவி பெற நேர்ந்தமையும் புலனாகின்றன. இறை வழு - சிறிதளவிலான குற்றம். இது, சுதபா முனிவராக இருந்த பொழுது, கயிலையைப் பெயர்த்த இராவணனுக்கு உய்யும் வழி காட்டியமை என்பர் ஒரு சாரார். உண்மையுணர வந்த சாந்தர் எனும் முனிவருக்குச் சமணமே பெரிது என்று அறிவுறுத்தியமை என்பர் ஒருசாரார். இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

அடைவில்அமண் புரிதரும
சேனர்வயிற் றடையும்அது
வடஅனலுங் கொடுவிடமும்
வச்சிரமும் பிறவுமாம்
கொடியவெலாம் ஒன்றாகும்
எனக்குடரின் அகங்குடையப்
படருழந்து நடுங்கிஅமண்
பாழியறை யிடைவீழ்ந்தார்.

[ 50]


சேரத் தகாத சமண சமயத்தை விரும்பி ஒழுகிய தருமசேனரின் வயிற்றுள் புக்க அச்சூலை நோய், வடவைத் தீயும், கொடிய நஞ்சும், வயிரமும் ஆகிய இவை போன்ற கொடுமை செய் யும் மற்றவை எல்லாமும் ஒன்றுகூடி வந்தனவோ என எண்ணுமாறு குடரின் உள்ளே குடைய, அவர் துன்புற்று வருந்திச் சமணர் பாழியில் உள்ள அறையில் விழுந்தார்.
குறிப்புரை: அடைவு - சேர்தல்; இல் - இல்லாத. எனவே சேரத்தகாத என்பதாயிற்று. வடவனல் - வடவா எனும் பெயருடைய தீ. இது குதிரை முகமாகக் கடலகத்து இருப்பது என்றும், ஊழிக் காலத்தில் இது பெரிதும் பரவிக் கடலையும் உலகையும் அழிக்கும் என்றும் கூறுவர். வச்சிரம் - வயிரம். ஒன்பான் மணிகளுள் ஒன்று. இதனைப் பொடி யாக்கி உண்ண உயிர் நீங்கும்.

Go to top
அச்சமயத் திடைத்தாம்முன்
அதிகரித்து வாய்த்துவரும்
விச்சைகளால் தடுத்திடவும்
மேன்மேலும் மிகமுடுகி
உச்சமுற வேதனைநோய்
ஓங்கியெழ ஆங்கவர்தாம்
நச்சரவின் விடந்தலைக்கொண்
டெனமயங்கி நவையுற்றார்.

[ 51]


அச்சமண் சமயத்தில், தாம் முன்பு பழகிப்பயன் தந்துள்ள மந்திரம் முதலான வித்தைகளால் தடுக்கவும், அந்நோய் குறையாது மேன்மேலும் மிகவும் வளர்ந்து பெருகித் துன்பம் தரும்படி மிக்கு எழுந்ததால், ஆண்டிருந்த தருமசேனரும், பாம்பினிடமுள்ள நஞ்சு தலைக்கொண்டாற் போல மயங்கிச் சோர்ந்தார்.
குறிப்புரை: அதிகரித்து - பயின்றுவந்து. வாய்த்து வரும் - பயன் பட்டு வரும்.

அவர்நிலைமை கண்டதற்பின்
அமண்கையர் பலர்ஈண்டிக்
கவர்கின்ற விடம்போல்முன்
கண்டறியாக் கொடுஞ்சூலை
இவர்தமக்கு வந்ததினி
யாதுசெயல் என்றழிந்தார்
தவமென்று வினைபெருக்கிச்
சார்பல்லா நெறிசார்வார்.

[ 52]


தருமசேனரின் நிலையைக் கண்ட அளவில், தவம் என்று கூறிக் கொண்டு, தீவினையையே பெருக்கி, நல்ல பற்றுக் கோடற்ற, சமண நெறியினைச் சார்ந்த கீழ்மக்கள் பலரும் கூடி, 'உயி ரைக் கவரும் நஞ்சைப் போல், முன் எங்கும், எவரும் கண்டறியாத இக் கொடிய சூலை நோய் இவருக்கு வந்ததே; இனி என் செய்வோம்' என்று மனம் வருந்தினர்.
குறிப்புரை:

புண்தலைவன் முருட்டமணர்
புலர்ந்துசெயல் அறியாது
குண்டிகைநீர் மந்திரித்துக்
குடிப்பித்தும் தணியாமை
கண்டுமிகப் பீலிகொடு
கால்அளவுந் தடவிடவும்
பண்டையினும் நோவுமிகப்
பரிபவத்தால் இடருழந்தார்.

[ 53]


புண்ணுடைய தலையையும், வலியமுரட்டுத் தன்மையையும் உடைய சமணர் மனம் அழிந்து, செய்வதறியாது, தம் குண்டிகையில் இருந்த நீரை மந்திரித்துக் குடிக்கச் செய்தும், நோய் தணியாததைக் கண்டு, மேலும் மயிற் பீலிகொண்டு உடல் முழுதும் தடவிவிடவும், முன்னை விட நோய் மிகுதியானது. அதனால் அவர்கள் மனம் வருந்தினர்.
குறிப்புரை:

தாவாத புகழ்த்தரும
சேனருக்கு வந்தபிணி
ஓவாது நின்றிடலும்
ஒழியாமை உணர்ந்தாராய்
ஆஆநாம் என்செய்கோம்
என்றழிந்த மனத்தினராய்ப்
போவார்கள் இதுநம்மால்
போக்கரிதாம் எனப்புகன்று.

[ 54]


கெடுதல் இல்லாத புகழையுடைய தரும சேனருக்கு வந்தநோய் நீங்காதாகவே, அத்தன்மையை உணர்ந்து, 'ஆ! ஆ! நாம் இனி என் செய்வோம்?' என்று வருந்திய மனத்துடன், 'இது நம்மால் நீக்குதல் அரிதாகும்' என்று அகன்று செல்வாராய்,

குண்டர்களுங் கைவிட்டார்
கொடுஞ்சூலை கைக்கொண்டு
மண்டிமிக மேன்மேலும்
முடுகுதலால் மதிமயங்கிப்
பண்டையுற வுணர்ந்தார்க்குத்
திலகவதி யார்உளராக்
கொண்டவர்பால் ஊட்டுவான்
தனைவிட்டார் குறிப்புணர்த்த.

[ 55]


சமணர்களும் கைவிட்டனர். கொடிய சூலை நோய் தம்மைப் பற்றிக் கொண்டு மேன்மேலும் வருத்துவதால், செய்வது அறியாது, அறிவு மயங்கிய நிலையில், முன்னைய உறவினரை நினைத்து. உணரப்புகுந்த அவருக்குத் திலகவதியாராய தமக்கையார் இருக்கிறார் எனும் நினைவு வர, அவரிடம் தம் எண்ணத்தை உணர்த்தும் பொருட்டுத் தம்மை ஊட்டுவிக்கும் ஏவலாளனை அனுப்பி வைத்தார்.
குறிப்புரை: ஊட்டுவான் - உணவு சமைத்துப் படைக்கும் ஏவலாளன். திலகவதியாரிடத்துச் சேர்ப்பிக்கும் நல்லூழ்ப் பயனை ஊட்டுவான் எனவும் இச்சொல் குறிப்பால் உணர்த்தி நிற்பதை அறிந்து மகிழலாம். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

Go to top
ஆங்கவன்போய்த் திருவதிகை
தனையடைய அருந்தவத்தார்
பூங்கமழ்நந் தனவனத்தின்
புறத்தணையக் கண்டிறைஞ்சி
ஈங்கியான் உமக்கிளையார்
ஏவலினால் வந்ததெனத்
தீங்குளவோ எனவினவ
மற்றவனும் செப்புவான்.

[ 56]


அனுப்பப்பட்ட அவனும் சென்று திருவதிகை யினைச் சேர, அதுபொழுது அரிய தவத்தவரான திலகவதியார், நறுமணம் வீசும் மலர்களையுடைய நந்தனவனத்தின் புறத்தே வர, அவரைக் கண்டு 'நான் உம் இளையாரின் (தம்பியார்) ஏவலால் இங்கு வந்தேன்' எனக் கூற, அது கேட்ட திலகவதியார், 'தீங்கு உளவோ?' என வினவ, அவனும் கூறுபவனாய்.
குறிப்புரை: நறுமணம் மிக்க மலர்களை உடைய நந்தவனத்தின் புறத்தே அம்மையார் வரக் கண்டனன் எனவே, அவன் இரவுப் பொழுது புறப்பட்டு விடியற் காலத்தே அம்மையாரைக் கண்டமை பெறப்படுகின்றது.

கொல்லாது சூலைநோய்
குடர்முடக்கித் தீராமை
எல்லாரும் கைவிட்டார்
இதுசெயல்என் முன்பிறந்த
நல்லாள்பால் சென்றியம்பி
நான்உய்யும் படிகேட்டிங்
கல்லாகும் பொழுதணைவாய்
என்றார்என் றறிவித்தான்.

[ 57]


'சூலை நோயானது கொல்வது மட்டும் செய்யாது, குடலை முடக்கித் தீராத நோயாக அவருக்கு வந்துள்ளது. அதனைத் தீர்க்க முயன்ற அனைவரும் கைவிட்டனர். இச்செய்தியை என் முன் பிறந்த நல்லாரிடம் போய்ச் சொல்லி, நான் உய்யும் வகையை அவரிடம் கேட்டு, இங்கு இரவுப் போதில் வருவாயாக! என்றார்' எனத் தெரிவித்தான்.
குறிப்புரை: முன் பாடலில் ஊட்டுவான் இரவில் வந்தமை குறிப்பால் அறியப்பட்டது. ஈண்டு வெளிப்படையாகவே மருள் நீக்கியார் மறுநாள் இரவு வருக என்றமை புலப்படுகின்றது. எனவே, இச்செயல் அங்கிருந்த சமணர்க்கு அறியாமற் செய்தமை தெரியவருகின்றது. இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

என்றவன்முன் கூறுதலும்
யான்அங்குன் னுடன்போந்து
நன்றறியார் அமண்பாழி
நண்ணுகிலேன் எனும்மாற்றம்
சென்றவனுக் குரையென்று
திலகவதி யார்மொழிய
அன்றவனும் மீண்டுபோய்ப்
புகுந்தபடி அவர்க்குரைத்தான்.

[ 58]


இவ்வாறு அவன் தம் முன்னின்று உரைக்கவும், 'நான் அங்கு உன்னுடன் வந்து, நன்மை நெறி அறியாத சமணர் பாழியை அடைய மாட்டேன் என்று, என் சொல்லை நீ சென்று அவனிடம் கூறுவாய்' எனத் திலகவதியார் உரைக்க, அன்று அவனும் திரும்பிப் போய், நிகழ்ந்ததை நிகழ்ந்தவாறே அவருக்குச் சொன்னான்.
குறிப்புரை: திருவருள் இதுவென உணர்ந்திருந்தமையாலும், தம்பியார் சிவநெறிச் சார்படைய வேண்டும் எனும் உறுதிப்பாட் டானும் இங்ஙனம் திலகவதியார் கூறுவாராயினர்.

அவ்வார்த்தை கேட்டலுமே
அயர்வெய்தி இதற்கினியான்
எவ்வாறு செய்வன்என
ஈசரருள் கூடுதலால்
ஒவ்வாஇப் புன்சமயத்
தொழியாஇத் துயரொழியச்
செவ்வாறு சேர்திலக
வதியார்தாள் சேர்வனென.

[ 59]


அப்பணியாளன் திலகவதியார் உரைத்ததைத் தெரிவிக்க, அதைக் கேட்டதும், தருமசேனர் தளர்ச்சி அடைந்து, இதற்கு யான் என் செய்வேன்! என்று மயங்கிய போது, சிவபெருமான் திருவருள் கூட்டப், 'பொருந்தாத இப்புன்மைச் சமயத்தில் ஒழியாத இத்துன்பம், ஒழியுமாறு செந்நெறியில் சேர்ந்த திலகவதியார் சேவடி களைச் சேர்வேன்' என்று மனத்தில் நினைத்து,

குறிப்புரை:

எடுத்தமனக் கருத்துய்ய
எழுதலால் எழுமுயற்சி
அடுத்தலுமே அயர்வொதுங்கத்
திருவதிகை அணைவதனுக்
குடுத்துழலும் பாயொழிய
உறியுறுகுண் டிகையொழியத்
தொடுத்தபீ லியும்ஒழியப்
போவதற்குத் துணிந்தெழுந்தார்.

[ 60]


மனத்தில் எழுந்த கருத்துத் தாம் பிழைத்தற் குரியதாய் இருக்க, மனத்து எழும் முயற்சியும் கூட, தளர்ச்சி நீங்கிய அளவில், திருவதிகையினை அடைவதற்கு, உடுத்தி உழன்ற பாய் ஒழியவும், உறியில் தூக்கிய குண்டிகை ஒழியவும், கொண்ட மயிற்பீலி ஒழியவும் போவதற்குத் துணிந்து எழுந்தாராகி.
குறிப்புரை: ஒழித்து என்னாது ஒழிய என்றார். அவை நாவரசர் தம் குறிப்பாலன்றித் தாமே நீங்கியமை தோன்ற.

Go to top
பொய்தருமால் உள்ளத்துப்
புன்சமணர் இடங்கழிந்து
மெய்தருவான் நெறியடைவார்
வெண்புடைவை மெய்சூழ்ந்து
கைதருவார் தமையூன்றிக்
காணாமே இரவின்கண்
செய்தவமா தவர்வாழுந்
திருவதிகை சென்றடைவார்.

[ 61]


பொய்யைத் தரும் மயக்கமுடைய உள்ளத்தராகிய இழிந்த சமணர்கடளித்தினின்றும் நீங்கி, மெய்யுணர்வை வழங்கி அதனால் வீடுபேற்றைத் தருபவனாகிய சிவபெருமானின் நன்னெறியை அடைபவராய், அதற்கேற்றவாறு வெண்மையான ஆடையை உடலில் உடுத்திக் கொண்டு, கைகொடுத்துத் தம்மைத் தாங்கி வருவார்மீது ஊன்றியவாறு, சமணர் காணாத வண்ணம், தவம் செய்யும் மாதவர் வாழ்கின்ற திருவதிகையை இரவில் சென்று அடைவாராய்,

குறிப்புரை: மெய்தருவான் - சிவபெருமான். வெண்புடைவை மெய் சூழ்ந்து - சமணரின் காவி உடையை நீக்கிச் சைவருக்குரிய வெண்மையான உடையை அணிந்து.

சுலவிவயிற் றகம்கனலுஞ்
சூலைநோ யுடன்தொடரக்
குலவியெழும் பெருவிருப்புக்
கொண்டணையக் குலவரைபோன்
றிலகுமணி மதிற்சோதி
எதிர்கொள்திரு வதிகையினில்
திலகவதி யார்இருந்த
திருமடத்தைச் சென்றணைந்தார்.

[ 62]


சுழற்றிச் சுழற்றி வயிற்றுள் பற்றி எரியும் சூலை நோய் தம்முடனே தொடர, பொருந்தி எழும் விருப்பம் தம்மைக் கொண்டு செலுத்த, பெரிய மலை போன்று விளங்கும் மதிலின் ஒளி எதிர் தோன்றத், திருவதிகையில் திலகவதியார் இருந்த திருமடத்தைச் சென்று அடைந்தார்.
குறிப்புரை: இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.

வந்தணைந்து திலகவதி
யார்அடிமே லுறவணங்கி
நந்தமது குலஞ்செய்த
நற்றவத்தின் பயன்அனையீர்
இந்தவுடல் கொடுஞ்சூலைக்
கிடைந்தடைந்தேன் இனிமயங்கா
துய்ந்துகரை யேறுநெறி
உரைத்தருளும் எனவுரைத்து.

[ 63]


வந்து அடைந்து திலகவதியாரின் திருவடிகளில் பொருந்த விழுந்து வணங்கி, 'நம் குலம் செய்த நற்றவத்தின் பயன் போன்றவரே! இவ்வுடலில் பற்றிய கொடிய சூலை நோய்க்கு மிகவும் வருந்தி, உம்மை வந்து சேர்ந்தேன். இனி மயங்காமல் உய்ந்து கரை சேரும் வழியைத் தாங்கள் கட்டளையிட்டருளல் வேண்டும்' எனக் கூறி

குறிப்புரை:

தாளிணைமேல் விழுந்தயருந்
தம்பியார் தமைநோக்கி
ஆளுடைய தம்பெருமான்
அருள்நினைந்து கைதொழுது
கோளில்பர சமயநெறிக்
குழியில்விழுந் தறியாது
மூளும்அருந் துயர்உழந்தீர்
எழுந்திரீர் எனமொழிந்தார்.

[ 64]


தம் அடிகளில் விழுந்து வருந்தும் தம்பியாரைப் பார்த்துத், தம்மை அடிமையாக உடைய சிவபெருமானின் திரு வருளை எண்ணித் தொழுது, 'நல்ல குறிக்கோள் இல்லாத பிற சமயக் குழியில் விழுந்து பெருகிய கொடிய துன்பத்தில் வருந்தினீர்! இனி எழுந்திருப்பீராக!' எனக் கூறியருளினார்.
குறிப்புரை: இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

மற்றவ்வுரை கேட்டலுமே
மருணீக்கி யார்தாமும்
உற்றபிணி உடல்நடுங்கி
எழுந்துதொழ உயர்தவத்தோர்
கற்றைவே ணியர்அருளே
காணுமிது கழலடைந்தோர்
பற்றறுப்பார் தமைப்பணிந்து
பணிசெய்வீர் எனப்பணித்தார்.

[ 65]


அவர் உரைத்த அவ்வுரையைக் கேட்டதும், மருணீக்கியார் பொருந்திய நோயுடனே நிலத்தில் விழுந்த நிலையி னின்றும் எழுந்து தொழவே, உயர் தவத்தவரான திலகவதியார், 'இது தொகுதியான சடையையுடைய சிவபெருமானின் திருவருளாகும், தம் திருவடிச் சார்பை அடைந்தவரின் பற்றுக்களை அறுப்பவரான அப் பெருமானைப் பணிந்து பணி செய்வீராக!' என்று பணித்தார்.
குறிப்புரை:

Go to top
என்றபொழு தவரருளை
எதிரேற்றுக் கொண்டிறைஞ்ச
நின்றதபோ தனியாரும்
நின்மலன்பேர் அருள்நினைந்து
சென்றுதிரு வீரட்டம்
புகுவதற்குத் திருக்கயிலைக்
குன்றுடையார் திருநீற்றை
அஞ்செழுத்தோ திக்கொடுத்தார்.

[ 66]


எனத் திலகவதியார் அருள, அவர்தம் அருளை ஏற்றுக்கொண்டு மருணீக்கியார் வணங்க, அவர் போய்த் திருவீரட்டம் புகுவதற்குத் தகுதியுடையவராக ஆக்குவதற்குத் திலகவதியார் திருக் கயிலை மலையினுடைய இறைவரின் ஐந்தெழுத்தை ஓதித் திருநீற்றை வழங்கினார்.
குறிப்புரை: 'உனதருளால் திருவாய்ப் பொலியச் சிவாய நமவென்று நீறணிந்தேன் தருவாய் சிவகதி நீ' (தி. 4 ப. 94 பா. 6) என அடிகளே பின்னர் அருளுவதால், சிவநெறியைச் சார்தற்குத் திருநீறும் ஐந்தெழுத்தும் அரிய பற்றுக்கோடாகும் என அம்மையார் திருவுளம் பற்றி வழங்கியருளினார்.

திருவாளன் திருநீறு
திலகவதி யார்அளிப்பப்
பெருவாழ்வு வந்ததெனப்
பெருந்தகையார் பணிந்தேற்றங்
குருவார அணிந்துதமக்
குற்றவிடத் துய்யுநெறி
தருவாராய்த் தம்முன்பு
வந்தார்பின் தாம்வந்தார்.

[ 67]


சிவபெருமானின் திருநீற்றைத் திலகவதியார் அளிக்க, 'எனக்குப் பெருவாழ்வு வந்தது' என எண்ணிப் பெருந் தகையாரான மருணீக்கியார் பணிந்து ஏற்றுக் கொண்டார். அதைத் தம் திருமேனி முழுதும் பொருந்த நிறைய அணிந்து கொண்டு, தமக்குத் தீங்குற்ற இடத்தில் உய்யும் வழிதருபவராகித் தம்முன்வந்த அத் திலகவதியாரின் பின்பு, அவரும் வந்தார்.
குறிப்புரை: தமக்கையார் திருநீறு வழங்கியதும் அவர் திருமுன்பு அணிதல் மரபன்று என்று கருதியவர், சிறிது விலகியிருந்து உருவார அணிந்து கொண்டபின், அப்பெருமாட்டியாரின் பின் வந்தார். இஃது அவர்தம் நெறியையும் நீர்மையையும் காட்டுகின்றது.

நீறணிந்தார் அகத்திருளும்
நிறைகங்குல் புறத்திருளும்
மாறவருந் திருப்பள்ளி
எழுச்சியினில் மாதவஞ்செய்
சீறடியார் திருவலகுந்
திருமெழுக்குந் தோண்டியுங்கொண்
டாறணிந்தார் கோயிலினுள்
அடைந்தவரைக் கொடுபுக்கார்.

[ 68]


அவ்வாறு திருநீற்றை அணிந்தவரின் உள்ளத்தில் உள்ள அக இருளும், வெளியே சூழ்ந்திருந்த இரவின் புற இருளும் மாறும்படி வரும் திருப்பள்ளி எழுச்சிக் காலத்தில், 'மாதவம் செய்யும் திலகவதியம்மையார், திருவலகும், திருமெழுக்கிற்குரிய ஆவின் சாணமும் தோண்டியும் ஆகிய இவற்றை எடுத்துக் கொண்டு, கங்கை யாற்றை அணிந்த இறைவரின் கோயிலுள் தம்மை வந்தடைந்த நாய னாரையும் அழைத்துக் கொண்டு சென்றார்.
குறிப்புரை: தம்மைப் பிரிந்திருந்த தமக்கையார் இதுகாறும் செய்து வந்த திருத்தொண்டைத் தம்பியார் கண்டு மகிழும் புண்ணியம் வாய்த்தது.

திரைக்கெடில வீரட்டா
னத்திருந்த செங்கனக
வரைச்சிலையார் பெருங்கோயில்
தொழுதுவலங் கொண்டிறைஞ்சித்
தரைத்தலத்தின் மிசைவீழ்ந்து
தம்பிரான் திருவருளால்
உரைத்தமிழ்மா லைகள்சாத்தும்
உணர்வுபெற உணர்ந்துரைப்பார்.

[ 69]


அலைகளையுடைய 'கெடிலம்' என்ற ஆற்றின் கரையில் உள்ள வீரட்டானத்தில் இருந்த, சிவந்த பொன்மலையை வில்லாகக் கொண்ட சிவபெருமானின் பெருங்கோயிலைத் தொழுது வலமாக வந்து வணங்கி, நிலத்தில் விழுந்து வணக்கம் செய்து, தம் பெருமானின் திருவருளால் அவர் புகழைக் கூறும் தமிழ் மாலையைச் சாத்தும் உணர்வு வர உள் உணர்ந்து உரைப்பவராகி.
குறிப்புரை: கோயில் தொழுது - தொலைவில் இருந்து பார்க்கை யில் தெரிவது கோயிலின் கோபுரம். முதலில் அதையே அடியவர் தொழுவர். திருக்கோயில் வழிபாட்டுமுறை குறித்துமேலும் தெளிவுற யாழ்ப்பாணத்து ஆறுமுகநாவலரின் சைவவினாவிடை, (சிவாலய தரிசன இயல்) பார்க்க.

நீற்றால்நிறை வாகிய மேனியுடன்
நிறையன்புறு சிந்தையில் நேசமிக
மாற்றார்புரம் மாற்றிய வேதியரை
மருளும்பிணி மாயை அறுத்திடுவான்
கூற்றாயின வாறு விலக்ககிலீர்
எனநீடிய கோதில் திருப்பதிகம்
போற்றாலுல கேழின் வருந்துயரும்
போமாறெதிர் நின்று புகன்றனரால்.

[ 70]


திருநீற்றினால் நிறைந்த மேனியுடன், மிகுந்த அன்பு பொருந்திய மனத்தில் விருப்பம் மிகப், பகைவரின் முப்புரங் களை எரித்த வேதியரான வீரட்டானத்து இறைவரை, மயக்கத்தையும் சூலையையும், மாயையும் அறுக்கும் பொருட்டுக் 'கூற்றாயினவாறு விலக்ககலீர்' எனத் தொடங்கும் பெருமையுடைய குற்றம் இல்லாத திருப்பதிகத்தைப் போற்றுவதால், உலகத்தில் ஏழு பிறப்புக்களிலும் வரும் துன்பமும் நீங்குமாறு திருமுன்பு நின்று பாடினார்.
குறிப்புரை: மருள் - பொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணர்வது. மாயை - உலகியல் வழிப்பட்டு நிற்கும் பிறவிச் சூழல். நாவரசரால் முதற்கண் அருளப்பெற்ற பதிகம் 'கூற்றாயினவாறு' (தி. 4 ப. 1) எனத் தொடங்கும் பதிகமாகும். இது கொல்லிப் பண்ணில் அமைந்ததாகும். சூலைநோயின் துன்பத்தைப் பலபட எடுத்து விண் ணப்பித்து அதனை நீக்கியருளவேண்டும் எனும் குறிப்புடையது இப்பதிகமாகும். கோது இல் திருப்பதிகம் - உடற்குற்றமாய சூலையை யும், உயிர்க்குற்றமாகிய பிறவிப்பிணியையும் இல்லையாகச் செய்யும் திருப்பதிகம்.

Go to top
மன்னும்பதி கம்அது பாடியபின்
வயிறுற்றடு சூலை மறப்பிணிதான்
அந்நின்ற நிலைக்கண் அகன்றிடலும்
அடியேன்உயி ரோடருள் தந்ததெனாச்
செந்நின்ற பரம்பொரு ளானவர்தம்
திருவாரருள் பெற்ற சிறப்புடையோர்
முன்னின்ற தெருட்சி மருட்சியினால்
முதல்வன்கரு ணைக்கடல் மூழ்கினரே.

[ 71]


நிலைபெறும் அப்பதிகத்தை அவர் அருளிய பின்பு, அவரது வயிற்றில் தங்கி வருத்திய கொடிய சூலை நோயும் அக்கணமே நீங்கிடவும், சிறப்பென்னும் செம்பொருளான சிவ பெருமானின் திருநிறைந்த அருளைப் பெறுதற்கான சிறப்புடைய நாயனார், பொருந்தி நின்ற ஞான மயக்கத்தால் இறைவரின் அருள் ஆகிய கடலுள் மூழ்கி நின்றார்.
குறிப்புரை: திருவார் அருள் - முத்திப் பேற்றை அடைதற்குரிய அருள்.

அங்கங்கள் அடங்க உரோமமெலாம்
அடையப்புள கங்கண் முகிழ்த்தலரப்
பொங்கும்புனல் கண்கள் பொழிந்திழியப்
புவிமீது விழுந்து புரண்டயர்வார்
இங்கென்செயல் உற்ற பிழைப்பதனால்
ஏறாத பெருந்திடர் ஏறிடநின்
தங்குங்கரு ணைப்பெரு வெள்ளமிடத்
தகுமோவென இன்னன தாமொழிவார்.

[ 72]


மகிழ்ச்சியினால் திருமேனி முழுதும் மயிர் சிலிர்த்து நிற்க, கண்களினின்று இடையறாது பொங்கும் ஆனந்தக் கண்ணீர் வழிந்து பெருக, தரையின் மீது விழுந்து புரண்டு மகிழ்ச்சியில் திளைத்த நாயனார், 'இவ்விடத்து என் செய்கையால் உண்டான பிழை பெரிதும் இருந்தும், ஏறாத பெரிய மேட்டிலும் ஏறுமாறு உம் நிலை பெற்ற அருளான பெருவெள்ளத்தைப் பெருக்குதலும் தகுதி யாகுமோ?' என இத்தகைய சொற்களைத் தாமே கூறுபவராய்,

குறிப்புரை: அடியேன் செய்திருக்கும் பிழைக்கு, நீர் செய்த கருணைப் பெருக்குத் தகுமோ? என்றது, தமது சிறுமையையும், இறைவரின் பெருமையையும் நினைந்து கூறியதாகும்.

பொய்வாய்மை பெருக்கிய புன்சமயப்
பொறியில்சமண் நீசர் புறத்துறையாம்
அவ்வாழ்குழி யின்கண் விழுந்தெழுமா
றறியாது மயங்கி அவம்புரிவேன்
மைவாச நறுங்குழல் மாமலையாள்
மணவாளன் மலர்க்கழல் வந்தடையும்
இவ்வாழ்வு பெறத்தரு சூலையினுக்
கெதிர்செய்குறை யென்கொல் எனத்தொழுதார்.

[ 73]


பொய்யை மெய் என்று பெருக்கிய இழிந்த சமயமாய், நல்வினையற்ற இழிந்த சமணர் சார்ந்து நிற்கும் புறச் சமயமான ஆழமான படுகுழியில் விழுந்து, மேலே எழுகின்ற வழியறியாது, மயங்கிப் பயனற்ற தொழிலைச் செய்து வந்த யான், மயிர்ச் சாந்தினால் மணம் கமழும் நறிய கூந்தலையுடைய உமை யம்மையாரின் கணவரான சிவபெருமானின் மலர்போன்ற அடிகளை வந்து அடையும் இப்பெருவாழ்வினைப் பெறத்தந்த இச்சூலை நோய்க்குக் கைம்மாறாகச் செய்யக்கூடிய உதவி என்ன இருக்கின்றது? என அச்சூலை நோயை நினைந்து வணங்கினார்.
குறிப்புரை: 'குடரோடு துடக்கிமுடக்கியிட ஆற்றேன்', 'நஞ்சாகி வந்து என்னை நலிவது' என்றெல்லாம் கூறுமாறு வருத்திய சூலைக்கு 'எதிர்செய் குறை என் கொல்?' எனக் கூறியது, வரவரக் கண்டு ஆராய்ந்தமையால் வந்த அருட்குறிப்பாகும். ''நன்றாய் வந்த வொருபொரு ளொருவற்கு
நன்றே யாகி நந்தினு நந்தும்
நன்றாய் வந்த வொருபொரு ளொருவற்
கன்றாய் மற்றஃ தழுங்கினு மழுங்கும்
தீதாய் வந்த வொருபொரு ளொருவற்குத்
தீதே யாகித் தீயினுந் தீயும்
தீதாய் வந்த வொருபொரு ளொருவற்
காசில் பெரும்பொரு ளாகினு மாமெனச்
சேயவ ருரைத்ததை. . . . '' -பெருங்கதை, 2 - 1 : 58 - 66
எனக் கொங்குவேளிர் குறிக்கும் அநுபவங்களில் நாவரசருக்கு, இது நான்காவது அநுபவ உணர்வாய் அமைவதாயிற்று. இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

மேவுற்றஇவ் வேலையில் நீடியசீர்
வீரட்டம் அமர்ந்த பிரானருளால்
பாவுற்றலர் செந்தமி ழின்சொல்வளப்
பதிகத்தொடை பாடிய பான்மையினால்
நாவுக்கர சென்றுல கேழினும்நின்
நன்னாமம் நயப்புற மன்னுகஎன்
றியாவர்க்கும் வியப்புற மஞ்சுறைவா
னிடையேயொரு வாய்மை எழுந்ததுவே.

[ 74]


பொருந்திய அவ்வமையத்தில், சிறப்பால் மிக்க திருவீரட்டானத்து அமர்ந்திருக்கும் இறைவரின் திருவருளால், பாடற்கு இயைந்து அலர்ந்த செந்தமிழின் இனிய சொல்வளம் கொண்ட திருப்பதிக மாலையைப் பாடியருளிய முறையினால், 'திருநாவுக்கரசு' என்று உனது பெயர் பலரும் விரும்புமாறு ஏழு உலகங்களிலும் நிலைபெறுவதாகுக! என எல்லார்க்கும் வியப்பு உண்டாகுமாறு மேகம் தவழும் வானில் ஓர் ஒலி எழுந்தது.
குறிப்புரை: 'கொல்லியாம் பண்ணுகந்தார் குறுக்கை வீரட்டனாரே' (தி. 4 ப. 49 பா. 6) என நாவரசர் பின் அருளுதற்கு இவ்வநுபவமும் ஏதுவாகுமோ எண்ணுக.

இத்தன்மை நிகழ்ந்துழி நாவின்மொழிக்
கிறையாகிய அன்பரும் இந்நெடுநாள்
சித்தந்திகழ் தீவினை யேன்அடையுந்
திருவோஇது என்று தெருண்டறியா
அத்தன்மைய னாய இராவணனுக்
கருளுங்கரு ணைத்திற மானஅதன்
மெய்த்தன்மை யறிந்து துதிப்பதுவே
மேல்கொண்டு வணங்கினர் மெய்யுறவே.

[ 75]


இவ்வருட் செயல் நிகழ்ந்தவாற்றால் நாவின் மொழிக்கு அரசரான அன்பரும், 'இத்தனை நீண்ட காலமும் சித்தத் தினுள் விளங்கிய தீவினையை உடைய நான், அடையத்தக்க பெரும்பேறு இதுவோ!' என்று நினைந்தவராய், தெளிந்தறியாத அவ்வியல்பையுடைய இராவணனுக்கும் அருளும் அருளின் பெருமையான அதன் மெய்த்தன்மையை அறிந்து, அத்திறத்தை நினைந்து வணங்குதலையே மேற்கொண்டு மெய்யுற வீழ்ந்து வணங்கினார்.
குறிப்புரை: இராவணன் செயத்தகாத, கயிலை மலையைப் பெயர்க்க நினைந்தும், அது நிறைவேறாத நிலையில் பெருமான் தனக்கு அளித்த மறக்கருணையை நினைந்து வழுத்தினன். பெருமா னும் அவனுக்கு இரங்கியருளினன். இது போன்றதே இறைவன் தம்மளவில் அருளியதும் என்றருளுகின்றார் நாவரசர்.

Go to top
பரசுங்கரு ணைப்பெரி யோன்அருளப்
பறிபுன்தலை யோர்நெறி பாழ்படவந்
தரசிங்கருள் பெற்றுல குய்ந்ததெனா
அடியார்புடை சூழதி கைப்பதிதான்
முரசம்பட கந்துடி தண்ணுமையாழ்
முழவங்கிளை துந்துபி கண்டையுடன்
நிரைசங்கொலி எங்கும் முழங்குதலால்
நெடுமாகடல் என்ன நிறைந்துளதே.

[ 76]


'வணங்கத்தக்க பேரருளையுடைய பெரியவரான சிவபெருமான் அங்ஙனம் அருள் செய்ய, மயிர்பறித்த இழிந்த தலையையுடைய சமணர்களின் சமய நெறி பாழ்பட்டு அழியத், திருநாவுக்கரசர் இங்குவந்து அருள்பெற்ற அதனால் உலகம் உய்ந்தது' என்று, சிவனடியார்கள் எம்மருங்கும் சூழ்ந்த திருவதிகை நகரமானது, முரசும், தம்பட்டமும், உடுக்கையும், மத்தளமும், யாழும், முழவும், கிளையும், துந்துபியும், மணியும் என்ற இவற்றின் முழக்கத்துடனே நிரல்பட ஒலிக்கும் சங்கங்களும் எங்கும் ஒலித்தலால், நீண்ட பெருங் கடல் போல் நிறைந்து விளங்கியது.
குறிப்புரை: திருவதிகைப்பதி கடல் என விளங்கியது. தண்ணுமை - மத்தளம். கிளை - வேய்ங்குழல்.

மையற்றுறை யேறி மகிழ்ந்தலர்சீர்
வாகீசர் மனத்தொடு வாய்மையுடன்
மெய்யுற்ற திருப்பணி செய்பவராய்
விரவுஞ்சிவ சின்னம் விளங்கிடவே
எய்துற்ற தியானம் அறாவுணர்வும்
ஈறின்றி எழுந்திரு வாசகமும்
கையில்திக ழும்உழ வாரமுடன்
கைத்தொண்டு கலந்து கசிந்தனரே.

[ 77]


மயக்கத்தைத் தரும் சமண் சமயத் துறையினின்றும் மேல் ஏறி மகிழும் சிறப்புடைய திருநாவுக்கரசர், உள்ளத்தாலும் சொல்லாலும் உடலாலும் பொருந்திய சிவப்பணியைச் செய்பவராய், அதற்கு ஏற்றவாறு பொருந்தும் சிவச் சின்னங்களான திருநீற்றையும் கண்டிகையையும் விளங்கப் பூண்டு, இடையீடில்லாது உள்ளத்தில் தோய்ந்து நிற்கும் திருவருள் உணர்வையும், தடைப்படாது மேன்மேலும் எழும் திருப்பதிகங்கள் பொருந்திய திருவாக்கையும், கையில் விளங்கும் உழவாரப் படையினையும் கொண்டவராய்த் தம் கைத் தொண்டை மனம் கலந்து கசிந்து செய்து வந்தார்.
குறிப்புரை: மனத்தொடு வாய்மையுடன் மெய்யுற்ற திருப்பணி - மனம், மொழி, மெய் ஆகிய முக்கருவிகளாலும் செயத்தக்க திருப்பணி. மனத்தொடு பொருந்திய பணி - தியானம் அறாத உணர்வு. மொழியொடு பொருந்திய திருப்பணி - ஈறின்றி எழும் திருவாசகம். மெய்யொடுபட்ட திருப்பணி - சிவச்சின்னம் விளங்கிட உழவாரப் பணி செய்தமை. 'மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானம்செய் வாரின் தலை' (குறள்,295) எனும் குறளையும் நினைவு கூர்க.

மெய்ம்மைப்பணி செய்த விருப்பதனால்
விண்ணோர்தனி நாயக னார்கழலில்
தம்மிச்சை நிரம்ப வரம்பெறும்அத்
தன்மைப்பதி மேவிய தாபதியார்
பொய்ம்மைச்சம யப்பிணி விட்டவர்முன்
போதும்பிணி விட்டரு ளிப்பொருளா
எம்மைப்பணி கொள்கரு ணைத்திறமிங்
கியார்பெற்றனர் என்ன இறைஞ்சினரே.

[ 78]


தேவர்கட்கெல்லாம் ஒப்பற்ற தலைவரான வீரட்டானத் தமர்ந்திருக்கும் இறைவரின் திருவடிகளில் உள்ளம் வைத்து விரும்பி, மெய்ம்மை குன்றாத திருப்பணிகளைச் செய்து, விண்ணப்பம் செய்ததால், தம் இச்சை நிரம்புமாறு வரம்பெற்ற அத்தெய்வத் தன்மை வாய்ந்த, திருவதிகையில் வாழும் தவத்தவரான திலகவதியார், 'பொய்ம்மையான சமண் சமயத் தொடக்கை விட்டு, அவர் (தம்பியார்), இறைவர் திருமுன்பு வந்து புகுதற்கு ஏதுவான சூலை நோயைத் தந்து, மிகச் சிறிய எம்மையும் ஒருபொருளாக ஆட்கொண்ட பெருங்கருணைத் திறத்தைப் போல் இங்கு வேறு எவர் பெற்றார்?' என்று எண்ணிப் போற்றி வணங்கினார்.
குறிப்புரை: தம்மிச்சை நிரம்ப வரம் பெறும் . . . . . . . . . . தாபதியார் என்றது திலகவதியாரையாகும். ஈண்டுப் பெற்ற வரம் 'என்னை ஆட்கொண்டருளுவீராகில் அடியேன்பின் வந்தவனை . . . . . . பரசமயக் குழியினின்றும் எடுத்தருள வேண்டும்' என் முன் தாம் வேண்டியதற்கு ஏற்ப இறையருள் கருணை பாலித்தமையேயாகும். மேலும், 'விண்ணணோர்தனி நாயகனார் கழலில் தம்மிச்சை நிரம்ப வரம் பெறும்' என ஈண்டுக் கூறுவதையும் இணைத்துக் காண, அவர் வீடு பேறடைந்தமையையும் குறிப்பால் உணர்த்துவதை அறியலாம் என்பர் சிவக்கவிமணியார் (பெரிய. பு. உரை).

இன்ன தன்மையில் இவர்சிவ
நெறியினை யெய்தி
மன்னு பேரருள் பெற்றிடர்
நீங்கிய வண்ணம்
பன்னு தொன்மையிற் பாடலி
புத்திர நகரில்
புன்மை யேபுரி அமணர்தாம்
கேட்டது பொறாராய்.

[ 79]


இவ்வகையில் இவர் சிவநெறியினை அடைந்து, நிலைபெற்ற பேரருளைப் பெற்றுத் துன்பத்தினின்றும் நீங்கியவாற்றை, புகழ்ந்து பேசப்பெறும் பழமை பொருந்திய பாடலிபுத்திரம் என்னும் நகரத்தில் இருந்த, இழி செயலையே செய்கின்ற சமணர்கள் கேள்வியுற்ற நிலையில், அதைப் பொறுத்துக் கொள்ள இயலாதவராய்,

குறிப்புரை: திலகவதியார் வீடுபேறடைந்தமையை, இப்பாடலில் முதல் அடியின் பொருளாக அமைக்கலாம். காரணம் சென்ற பாடல் திலகவதியாரைப் பற்றியது. இப்பாடலின் முதல் அடியில் 'இன்ன தன்மையில் இவர் சிவநெறியினை எய்தி' என அண்மைச் சுட்டான இகரச் சுட்டு ஈரிடத்து அமைந்துள்ளது. இச் சுட்டுக்கள் இதற்கு முன்னுள்ள பாடலைத் தழுவலே இயற்கையாகும். இவ்வகையில் எண்ணில் மேற்பாடலோடு இயைந்தவாறு திலகவதியார் இவ் வகையில் திருவருளைப் போற்றியவாறு வீடுபேற்றை அடைய என முதல் அடியின் பொருளை நிறைவுபடுத்தி, அடுத்த அடியிலிருந்து வரும் பொருள் நாவரசர் வரலாறாக அமைத்துக் கொள்ளின் சாலச் சிறக்கும். இவ்வாறு கொள்ளுதற்கு ஏற்ப, எய்தி என்பதை எய்த எனத் திரித்துக் கொள்ளல் வேண்டும். செய்தெனெச்சம் செயவெனெச்ச மாகத் திரிதல் இலக்கணமேயாம்.

தரும சேனர்க்கு வந்தஅத்
தடுப்பருஞ் சூலை
ஒருவ ராலும்இங் கொழிந்திடா
மையின்அவர் உயப்போய்ப்
பெருகு சைவராய்ப் பெயர்ந்துதம்
பிணியொழித் துய்ந்தார்
மருவு நம்பெருஞ் சமயம்வீழ்ந்
ததுவென மருள்வார்.

[ 80]


'தருமசேனருக்கு வந்த, தடுத்தற்கு அரிய அச்சூலைநோய், இங்கு ஒருவராலும் தீர்க்கப்படாமையால், உய்யும் பொருட்டு, அவர் சென்று சிறந்த சைவராகித், தம்பிணி நீங்கப் பெற்றார். இதனால் நாம் மேற்கொண்டிருக்கும் சமண் சமயம் பாழ்பட்டது' என்று மயங்குவாராகி.
குறிப்புரை: மருள்வார் - மயங்குவாராய்.

Go to top
மலையும் பல்சம யங்களும்
வென்றுமற் றவரால்
நிலையும் பெற்றஇந் நெறிஇனி
அழிந்ததென் றழுங்கிக்
கொலையும் பொய்ம்மையும் இலமென்று
கொடுந்தொழில் புரிவோர்
தலையும் பீலியும் தாழவந்
தொருசிறை சார்ந்தார்.

[ 81]


'மாறுபடுகின்ற பல்வேறு சமயங்களையும் வென்று, மற்று அவரால் நிலைக்கவும் பெற்ற இச்சமண் சமயநெறி, இனி அழிந்தது என வருந்தி, கொலை செய்வதும் பொய் பேசுவதும் இலோம்!' எனக் கூறிக் கொண்டு, அக்கொடுஞ் செயல்களையே செய்பவராகித் தம் மயிர் பறித்த தலைகளும், கைக்கொண்ட பீலியும் தாழ, ஒரு மருங்கு அடைந்தனர்.
குறிப்புரை: சிறை - மருங்கு: பக்கம். இம்மூன்று பாடல்களும் ஒரு முடிபின.

இவ்வ கைப்பல அமணர்கள்
துயருடன் ஈண்டி
மெய்வ கைத்திறம் அறிந்திடில்
வேந்தனும் வெகுண்டு
சைவ னாகிநம் விருத்தியும்
தவிர்க்கும்மற் றினிநாம்
செய்வ தென்னென வஞ்சனை
தெரிந்துசித் திரிப்பார்.

[ 82]


இம்மனநிலையில் பல சமணர்களும் துன்பம் பெருக ஒருங்கு கூடி, 'நம்மையும், நாம் கொண்டிருக்கும் சமய உண்மையையும் அறிந்தால், அரசன் வெகுண்டு, சைவனாகி, நமது வாழ்வையும் போக்குவான்; ஆதலால் இனி நாம் என் செய்வோம்?' என்று வஞ்சனையுடன் ஆராய்வாராகி,

குறிப்புரை: விருத்தி - நாம் வாழ்ந்து வரும் வாழ்வு. சித்திரித்தல் - இல்லதை உள்ளது போலவும், உள்ளதை இல்லது போலும் காட்டும் வல்லமை.

தவ்வை சைவத்து நிற்றலின்
தருமசே னருந்தாம்
பொய்வ குத்ததோர் சூலைதீர்ந்
திலதெனப் போயிங்
கெவ்வ மாகஅங் கெய்திநஞ்
சமயலங் கனமும்
தெய்வ நிந்தையும் செய்தனர்
எனச்சொலத் தெளிந்தார்.

[ 83]


'தமக்கையார் சைவசமயத்தில் நிற்றலால், தருமசேனரும் தாம் பொய்யாய் உண்டாக்கிக் கொண்ட ஒரு சூலை நோய் இங்குத் தீர்ந்திலது என்று இச்சமண் சமயத்திற்கு ஒரு கேட்டினை ஏற்படுத்தி, அங்குச் சென்றதால், நம் சமய வரம்பைத் துறந்தும், தெய்வத் தன்மையை இகழ்ந்தும் போந்தார், என்று மன்னனிடம் சொல்வோம்' என்று முடிவு செய்தனர்.
குறிப்புரை: சமயலங்கனம் - சமயத்தைத் துறத்தல். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

சொன்ன வண்ணமே செய்வது
துணிந்ததுன் மதியோர்
முன்னம் நாஞ்சென்று முறைப்படு
வோமென முயன்றே
இன்ன தன்மையில் இருட்குழாஞ்
செல்வது போல
மன்ன னாகிய பல்லவன்
நகரில்வந் தணைந்தார்.

[ 84]


'சொல்லியவாறே செய்வோம்!' எனத் துணிந்த கெடுமதியினரான அச்சமணர்கள், 'நாம் முன்னர்ச் சென்று அரசனிடம் கூறுவோம்' என முயன்று, இந்நிலையில் இருட்கூட்டம் செல்வது போல் சென்று, பல்லவ மன்னர் இருக்கும் நகரத்திற்கு வந்து சேர்ந்தனர்.
குறிப்புரை:

உடையொ ழிந்தொரு பேச்சிடை
யின்றிநின் றுண்போர்
கடைய ணைந்தவன் வாயில்கா
வலருக்கு நாங்கள்
அடைய வந்தமை அரசனுக்
கறிவியும் என்ன
இடைய றிந்துபுக் கவருந்தம்
இறைவனுக் கிசைப்பார்.

[ 85]


உடை இல்லாதவராயும், உண்கின்ற போது ஒன்றையும் பேசாதிருப்பவராயும் உள்ள அச்சமணத் துறவியர்கள் அரசனின் வாயிலை அடைந்து, அங்குள்ள காவலர்க்கு 'நாங்கள் வந்திருக்கும் செய்தியை மன்னனுக்குத் தெரிவியுங்கள்' எனக் கூற, அவரும் சமயமறிந்து தம் மன்னனுக்குச் சொல்வாராய்,

குறிப்புரை:

Go to top
அடிகண்மார் எல்லாரும்,
ஆகுலமாய் மிகவழிந்து
கொடிநுடங்கு திருவாயில்
புறத்தணைந்தார் எனக்கூற
வடிநெடுவேல் மன்னவனும்
மற்றவர்சார் பாதலினால்
கடிதணைவான் அவர்க்குற்ற
தென்கொல்எனக் கவன்றுரைத்தான்.

[ 86]


'சமணத் துறவியர் எல்லாரும் ஒருங்கே துன்பத்தால் அழிந்து, கொடி அசையும் திருவாயிலின் புறத்தே அணைந்துள்ளனர்' எனக் கூற, கூரிய நெடிய வேலையுடைய அவ்வரசனும், அவர்களின் சார்புடையவன் ஆதலால், 'இவ்வாறு விரைந்து கூடி வருவதற்கு அவர்களுக்கு என்ன நேர்ந்தது?', என்று கவலையுடன் கேட்டான்.
குறிப்புரை: இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

கடைகாவல் உடையார்கள்
புகுதவிடக் காவலன்பால்
நடையாடுந் தொழிலுடையார்
நண்ணித்தாம் எண்ணியவா
றுடையாரா கியதரும
சேனர்பிணி யுற்றாராய்ச்
சடையானுக் காளாய்நின்
சமயம்அழித் தாரென்றார்.

[ 87]


வாயில் காவலர்களும் சமணர்களை உள்ளே போகும்படிவிட, உயிருடன் நடந்து செல்லும் தொழில் ஒன்றையே உடையவராய அச்சமணர்களும் மன்னனிடம் சேர்ந்தனர். சேர்ந்து, 'நம் தலைவரான தருமசேனர் சூலை நோய் உற்றதாய்க் கூறிச் சென்று, சிவனுக்கு ஆளாகி, நின் சமயத்தை அழித்தனர்' எனக் கூறினர்.
குறிப்புரை: கடை - வாயிலின் முன்புறம். நம் சமயம் என்னாது நின் சமயம் என்றார், அவ்வுரிமை அவனுக்கு மேலும் சினம் மிகுவிக்கும் என்பது பற்றி.

விரையலங்கல் பல்லவனும்
அதுகேட்டு வெகுண்டெழுந்து
புரையுடைய மனத்தினராய்ப்
போவதற்குப் பொய்ப்பிணிகொண்
டுரைசிறந்த சமயத்தை
அழித்தொழியப் பெறுவதே
கரையில்தவத் தீர்இதனுக்
கென்செய்வ தெனக்கனன்றான்.

[ 88]


மணம் பொருந்திய மலர் மாலையையுடைய பல்லவ மன்னனும், அச்செய்தியைக் கேட்டுச் சினம் கொண்டு, எழுந்து, 'குற்றமுடைய மனத்தினராய்ப் போதற் பொருட்டுப் பொய்யாகப் பிணிவந்தது' என்று கூறி, 'பலவாறும் புகழப் பெறும் நம் சமண் சமயத்தை அழித்து நீங்கப் பெறுவதோ? அளவற்ற தவத்தை யுடையவர்களே! இதற்கு இனி என்ன செய்தல் வேண்டும்?' எனச் சினந்து வினவினான்.
குறிப்புரை:

தலைநெறியா கியசமயந்
தன்னையழித் துன்னுடைய
நிலைநின்ற தொல்வரம்பில்
நெறியழித்த பொறியிலியை
அலைபுரிவாய் எனப்பரவி
வாயால்அஞ் சாதுரைத்தார்
கொலைபுரியா நிலைகொண்டு
பொய்யொழுகும் அமண்குண்டர்.

[ 89]


கொல்லாமையை மேற்கொண்டவர்கள் எனக் கூறிக்கொண்டு ஒழுகும் பாவியர்களாய அச்சமணர்கள், 'மேலாய நெறியாய சமண சமயத்தை அழித்து, அதனால், உன் ஆணையில் நின்ற பழைய ஒழுக்க நெறியையும் அழித்த அறிவற்ற அவரை வருத்துவாயாக!' என்று வேண்டித் தம் வாயால் ஒரு சிறிதும் அஞ்சாது உரைத்தனர்.
குறிப்புரை: பொறி - அறிவு. அலைபுரிவாய் - அரசன் என்ற முறை யில் துன்புறுத்துவாய். அலை - கோல் கொண்டு அலைத்தல் முதலா யின (தொல். மெய்ப். 10) எனவரும் பேராசிரியர் உரையும் காண்க. 'கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு அல்லவை செய்தொழுகும் வேந்து' (குறள்,551) என வரும் திருக்குறளும் காண்க.

அருள்கொண்ட உணர்வின்றி
நெறிகோடி அறிவென்று
மருள்கொண்ட மன்னவனும்
மந்திரிகள் தமைநோக்கித்
தெருள்கொண்டோர் இவர்சொன்ன
தீயோனைச் செறுவதற்குப்
பொருள்கொண்டு விடாதென்பால்
கொடுவாரும் எனப்புகன்றான்.

[ 90]


அருள் உணர்ச்சி இல்லாது, அறிவு என எண்ணி மயக்கத்தை மேற்கொண்ட அரசனும், அமைச்சர்களைப் பார்த்து, 'அறிவுடையோர்களான இவர்கள் சொன்ன தீயவனை, பொருள் பெற்றுக் கொண்டு விட்டு விடாது, ஒறுப்பதற்காக என் இடத்திற்குக் கொண்டு வாருங்கள்!' எனச் சொன்னான்.
குறிப்புரை: பொருள் கொண்டு விடுதல் - கையூட்டுப் பெற்றுக் கொண்டு விட்டு விடுதல். அவனை அறவோன் எனப் பொருட்படுத்தி விட்டுவிடாமல் எனப்பொருள் கொள்வர் ஆறுமுகத்தம்பிரான் சுவாமிகள் (பெரிய. பு. உரை). ஒறுப்புத் தண்டம் (அபராதம்) கொண்டு விட்டு விடாமல் என்றுரைப்பாரும் உளர். தெருள் கொண்டோர் - அறிவினால் தெளிவுற்றவர்.

Go to top
அரசனது பணிதலைநின்
றமைச்சர்களும் அந்நிலையே
முரசதிருந் தானையொடு
முன்சென்று முகில்சூழ்ந்து
விரைசெறியுஞ் சோலைசூழ்
திருவதிகை தனைமேவிப்
பரசமயப் பற்றறுத்த
பான்மையினார் பாற்சென்றார்.

[ 91]


அரசனின் ஏவலை மேற்கொண்ட அமைச்சர் களும் அவ்வாறே முரசுகள் ஒலிக்கும் படைகளோடும் முற்பட்டுச் சென்று, மேகங்கள் தவழ்ந்தும், மணம் செறிந்தும் விளங்கும் சோலை கள் சூழ்ந்த திருவதிகையை அடைந்து, புறச்சமயப் பற்றுக்களை அறுத்த பண்பினராய திருநாவுக்கரசரிடம் சென்றனர்.
குறிப்புரை: தலை நின்று - அரசனின் ஏவலைத் தலைமேற்கொண்டு.

சென்றணைந்த அமைச்சருடன்
சேனைவீ ரருஞ்சூழ்ந்து
மின்தயங்கு புரிவேணி
வேதியனார் அடியவரை
இன்றுநுமை அரசன்அழைத்
தெமைவிடுத்தான் போதுமென
நின்றவரை நேர்நோக்கி
நிறைதவத்தோர் உரைசெய்வார்.

[ 92]


சென்று சேர்ந்த அமைச்சர்களுடன் படைவீரரும் சூழ்ந்து மின்னல் என விளங்கும் சடையையுடைய சிவபெருமானின் அடியவரான திருநாவுக்கரசரை, 'இன்று மன்னன் உம்மைத் தன்னிடம் அழைத்து வருமாறு கூறி எம்மை ஏவி விடுத்தான். வாருங்கள்!' எனக் கூறினர். அவ்வாறு கூறிநின்ற அவர்களைப் பார்த்து, நிறைந்த தவத்தையுடைய திருநாவுக்கரசர் சொல்வாராக,

குறிப்புரை:

நாமார்க்குங் குடியல்லோம்
என்றெடுத்து நான்மறையின்
கோமானை நதியினுடன்
குளிர்மதிவாழ் சடையானைத்
தேமாலைச் செந்தமிழின்
செழுந்திருத்தாண் டகம்பாடி
ஆமாறு நீரழைக்கும்
அடைவிலமென் றருள்செய்தார்.

[ 93]


'நாமார்க்குங் குடியல்லோம்' எனத் தொடங்கி, நான்மறையின் தலைவரும், கங்கையுடன் குளிர்ந்த பிறைச் சந்திரனும் வாழும் சடையையுடையவருமான சிவபெருமானை இனிய செந் தமிழின் மாலையாய செழுமையான திருத்தாண்டகத் திருப் பதிகத் தைப் பாடி, 'உம் அரசனின் ஏவல் வழி, நீவிர் அழைக்கும் நிலையில் நாம் இல்லை!' என்று உரைத்தார்.
குறிப்புரை: இவ்வமையத்துப் பாடியது 'நாமார்க்கும் குடியல் லோம்' (தி. 6 ப. 98) எனத் தொடங்கும் திருத்தாண்டகம் ஆகும். அரசன் அழைத்ததற்கு, மறு மொழியாக இப்பதிகம் அமைந்திருப்பதால் இதனை மறுமாற்றுத் தாண்டகம் என அழைப்பர். சிவபெருமானுக்கே மீளா ஆளாய் அவர் திருவடிக்கண் நிற்றலான் நாமார்க்கும் குடியல் லோம் என்றார். பத்திமை நெறியில் தலைநின்ற ஒரு அடியவர், ஒரு பேரரசை அதுவும் அக்காலத்திருந்த பேரரசைத் துச்சமாக நினைந்து இம்மாற்றத்தை அருளியது, நாவரசரின் உறைப்பை விளக்குகின்றது. பெருமிதம் தவழ இங்ஙனம் கூறியதற்குக் காரணம், திருவருளின்பால் உறைப்புடைமையும், பற்றற்று நிற்கும் உள்ளம் உடைமையுமாம்.

ஆண்டஅர சருள்செய்யக்
கேட்டவரும் அடிவணங்கி
வேண்டியவர்க் கொண்டேக
விடையுகைத்தார் திருத்தொண்டர்
ஈண்டுவரும் வினைகளுக்கெம்
பிரானுளனென் றிசைந்திருந்தார்
மூண்டசினப் போர்மன்னன்
முன்னணைந்தங் கறிவித்தார்.

[ 94]


ஆளுடைய அரசர் இங்ஙனம் சொல்லக் கேட்டு, அவ்வமைச்சர்களும் அவருடைய அடிகளில் விழுந்து, வணங்கி, வேண்டி விண்ணப்பித்து, அவரை உடன் கொண்டு செல்ல, ஆன் ஏற்றுக் கொடியை உயர்த்திய இறைவனின் திருத்தொண்டரான அவர், 'இவ்விடத்து வரும் வினைகளுக்கு எம்பெருமானார் துணையாவார்' என அதற்கு இசைவுடன் இருந்தார். அவர்களும் மூண்ட சினமுடைய போரில் வல்ல அரசன் முன்பு அழைத்துச் சென்று அவனுக்கு அறிவித்தனர்.
குறிப்புரை: அரசன் ஏவல் வழித் தங்களை அழைத்துக் கொண்டு செல்லாவிடில், அவன் எங்களை ஒறுப்பன்; ஆதலின் உடன் வந்தருள வேண்டும் என வேண்ட, நாவரசரும் அவர்கள் பொருட்டு இசைந் தனர். இதனால் நாவரசரின் திருவுள்ளம் இருந்தமை அறியத்தக்கது.

பல்லவனும் அதுகேட்டுப்
பாங்கிருந்த பாயுடுக்கை
வல்அமணர் தமைநோக்கி
மற்றவனைச் செய்வதினிச்
சொல்லுமென அறந்துறந்து
தமக்குறுதி அறியாத
புல்லறிவோர் அஞ்சாது
நீற்றறையில் இடப்புகன்றார்.

[ 95]


பல்லவ மன்னனும் அதைக்கேட்டு அருகில் இருந்த பாய் உடுக்கையை யுடைய வலிய சமணத் துறவியர்களிடம் 'இனி அவனை என்ன செய்வது? கூறுக' எனக் கூற, அறத்தையும், உறுதியையும் அறியாத கீழான அறிவுடைய அச்சமணர்கள், சற்றும் அஞ்சாது, நீற்றறையில் இடுமாறு கூறினர்.
குறிப்புரை:

Go to top
அருகணைந்தார் தமைநோக்கி
அவ்வண்ணஞ் செய்கவெனப்
பெருகுசினக் கொடுங்கோலான்
மொழிந்திடலும் பெருந்தகையை
உருகுபெருந் தழல்வெம்மை
நீற்றறையின் உள்ளிருத்தித்
திருகுகருந் தாட்கொளுவிச்
சேமங்கள் செய்தமைத்தார்.

[ 96]


அருகில் இருந்தவரைப் பார்த்து, 'அவ்வண்ணமே செய்க' என்று சினம் கொண்ட அம்மன்னன் கூறிய அளவில், உருகச் செய்யும் பெருந்தீயின் வெம்மையுடைய நீற்றறையினுள், பெருந்தகையாரை இருக்கச் செய்து, கதவை மூடி, இருப்புத் தாழிட்டுக் காவல் செய்து அமைத்தனர்.
குறிப்புரை:

ஆண்டஅர சதனகத்துள்
அணைந்தபொழு தம்பலத்துத்
தாண்டவமுன் புரிந்தருளுந்
தாள்நிழலைத் தலைக்கொண்டே
ஈண்டுவருந் துயருளவோ
ஈசனடி யார்க்கென்று
மூண்டமனம் நேர்நோக்கி
முதல்வனையே தொழுதிருந்தார்.

[ 97]


ஆளுடைய அரசர் அந்நீற்றறையுள் சேர்ந்த போது, அம்பலத்தில் கூத்தியற்றும் இறைவனின் திருவடியின் நிழலையே தம் தலைமேற் கொண்டு, 'சிவபெருமானின் அடியவர்க் குத் துன்பங்கள் வருதலும் உளவோ?' என்று திருப்பதிகம் பாடி, உறுதி கொண்ட மனத்தால் நேர் நோக்கி முதல்வனையே தொழுது அமர்ந் திருந்தார்.
குறிப்புரை:

வெய்யநீற் றறையதுதான்
வீங்கிளவே னிற்பருவந்
தைவருதண் தென்றல்அணை
தண்கழுநீர்த் தடம்போன்று
மொய்யொளிவெண் ணிலவலர்ந்து
முரன்றயாழ் ஒலியினதாய்
ஐயர்திரு வடிநீழல்
அருளாகிக் குளிர்ந்ததே.

[ 98]


வெப்பத்தை உடைய அந்நீற்றறையே மிக்க இளவேனிற் காலத்தில் வீசி வருகின்ற குளிர்ந்த தென்றல் அணை கின்ற, தண்ணிய கழுநீர் மலர்கள் நிறைந்த வாவி போன்று ஒளிமிக்க வெண்மையான முழுமதியின் ஒளிவிரிந்து, ஒலிக்கின்ற யாழின் ஒலியுடன் கூடியதாய் இறைவரின் திருவடி நீழலினது அருள் மயமாய்க் குளிர்ந்தது.
குறிப்புரை: திருநாவுக்கரசர் இங்குப் பாடி அருளியது, 'மாசில் வீணையும்' (தி. 5 ப. 90) எனத் தொடங்கும் பதிகம் ஆகும். இப்பதிகத் தின் பாடற்குரிய விளக்கமாகவே சேக்கிழார் இப்பாடலை அருளி யுள்ளார். நீற்றறை, வெய்யதாய்த் துன்பம் தருவது. ஆனால் ஆளு டைய அரசருக்கோ அது அருளாகிக் குளிர்ந்தது. காரணம் தம் உணர்வில் நேர்பெற நிற்கும் சிவத்தோடு இணைந்திருத்தலினால் ஆம்.
மாசில் வீணை - முரன்ற யாழ் ஒலி. மாலை மதியம் - மொய்யொளி வெண்ணிலவு அலர்ந்தது. வீசு தென்றல் - தைவரு தண்தென்றல், வீங்கிள வேனில் - வீங்கிள வேனில் (நாவரசர் திருவாக்கைச் சேக்கிழாரும் பொன் போல் பொதிய வைத்தார்). மூசு வண்டறைப் பொய்கை - தண் கழுநீர்த் தடம்; நாவரசர் வண்டுகள் மொய்க்கும் பொய்கை என்றார். சேக்கிழார் அவை மொய்த்தற் கேதுவாய கழுநீர்ப் பூ உளவாதலைக் குறித்தார். இவ்வகையில் ஒப்பு நோக்கி மகிழலாம். நிலவின் ஒளி கண்ணிற்கும், யாழின் ஒலி காதிற்கும், தண் கழுநீர்த் தடம் உண்டற்கும், தைவருதென்றல் உயிர்த் தற்கும், வீங்கிளவேனில் ஊற்றுணர்விற்கும் ஏதுவாய் அமைய, உணர்வில் நேர் பெற நிற்கும் ஐம்புல இன்பங்களும் அருளாகிக் குளிர் வனவாயின. 'கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றுஅறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள' (குறள்,1101) என்பர். இது உலகியல் உணர்வால் அமைவது. இவற்றாலாய பயன் தெரிந்து, அவற்றை அருளியல் வழி அறிந்து துய்ப்பது அருளாளர்கண் ஆதலின், நாவரசர் அவ்வகையில் இவ்வருளநுபவத்தைப் பெறுகின்றார். 'சுவைஒளி ஊறுஓசை நாற்றம்என்று ஐந்தின் வகைதெரிவான் கட்டே உலகு' (குறள், 27) என்பவாகலின் இவ்வநுபவம் நாவுக்கரசர் வகை தெரிந்து துய்த்த அநுபவமாயிற்று.

மாசில்மதி நீடுபுனல்
மன்னிவளர் சென்னியனைப்
பேசஇனி யானையுல
காளுடைய பிஞ்ஞகனை
ஈசனைஎம் பெருமானை
எவ்வுயிருந் தருவானை
ஆசையில்ஆ ராவமுதை
அடிவணங்கி இனிதிருந்தார்.

[ 99]


குற்றமில்லாத மதியும், பெருகிய கங்கையாறும், நிலைபெறப் பொருந்தி வளர்வதற்கு இடமான சென்னியை உடைய வனை, பேசுவதற்கு இனியவனை, உலகுயிர்களை எல்லாம் ஆளாக உடைய தவக்கோலம் உடையவனை, ஈசனை, எம்பெருமானை, எவ்வுயிர்களையும் தோற்றுவிப்பவனை, அன்பில் விளையும் ஆரா அமுதை, அடிவணங்கி நாவுக்கரசர் இனிதாக இருந்தார்.
குறிப்புரை:

ஓரெழுநாள் கழிந்ததற்பின்
உணர்வில்அம ணரையழைத்துப்
பாருமினி நீற்றறையை
எனவுரைத்தான் பல்லவனுங்
காரிருண்ட குழாம்போலும்
உருவுடைய காரமணர்
தேருநிலை இல்லாதார்
நீற்றறையைத் திறந்தார்கள்.

[ 100]


ஓர் ஏழு நாள்கள் கழிந்தபின்பு, நல்லுணர்வு இல்லாத அவ்வமணர்களைப் பல்லவ மன்னனும் அழைத்து, 'இனி நீங்கள் நீற்றறையைத் திறந்து பாருங்கள்' எனப் பகன்றான். கருமை யானது செறிந்து இருண்டு கூடிய கூட்டம் போல வடிவுடைய சமணர், தெளியும் அறிவு இல்லாதவராய் நீற்றறையைத் திறந்தனர்.
குறிப்புரை:

Go to top
ஆனந்த வெள்ளத்தின்
இடைமூழ்கி யம்பலவர்
தேனுந்து மலர்ப்பாதத்
தமுதுண்டு தெளிவெய்தி
ஊனந்தான் இலராகி
உவந்திருந்தார் தமைக்கண்டு
ஈனந்தங் கியதிலதாம்
என்னஅதி சயம்என்றார்.

[ 101]


சிவானந்தப் பெருக்கினுள் மூழ்கி அம்பல வாணருடைய தேனைச் சொரியும் மலர் அனைய திருவடிகளின் அமுதத்தை உண்டு, தெளிவடைந்து, எவ்வகையான குறைபாடும் இல்லாதவராய், மகிழ்வுடன் வீற்றிருந்த திருநாவுக்கரசரைப் பார்த்து, 'கெடுதி சிறிதும் அடைந்திலது! என்ன வியப்பு!' என்று சமணர் உரைத்தனர்.

குறிப்புரை: நீராடல் உடல் வளத்திற்கும், உணவு அருந்துதல் உயிர் வளத்திற்கும் பயன்படுவன. உலகியல் வழிப்பட்டார்க்கு நீராடல் ஆறு, குளம், கடல் போன்றவற்றிலாகலாம். அருளியல் வழிப்பட்டவர் நாவரசர் ஆதலின் சிவானந்தப் பெருக்கில் நீராடல் அவருக்கு இயல்பாயிற்று. அது போன்றே உலகியல் வழிப்பட்டார்க்குச் சோறும் நீருமே உணவு ஆகும். நாவரசருக்குப் பெருமானாரின் திருவடிகளில் பெருகி வரும் அருளமுதமே உணவாயிற்று. இவ்வருளநுபவத்தால் ஒரு சிறுகுறைபாடும் இன்றி அவர் மகிழ்ந்திருந்தார்.

அதிசயம்அன் றிதுமுன்னை
அமண்சமயச் சாதகத்தால்
இதுசெய்து பிழைத்திருந்தான்
எனவேந்தற் குரைசெய்து
மதிசெய்வ தினிக்கொடிய
வல்விடம்ஊட் டுவதென்று
முதிரவரும் பாதகத்தோர்
முடைவாயால் மொழிந்தார்கள்.

[ 102]


'இஃது அதிசயம் அன்று! முன்பு சமண் சமயத்தைச் சார்ந்திருந்த சார்பில் பெற்ற சாதகத்தால் இதைச் செய்து, இறவாது பிழைத்திருந்தான்' என்று அரசனுக்குக் கூறி, 'இனி அறிவால் செய்யக் கடவது, கொடிய வலிய நஞ்சை இவனுக்கு ஊட்டுவதேயாகும்' என்று மேன்மேலும் தீமைசெய்வதில் முதிர்ச்சியடையந்துள்ள அச்சமணர்கள் நாற்றம் கொண்ட தம் வாயால் உரைத்தனர்.

குறிப்புரை:

ஆங்கதுகேட் டலுங்கொடிய
அமண்சார்பாற் கெடுமன்னன்
ஓங்குபெரு மையலினால்
நஞ்சூட்டும் எனவுரைப்பத்
தேங்காதார் திருநாவுக்
கரசரைஅத் தீயவிடப்
பாங்குடைய பாலடிசில்
அமுதுசெயப் பண்ணினார்.

[ 103]


அங்கு அதனைக் கேட்டதும், தீய சமண்சமயச் சார்பினால் கெடுகின்ற அரசனும், மிகப் பெரிய மயக்கத்தால் 'நஞ்சை ஊட்டுங்கள்' எனக் கூற, அதற்குச் சிறிதும் தயங்காத சமணர்கள், திருநாவுக்கரசரை அங்ஙனமே தீய நஞ்சு கலந்த பாற்சோற்றை உண்ணுமாறு செய்தனர்.

குறிப்புரை:

நஞ்சும்அமு தாம்எங்கள்
நாதனடி யார்க்கென்று
வஞ்சமிகு நெஞ்சுடையார்
வஞ்சனையாம் படியறிந்தே
செஞ்சடையார் சீர்விளக்குந்
திறலுடையார் தீவிடத்தால்
வெஞ்சமணர் இடுவித்த
பாலடிசில் மிசைந்திருந்தார்.

[ 104]


சிறந்த சடையையுடைய சிவபெருமானுடைய சீர்களை உலகத்தில் விளக்கும் ஆற்றலுடைய நாவரசர், வஞ்சனை மிகுந்த மனமுடைய சமணர்களின் வஞ்சனையால் அமைக்கப்பட்டது என்பதை அறிந்தே, 'எம் இறைவனின் அடியவர்க்கு நஞ்சும் அமுத மாகும்' என்ற உறுதிப்பாடு உடையவராய், கொடிய சமணர்களால் கொடுக்கப்பெற்ற நஞ்சு கலந்த பாற்சோற்றை உண்டு யாதொரு குறை பாடும் இல்லாது இருந்தார்.

குறிப்புரை: இந்நிகழ்ச்சிக்கு அகச்சான்றாக, (தி. 4 ப. 70 பா. 5)
துஞ்சிருள் காலை மாலை தொடர்ச்சியை மறந்தி ராதே
அஞ்செழுத் தோதி னாளு மரனடிக் கன்ப தாகும்
வஞ்சனைப் பாற்சோ றாக்கி வழக்கிலா வமணர் தந்த
நஞ்சமு தாக்கு வித்தார் நனிபள்ளி யடிக ளாரே.
எனவரும் திருப்பாடல் உளது என்பதுடன், ஆசிரியர் 'வஞ்சமிகும் நெஞ்சுடையார் வஞ்சனையாம் படியறிந்தே' எனவழிமொழியவும் காரணமாக விளங்குகின்றது.

பொடியார்க்குந் திருமேனிப்
புனிதர்க்குப் புவனங்கள்
முடிவாக்குந் துயர்நீங்க
முன்னைவிடம் அமுதானால்
படியார்க்கும் அறிவரிய
பசுபதியார் தம்முடைய
அடியார்க்கு நஞ்சமுதம்
ஆவதுதான் அற்புதமோ.

[ 105]


திருநீறு விளங்குகின்ற திருமேனியையுடைய புனிதரான இறைவற்கு, உலகங்களை எல்லாம் அழிக்கவல்ல துன்பம் நீங்கும்படி முன்பு நஞ்சானது அமுதமாகுமானால், யாவர்க்கும் அறிதற்கரிய தன்மையராய இறைவரின் அடியார்க்கு நஞ்சு அமுத மாவதும் ஒரு அற்புதமோ? ஆகாது என்பதாம்.

குறிப்புரை: யார்க்கும் அறிவறிய படி என இயைக்க. படி - தன்மை; 'இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொணாதே' (தி. 6 ப. 97 பா. 10) என்றவிடத்தும் இப்பொருள் படுதல் காணலாம்.

Go to top
அவ்விடத்தை ஆண்டஅர
சமுதுசெய்து முன்னிருப்ப
வெவ்விடமும் அமுதாயிற்
றெனஅமணர் வெருக்கொண்டே
இவ்விடத்தில் இவன்பிழைக்கில்
எமக்கெல்லாம் இறுதியெனத்
தெவ்விடத்துச் செயல்புரியுங்
காவலற்குச் செப்புவார்.

[ 106]


அந்நஞ்சை ஆளுடைய அரசர் உண்டும், அவர் முன்போலவே துன்பம் இன்றி இனிது இருக்கக், 'கொடிய நஞ்சும் அமுதம் ஆயிற்றே!' என்று சமணர் அச்சம் கொண்டவராகி, 'இங்கு இவன் சாதல் இன்றி உயிர் பிழைத்திருப்பானாயின், எமக்கெல்லாம் இறுதி நேர்ந்துவிடும்' எனத்துணிந்து, பகைவர்களிடத்துச் செய்தற் குரிய தொழிலை இவ்வருந்தவரிடத்தும் செய்யுமாறு மன்னனுக்குச் சொல்வாராய்,

குறிப்புரை: தெவ் - பகைமை.

நஞ்சுகலந் தூட்டிடவும்
நஞ்சமயத் தினில்விடந்தீர்
தஞ்சமுடை மந்திரத்தால்
சாதியா வகைதடுத்தான்
எஞ்சும்வகை அவற்கிலதேல்
எம்முயிரும் நின்முறையும்
துஞ்சுவது திடமென்றார்
சூழ்வினையின் துறைநின்றார்.

[ 107]


'நஞ்சு கலந்த பாற்சோற்றை உண்ணச்செய்தும், நம் சமயத்தில் கொண்ட நஞ்சு நீக்கும் மந்திரத்தால், அதன்பயன் விளையாதவாறு தடுத்து விட்டான். அவன் இறக்கும் வகை இலதேல் எங்கள் உயிர்களும் உனது ஆட்சியும் அழியும்' எனத் தீமையை விளைவிக்கும் வஞ்சகத் தொழிலின் வழியில் நின்ற அச்சமணர்கள் உரைத்தனர்.
குறிப்புரை: இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

மற்றவர்தம் மொழிகேட்டு
மதிகெட்ட மன்னவனும்
செற்றவனை இனிக்கடியும்
திறமெவ்வா றெனச்செப்ப
உற்றவரு மந்திரசா தகநாங்கள்
ஒழித்திடநின்
கொற்றவயக் களிறெதிரே
விடுவதெனக் கூறினார்.


[ 108]


அவர்களின் சொல்லைக் கேட்ட அறிவுகெட்ட அரசனும், 'நம் நெறியை அழித்த அவனை இனி ஒறுக்கும் வகை யாது?' என வினவ, அச்சமணர்களும் ' மந்திர சாதகங்களை நாங்கள் நீக்க, உன் வெற்றி பொருந்திய வலிய யானையை அவன் முன்னே விட்டு இடறச் செய்வதே தகுந்த வழியாகும்' என்று உரைத்தனர்.

குறிப்புரை:

மாபாவிக் கடைஅமணர்
வாகீசத் திருவடியாங்
காபாலி அடியவர்பாற்
கடக்களிற்றை விடுகென்னப்
பூபாலர் செயன்மேற்கொள்
புலைத்தொழிலோன் அவர்தம்மேற்
கோபாதி சயமான
கொலைக்களிற்றை விடச்சொன்னான்.

[ 109]


பெரும் பாவிகளுள்ளும் கீழானவர்களான அச்சமணர்கள், வாகீசத் திருவடிகளான சிவபெருமானின் அடியவர் மீது, 'மதயானையை ஏவி விடுக' என்று சொல்ல, உலகைக் காவல் கொண்டும் புலைத்தொழில் செய்வோனான அவ்வரசன், வியக்கத் தக்க சினம் கொண்ட கொலைத் தொழிலைச் செய்யும் யானையை அவர் மீது விடுமாறு ஏவினான்.

குறிப்புரை: மாபாவிக்கடை அமணர் - பாவிகளினும் கடையவராய சமணர்கள். வாகீசத் திருவடி - நாவுக்கரசர் எனும் பெயர் பெற்ற அடியவர். திருவடி - அடிமைத் திறத்தில் தலைநிற்கும் பெரியவர் களுக்கு வழங்கக் கூடிய உயர்ந்த பெயர்; மரபுப் பெயர். காபாலி - நான்முகனின் தலையோட்டைக் கையில் ஏந்தியவர்; சிவபெருமான். அதிசயம் - வியப்பு; சினம் கொள்வதில் வியப்படையுமாறு அமைந் திருத்தல்.

கூடத்தைக் குத்தியொரு
குன்றமெனப் புறப்பட்டு
மாடத்தை மறித்திட்டு
மண்டபங்கள் எடுத்தெற்றித்
தாடத்திற் பரிக்காரர்
தலையிடறிக் கடக்களிற்றின்
வேடத்தால் வருங்கூற்றின்
மிக்கதொரு விறல்வேழம்.

[ 110]


ஒப்பற்ற வன்மையுடைய அவ்யானையானது, யானை கட்டும் தறிகளைப் பிடுங்கிக் கொண்டு மலையெனப் புறப் பட்டு, மாடங்களை இடித்து, மண்டபங்களைப் பெயர்த்து, அழித்துக், குத்துக் கோற்காரரின் தலைகளைக் காலால் இடறி, மதயானையின் வடிவத்துடன் வருகின்ற ஓர் இயமனைப் போலக் கொடிதாயிருந்தது.

குறிப்புரை: தாடத்தில் - கால் வீச்சினால்

Go to top
பாசத்தொடை நிகளத்தொடர்
பறியத்தறி முறியா
மீசுற்றிய பறவைக்குலம்
வெருவத்துணி விலகா
ஊசற்கரம் எதிர்சுற்றிட
உரறிப்பரி உழறா
வாசக்கட மழைமுற்பட
மதவெற்பெதிர் வருமால்.

[ 111]


கழுத்தில் கட்டிய கயிறும், சங்கிலித் தொடரும் அறுமாறு கட்டுத் தறியை முறித்து, மேலே வட்டம் இடும் பறவைக் கூட்டங்களும் அஞ்சுமாறு, எதிர்க்கும் தடைகளுக்குச் சற்றும் விலகாது, ஊசல் என அசையும் துதிக்கையானது முன்னே சுற்றப், பெரு முழக்குடன் ஓடிக் கலக்கி, மணம் கமழும் மதநீரான மழை முன்னே பெருக, மலை போன்ற யானை எதிரில் வந்தது.

குறிப்புரை: நிகளம் - காலில் கட்டப் பெற்ற சங்கிலிப் பிணிப்பு. துணி - களிமண் உருண்டை; யானை செல்லும் வழியில் பக்கத் துள்ளோர், அது தம்மிடமாகத் திரும்பி வராதபடி எறியும் களிமண் உருண்டை என்பது சிவக்கவிமணியார் தரும் விளக்கமாகும். (பெரிய. பு. உரை). பிறர் தடுத்தற்குச் செய்யும் எத்தடைகளையும் மீறிச் செல்லும் யானை என்பார் 'துணிவிலகா' என்றார்.

இடியுற்றெழும் ஒலியில்திசை
இபமுட்கிட அடியில்
படிபுக்குற நெளியப்படர்
பவனக்கதி விசையில்
கடிதுற்றடு செயலிற்கிளர்
கடலிற்படு கடையின்
முடிவிற்கனல் எனமுற்சினம்
முடுகிக்கடு கியதே.

[ 112]


இடி போன்று எழுகின்ற ஓசையால் திக்கு யானைகள் அஞ்சக், காலால் மிதித்த சுவடு நிலத்தில் பொருந்த, அது, நெளியவும், ஓடும் காற்றைப் போன்று மிக விரைவாய்ப் போய், அழிக்கும் செயலில், பொங்கும் கடலுள் ஊழி முடிவில் தோன்றும் வடவைத் தீயைப் போல், மிக்க சினம் கொண்டு வேகத்துடன் அவ் யானை வந்தது.

குறிப்புரை: பவனக்கதி:- காற்றின் விரைவு, திசை இபம் - எட்டுத் திக்கில் உள்ள யானைகள்; அவ்யானைகளின் பெயர்கள்; கிழக்கில் - ஐராவதம்; தென்கிழக்கில் - புண்டரிகம்; தெற்கில் - வாமனம்; தென்மேற்கில் - குமுதம்; மேற்கில் - அஞ்சனம்; வடமேற்கில் - புட்பதந்தம்; வடக்கில் - சாருவபூமம்; வடகிழக்கில் - சுப்பிர தீபம் என்பன.

மாடுற்றணை இவுளிக்குலம்
மறியச்செறி வயிரக்
கோடுற்றிரு பிளவிட்டறு
குறைகைக்கொடு முறியச்
சாடுற்றிடு மதில்தெற்றிகள்
சரியப்புடை அணிசெற்
றாடுற்றகல் வெளியுற்றதவ்
வடர்கைக்குல வரையே.

[ 113]


கொலை செய்யும் கையையுடைய மலை போன்ற அவ்யானை, அருகில் வருகின்ற குதிரைக் கூட்டங்கள் அழிய வும், திண்ணிய வயிரம் வாய்ந்த மரக்கொம்பினை இரண்டு பிரிவாகக் கூறுபடுத்தி அவ்வாறு ஒடிந்த துண்டைக் கையில் எடுத்துப் பின் அது முறியும்படியாக அழிவு செய்தும், மதிலும் திண்ணைகளும் சரியுமாறு அழகுடைய அவற்றின் உறுப்புக்களை அழித்தும், இத்தகைய அழிவுச் செயலைச் செய்து பரந்த வெளியிடத்தைச் சேர்ந்தது.

குறிப்புரை: வயிரக் கோடு - வயிரம் பொருந்திய மரக்கிளை.

பாவக்கொடு வினைமுற்றிய
படிறுற்றடு கொடியோர்
நாவுக்கர செதிர்முற்கொடு
நணுகிக்கரு வரைபோல்
ஏவிச்செறு பொருகைக்கரி
யினையுய்த்திட வெருளார்
சேவிற்றிகழ் பவர்பொற்கழல்
தெளிவுற்றனர் பெரியோர்.

[ 114]


பாவம் பொருந்திய கொடுஞ் செயல் முதிரும் பொருட்டு வஞ்சனையை மேற்கொண்டு, கொலை செய்ய நினைத்த கொடிய சமணர்கள், திருநாவுக்கரசர் எதிரே முற்பட அணுகி வந்து, பகைவரைப் போரிட்டுக் கொல்கின்ற துதிக்கையையுடைய யானையைக் கரிய மலை ஒன்றை ஏவுவது போல, ஏவிச் செலுத்தவும், திருநாவுக்கரசர் சற்றும் அஞ்சாமல், ஆனேற்றின் மேல் விளங்கும் சிவ பெருமானின் பொன் போன்ற திருவடிகளையே தெளிந்த உள்ளத்தில் நினைத்திருந்தார்.

குறிப்புரை: சேவில் - ஆனேற்றில்.

அண்ணல் அருந்தவ வேந்தர்
ஆனைதம் மேல்வரக் கண்டு
விண்ணவர் தம்பெரு மானை
விடையுகந் தேறும் பிரானைச்
சுண்ணவெண் சந்தனச் சாந்து
தொடுத்த திருப்பதி கத்தை
மண்ணுல குய்ய வெடுத்து
மகிழ்வுட னேபாடு கின்றார்.

[ 115]


பெருமை பொருந்திய அரிய தவ வேந்தர், அவ்யானை தம்மீது வருவதைப் பார்த்துத் தேவர்களின் தலைவரும் ஆனேற்றில் இவர்ந்து மகிழ்ந்தருளுபவருமான சிவபெருமானைப் போற்றி, 'சுண்ணவெண் சந்தனச் சாந்து' (தி. 4 ப. 2) எனத் தொடங்கும் பதிகத்தை இவ்வுலகவர் உய்யும்படி எடுத்து மிக்க மகிழ்வுடன் பாடுவாராகி.

குறிப்புரை:

Go to top
வஞ்சகர் விட்ட சினப்போர்
மதவெங் களிற்றினை நோக்கிச்
செஞ்சடை நீள்முடிக் கூத்தர்
தேவர்க்குந் தேவர் பிரானார்
வெஞ்சுடர் மூவிலைச் சூல
வீரட்டர் தம்அடி யோம்நாம்
அஞ்சுவ தில்லைஎன் றென்றே
அருந்தமிழ் பாடி அறைந்தார்.

[ 116]


வஞ்சனையுடைய சமணர்கள் விடுத்த, மதமும் சினமும் உடைய யானையை நோக்கிச், 'சிவந்த சடை பொருந்திய நீண்ட முடியையுடைய கூத்தரும், தேவர்க்கெல்லாம் தேவரும், வெண்மையான ஒளிபொருந்திய மூவிலைகளையுடைய சூலத்தை ஏந்தியவருமான திருவீரட்டானத்தில் எழுந்தருளியிருக்கும் பெரு மானின் அடியவர் யாம்! அதனால் அஞ்ச வருவது ஏதும் இல்லை. ' என்று அரிய தமிழ்ப் பதிகத்தைப் பாடினார்.

குறிப்புரை: இங்கு அருளிய பதிகம் 'சுண்ணவெண்' (தி. 4 ப. 2) எனத் தொடங்கும் பதிகம் ஆகும். இப்பதிகத்தின் முதற் குறிப்பினை இதற்கு முன்னுள்ள பாடலால் குறித்த ஆசிரியர், இப்பதிகப் பாடல்தொறும் வரும் நிறைவுக் குறிப்பினை இப்பாடலில் விளக்குகிறார். இப்பதிகம் பாடலிபுத்திரத்தில் அருளப் பெற்றதாயினும், திருவதிகைப் பெருமா னின் அடியவன் ஆதலின் அஞ்சுவது யாதொன்றும் இல்லை, அஞ்ச வருவதுமில்லை எனப் பாடல்தொறும் அருளப் பெற்றிருத்தலின் திருவதிகைப் பதிகம் என வழங்கப் பெறுவதாயிற்று. இது போன்றே 'மாசில் வீணை' (தி. 5 ப. 90) எனத் தொடங்கும் பதிகமும் பாடலிபுத்திரத்தில் பாடப்பெற்றதாயினும், திருவதிகை இறைவனை நோக்கிய குறிப்பில் அமையாமையின் இதனையும், கடலிலிருந்து பாடிய 'சொற்றுணை வேதியன்' (தி. 4 ப. 11) எனும் பதிகம், 'நாமார்க்கும் குடியல்லோம்' (தி. 6 ப. 98) எனத் தொடங்கும் பதிகம் ஆகிய இரண்டோடும் கூட்டிப் பொதுப் பதிகங்கள் எனும் பெயரில் குறித்தனர்.
மலையே வந்து வீழினும் மனிதர்காள்
நிலையில் நின்று கலங்கப் பெறுதிரேல்
தலைவ னாகிய ஈசன் தமர்களைக்
கொலைசெய் யானைதான் கொன்றிடு கிற்குமே. (தி. 5 ப. 91 பா. 5)
எனவரும் அப்பரின் திருவாக்கு இந்நிகழ்ச்சிக்கு அகச் சான்றாய் அமைவதாகும்.

தண்டமிழ் மாலைகள் பாடித்
தம்பெரு மான்சர ணாகக்
கொண்ட கருத்தில் இருந்து
குலாவிய அன்புறு கொள்கைத்
தொண்டரை முன்வல மாகச்
சூழ்ந்தெதிர் தாழ்ந்து நிலத்தில்
எண்டிசை யோர்களுங் காண
இறைஞ்சி எழுந்தது வேழம்.

[ 117]


குளிர்ந்த தமிழ் மாலைகளைப் பாடித் தம் இறை வரையே சரணாகக் கொண்ட கருத்துடன் இருந்து விளங்கிய அன்பு பொருந்திய கொள்கையுடைய திருத்தொண்டரை, அவர் முன்பு வலமா கச் சுற்றி வந்து, எதிரில் தாழ்ந்து, எல்லாத் திக்குகளில் உள்ள வரும் காணும்படி அவ்யானை நிலத்தில் விழுந்து வணங்கி எழுந்து நின்றது.

குறிப்புரை: தண்டமிழ் மாலைகள் எனக் குறிப்பது, பதிகத்தில் வரும் பாடல்களை நோக்கியதாகும். இப்பாடல்தொறும் அப்பர் தம்மை, 'உடையார் ஒருவர்தமர் நாம்' (தி. 4 ப. 2) எனக் குறித்திருப்ப னவே, ஆசிரியர் சேக்கிழார், 'தம்பெருமான் சரணாகக் கொண்ட கருத்தினிலிருந்து குலாவிய அன்புறு கொள்கை' எனக் குறித்தற்கு ஏதுவாயிற்று.

ஆண்ட அரசை வணங்கி
அஞ்சிஅவ் வேழம் பெயரத்
தூண்டிய மேன்மறப் பாகர்
தொடக்கி அடர்த்துத் திரித்து
மீண்டும் அதனை அவர்மேல்
மிறைசெய்து காட்டிட வீசி
ஈண்டவர் தங்களை யேகொன்
றமணர்மேல் ஓடிற் றெதிர்ந்தே.

[ 118]


ஆளுடைய அரசரை வணங்கி, அவ்யானை அஞ்சி அங்கிருந்து பெயர்ந்து போக, அதனை அவர்மீது ஏவுதலை மேற் கொண்டிருந்த கொடிய பாகர்கள் வளைத்தும், அடர்த்தும், திரும்பவும் அதனை அவர்மீது போகுமாறு செய்து காட்டிட, அவ்வாறு செய்யாது, நெருங்கிய அவர்களையே கொன்று, சமணர்களையும் அழிக்க எதிர்ந்து வந்தது.

குறிப்புரை: மிறை செய்து காட்டிட - கொலை செய்யுமாறு ஏவ.

ஓடி அருகர்கள் தம்மை
உழறி மிதித்துப் பிளந்து
நாடிப் பலரையுங் கொன்று
நகரங் கலங்கி மறுக
நீடிய வேலை கலக்கும்
நெடுமந் தரகிரி போல
ஆடியல் யானைஅம் மன்னற்
காகுலம் ஆக்கிய தன்றே.

[ 119]


ஓடிச், சமணர்களைப் பற்றி உழறி அழித்தும், மிதித்தும், பிளந்தும், தேடிச் சென்று பலரையும் கொன்றும், அந்நகர் கலக்கம் அடைந்து வருந்த, நீண்ட கடலைக் கலக்கும் கொடிய மந்தர மலையைப் போல அழிக்கும் தன்மை பூண்ட அவ்யானை, அந்த அரசனுக்குத் துன்பத்தை உண்டாக்கியது

குறிப்புரை: அடும் இயல்புடைய ஆனை என்பது ஆடியல் யானை என நீண்டது. மந்தரகிரி - மாமேரு. அன்றே - அசைநிலை.

யானையின் கையிற் பிழைத்த
வினைஅமண் கையர்கள் எல்லாம்
மானம் அழிந்து மயங்கி
வருந்திய சிந்தைய ராகித்
தானை நிலமன்னன் தாளில்
தனித்தனி வீழ்ந்து புலம்ப
மேன்மை நெறிவிட்ட வேந்தன்
வெகுண்டினிச் செய்வதென் என்றான்.

[ 120]


யானையின் கையினின்றும் தப்பிய தீவினை யாளரான சமண்சமய மக்கள் எல்லாரும், மானம் அழிந்து, மயங்கி, வருத்தம் அடைந்த மனம் உடையவராய், வலிமை மிக்க படைகளை யுடைய உலகம் காக்கும் மன்னவனின் காலில் தனித்தனியே விழுந்து வருத்த முற்றாராக, அவர்களின் சொல்லைக்கேட்டு நன்னெறியைக் கைவிட்ட அரசன் சினந்து, 'இனிச் செய்யக் கூடியது யாது?' என வினவினான்.

Go to top
நங்கள் சமயத்தின் நின்றே
நாடிய முட்டி நிலையால்
எங்கள் எதிரே றழிய
யானையால் இவ்வண்ணம் நின்சீர்
பங்கப் படுத்தவன் போகப்
பரிபவந் தீரும் உனக்குப்
பொங்கழல் போக அதன்பின்
புகையகன் றாலென என்றார்.

[ 121]


'நம் சமயத்தினின்றும் தெரிந்து கொண்ட மந்திர சாதனையால் ஏவுதல் கெடுமாறு, இங்ஙனம் யானையால், உன்புகழை அழித்தவன் இறக்க, பொங்கும் தீ போகவே அதன்பின் புகை நீங்கு வதைப் போல, உனக்கு வந்த இழிநிலையும் நீங்கும்' என்றனர்.

குறிப்புரை: முட்டி நிலை - மந்திர சாதனை, ஏகாரம் தேற்றப் பொரு ளில் வந்தது.

அல்லிருள் அன்னவர் கூற
அரும்பெரும் பாவத் தவன்பின்
தொல்லைச் சமயம் அழித்துத்
துயரம் விளைத்தவன் தன்னைச்
சொல்லும் இனிச்செய்வ தென்னச்
சூழ்ச்சி முடிக்குந் தொழிலோர்
கல்லுடன் பாசம் பிணித்துக்
கடலிடைப் பாய்ச்சுவ தென்றார்.

[ 122]


இரவில் காணும் இருளைப் போன்ற சமணர்கள் இங்ஙனம் கூற, அரும்பெரும் பாவச் செயலையுடைய அரசன், அதன் பின் 'பழமையான நம் சமயத்தை அழிவு செய்து துன்பம் விளைத்த தருமசேனனை இனிச் செய்வதென்?' என வினவ, தாங்கள் கருதிய வஞ்சனையையே முடிக்கும் செயலையுடைய அவ்வமணர்கள் கல்லுடன் சேர்த்துக் கயிற்றால் கட்டிக் கடலில் வீசி யெறிதல் இனிச் செய்யத்தக்கது எனக் கூறினர்.

குறிப்புரை: அல் - இரவு.

ஆங்கது கேட்ட அரசன்
அவ்வினை மாக்களை நோக்கித்
தீங்கு புரிந்தவன் தன்னைச்
சேமம் உறக்கொடு போகிப்
பாங்கொரு கல்லில் அணைத்துப்
பாசம் பிணித்தோர் படகில்
வீங்கொலி வேலையில் எற்றி
வீழ்த்துமின் என்று விடுத்தான்.

[ 123]


அதனைக் கேட்ட மன்னன், அத்தகைய தொழிலைச் செய்யும் மக்களைப் பார்த்து, 'தீமைசெய்த தருமசேன னைத் தப்ப விடாது கொண்டு போய், பக்கத்தில் ஒரு கல்லுடன் சேர்த்துக் கயிற்றால் கட்டி, ஒரு படகில் ஏற்றி, மிகவும் ஒலிக்கின்ற கடலில் வீசி வீழ்த்தி விடுங்கள்' என அனுப்பினான்.

குறிப்புரை:

அவ்வினை செய்திடப் போகும்
அவருடன் போயரு கந்த
வெவ்வினை யாளருஞ் சென்று
மேவிட நாவுக் கரசர்
செவ்விய தம்திரு உள்ளஞ்
சிறப்ப அவருடன் சென்றார்
பவ்வத்தின் மன்னவன் சொன்ன
படிமுடித் தார்அப் பதகர்.

[ 124]


அச்செயலைச் செய்யப்போகும் அவர்களோடு, கொடு வினை செய்யும் மற்ற அமணர்களும் செல்ல, நாவுக்கரசரும் செம்மையான தம் திருவுள்ளம் சிறப்படைய அவர்களுடன் சென்றார். அரசன் ஆணையிட்டவாறே அவ்விழிந்தோர் தம் செயலைச் செய்து முடித்தனர்.

குறிப்புரை:

அப்பரி சவ்வினை முற்றி
அவர்அகன் றேகிய பின்னர்
ஒப்பரும் ஆழ்கடல் புக்க
உறைப்புடை மெய்த்தொண்டர் தாமும்
எப்பரி சாயினு மாக
ஏத்துவன் எந்தையை யென்று
செப்பிய வண்டமிழ் தன்னால்
சிவன்அஞ் செழுத்துந் துதிப்பார்.

[ 125]


அவர்கள் அத்தகைய செயலைச் செய்து நீங்கிய பின்பு, ஒப்பற்ற ஆழமுடைய கடலுள் வீழ்ந்த உண்மைத் தொண்டின் உறைப்பு உடையவரான திருநாவுக்கரசரும், 'எத்தகைய நிலையிலும் நான் என் தலைவனாகிய சிவபெருமானை வணங்குவன்' எனத் துணிவு பூண்டு, சொல்லிய வளப்பமுடைய தமிழ்ப் பாக்களினால் அப் பெருமானின் ஐந்தெழுத்தைப் போற்றுபவராய்.

குறிப்புரை:

Go to top
சொற்றுணை வேதியன்
என்னுந் தூமொழி
நற்றமிழ் மாலையா
நமச்சி வாயவென்
றற்றமுன் காக்கும்அஞ்
செழுத்தை அன்பொடு
பற்றிய உணர்வினால்
பதிகம் பாடினார்.

[ 126]


'சொற்றுணை வேதியன்' எனத் தொடங்கும் தூய திருமொழிகளை முதலில் வைத்துத் தொடங்கிய நல்ல தமிழ் மாலை யாக, 'நமச்சிவாய' எனத் துன்பக் காலத்தில் உடனிருந்து காக்கும் திருவைந்தெழுத்தை, நிரம்பிய அன்புடன் விடாது பற்றிய நிலையில் திருப்பதிகத்தைப் பாடினார்.

குறிப்புரை: அற்றம் - குற்றம்: தீவினை. 'பாவத்தை நண்ணிநின்று அறுப்பது நமச்சிவாயவே' (தி. 4 ப. 11 பா. 4) எனவரும் திருவாக்கும் காண்க. இப்பதிகம், 'நமச்சிவாயப் பதிகம்' என அழைக்கப் பெறும். தூமொழி - தூய்மையைத் தரும் மொழி. நற்றமிழ் மாலை - நன்மையைத் தரும் பதிகம். தூய்மை பாசநீக்கமும், நன்மை சிவப்பேறுமாம். 'கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்' (தி. 4 ப. 11 பா. 1) என்பது இவ்வரலாற்றிற்கு அகச் சான்றாகும். பாய்ச்சினும் என்னும் உம்மை தீமை மிகுதி குறித்தது. இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பெருகிய அன்பினர்
பிடித்த பெற்றியால்
அருமல ரோன்முதல்
அமரர் வாழ்த்துதற்
கரியஅஞ் செழுத்தையும்
அரசு போற்றிடக்
கருநெடுங் கடலினுட்
கல்மி தந்ததே.

[ 127]


பெருகிய அன்பின் திறத்தவராகிப் பெருமா னையே பற்றி நிற்கும் தன்மையினால், அரிய நான்முகன் முதலான அமரர்களாலும் போற்றற்கு அரிய திருவைந்தெழுத்தைத் திருநாவுக் கரசர் போற்ற, கரிய நெடிய கடலுள் அக்கல்லானது மிதக்கலாயிற்று.

குறிப்புரை: முன்னைய பாடலில் 'அஞ்செழுத்தை அன்பொடு பற்றிய உணர்வினால்' என்றார். இப்பாடலில் பிடித்த பெற்றியால் என்று அருள்கின்றார். ஐந்தெழுத்தின் மீது நாவரசர்க்குள்ள உறைப்பு இவற்றால் அறியலாம். 'இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்' (தி. 8 ப. 37 பா. 3) எனவரும் திருவாக்கும் காண்க. கடலில் கல் மிதத்தல் உலகியல் நிலையில் அரிதெனினும் அருளியல் நிலையில் எளிதினும் எளிதாம்.

அப்பெருங் கல்லும்அங்
கரசு மேல்கொளத்
தெப்பமாய் மிதத்தலில்
செறித்த பாசமும்
தப்பிய ததன்மிசை
இருந்த தாவில்சீர்
மெய்ப்பெருந் தொண்டனார்
விளங்கித் தோன்றினார்.

[ 128]


அப்பெரிய கல்லும், அங்குத் திருநாவுக்கரசர் அதன்மீது வீற்றிருக்கத் தெப்பமாக மிதக்க, அவரது திருமேனியைப் பிணித்திருந்த கயிறும் அறுபட்டது. அக்கல்லாகிய தெப்பத்தின் மேல் வீற்றிருந்த கெடுதல் இல்லாத சிறப்பினையுடைய மெய்ப் பெரும் தொண்டரான நாவரசரும் விளங்கித் தோன்றினார்.

குறிப்புரை:

இருவினைப் பாசமும்
மலக்கல் ஆர்த்தலின்
வருபவக் கடலில்வீழ்
மாக்கள் ஏறிட
அருளுமெய் அஞ்செழுத்
தரசை இக்கடல்
ஒருகல்மேல் ஏற்றிடல்
உரைக்க வேண்டுமோ.

[ 129]


நல்வினை, தீவினை என்ற கயிறு, ஆணவம் என்ற கல்லுடன் இறுகப் பிணித்தலால் உளவாகும் பிறவிக் கடலுள் விழும் மாக்கள், அதனுள் அழுந்திவிடாது மேலே ஏறுமாறு துணை நிற்கும் திருவைந்தெழுத்து, திருநாவுக்கரசரை இச்சிறு கடலுள் ஆழாது ஒரு சிறிய கல்மீது ஏற்றுவதும் ஒருவியப்பாக உரைக்கப்படுமோ? படாது என்பதாம்.

குறிப்புரை: 'வல்வினையேன் தன்னை,
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டி
புறந்தோல் போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி
மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை'
(தி. 8 சிவபுரா. வரி 51-54) எனத் திருவாசகம் உருவகித்துக் காட்டுவதும் ஈண்டு நினைவு கூரத் தகும். இனி 'மும்மலக் கல்' எனக் கொண்டு, ஆணவம் முதலாய மும் மலக் கற்கள் எனக் கூறலும் அமைவுடைத்தாம். நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலின் இருவினைகளையும் கயிறு என்றார். 'ஐந்தெழுத்தின் புணை பிடித்துக் கிடக்கின்றேனை' (தி. 8 ப. 5 பா. 27) என வரும் திருவாக்கும் நினைவு கூர்தற்குரியது.
கல்லினொடு எனைப் பூட்டி அமண்கையர்
ஒல்லை நீர்புக நூக்க என்வாக்கினால்
நெல்லுநீள் வயல் நீலக்குடியரன்
நல்ல நாமம் நவிற்றி உய்ந்தேன் அன்றே. (தி. 5 ப. 72 பா. 7)
என வரும் நாவரசர் திருவாக்கு இதற்கு அகச்சான்றாய் விளங்கும்.

அருள்நயந் தஞ்செழுத்
தேத்தப் பெற்றஅக்
கருணைநா வரசினைத்
திரைக்க ரங்களால்
தெருள்நெறி நீர்மையின்
சிரத்தில் தாங்கிட
வருணனுஞ் செய்தனன்
முன்பு மாதவம்.

[ 130]


திருவருள் கூட்ட, திருவைந்தெழுத்தினால் தாங்கப் பெற்ற அக்கருணையே உருவான நாவுக்கரசரை, தன் அலை களாகிய கைகளால் ஏந்தி, அவர் தம் பெருமையை அறிந்த முறையால், தன் தலைமீது தாங்கிக் கொள்ள, முன் காலத்தில் வருணனும் பெருந் தவத்தைச் செய்திருந்தனன்.

குறிப்புரை: கருணை நாவரசு என்றார், தன்னுயிர் நீங்க நேரும் செயல்கள் எதிர்வரினும், தான்பிறிது இன்னுயிர் நீக்கும் செயலையோ, அன்றிச் சொல்லையோ, அன்றி நினைவையோ கூடச் செய்திலர் என்பது பற்றியாம்.

Go to top
வாய்ந்தசீர் வருணனே வாக்கின் மன்னரைச்
சேர்ந்தடை கருங்கலே சிவிகை ஆயிட
ஏந்தியே கொண்டெழுந் தருளு வித்தனன்
பூந்திருப் பாதிரிப் புலியூர்ப் பாங்கரில்.



[ 131]


திருவருள் பெற்ற வருணனே, நாவுக்கரசரைச் சேர்ந்து அடைந்த கருங்கல்லே சிவிகையாய் ஆகிடத், தன்கைகளால் ஏந்தியவாறே கொண்டுவந்து, அழகிய திருப்பாதிரிப்புலியூர் எனும் திருப்பதியின் அருகே, கரையேறச் செய்தான்.

குறிப்புரை: நாவரசர் கரையேறிய இடம், கரையேற விட்ட குப்பம் என்ற பெயரில் அழைக்கப்பெற்று வருகிறது. இது திருப்பாதிரிப் புலியூருக்கு அருகில் தென்திசையில் உள்ளது.

அத்திருப் பதியினில்
அணைந்த அன்பரை
மெய்த்தவக் குழாமெலாம்
மேவி ஆர்த்தெழ
எத்திசை யினும்அர
வென்னும் ஓசைபோல்
தத்துநீர்ப் பெருங்கடல்
தானும் ஆர்த்ததே.

[ 132]


அத்திருப்பதியில் அங்ஙனம் வந்து சேர்ந்த அன்பரான திருநாவுக்கரசரை, உண்மையான தவத்தைச் செய்த அடியவர் கூட்டம் எல்லாம் கூடி, மகிழ்ச்சியால் பேரொலி செய்து எதிர்கொள்ளுதலால், எல்லாத் திசைகளிலும் 'அரகர' என்று ஒலிக்கும் பேரொலி போல அலைகளையுடைய கடலும் ஒலித்தது.

குறிப்புரை: தத்துநீர் - ஒலிக்கின்றநீர்.

தொழுந்தகை நாவினுக்
கரசுந் தொண்டர்முன்
செழுந்திருப் பாதிரிப்
புலியூர்த் திங்கள்வெண்
கொழுந்தணி சடையரைக்
கும்பிட் டன்புற
விழுந்தெழுந் தருள்நெறி
விளங்கப் பாடுவார்.

[ 133]


யாவராலும் தொழத்தக்க திருநாவுக்கரசரும், அடியவர்களின் முன்னே, செழுமையான திருப்பாதிரிப்புலியூரில் வீற்றிருக்கும் வெண்மையான பிறைச்சந்திரனைச் சூடிய சடையை யுடைய சிவபெருமானை வணங்கி, அன்பு கூர்ந்து கீழே வீழ்ந்து வணங்கிப் பின் எழுந்து நின்று, திருவருள் நெறி உலகில் விளங்குமாறு பாடுவாராய்,

குறிப்புரை: அருள்நெறி - ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணங்களும் ஆதிமாண்பும் ஆம்.

ஈன்றாளு மாய்எனக் கெந்தையு
மாகி யெனவெடுத்துத்
தோன்றாத் துணையாய் இருந்தனன்
தன்அடி யோங்கட்கென்று
வான்தாழ் புனல்கங்கை வாழ்சடை
யானைமற் றெவ்வுயிர்க்குஞ்
சான்றாம் ஒருவனைத் தண்டமிழ்
மாலைகள் சாத்தினரே.

[ 134]


'ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய்' எனத் தொடங்கித் 'தோன்றாத் துணையாய் இருந்தனன் தன்னடியோங் கட்கே' என்று நிறைவுறும் அக்கருத்துக் கொண்ட பாடல் முதலாக, வானினின்று உலகில் தாழும் நீரையுடைய கங்கை வாழ்கின்ற சடையை உடைய இறைவரை, எவ்வுயிர்களுக்கும் சான்றாய் இருக் கும் ஒருவரை, குளிர்ந்த தமிழால் ஆன மாலைகளைக் கொண்டு சாத்தினார்.

குறிப்புரை: நாவரசர் இதுபொழுது அருளியது 'ஈன்றாளுமாய்' எனத் தொடங்கும் பதிகமாகும் (தி. 4 ப. 94). இப்பதிகத்துவரும் முதல்பாடலின் முதலடியையும் நான்காம் அடியையும் இயைத்துக் கூறினார், அப்பாடல் பொருண்மை அவ்வாறாக அமைதலின். உரை சேரும் எண்பத்து நான்கு நூறாயிரமாம் யோனி பேதங்களையும் படைத்து அவற்றின் உயிர்க்குயிராய் இறைவன் நிற்றலின் 'எவ்வுயிர்க் கும் சான்றாம் ஒருவன்' என்றார். 'எங்கும் உளன் ஒருவன் காணுங் கொல் என்று அஞ்சி அங்கம் குலைவது அறிவு' (குமர-நீதிநெறி. 94) என்பர் குமரகுருபர அடிகளும். ஈண்டும் தண் தமிழ் மாலைகள் என்றது, பாடற் பன்மை நோக்கியாம். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

மற்றும் இனையன வண்டமிழ்
மாலைகள் பாடிவைகி
வெற்றி மழவிடை வீரட்டர்
பாதம்மிக நினைவில்
உற்றதொர் காதலின் அங்குநின்
றேகிஒன் னார்புரங்கள்
செற்றவர் வாழுந் திருவதி
கைப்பதி சென்றடைவார்.

[ 135]


மேலும், இவை போன்ற செழுமையான தமிழ்ப் பதிகங்களைப் பாடி, அப்பதியில் தங்கிப் பின், வெற்றியும் இளமையும் மிக்க ஆனேற்றினையுடைய திருவதிகை வீரட்டானத்தில் வீற்றிருக் கும் இறைவரின், திருவடிகளில் தம் நினைவில் மிகவும் பொருந்திய தோர் காதல் எழுந்ததால், அங்கு நின்றும் சென்று, பகைவரின் முப்புரங் களையும் எரித்த வீரட்டானத்து இறைவர் வீற்றிருந்தருளும் திருவதி கைப் பதியினைச் சென்று அடைபவராய்,

குறிப்புரை: 'மற்றும் இனையன வண்டமிழ் மாலைபாடி' என்பதால் மேலும் பல பதிகங்கள், இத்திருப்பதியின்கண் அருளப்பெற்றிருக் கலாம் எனத் தெரிகின்றது. எனினும் அவை கிடைத்தில.

Go to top
தேவர் பிரான்திரு மாணி
குழியுந் தினைநகரும்
மேவினர் சென்று விரும்பிய
சொன்மலர் கொண்டிறைஞ்சிப்
பூவலர் சோலை மணமடி
புல்லப் பொருள்மொழியின்
காவலர் செல்வத் திருக்கெடி
லத்தைக் கடந்தணைந்தார்.

[ 136]


மெய்ப்பொருள் மொழிதலில் வேந்தராய நாவரசர், தேவரின் தலைவரான இறைவரின் திருமாணிகுழி, திருத்தினைநகர் ஆகிய திருப்பதிகளுக்கும் விரும்பிச் சென்று, எவ்வுயிர்களும் விரும்புதற்குரிய சொல் மாலைகளால் போற்றி செய்து, மலர்கள் மலர்கின்ற சோலைகளின் மணமானது தம் திருவடியில் பொருந்தும் படி நடந்து சென்று, திருக்கெடிலத்தைக் கடந்து வந்து சேர்ந்தார்.

குறிப்புரை: திருமாணி குழியிலும், திருத்தினை நகரிலும் அருளப் பெற்ற பதிகங்கள் கிடைத்தில.

வெஞ்சமண் குண்டர்கள் செய்வித்த
தீய மிறைகளெல்லாம்
எஞ்சவென் றேறிய இன்றமிழ்
ஈசர் எழுந்தருள
மஞ்சிவர் மாடத் திருவதி
கைப்பதி வாணர்எல்லாந்
தஞ்செயல் பொங்கத் தழங்கொலி
மங்கலஞ் சாற்றலுற்றார்.

[ 137]


கொடிய சமணர்கள் செய்வித்த தீய துன்பங்கள் எல்லாம் அழிய, வெற்றி பெற்று மேலேறி வந்த இனிய தமிழரசர் இங்ஙனம் எழுந்தருள, மேகம் தவழுமாறு உயர்ந்த மாடங்களை யுடைய திருவதிகை நகரில் வாழ்பவர்கள் எல்லாரும், தாங்கள் எதிர் கொண்டு இன்னுரை வழங்கும் செயல்கள் சிறக்க, ஒலிக்கும் முரசு முதலிய இயங்களை இசைத்து, இச்செய்தியை ஊரவர் அறிய எடுத்துக் கூறினர்.

குறிப்புரை: தீயமிறை - கொடிய துன்பங்கள். 'பெருமிறை தானே தனக்கு' (குறள், 847) என்ற இடத்தும் இப்பொருள்படுதல் காணலாம். எஞ்ச - ஒழிய.

மணிநெடுந் தோரணம் வண்குலைப்
பூகம் மடற்கதலி
இணையுற நாட்டி எழுநிலைக்
கோபுரந் தெற்றியெங்குந்
தணிவில் பெருகொளித் தாமங்கள்
நாற்றிச்செஞ் சாந்துநீவி
அணிநகர் முன்னை அணிமேல்
அணிசெய் தலங்கரித்தார்.

[ 138]


அழகிய நீண்ட தோரணங்களையும், வளமிக்க பாக்குக் குலைகளையும், மடலையுடைய வாழைகளையும் பொருந்த நாட்டியும், ஏழு நிலைகளையுடைய கோபுரத்தும் திண்ணையிலும் பெருகிய ஒளியையுடைய மாலைகளைத் தொங்கவிட்டும், சிவந்த சாந்து பூசியும், அழகிய அந்நகரத்தை முன்னைய அழகை விட மேலும் அழகுபடுத்தினர்.

குறிப்புரை:

மன்னிய அன்பின் வளநகர்
மாந்தர் வயங்கிழையார்
இன்னிய நாதமும் ஏழிசை
ஓசையும் எங்கும்விம்மப்
பொன்னியல் சுண்ணமும் பூவும்
பொரிகளுந் தூவியெங்குந்
தொன்னக ரின்புறஞ் சூழ்ந்தெதிர்
கொண்டனர் தொண்டரையே.

[ 139]


நிலைபெற்ற அன்புடைய அவ்வளமான நகரத்து மக்களும், ஒளிபொருந்திய அணிகளை அணிந்த பெண்களும், இனிய ஒலியை உண்டாக்கும் இயங்களின் ஓசையையும், ஏழிசைப் பாடலின் ஒலியையும், எங்கும் பெருகச் செய்து, பொன்னிறமான பொடிகளையும், மலர்களையும் பொரிகளையும் கலந்து எங்கும் தூவிப், பழமையான அந்நகரின் எல்லையில் வந்து சூழ்ந்து, திருத் தொண்டரான திருநாவுக்கரசு நாயனாரை எதிர்கொண்டனர்.

குறிப்புரை:

தூயவெண் ணீறு துதைந்தபொன்
மேனியுந் தாழ்வடமும்
நாயகன் சேவடி தைவருஞ்
சிந்தையும் நைந்துருகிப்
பாய்வதுபோல் அன்புநீர் பொழிகண்ணும்
பதிகச் செஞ்சொல்
மேயசெவ் வாயும் உடையார்
புகுந்தனர் வீதியுள்ளே.

[ 140]


தூயதும் வெண்மையதுமான திருநீற்றை நிறைய அணியப் பெற்ற பொன்போன்ற மேனியையும், உருத்திராக்க மாலையணிந்த திருவடிவத்தையும், தம் உயிர்த் தலைவரான சிவ பெருமானின் சேவடிகளைச் சிந்திக்கும் மனத்தையும், உள்ளம் நைந்து உருகுவது போன்ற அன்பு நீரை இடைவிடாது பொழிகின்ற திருக்கண் களையும், தேவாரத் திருப்பதிகமான செவ்விய சொற்களை இடை விடாது இசைத்து வரும் சிவந்த வாயையும் உடைய திருநாவுக்கரசு நாயனார் திருவீதியுள் புகுந்தார்.

குறிப்புரை: துதைதல் - செறிந்திருத்தல்: தன்னளவினும், தன்னை அணிந்தார் அளவினும் தூய்மை நிலைபெற அமையும் பாங்குடைய தாதலின் 'தூய வெண்ணீறு' என்றார். நாவரசரின் சிவவேடப் பொலி வழகை முதன் முதல் ஆசிரியர் காட்டி மகிழ்விக்கும் இடம் இதுவாம். தைவருதல் -தடவுதல்: சிந்தித்தல்.

Go to top
கண்டார்கள் கைதலை மேற்குவித்
திந்தக் கருணைகண்டால்
மிண்டாய செய்கை அமண்கையர்
தீங்கு விளைக்கச்செற்றம்
உண்டா யினவண்ணம் எவ்வண்ணம்
என்றுரைப் பார்கள்பின்னுந்
தொண்டாண்டு கொண்ட பிரானைத்
தொழுது துதித்தனரே.

[ 141]


பார்த்தவர்கள் கைகளைத் தலைமீது குவித்துக் கொண்டு 'கருணையே உருவமாக விளங்கும் நாவரசரைக் கண்களால் கண்ட பின்பும், கொடுஞ் செயலர்களாகிய சமணர்கள் இவருக்குத் தீங்கு விளைக்கும்படி சினம் கொண்டதுதான் எவ்வாறு' என்று உரைப்பார்களாய், மேலும் தொண்டரை ஆட்கொண்டு அடிமையாக ஏற்றுக் கொண்ட பெருமானையும் வணங்கிப் போற்றினர்.

குறிப்புரை: மிண்டாய செய்கை - கொடுமையும் செருக்கும். கொண்டு செய்த செயல்: 'மிண்டு மனத்தவர் போமின்கள்' (தி. 9 ப. 29 ப1) எனவரும் திருவாக்கும் காண்க.

இவ்வண்ணம் போல எனைப்பல
மாக்கள் இயம்பியேத்த
மெய்வண்ண நீற்றொளி மேவும்
குழாங்கள் விரவிச்செல்ல
அவ்வண்ணம் நண்ணிய அன்பரும்
வந்தெய்தி அம்பவளச்
செவ்வண்ணர் கோயில் திருவீரட்
டானத்தைச் சேர்ந்தனரே.

[ 142]


இவ்வாறு அளவற்ற மக்கள் சொல்லிப் போற்ற, என்றும் அழிதல் இல்லாத அழகிய திருநீற்றின் ஒளி உடலில் மிளிர்ந்துள்ள அடியார் கூட்டங்கள் உடன் செல்லவும், அங்ஙனம் அடைந்த அன்பரான திருநாவுக்கரசு நாயனாரும் வந்து சேர்ந்து அழகான பவளம் போன்ற சிவந்த நிறத்தினரான சிவபெருமான் எழுந்தருளியுள்ள கோயிலான திருவீரட்டானத்தை அடைந்தார்.

குறிப்புரை:

உம்பர்தங் கோனை உடைய
பிரானைஉள் புக்கிறைஞ்சி
நம்புறும் அன்பின் நயப்புறு
காதலி னால்திளைத்தே
எம்பெரு மான்தனை ஏழையேன்
நான்பண் டிகழ்ந்ததென்று
தம்பரி வால்திருத் தாண்டகச்
செந்தமிழ் சாற்றிவாழ்ந்தார்.

[ 143]


தேவர்களின் தலைவரும், தம்மை அடிமையாக உடையவருமான இறைவரைத் திருக்கோயிலுக்குள் புகுந்து வணங்கி, விரும்புதற்குரிய அன்பும் விருப்பம் மிக்க காதலும் பெருகச், சிவா னந்தத்தினுள் இடையறாது மூழ்கிநின்று, 'எம்பெருமானை ஏழை யேன் பண்டு இகழ்ந்தவாறே' என்ற கருத்துடன் தம் பரிவினால் திருத் தாண்டகத் தமிழ்த் திருப்பதிகத்தைப் பாடிப் பெருவாழ்வு அடைந்தனர்.

குறிப்புரை: இவ்விடத்து அரசு அருளியது 'வெறிவிரவு' (தி. 6 ப. 3) எனத் தொடங்கும் பதிகமாகும். இப்பதிகப் பாடல்கள் அனைத்தும் 'ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தவாறே' என முடிவுறுகின்றன. அவ்வரிய தொடரையே ஆசிரியர் சேக்கிழார் நினைவு கூர்கின்றார்.

அரிஅயனுக் கரியானை
அடியவருக் கெளியானை
விரிபுனல்சூழ் திருவதிகை
வீரட்டா னத்தமுதைத்
தெரிவரிய பெருந்தன்மைத்
திருநாவுக் கரசுமனம்
பரிவுறுசெந் தமிழ்ப்பாட்டுப்
பலபாடிப் பணிசெயுநாள்.

[ 144]


அறிதற்கு அரிய பெருந்தகையாரான திருநாவுக் கரசு நாயனார், திருமாலுக்கும், நான்முகனுக்கும் அரியவராயினும் அடியவர்க்கு எளியவரான, பரந்த புனலால் சூழப்பட்ட திரு வீரட்டானத்துள் எழுந்தருளியிருக்கும் அமுதமானவரை, உள்ளத்தில் மீதூர்ந்த அன்பைப் பெருக்கும் செந்தமிழ்ப் பாடல்கள் பலவற்றையும் பாடித் திருப்பணிசெய்துவரும் அந்நாள்களில்.
குறிப்புரை: திருவதிகையில் மனம் பரிவுறுபாட்டாகப் பாடியருளியன:
1. இரும்பு: திருநேரிசை. 2. வெண்ணிலா: திருநேரிசை. 3. 9; நம்பனே: திருநேரிசை. 4. மடக்கினார்: திருநேரிசை. 5. முன்பெலாம்: திருநேரிசை. 6. மாசில்ஒண்: திருவிருத்தம். 7. முளைக்கதிர்: காந்தார பஞ்சமம். 9;
8. 9; கோணல்: திருக்குறுந்தொகை. 9. எட்டுநாள்: திருக்குறுந்தொகை.
10. சந்திரனை: அடையாளத் திருத்தாண்டகம்.
11. எல்லாம்சிவன்: போற்றித் திருத்தாண்டகம். 12. அரவணையான்: திருவடித் திருத்தாண்டகம். 13. செல்வப்புனல்: காப்புத் திருத்தாண்டகம். இவற்றுள் முன்னைய ஆறும் நான்காம் திருமுறையில் வரு வன. (தி. 4 ப. 24, 25, 26, 27, 28, 104, 110) ஏழும் எட்டும் ஒன்பதும் ஐந்தாம் திருமுறையில் வருவன (தி. 5 ப. 50, 51). பத்து முதல் பதின்மூன்று வரையில் உள்ளன ஆறாம் திருமுறையில் வருவன (தி. 6 ப. 4, 5, 6, 7). இப்பதின்மூன்று பதிகங்களும் முன்னைய பாட்டில் குறித்த 'வெறிவிரவு' (தி. 6 ப. 3) எனத் தொடங்கும் பதிகம் ஒன்றுமாகப் பதினான்கு பதிகங்களும் இதுபொழுது பாடியனவாகும். 'கூற்றாயின வாறு' (தி. 4 ப. 1) எனத் தொடங்கும் பதிகம் தமக்கையாருடன் முதன் முறையாகச் சென்று வழிபட்ட பொழுது பாடியதாகும். 'சுண்ணவெண் சந்தனச் சாந்தும்' (தி. 4 ப. 2) என்ற பதிகம் பாடலிபுரத்தில் கெடில வாணரை நினைந்து பாடியதாகும். 'நாமார்க்கும் குடியல்லோம்' (தி. 6 ப. 98) என்பது திருவதிகை இறைவன்முன் பாடியதன்று. பல்லவனின் அமைச்சர்கள் முன் பாடியதாகும்.

புல்லறிவிற் சமணர்க்காப்
பொல்லாங்கு புரிந்தொழுகும்
பல்லவனுந் தன்னுடைய
பழவினைப்பா சம்பறிய
அல்லல்ஒழிந் தங்கெய்தி
ஆண்டஅர சினைப்பணிந்து
வல்அமணர் தமைநீத்து
மழவிடையோன் தாளடைந்தான்.

[ 145]


புல்லிய அறிவையுடைய சமணர்களுக்காகப் பெரும் தீங்குகளையே இடைவிடாது செய்துவருபவனாகிய மகேந்திர வர்மனாகிய பல்லவ மன்னனும், தன் பழவினைத் தொடர்பு நீங்கவே, அத்துன்பத்தினின்றும் நீங்கித் திருவதிகையை அடைந்து, ஆளுடைய அரசரை வணங்கி, வலியச் சமணர்களை விட்டு இளைய ஆனேற்றை யுடைய சிவபெருமானின் திருவடிகளைச் சாரும் நெறியாகிய சைவப் பெருநெறியைச் சேர்ந்தான்.

குறிப்புரை: சிவநெறிச் சார்பில் நிற்கலானான் என்பதாம். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

Go to top
வீடறியாச் சமணர்மொழி
பொய்யென்று மெய்யுணர்ந்த
காடவனும் திருவதிகை
நகரின்கட் கண்ணுதற்குப்
பாடலிபுத் திரத்தில்அமண்
பள்ளியொடு பாழிகளுங்
கூடஇடித் துக்கொணர்ந்து
குணபரவீச் சரம்எடுத்தான்.

[ 146]


வீடுபேற்றிற்குரிய நெறியை அறியாத சமணர்களின் மொழிகள் பொய்யென்று கண்டு, உண்மையுணர்ந்த பல்லவ மன்னனும் பாடலிபுத்திரத்திலிருந்த சமணர் பள்ளிகளையும் பாழிகளையும் ஒருங்கே இடித்துக் கொண்டு வந்து, திருவதிகை நகரில் நெற்றிக் கண்ணையுடைய சிவபெருமானுக்குக் 'குணபர ஈச்சரம்' என்னும் கோயிலை எடுப்பித்தான்.

குறிப்புரை: மகேந்திரவர்மனின் (கி. பி. 615 - 630) சிறப்புப் பெயர்களுள் ஒன்று குணபரன் என்பதாகும். திருவருளாலும், நாவரசரின் வரலாற்றையும் அவர்தம் பத்திமை உறைப்பையும் கண்ட நற்பேற்றாலும், சைவ சமயத்தைச் சார்ந்து, திருவதிகை, திருச்சிராப்பள்ளி முதலிய இடங்களில் தன் பெயரால் சிவபெருமானுக்குக் கோயில் எடுப்பித்தும் நாவரசரின் திருவடிகளை வணங்கியும் நற்பேறு பெற்றான். இச் செய்தி அவன்தன் கல்வெட்டுக்களால் அறியத் தக்கனவாய் உள்ளன. பள்ளி - சமண்சமயத்தைச் சார்ந்த குருமார்கள் தங்கியிருக்கும் இடம். பாழி - சமணக் கோயில்.

இந்நாளில் திருப்பணிகள்
செய்கின்ற இன்றமிழ்க்கு
மன்னான வாகீசத்
திருமுனியும் மதிச்சடைமேல்
பன்னாகம் அணிந்தவர்தம்
பதிபலவுஞ் சென்றிறைஞ்சிச்
சொன்னாமத் தமிழ்புனைந்து
தொண்டுசெய்வான் தொடர்ந்தெழுவார்.

[ 147]


இத்தகைய நாள்களில், திருப்பணிசெய்கின்ற, இனிய தமிழுக்கு அரசரான வாகீச முனிவரும், பிறைச் சந்திரனைச் சூடிய சடையின்மீது பாம்பை அணிந்த சிவபெருமான் வீற்றிருக்கும் திருப்பதிகள் பலவற்றையும் சென்று வணங்கி, அவர்தம் திருப் பெயரைப் புகழ்ந்து போற்றும் திருப்பதிகங்களைப் பாடித், தொண்டு செய்யும் பொருட்டு, எழுவாராயினார்.
குறிப்புரை: பதி பலவும் என்பன அடுத்த பாடலில் குறிக்கப் பெறுகின்றன.

திருவதிகைப் பதிமருங்கு
திருவெண்ணெய் நல்லூரும்
அருளுதிரு ஆமாத்தூர்
திருக்கோவ லூர்முதலா
மருவுதிருப் பதிபிறவும்
வணங்கிவளத் தமிழ்பாடிப்
பெருகுவிருப் புடன்விடையார்
மகிழ்பெண்ணா கடம்அணைந்தார்.

[ 148]


திருவதிகையின் அருகிலுள்ள திருவெண்ணெய் நல்லூரும், அருள் தருகின்ற திருவாமாத்தூரும், திருக்கோவலூரும் முதலாகப் பொருந்திய பதிகள் பலவற்றையும் வணங்கி, செழுமை யுடைய தமிழ்ப்பதிகங்களைப் பாடி, ஆனேற்றை ஊர்தியாக உடைய சிவபெருமான் விரும்பி வீற்றிருக்கும் திருப்பெண்ணாகடத்தைப் பெருவிருப்புடன் அடைந்தார்.
குறிப்புரை: திருவெண்ணெய் நல்லூரில் அருளிய பதிகம் கிடைத் திலது. திருஆமாத்தூரில் அருளிய பதிகங்கள் இரண்டாம், அவை:
1. திருக்குறுந்தொகை: 'மாமாத்தாகிய ஈசனை' (தி. 5 ப. 44) எனத் தொடங்குவது. 2. திருத்தாண்டகம்: 'வண்ணங்கள் தாம்பாடி' (தி. 6 ப. 9) எனத் தொடங்குவது.
திருக்கோவலூரில் அருளிய பதிகம், 'செத்தையேன்' (தி. 4 ப. 69) எனத் தொடங்கும் திருநேரிசைப் பதிகமாகும். 'முதலாமருவு திருப்பதிகள்' எனக் குறிப்பன, திருவிடையாறு, திருநெல்வெண்ணெய் முதலாயினவாம். பதிகங்கள் எவையும் கிடைத்தில. திருமுண்டீச்சரம் என்ற பதியை இவ்விடத்துக் குறிப்பிட்டு, அப்பதியில் அருளியது, 'ஆர்த்தான்' (தி. 6 ப. 85) எனத் தொடங்கும் பதிகமாகும் எனக் க. வெள்ளைவாரணனார் கூறுவர்.

கார்வளரும் மாடங்கள்
கலந்தமறை ஒலிவளர்க்குஞ்
சீருடைஅந் தணர்வாழுஞ்
செழும்பதியின் அகத்தெய்தி
வார்சடையார் மன்னுதிருத்
தூங்கானை மாடத்தைப்
பார்பரவுந் திருமுனிவர்
பணிந்தேத்திப் பரவினார்.

[ 149]


மேகங்கள் தவழ்வதற்கு இடமான மாளிகை களில், பொருந்திய மறையொலியை வளர்க்கின்ற சிறப்பையுடைய மறையவர்கள் வாழ்கின்ற அச்செழும் பதியுள் போய், நீண்ட சடையை யுடைய சிவபெருமான் நிலைபெற்று விளங்கும் திருத்தூங்கானை மாடக் கோயிலை, உலகவர் போற்றும் திருநாவுக்கரசர் பணிந்து போற்றிப் பரவினார்.
குறிப்புரை: ஒருயானை படுத்திருப்பதுபோலும் வடிவில் இக் கோயிலின் கருவறை விமானம் அமைந்திருத்தலின் தூங்கானை மாடம் எனப் பெயர் பெறுவதாயிற்று. இதுகோயிலின் பெயர். பெண்ணாகடம் என்பது ஊரின் பெயர்.

புன்னெறியாம் அமண்சமயத்
தொடக்குண்டு போந்தவுடல்
தன்னுடனே உயிர்வாழத்
தரியேன்நான் தரிப்பதனுக்
கென்னுடைய நாயகநின்
இலச்சினையிட் டருளென்று
பன்னுசெழுந் தமிழ்மாலை
முன்னின்று பாடுவார்.

[ 150]


'இழிவான சமண் சமயப் பிணிப்புடைய இவ் வுடலுடனே உயிர் வாழ்வதற்கு மனமிசையேன் ஆதலின் என் உயிர்த் தலைவரே! நான் உயிர் வாழ்வதற்கு உமது இலச்சினையை இட்டருள வேண்டும்' என்னும் கருத்தமைவுடைய செந்தமிழ் மாலையைத் திருமுன்பு நின்று பாடுவாராய்.

குறிப்புரை:

Go to top
பொன்னார்ந்த திருவடிக்கென்
விண்ணப்பம் என்றெடுத்து
முன்னாகி எப்பொருட்கும்
முடிவாகி நின்றானைத்
தன்னாகத் துமைபாகங்
கொண்டானைச் சங்கரனை
நன்னாமத் திருவிருத்தம்
நலஞ்சிறக்கப் பாடுதலும்.

[ 151]


'பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப் பம்' (தி. 4 ப. 109) எனத் தொடங்கி, எப்பொருட்கும் முதலும் முடிவுமாகி நின்று அருளுகின்ற இறைவரை, தம் திருமேனியில் ஒரு மருங்கில் உமையம்மையாரைக் கொண்டவரை, சங்கரரை, அவரு டைய நல்ல திருப்பெயர்களைப் பாடும் திருவிருத்தப் பதிகத்தை நலம் சிறக்கப் பாடவும்,

குறிப்புரை:

நீடுதிருத் தூங்கானை
மாடத்து நிலவுகின்ற
ஆடகமே ருச்சிலையான்
அருளாலோர் சிவபூதம்
மாடொருவர் அறியாமே
வாகீசர் திருத்தோளில்
சேடுயர்மூ விலைச்சூலம்
சினவிடையி னுடன்சாத்த.

[ 152]


செல்வம் நிலைபெறும் திருத்தூங்கானை மாடத்தில் நிலவும் பொன்னான மேருமலையை வில்லாக உடைய பெருமானின் திருவருளால், ஒரு சிவ பூதமானது, அருகிலுள்ளார் யாரும் அறியாதவாறு வந்து, திருநாவுக்கரசரின் திருத்தோள்களில் ஒளி மிக்க மூவிலைச்சூலக் குறியைச் சினமுடைய ஆனேற்றின் குறியுடனே சாத்த,

குறிப்புரை: இவ்விடத்து அருளப் பெற்ற திருப்பதிகம் 'பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம்' (தி. 4 ப. 109) எனத் தொடங்கும் திருவிருத்தமாகும். இப்பதிகத்துள் கிடைத்துள்ள பாடல்கள் மூன்றேயாம். முதற்பாடலில் 'சூலமென் மேற்பொறி' என்றும், இரண்டாவது பாடலில் 'திருவடி நீறென்னைப் பூசு' என்றும், மூன்றாவது பாடலில், 'இடவம் பொறித்தென்னை யேன்று கொள்' என்றும் வேண்டிக்கொண்டுள்ளார் நாவரசர். இப்பாடலில் ஆசிரியர் சேக் கிழார், சூலமும் இடபமும் பொறித்தமையைக் குறிக்கின்றார். இவ்விலச்சினைகளை இறைவன் சிவபூதத்தின் வழி இட்டதாகவும் ஆசிரியர் கூறுகிறார். இரண்டாவது பாடலில் வேண்டிக் கொண்ட விண்ணப்பம், திருவடி நீறென்னைப் பூசு என்பதாம். இது இறைவனே செய்தருள வேண்டுதலானும், அவ்வண்ணம் பெருமான் வழங்கிய அருட்கொடையைப் பிறர் அறியச் சொல்லுதல் தகவன்று ஆதலானும். அதனை விடுத்து ஏனையிரண்டனையும் ஆசிரியர் சேக்கிழார் கூறுவாராயினர் எனக் கருதலாம். 'அருளுடையார் அளித்தருளும் செவ்விய பேர் அருள் விளம்பும் திறமன்று' (தி. 12 பு. 24 பா. 27) எனக் காரைக்கால் அம்மையார் வரலாற்றில் அருளுமாற்றான் இறைவனின் அருட்செயல் பிறர் அறியச் சொல்லல் அறமன்று என்பது அறியலாம். எனினும் அவர் செய்தபடி சொல்லுவதே அறம், எனக்கருதி அம்மை யார் வரலாற்றில் அவ்வருட்பேற்றைச் சொன்னதற்குக் காரணம், கணவனுரை காத்தமையேயாம் என்பது ஆண்டு அறியப்படுவ தொன்றாகும். ஈண்டு அத்தகையதோர் இடர்ப்பாடு ஆசிரியர் சேக்கிழாருக்கு நேராமையின் அவ்வருட் செயலைக் கூறாராயினர் எனக் கருதலாம். எனினும் இத்தகைய அருட்பேற்றில் ஒன்றான இறைவன் திருவடி சூட்டினமையைப் பின் திருநல்லூரில் ஆசிரியர் சேக்கிழார் விதந்து கூறுகிறார் ஆதலின் இக்கருத்து மேலும் எண்ணத் தக்கதாயுள்ளது.
உமையம்மையார் தக்கன் மகளாக இருந்த உடலை நீக்க வேண்டியதும், திருநாளைப் போவார் தம் இழிபிறப்பினை நினைந்து தில்லைக் கூத்தனை வழிபடல் தக்கதன்று எனக் கருதியதும், தத்தமக்கு ஏற்பட்ட இழிதகைமை கருதியமையேயாம். நாவரசர் ஈண்டு வேண்டிக் கொண்டதும் அன்னதோர் இழிதகைமை நீங்கவேண்டியே யாம்.

ஆங்கவர்தந் திருத்தோளில்
ஆர்ந்ததிரு இலச்சினையைத்
தாங்கண்டு மனங்களித்துத்
தம்பெருமான் அருள்நினைந்து
தூங்கருவி கண்பொழியத்
தொழுதுவிழுந் தார்வத்தால்
ஓங்கியசிந் தையராகி
உய்ந்தொழிந்தேன் எனவெழுந்தார்.

[ 153]


அவர் தம் திருத்தோளில் நிறைந்த திரு இலச்சினைகளைக் கண்டு, மனம் மகிழ்ந்து, தம்பெருமானின் திருவருளை நினைந்து, இழிந்து வரும் அருவி எனக் கண்களில் நீர் வடிய, வணங்கி, நிலத்தில் விழுந்து, மீதூர்ந்த அன்பால் நிரம்பி, மேல் எழுந்த சிந்தையராய் 'நான் உய்ந்தேன்' எனக் கூறி எழுந்தார்.

குறிப்புரை: இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.

தூங்கானை மாடத்துச்
சுடர்க்கொழுந்தின் அடிபரவிப்
பாங்காகத் திருத்தொண்டு
செய்துபயின் றமருநாள்
பூங்கானம் மணங்கமழும்
பொருவில்திரு அரத்துறையுந்
தேங்காவின் முகிலுறங்குந்
திருமுதுகுன் றமும்பணிந்து.

[ 154]


திருத்தூங்கானை மாடத்தில் வீற்றிருக்கும் சுடர்க் கொழுந்தான பெருமானின் திருவடிகளைப் போற்றி செய்து, இயன்ற முறையில் திருப்பணிகளும் செய்து, அத்திருப்பதியில் விரும்பி எழுந்தருளியிருக்கும் நாள்களில், அழகிய காட்டுப் பூக்களின் மணம் கமழ்கின்ற ஒப்பற்ற திருவரத்துறையினையும், தேன் பொருந்திய சோலைகளில் மேகங்கள் தவழும் திருமுதுகுன்றத்தையும் வணங்கி.

குறிப்புரை: திருமுறைகளில் திருநெல்வாயில் அரத்துறை எனக் குறிக்கப் பெறும் இத்திருப்பதி, இக்காலத்துத் திருவரத்துறை, திரு வட்டுறை, என்று வழிமொழியப் பெறுகிறது. நெல்வாயில் ஊர்ப் பெயரும், அரத்துறை கோயில் பெயருமாம். திருவரத்துறையில் அருளிய பதிகம் 'கடவுளை' எனத் தொடங்கும் திருக்குறுந்தொகைப் பதிகமாகும். திருமுதுகுன்றத்தில் அருளிய பதிகம் 'கருமணியை' எனத் தொடங்கும் திருத்தாண்டகம் ஆகும். திருமுதுகுன்றம் என்பது இன்று விருத்தாசலம் என அழைக்கப்பெறுகிறது. திருமுதுகுன்றம் என்பதே பழமையும் தகுதியும் உடைய பெயராகும்.

வண்டமிழ்மென் மலர்மாலை
புனைந்தருளி மருங்குள்ள
தண்டுறைநீர்ப் பதிகளிலுந்
தனிவிடையார் மேவியிடங்
கொண்டருளுந் தானங்கள்
கும்பிட்டுக் குணதிசைமேல்
புண்டரிகத் தடஞ்சூழ்ந்த
நிவாக்கரையே போதுவார்.

[ 155]


வளமான தமிழால் ஆய மென்மையான மலர் மாலைகளைப் புனைந்து, அருகில் உள்ள குளிர்ந்த துறைகளையுடைய நீர்வளம் மிக்க திருப்பதிகளிலும், ஒப்பில்லாத ஆனேற்றூர்தியை யுடைய சிவபெருமான் அவ்வவ்விடங்களிலும் எழுந்தருளியிருக்கும் திருக்கோயில்களையும் வணங்கிக் கிழக்குத் திசையை நோக்கி, தாமரைக் குளங்களால் சூழப்பட்ட நிவாநதியின் கரைவழியாய்ச் செல்பவராய்,

குறிப்புரை: இங்குக் குறிக்கப் பெற்ற திருப்பதிகள் திருஎருக்கத்தம் புலியூர், திருக்கூடலையாற்றூர் முதலியனவாகலாம் என்பர் சிவக்கவி மணியார் (பெரிய. பு. உரை). எனினும் பதிகங்கள் கிடைத்தில.
பதிகளிலும் என்பதன்கண் உள்ள உம்மை இறந்து தழீஇயிற்று. நிவாநதி தில்லைக்கு வடக்கே ஓடும் வெள்ளாறு ஆகும்.

Go to top
ஆனாத சீர்த்தில்லை
அம்பலத்தே ஆடுகின்ற
வானாறு புடைபரக்கும்
மலர்ச்சடையார் அடிவணங்கி
ஊனாலும் உயிராலும்
உள்ளபயன் கொளநினைந்து
தேனாரும் மலர்ச்சோலைத்
திருப்புலியூர் மருங்கணைந்தார்.

[ 156]


அமையாத சிறப்பையுடைய தில்லை அம்பலத்தில் கூத்தியற்றும், கங்கையாறு அருகில் பரவும் மலர் பொருந்திய சடையை உடையவரான பெருமானின் திருவடிகளை வணங்கி, ஊனாலும் உயிராலும் கொளத்தக்க பயனைப் பெற எண்ணி யவராய்த் தேன் பொருந்திய சோலைகள் சூழ்ந்த திருப்புலியூரை அணுக அடைந்தார்.

குறிப்புரை: புலியூர் - புலிக்கால் முனிவர் வழிபட்டமையின் இப்பெயர் பெற்றது. இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

நாவுக் கரசரும் இருவர்க் கரியவர்
நடமா டியதிரு எல்லைப்பால்
மேவித் தலமுற மெய்யில் தொழுதபின்
மேன்மேல் எழுதரும் விழைவோடுங்
காவிற் களிமயில் மகிழ்வுற் றெதிரெதிர்
ஆடக் கடிகமழ் கமலஞ்சூழ்
வாவித் தடமலர் வதனம் பொலிவுறு
மருதத் தண்பணை வழிவந்தார்.

[ 157]


திருநாவுக்கரசரும், நான்முகனுக்கும், திரு மாலுக்கும் எட்டாத சிவபெருமான் அருட் கூத்தாடுகின்ற தில்லையின் எல்லையைச் சேர்ந்து, நிலம் பொருந்த மெய்யால் தொழுதபின், மேன் மேலும் பொங்கி எழுகின்ற ஆசையுடனே சோலைகளில் களிப்புடைய மயில்கள், மகிழ்ந்து எதிர் எதிராக ஆட, மணம் கமழும் தாமரைகள் நிரம்பிய பொய்கைகளின் மலர்களாகிய முகங்கள் விளங்கும் மருத நிலத்தைச் சார்ந்த குளிர்ந்த வயல்களின் அருகிருக்கும் வழியே வந்தார்.

குறிப்புரை: மருதத் தண்பணை - மருத நிலத்திலுள்ள குளிர்ந்த வயல்கள்.

முருகிற் செறியிதழ் முளரிப் படுகரில்
முதுமே திகள்புது மலர்மேயும்
அருகிற் செறிவன மெனமிக் குயர்கழை
அளவிற் பெருகிட வளரிக்குப்
பெருகிப் புடைமுதிர் தரளஞ் சொரிவன
பெரியோர் அவர்திரு வடிவைக்கண்
டுருகிப் பரிவுறு புனல்கண் பொழிவன
எனமுன் புளவள வயலெங்கும்.

[ 158]


மணம் செறிந்த நெருங்கிய இதழ்களையுடைய தாமரை மலர்கள் உள்ள பள்ளங்களில், முதிய எருமைகள் புதிய பூக் களை மேய்கின்ற இடங்களின் அருகில், நெருங்கிக் காடுபோல மிக உயர்ந்த மூங்கிலின் அளவாக உயர்ந்து பெருக வளரும் கரும்புகள், பெருத்து முதிர்ந்த கணுக்களில் முத்துக்களைச் சொரிந்தவையாய்ப் பெரியவரான திருநாவுக்கரசு நாயனாரின் திருவேடத்தைக் கண்டு உள் உருகி, அன்பு மிகுதியால் கண்ணீர் பொழிவது போல் வயல்கள் எங்கும் விளங்கும்.

குறிப்புரை: கரும்பிலிருந்து உதிர்ந்த முத்துக்கள், அரசின் வேடங் கண்டு உருகும் கண்ணீர்த் துளிகள் போல விளங்கும் எனக் கூறியது, ஒரு மருங்கு நிலவளத்தையும், பிறிதொரு மருங்கு பத்திமை மேம் பாட்டையும் புலப்படுத்துகின்றது.

அறிவிற் பெரியவர் அயல்நெற் பணைவயல்
அவைபிற் படும் வகை அணைகின்றார்
பிறவிப் பகைநெறி விடுவீர் இருவினை
பெருகித் தொடர்பிணி உறுபாசம்
பறிவுற் றிடஅணை யுமின்என் றிருபுடை
பயில்சூழ் சினைமிசை குயில்கூவுஞ்
செறிவிற் பலதரு நிலையிற் பொலிவுறு
திருநந் தனவனம் எதிர்கண்டார்.

[ 159]


அறிவில் பெரியவரான திருநாவுக்கரசு நாயனார் அருகில் உள்ள நெல்வயல்கள் பின்னாகுமாறு கடந்து முன் சென்று, அணைகின்றார். ஆதலின் பகையாய பிறவியை அடைவிக்கும் நெறி களைக் கைவிடும் கருத்துடையவர்களே! இரு வினைகளும் பெருகித் தொடர்ந்து பிணிக்கும் பாசம் நீங்குமாறு அங்கு அணையுங்கள் எனச் சூழ்ந்த மரக்கிளைகளின் மேலே பயின்ற குயில்கள் கூவுவதற்கு இடமான பலமரங்கள் நெருங்கி, நிலைத்து, அழகாக விளங்கும் திரு நந்தனவனங்களை எதிரில் கண்டார்.

குறிப்புரை: அரசரின் வருகை கண்ட குயில்கள் 'பிறவியை நீங்கும் கருத்துடையவர்களே! நாவரசர் இங்கு அணைகின்றார். நம்பாவம் நீங்க வேண்டின் இங்கு அவரைக் கண்டு உய்ய அணையுங்கள்' எனக்கூவி அழைப்பனவாகக் கூறுகின்றார். 'நேயம் மிகுந்தவர் வேடமும் ஆலயம் தானும் அரன் எனத் தொழுமே' (சிவஞானபோதம், சூத். 12) எனவரும் ஞானநூல் கருத்தும் நினைக. இறைவற்கு அணியத் தகும் நால்வகை மலர்களில், கோட்டுப்பூவும் ஒன்றாதலின் அப்பூக்கள் நிறைந்த மரங் களை உடைய சோலையைத் திருநந்தனவனம் என்றார்.

அவர்முன் பணிவொடு தொழுதங் கணைவுற
அணிகொம் பரின்மிசை அருகெங்கும்
தவமுன் புரிதலில் வருதொண் டெனுநிலை
தலைநின் றுயர்தமிழ் இறையோராம்
இவர்தந் திருவடி வதுகண் டதிசயம்
எனவந் தெதிர்அர கரவென்றே
சிவமுன் பயில்மொழி பகர்கின் றனவளர்
சிறைமென் கிளியொடு சிறுபூவை.

[ 160]


அந்நந்தன வனங்களை முன் பணிவுடன் தொழுது நாயனார் அங்குச் சேர, அழகான மரக்கொம்புகளின் மேல் பக்கங்களில் எங்கும், முன் நாளில் தவம் செய்தலால் வரும் திருத் தொண்டில் தலை சிறந்து நிற்கும் உயர்ந்த தமிழ் அரசரான இவரது வடிவைக் கண்டு, 'இஃது அதிசயம்' எனக் கூறி, சிறைகளையுடைய மென்மையான கிளிகளும், சிறிய நாகணவாய்ப் பறவைகளும் அவர் எதிரே வந்து, 'அரகர' என்று முன் பயின்ற மொழிகளை உரைக்கும்.

குறிப்புரை: கிளிகளும் நாகணவாய்ப் பறவைகளும், அரசரது வடிவைக் கண்டதும், முன் தாம் பயின்றிருந்த 'அரகர' என்னும் ஒலியைச் செய்யுமாம். அடியவரைக் கண்டு போற்றவும் வரவேற்க வும், அங்குள்ள பறவையினங்களும் தெரிந்திருந்தன என்பது இத னால் போதரும். அரசரின் வடிவு பறவைகளையும் ஈர்த்தாட் கொள்ளு மாற்றை இதனால் அறியலாம்.

Go to top
அஞ்சொல் திருமறை யவர்முன் பகர்தலும்
அவருந் தொழுதுமுன் அருள்கூரும்
நெஞ்சிற் பெருகிய மகிழ்வும் காதலும்
நிறைஅன் பொடும்உரை தடுமாறச்
செஞ்சொல் திருமறை மொழிஅந் தணர்பயில்
தில்லைத் திருநகர் எல்லைப்பால்
மஞ்சிற் பொலிநெடு மதில்சூழ் குடதிசை
மணிவா யிற்புறம் வந்துற்றார்.

[ 161]


அழகிய சொற்களையுடைய, அரகர என்னும் திருமறைகளை அவர் முன் அக்கிளிகள் சொல்லவும், அவரும் வணங்கி, முன்னமே அருள் நிறைந்த தம் உள்ளத்தில் மேலும் பெருகிய மகிழ்ச்சியும், காதலும், நிறைந்த அன்புமாகிய இவற்றால் சொற்கள் தடுமாறச், செம்மையான சொற்களையுடைய மறைகளை ஓதும் அந்தணர்கள் பயில்கின்ற நகரின் எல்லைப் புறத்தில், மேகங் களால் விளங்கும் நீண்ட மதிலால் சூழ்ந்த மேற்குத் திசையில் அமைந்த மணிவாயிலின் புறத்தே வந்து சேர்ந்தார்.

குறிப்புரை: அரகர என்ன அரியதொன் றில்லை
அரகர என்ன அறிகிலர் மாந்தர்
அரகர என்ன அமரரும் ஆவர்
அரகர என்ன அறும்பிறப் பன்றே. ; -தி. 10 பா. 899
எனவரும் திருமூலர் திருவாக்கால் இம்மறையின் பெருமை விளங்கும்.

அல்லல் பவம்அற அருளுந் தவமுதல்
அடியார்எதிர்கொள அவரோடும்
மல்லற் புனல்கமழ் மாடே வாயிலின்
வழிபுக் கெதிர்தொழு தணைவுற்றார்
கல்வித் துறைபல வருமா மறைமுதல்
கரைகண் டுடையவர் கழல்பேணுஞ்
செல்வக் குடிநிறை நல்வைப் பிடைவளர்
சிவமே நிலவிய திருவீதி.

[ 162]


தீங்கு தரும் பிறவிப்பிணி நீங்குமாறு தம்மை வழிபடுவாருக்கு அருள்செய்யும் தவத்தையே தம் செல்வமாகக் கொண்ட அடியவர், நாவரசரை எதிர் கொண்டழைக்க, வளமான நீரில் பூக்கள் மணம் கமழும் பக்கங்களை உடைய மேற்றிசை வாயில் வழியே அவர்களோடு புக்கு, கல்வித்துறைகள் பலவற்றையும், அவற் றோடு அடிப்படையாக இருக்கும் சிறப்பு வளரும் மறைகளையும் கரைகண்டு சிவபிரானுடைய திருவடிகளை விரும்பி வணங்கும் அருட்செல்வம் வாய்ந்த இல்லங்கள் நிறைந்த நல்ல இருப்பிடங்களில் மங்கலங்கள் வளர்கின்ற மேம்பட்ட வீதிகளை எதிரே தொழுது அடைந்தார்.
குறிப்புரை: தவமுதலடியார் - தவத்தையே வாழ்முதலாகக் கொண்ட அறம் வளர்த்தோர். வருமுதல் மாமறை - வடுவில் கொள்கை உயர்ந் தோர் ஆய்ந்த கெடுவில் கேள்வி எனப் போற்றப்பட்டு, எல்லாக் கலைக ளுக்கும் அப்பாற்பட்டதான வேதம். இவ்வேதம் கரைகண்டதன் பயன், சிவபிரான் கழல் பேணி அவருடைய அருட்செல்வத்தால் மங்கலம் பொலிய வாழ்த்துதல். சுந்தரர் வடதிசை வாயில் வழியாக வும், நாவரசர் குடதிசை வாயில் வழியாகவும் ஞானசம்பந்தர் தென்திசை வாயில் வழியாகவும் தில்லையை அடைந்தனர். மாணிக்க வாசகர் குணதிசை வாயில் வழியாகச் சென்றனர் போலும்.

நவமின் சுடர்மணி நெடுமா லையுநறு
மலர்மா லையுநிறை திருவீதிப்
புவனங் களின்முதல் இமையோர் தடமுடி
பொருதுந் தியமணி போகட்டிப்
பவனன் பணிசெய வருணன் புனல்கொடு
பணிமா றவுமவை பழுதாமென்
றெவருந் தொழுதெழும் அடியார் திருவல
கிடுவார் குளிர்புனல் விடுவார்கள்.

[ 163]


தத்தம் உலகங்களுக்குத் தலைவரான தேவர்களின் பெரிய முடிகள் ஒன்றுடன் ஒன்று மோதுவதால் சிந்திய மணிகளும், ஒளிவீசும் நவமணிகளால் ஆய மாலைகளும், நல்ல மணம் வீசும் மலர் மாலைகளும் நிறைந்த திருவீதியினின்றும், காற்றின் கடவுள், அவற்றை வாரி எறிந்து திருவலகுப் பணி செய்யவும், அதனையடுத்து வருணன் நீர் கொண்டு திருமெழுக்குப் பணி செய்ய வும், அத்திருப்பணிகள் முழுமையும் செம்மைபெறாமையும் கண்டு, அனைவரும் தொழுது எழும் தன்மை வாய்ந்த அடியார்கள், அவற் றின்மேல் தாம் திருவலகு இடுவார்களும், குளிர்ந்த நீரை விடுபவரு மாய் இருந்தனர்.

குறிப்புரை: திருவீதிகளில் காற்றின் கடவுளும் வருணனும் செய்த பணிகள் செம்மை பெறாமை கண்டு, அவற்றை அடியவர் நீக்கி நிறை வும் அழகும் பெறுமாறு செய்தனர். தேவர்களின் மணிமுடிகள் சிதறிக் கிடக்க, அவற்றை முதற்கண் அகற்றினர். அதன்பின்பு அலகு இடவும் மெழுக்கிடவும் செய்தனர். போக அட்டு - அகற்றும் பணியைச் செய்து.

மேலம் பரதலம் நிரையுங் கொடிகளில்
விரிவெங் கதிர்நுழை வரிதாகுங்
கோலம் பெருகிய திருவீ தியைமுறை
குலவும் பெருமையர் பணிவுற்றே
ஞாலந் திகழ்திரு மறையின் பெருகொலி
நலமார் முனிவர்கள் துதியோடும்
ஓலம் பெருகிய நிலையேழ் கோபுரம்
உறமெய் கொடுதொழு துள்புக்கார்.

[ 164]


பொருந்திய பெருமையுடைய நாவரசர், மேலே வானவெளியிடம் எங்கும் நிறையும் கொடிகளூடே, பரவும் வெம்மை யான கதிரவனின் கதிர்கள் நுழைவதற்கு அரிதான அழகு பெருகிய திருவீதியை முறையாகப் பணிந்து, உலகில் விளங்கும் திருமறைகளின் பெருகிய ஒலியானது நன்மையுடைய முனிவர் செய்யும் போற்றி யுரைகளுடன் பெருகிய எழுநிலை மேலைக் கோபுரத்தையும், நிலம் உற வணங்கித் தொழுது உள்ளே புகுந்தனர்.

குறிப்புரை: 'வெயில் நுழைபு அறியாக் குயில் நுழை பொதும்பர்' (பெரும்பாண். -374) என்றாற் போல, இங்கு வெயில் நுழைவு அறியா கொடி நுடங்கும் வீதிகளைக் காட்டுகின்றார் ஆசிரியர்.

வளர்பொற் கனமணி திருமா ளிகையினை
வலம்வந் தலமரும் வரைநில்லா
அளவிற் பெருகிய ஆர்வத் திடையெழும்
அன்பின் கடல்நிறை உடலெங்கும்
புளகச் செறிநிரை விரவத் திருமலி
பொற்கோ புரமது புகுவார்முன்
களனிற் பொலிவிடம் உடையார் நடநவில்
கனகப் பொதுஎதிர் கண்ணுற்றார்.

[ 165]


அழகு வளர்கின்ற பொன்மாளிகையை வலமாக வந்து, வருத்தம் தருவதும் ஓரெல்லைக்குட்படாது பெருகியதுமான ஆர்வத்திடை எழுகின்ற அன்பான கடல் நிறைந்த மேனி முழுதும் மயிர்ப்புளகம் மிகுந்து கலக்க, திருமிகுந்த பொன்வயத்ததாய கோபுரத்தில் உள்ளே புகும் நாயனார், கழுத்தில் விளங்கும் நஞ்சை யுடைய கூத்தப் பெருமான் நடமாடுகின்ற பொன்னம்பலத்தை எதிரே கண்டார்.
குறிப்புரை: தாம் விரும்பும் பொருள்கள் கிடைக்கத் தாழ்க்கினும், கிடையாதொழியினும் வருத்தம் நேர்தலின் 'அலமரும் . . ஆர்வம்' என்றார்.

Go to top
நீடுந் திருவுடன் நிகழும் பெருகொளி
நிறைஅம் பலம்நினை வுறநேரே
கூடும் படிவரும் அன்பால் இன்புறு
குணமுன் பெறவரு நிலைகூடத்
தேடும் பிரமனும் மாலுந் தேவரும்
முதலாம் யோனிகள் தெளிவொன்றா
ஆடுங் கழல்புரி அமுதத் திருநடம்
ஆரா வகைதொழு தார்கின்றார்.

[ 166]


நிலைபெறும் வீடுபேறான திருவுடன் பொருந்தி யுள்ள மேன்மேலும் வளர்கின்ற ஞான ஒளி நிறையும் அம்பலமானது, முன்னம் தம் மனத்தில் பொருந்தியிருந்தவாறே எதிரிலும் கூடுமாறு வரும் அன்பால் இன்பம் பொருந்தும் குணச்சிறப்பு மிகும் நிலை கைகூடியதால், தேடுகின்ற அயனும் மாலும் முதலிய தேவர்களும், பிறவிகள் இடனாக வரும் ஏனைய உயிர்களும் தெளிய இயலாத, ஆடும் திருவடியால் நிகழ்த்தும் அமுதமான கூத்தை ஆசை நிறைவு பெறாத வகையில், தொழுது துய்க்கலாயினர்.
குறிப்புரை:

கையுந் தலைமிசை புனைஅஞ் சலியன
கண்ணும் பொழிமழை ஒழியாதே
பெய்யுந் தகையன கரணங் களுமுடன்
உருகும் பரிவின பேறெய்தும்
மெய்யுந் தரைமிசை விழுமுன் பெழுதரும்
மின்தாழ் சடையொடு நின்றாடும்
ஐயன் திருநடம் எதிர்கும் பிடுமவர்
ஆர்வம் பெருகுதல் அளவின்றால்.

[ 167]


அவருடைய கைகளும் தலையின்மீது அஞ்சலி யாகக் குவிந்தன. கண்களும் இடைவிடாமல் பொழியும் மழைபோல் நீரைப் பொழிவனவாயின. மனம் முதலிய அகக் கருவிகளும் உடன் உருகும் அன்பினையுடையவாயின. பேறு பெறும் திருமேனியும் நிலத்தின் மீது விழுமுன்னரே எழுதரும். மின்போல் தாழ்ந்து விளங்கும் சடையுடன், நின்று ஆடுகின்ற இறைவரின் திருக்கூத்தை அவர் கும்பிடும் ஆர்வம் இவ்வாறு பெருகும் நிலையில் அளவிடற் கரிதாயது.

குறிப்புரை: பத்திமை மீதூர்வால் எழும் மெய்ப்பாடுகளை இத் திருப்பாடல் சித்தரித்துக் காட்டுகிறது.

இத்தன் மையர்பல முறையுந் தொழுதெழ
என்றெய் தினையென மன்றாடும்
அத்தன் திருவருள் பொழியுங் கருணையின்
அருள்பெற் றிடவரும் ஆனந்தம்
மெய்த்தன் மையினில் விருத்தத் திருமொழி
பாடிப் பின்னையும் மேன்மேலும்
சித்தம் பெருகிய பரிவால் இன்புறு
திருநே ரிசைமொழி பகர்கின்றார்.

[ 168]


இத்தகைய தன்மையுடையவராய, நாவரசர், பல முறையும் தொழுது எழலும், 'என்று வந்தாய்?' எனும் குறிப்புடன் பேரவையில் நடமாடும் அத்தனாரின் திருவருள் பொழிகின்ற கருணையால் அருளைப் பெறுமாறு வரும் ஆனந்தமான உண்மைப் பாட்டினால் திருவிருத்தத் திருமொழியைப் பாடி, பின்னரும் மேன் மேலும் சித்தத்தினுள்ளே பெருகி வளரும் அன்பு மிகுதியால் இன்பம் அடையும் திருநேரிசைத் திருப்பதிகத்தையும் அருளிச் செய்வராய்.

குறிப்புரை: இதுபொழுது அருளிய திருவிருத்தப் பதிகம் 'கருநட்ட கண்டனை' எனத் தொடங்கும் திருப்பதிகமாகும். (தி. 4 ப. 81) இப் பதிகத்தில் வரும் இரண்டாவது பாடல், 'என்று வந்தாய் என்னும் எம்பெருமான் தன் திருக்குறிப்பே' என நிறைவு பெறுகிறது. இதுவே ஆசிரியர் திருவுள்ளத்தில் 'என்றெய்தினை' எனும் குறிப்புப்படக் கூற ஏதுவாயிற்று;
இதனையடுத்துப் பாடிய திருப்பதிகம், 'பத்தனாய்ப் பாட மாட்டேன்' (தி. 4 ப. 23) எனத் தொடங்கும் திருநேரிசைத் திருப்பதிக மாகும். இத்திருப்பதிகத்தில் வரும் 'அத்தா உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறே' எனும் கருத்தமைவு, என்று வந்தாய்? எனப் பெருமான் வினவியதற்கு விடையாக அமைந்துள்ளமை அறியத் தக்கது. இதனை ஆசிரியர் அடுத்த திருப்பாடலில் எடுத்துப் மொழி கின்றார்.

பத்தனாய்ப் பாட மாட்டேன்
என்றுமுன் னெடுத்துப் பண்ணால்
அத்தாஉன் ஆடல் காண்பான்
அடியனேன் வந்த வாறென்
றித்திறம் போற்றி நின்றே
இன்தமிழ் மாலை பாடிக்
கைத்திருத் தொண்டு செய்யுங்
காதலிற் பணிந்து போந்தார்.

[ 169]


'பத்தனாய்ப்பாட மாட்டேன்' என முன்னம் தொடங்கிப் பண்ணிசை பொருந்த 'அத்தா உன்ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறு' என்று முடியும் ஈற்றினை உடையதான பதிகம் முதலானவற்றை இத்திறத்தில் போற்றி நின்றே இனிய தமிழ் மாலையைப் பாடிக் கைத்தொண்டு செய்கின்ற ஆசையால் வெளியே வந்தார்.
குறிப்புரை: இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

நீடிய மணியின் சோதி
நிறைதிரு முன்றின் மாடும்
ஆடுயர் கொடிசூழ் பொற்றேர்
அணிதிரு வீதி யுள்ளுங்
கூடிய பணிகள் செய்து
கும்பிடுந் தொழில ராகிப்
பாடிய புனித வாக்கின்
பணிகளும் பயிலச் செய்வார்.

[ 170]


மணிகளின் ஒளி நிறைந்த திருமுன்றிலின் பக்கத்திலும், ஆடுகின்ற உயர்ந்த கொடிகள் சூழ்ந்த அழகிய தேர் ஓடும் அழகிய வீதிகளினுள்ளும், பொருந்திய திருப்பணிகள் செய்து, கும்பிடும் தொழிலை உடையவராகிப் பாடும் தூய திருவாக்காகிய பணிகளும் செய்வாராயினார்.
குறிப்புரை:

Go to top
அருட்பெரு மகிழ்ச்சி பொங்க
அன்னம்பா லிக்கும் என்னும்
திருக்குறுந் தொகைகள் பாடித்
திருவுழ வாரங் கொண்டு
பெருத்தெழு காத லோடும்
பெருந்திருத் தொண்டு செய்து
விருப்புறு மேனி கண்ணீர்
வெண்ணீற்று வண்டல் ஆட.

[ 171]


கூத்தப் பெருமானின் அருளைப் பெற்றதால் உண்டான பெருமகிழ்ச்சி மேன்மேலும் பெருக, 'அன்னம் பாலிக்கும்' எனத் தொடங்குகின்ற திருக்குறுந்தொகைப் பதிகத்தைப் பாடிப், பெருகி எழுகின்ற அன்போடு பெரிய தொண்டைச் செய்து, விருப்ப முடைய மேனியில் வடியும் கண்ணீரால் கரைந்த திருவெண்ணீற் றாலாகிய வண்டல் பொருந்த,

குறிப்புரை: இங்குக் குறிக்கப்பெற்ற 'அன்னம் பாலிக்கும்' (தி. 5 ப. 1) எனத் தொடங்கும் திருக்குறுந்தொகைப்பதிகம் திரு உழவாரப் பணி செய்து கொண்டிருந்த பொழுது பாடியதாகும். இன்று மாகேசுவர வழிபாட்டில் பாடப் பெற்றுவருகின்றது. அன்னம் - சோறு; வீடுபேறு மாம்: 'பாதகமே சோறு பற்றின வா தோணோக்கம்'(தி. 8 ப. 15 பா. 7) எனவரும் திருவாசகமும் காண்க. 'திருக்குறுந்தொகைகள் பாடி' என்ற பன்மையால், பல திருக்குறுந்தொகைப் பதிகங்கள் பாடியிருக்க வேண் டும் எனத் தெரிகிறது, எனினும் இப்பொழுது பாடிய இக்குறுந் தொகைப் பதிகமும், பின்னர்ப் பாடவுள்ள (தி. 5 ப. 2) திருக்குறுந் தொகைப் பதிகம் ஒன்றும் ஆக, இருபதிகங்களுமே இதுபொழுது கிடைத்துள்ளன.

மேவிய பணிகள் செய்து
விளங்குநாள் வேட்க ளத்துச்
சேவுயர் கொடியார் தம்மைச்
சென்றுமுன் வணங்கிப் பாடிக்
காவியங் கண்டர் மன்னுந்
திருக்கழிப் பாலை தன்னில்
நாவினுக் கரசர் சென்று
நண்ணினார் மண்ணோர் வாழ.


[ 172]


திருநாவுக்கரசர் இவ்வாறு தமக்குப் பொருத்தமான பணிகளைச் செய்து வந்த நாள்களில், 'திருவேட் களத்தில்' எழுந்தருளியிருப்பவரும், உயரிய ஆனேற்றுக் கொடியை உடையவருமான இறைவரைத் திருமுன் சென்று வணங்கிப்பாடி, நீலமலர் போன்ற நிறமுடைய, அழகிய கழுத்தினையுடைய பெருமான் எழுந்தருளியிருக்கும் திருக்கழிப்பாலைக்கு, மண்ணுலகத்தவர் வாழும் பொருட்டுச் சென்று அடைந்தார்.

குறிப்புரை: திருவேட்களத் திருக்குறுந்தொகையில் (தி. 5 ப. 42 பா. 1) 'என்று மின்பந் தழைக்கவி ருக்கலாம்' எனக் கூறியவர். திருக்கழிப்பாலைப் பதிகத்தில் 'துஞ்சும் போதும் துணையென லா குமே' (தி. 5 ப. 40 பா. 10) என்று அருளுமாற்றான் அதனை வலியுறுத்துகின்றார்.

சினவிடைஏ றுகைத்தேறும் மணவாள
நம்பிகழல் சென்று தாழ்ந்து
வனபவள வாய்திறந்து வானவர்க்குந்
தானவனே என்கின் றாள்என்
றனையதிருப் பதிகமுடன் அன்புறுவண்
டமிழ்பாடி அங்கு வைகி
நினைவரியார் தமைப்போற்றி நீடுதிருப்
புலியூரை நினைந்து மீள்வார்.

[ 173]


சினத்தையுடைய ஆனேற்றை ஊர்கின்ற மணக்கோலத்துடன் வீற்றிருக்கும் இறைவரின் திருவடிகளை வணங்கி, அழகிய பவளம் போன்ற வாயைத் திறந்து 'வானவர் களுக்கும் தானவன் ஆகியவரே என்று கூறுகின்றார்' என்று அத்தன்மையுடைய திருப்பதிகத்துடனே, அன்பு பொருந்திய வளம் மிக்க தமிழ் மாலைகளைப் பாடி அப்பதியில் தங்கி, நினைதற்கரிய சிவபெருமானைப் போற்றிச் செல்வம் நிலைபெறும் புலியூரை நினைந்து திரும்புவராகி.

குறிப்புரை: இதுபொழுது அருளிய பதிகங்களில் முன்னையது, 'வனபவள வாய்திறந்து வானவர்க்கும் தானவனே என்கின்றா ளால்'(தி. 4 ப. 6) எனத்தொடங்கும் காந்தாரப் பண்ணிலமைந்த பதிகமாகும். இது முதலாக அன்புறு வண்தமிழ் மாலை பாடி, எனவே பலபதிகங்கள் பாடியிருக்க வேண்டும் எனத் தெரிகிறது. இன்று கிடைத்துள்ள பதிகங்கள், இப்பதிகத்தோடு (1) ஐந்தாம். அவை (2) வண்ணமும் வடிவும்- திருக்குறுந்தொகை (தி. 5 ப. 40). (3) நங்கையைப்பாகம் - திருநேரிசை (தி. 4 ப. 30). (4) நெய்தற்குருகு - திருவிருத்தம் (தி. 6 ப. 106). (5) ஊனுடுத்தி - திருத்தாண்டகம் (தி. 6 ப. 12).

மனைப்படப்பிற் கடற்கொழுந்து வளைசொரியுங்
கழிப்பாலை மருங்கு நீங்கி
நனைச்சினைமென் குளிர்ஞாழற் பொழிலூடு
வழிக்கொண்டு நண்ணும் போதில்
நினைப்பவர்தம் மனங்கோயில் கொண்டருளும்
அம்பலத்து நிருத்த னாரைத்
தினைத்தனையாம் பொழுதுமறந் துய்வனோ
எனப்பாடித் தில்லை சார்ந்தார்.

[ 174]


இல்லங்களின் முற்றங்களில் எல்லாம் கடலின் அலைகள் சங்குகளைக் கொணர்ந்து சேர்க்கின்ற திருக்கழிப் பாலையினை நீங்கி, அரும்புகளையுடைய கொம்புகளுடன் கூடிய குளிர்ந்த புன்னைமரங்கள் அடர்ந்த சோலைகளின் வழியாய்ச் சென்று சேர்கின்ற போதில், நினைப்பவர் தம் மனத்தையே கோயிலாகக் கொண்ட கூத்தப் பெருமானைச் சிறுபொழுதும் மறந்தால் நான் உய்வனோ (தி. 5 ப. 2 பா. 1) எனும் கருத்தையுடைய திருப்பதிகத்தைப் பாடியவாறே திருத்தில்லையை அடைந்தார்.

குறிப்புரை: திருக்கழிப்பாலையிலிருந்து தில்லைக்கு வரும்
இடைவெளியில் பாடப் பெற்ற திருப்பதிகம்,
பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்
நினைப்ப வர்மனம் கோயிலாக் கொண்டவன்
அனைத்தும் வேடமாம் அம்பலக் கூத்தனைத்
தினைத்த னைப்பொழு தும்மறந் துய்வனோ. (தி. 5 ப. 2 பா. 1)
.

அரியானை என்றெடுத்தே அடியவருக்
கெளியானை அவர்தஞ் சிந்தை
பிரியாத பெரியதிருத் தாண்டகச்செந்
தமிழ்பாடிப் பிறங்கு சோதி
விரியாநின் றெவ்வுலகும் விளங்கியபொன்
அம்பலத்து மேவி ஆடல்
புரியாநின் றவர்தம்மைப் பணிந்துதமி
ழாற்பின்னும் போற்றல் செய்வார்.

[ 175]


'அரியானை' எனத் தொடங்கி, அடியவர்க்கு எளியவரான சிவபெருமானை, அவ்வடியவர் உள்ளத்தினின்றும் பிரியாத பெருமானை எனும் கருத்தமைந்த பெரிய திருத்தாண்டக மான செந்தமிழ்ப் பதிகத்தைப் பாடி, விளங்கும் ஒளி மிகுதியால் எவ்வுலகங்களிலும் நிறைவாக விளங்கும் பொன்னம்பலத்தில் பொருந்திக் கூத்தாடுகின்ற இறைவரை வணங்கித் தமிழ்ப் பதிகங்களினால் மேலும் போற்றுவாராய்,

குறிப்புரை: 'அரியானை அந்தணர்தம் சிந்தையானை' எனத் தொடங்கும் இப்பதிகம் பெரியதிருத்தாண்டகம் (தி. 6 ப. 1) ஆகும். அந்தணர் என்பார் அழகிய தட்பத்தையுடைய அடியவரே யாதலின், 'அடியவருக்கு எளியானை அவர்தம் சிந்தை பிரியாத' எனக் கருத்தமைதி கண்டார். அந்தணர் என்பதோடு ஈரநெஞ்சினர்(தி. 12 சரு. 1-4 பா. 9) எனும் தொடரை இயைபுபடுத்திக் காண்க.

Go to top
செஞ்சடைக் கற்றைமுற்றத் திளநிலா
எறிக்குமெனுஞ் சிறந்த வாய்மை
அஞ்சொல்வளத் தமிழ்மாலை அதிசயமாம்
படிபாடி அன்பு சூழ்ந்த
நெஞ்சுருகப் பொழிபுனல்வார் கண்ணிணையும்
பரவியசொல் நிறைந்த வாயும்
தஞ்செயலியன் ஒழியாத திருப்பணியும்
மாறாது சாரும் நாளில்.

[ 176]


'செஞ்சடைக்கற்றை முற்றத்திள நிலாஎறிக்கும்' எனத் தொடங்கும் சிறப்புடைய வாய்மைச் சொற்களால் ஆய தமிழ்ப் பதிகத்தை வியப்புறுமாறு பாடி, அன்பு கெழுமிய மனம் கரைந்து உருகப்பெய்யும் மழை போன்ற நீர் பொழிகின்ற இரண்டு திருக்கண்களும், சிவபெருமானை வணங்கும் பதிகச் சொல் நிறைந்த திருவாயும், தம் செயலில் நீங்காத திரு உழவாரத் திருப்பணியும் கொண்டு மாறாமல் செய்து வரும் நாள்களில்.

குறிப்புரை: 'செஞ்சடைக் கற்றை' எனத் தொடங்கும் திருநேரிசைத் திருப்பதிகத்தில், பாடல் தொறும் பெருமானின் ஆடற் சிறப்பை வியந்து பாடிய அப்பர் பெருமான் திருக்கடைக்காப்பில்,
''மதியந்தோய் தில்லை தன்னுள் மல்குசிற் றம்பலத்தே
அதிசயம் போல நின்று வனலெரி யாடு மாறே. ''
(தி. 4 ப. 22 பா. 11)
எனக் கூறி நிறைவு செய்கின்றார். இதனையுளங் கொண்டே ஆசிரியர் சேக்கிழார், 'அஞ் சொல் வளத் தமிழ்மாலை அதிசயமாம்படி பாடி' என்றருளிச் செய்கின்றார். இப்பதியில் இருந்தருளிய பொழுது பாடிய பதிகங்கள் மேலும் இரண்டுள்ளன. 1) 'பாளையுடை' (தி. 4 ப. 80 பா. 1) எனத் தொடங்கும் திருவிருத்தம், 2) 'மங்குல் மதிதவழும்' (தி. 6 ப. 2 பா. 1) எனத் தொடங்கும் புக்க திருத்தாண்டகம்.

கடையுகத்தில் ஆழியின்மேல் மிதந்ததிருக்
கழுமலத்தின் இருந்த செங்கண்
விடையுகைத்தார் திருவருளால் வெற்பரையன்
பாவைதிரு முலைப்பா லோடும்
அடையநிறை சிவம்பெருக வளர்ஞானங்
குழைத்தூட்ட அமுது செய்த
உடையமறைப் பிள்ளையார் திருவார்த்தை
அடியார்கள் உரைப்பக் கேட்டார்.

[ 177]


ஊழி முடிவில் பொங்கி எழும் கடல் வெள்ளத்தில் மிதந்த திருக்கழுமலத்தில் (சீகாழியில்) வீற்றிருக்கின்ற ஆனேற்றை ஊர்தியாய்க் கொண்ட தோணியப்பரின் திருவருளால், மலையரச னின் மகளாரான உமையம்மையார், திருமுலைப்பாலுடனே நிறைகின்ற சிவம் பெருகுமாறு வளர்கின்ற ஞானத்தையும் குழைத்து ஊட்ட, அதை உண்டருளிய ஆளுடைய பிள்ளையாரின் வரலாற்றை அடியவர் உரைப்பக் கேட்டார்.
குறிப்புரை: இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

ஆழிவிடம் உண்டவரை அம்மைதிரு
முலைஅமுதம் உண்ட போதே
ஏழிசைவண் டமிழ்மாலை இவன்எம்மான்
எனக்காட்டி இயம்ப வல்ல
காழிவரும் பெருந்தகைசீர் கேட்டலுமே
அதிசயமாங் காதல் கூர
வாழியவர் மலர்க்கழல்கள் வணங்குதற்கு
மனத்தெழுந்த விருப்பு வாய்ப்ப.

[ 178]


திருநிலைநாயகி அம்மையாரின் திருமுலைப் பாலமுதத்தை ஞானத்துடன் உண்ட அப்பொழுதே, ஏழிசை பொருந் தும் வளமான தமிழ் மாலையால் கடலில் தோன்றிய நஞ்சை உண்டருளிய சிவபெருமானை 'எமது பெம்மான் இவன்' எனச் சுட்டிக் காட்டிப் பாடியருள வல்ல, சீகாழியில் தோன்றியருளிய பெருந்தகையாளரான ஞானசம்பந்தப் பெருமானின் சிறப்புகளைக் கேட்டவுடனே, வியத்தகு உணர்வுடன் கூடிய காதலால், வாழ்வு அளிக்கும் அவருடைய மலர் போன்ற திருவடிகளை வணங்குதற்குத் தம் உள்ளத்தில் எழுந்த விருப்பம் பொருந்த,

குறிப்புரை:

அப்பொழுதே அம்பலத்துள் ஆடுகின்ற
கழல்வணங்கி அருள்முன் பெற்றுப்
பொய்ப்பிறவிப் பிணியோட்டுந் திருவீதி
புரண்டுவலங் கொண்டு போந்தே
எப்புவனங் களும்நிறைந்த திருப்பதியின்
எல்லையினை இறைஞ்சி ஏத்திச்
செப்பரிய பெருமையினார் திருநாரை
யூர்பணிந்து பாடிச் செல்வார்.

[ 179]


அதுபொழுதே பொன்னம்பலத்தில் கூத்தாடும் இறைவரின் திருவடியை வணங்கி அருளைப் பெற்றுக் கொண்டு, பொய்யான இப்பிறவி நோயைப் போக்கும் இயல்பு கொண்ட தில்லையின் வீதியை நிலம் பொருந்தப் புரண்டு வலமாக வந்து, பின் எவ்வுலகங்களிலும் நிறைவுடைய அப்பதியினது எல்லையை வணங்கிப் போற்றிச், சொல்வதற்கரிய பெருமையுடைய சிவபெரு மானின் திருநாரையூரைப் போய்ப் பணிந்து பாடி மேலே செல்வராய்.

குறிப்புரை: இது பொழுது திருநாரையூரில் பாடியருளிய பதிகங்கள் இரண்டாம். (1) 'வீறுதானுடை' (தி. 5 ப. 54)எனத் தொடங்கும் திருக்குறுந்தொகைப் பதிகம். (2) 'சொல்லானைப் பொருளானை' (தி. 6 ப. 74) எனத் தொடங்கும் திருத்தாண்டகம். இத்திருப்பதியி லிருந்து சீகாழிக்குச் செல்லும் பொழுது இடையில் திருஓமாம்புலியூர், கடம்பூர் ஆகிய திருப்பதிகளுக்கும் சென்றிருக்கலாம் எனத் தெரிகிறது. இப்பதிகளில் அருளிய பதிகங்கள் மூன்றாம்: 1. திரு ஓமாம்புலியூர்த் திருப்பதிகம்: 'ஆராரும் மூவிலை வேல்' - திருத் தாண்டகம் (தி. 6 ப. 88). 2. கடம்பூர்த் திருப்பதிகங்கள்: அ)'தளரும் கோளரவ' - திருக்குறுந்தொகை (தி. 5 ப. 19) (ஆ) 'ஒருவராய்' - திருக்குறுந் தொகை (தி. 5 ப. 20).

தொண்டர்குழாம் புடைசூழத் தொழுதகரத்
தொடுநீறு துதைந்த கோலங்
கண்டவர்தம் மனங்கசிந்து கரைந்துருகுங்
கருணைபுறம் பொழிந்து காட்டத்
தெண்டிரைவாய்க் கல்மிதப்பில் உகைத்தேறுந்
திருநாவுக் கரசர் தாமும்
வண்டமிழால் எழுதுமறை மொழிந்தபிரான்
திருப்புகலி மருங்கு சார்ந்தார்.

[ 180]


அடியவர் கூட்டம் தம்மைச் சூழ்ந்துவர, வணங்கும் கைகளுடன், திருநீற்றால் நிறைவுற்ற திருக்கோலமானது கண்டவரின் உள்ளங்களையெல்லாம் கரைந்து உருகுமாறு அருள் பொழிந்திட, தெளிவான அலைகளையுடைய கடலில் கல்லையே மிதவையாகக் கொண்டு ஊர்ந்து கரை ஏறிய நாவுக்கரசர் பெருமா னும், வளம் பொருந்திய தமிழால் எழுதப் பெறும் தமிழ் மறையைக் கூறியருளிய திருஞானசம்பந்தப் பெருமானின் சீகாழிப் பதியின் அருகில் வந்து சேர்ந்தார்.
குறிப்புரை: வண்டமிழால் எழுதும் மறை எனவே, வடமொழி மறை எழுதாக் கிளவி என்பது பெறுதும். 'எல்லையிலா மறைமுதல் மெய்யுடன் எடுத்த எழுதும் மறை மல்லல்நெடுந் தமிழால் இம் மாநிலத்தோர்க்கு உரை சிறப்ப' என்பர் பின்னும். இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

Go to top
நீண்டவரை வில்லியார் வெஞ்சூலை
மடுத்தருளி நேரே முன்னாள்
ஆண்டஅர செழுந்தருளக் கேட்டருளி
ஆளுடைய பிள்ளை யாருங்
காண்தகைய பெருவிருப்புக் கைம்மிக்க
திருவுள்ளக் கருத்தி னோடு
மூண்டஅருள் மனத்தன்பர் புடைசூழ
எழுந்தருளி முன்னே வந்தார்.

[ 181]


நீண்ட மேருமலையை வில்லாகக் கொண்ட சிவபெருமான் கொடிய சூலைநோயைத் தந்தருளி நேரே ஆண்டரு ளிய நாவுக்கரசர் வருகின்றார் என்ற செய்தியைக் கேட்டருளிய ஞானசம்பந்தரும், அவரைக் காண்டற்குப் பெருவிருப்பு மீதூர, அருள் கொண்ட மனமுடைய அடியார்கள் பலரும் சூழ்ந்து வர, எழுந்தருளி அவர் முன்னர் வந்தார்.
குறிப்புரை:

தொழுதணைவுற் றாண்டஅர சன்புருகத்
தொண்டர் குழாத் திடையே சென்று
பழுதில்பெருங் காதலுடன் அடிபணியப்
பணிந்தவர்தங் கரங்கள் பற்றி
எழுதரிய மலர்க்கையால் எடுத்திறைஞ்சி
விடையின்மேல் வருவார் தம்மை
அழுதழைத்துக் கொண்டவர்தாம் அப்பரே
எனஅவரும் அடியேன் என்றார்.

[ 182]


நாவரசரும் தொழுதவாறே அவரையடைந்து, சூழ்ந்து நிற்கும் தொண்டர் கூட்டத்தின் இடையே சென்று, அன்பின் மிகுதியால் உள்ளம் உருக, குற்றம் இல்லாத மீதூர்ந்த காதலுடன் காழிப் பிள்ளையாரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்க, அங்ஙனம் விழுந்து வணங்கிய அவர்தம் கைகளைப் பிடித்துக் கொண்டு, எழுதற்கு அரிய மலர் போன்ற தம் திருக்கைகளால் எடுத்து, அவரைத் தாமும் வணங் கியவராய், ஆனேற்றை ஊர்தியாகவுடைய சிவபெருமானை அழுது அழைத்துத் தம்முன் வெளிப்பட்டு வரக்கண்ட ஞானசம்பந்தரும், 'அப்பரே!' என்று கூறிட அவரும் 'அடியேன்!' என்றார்.
குறிப்புரை: 'கருத்திற் பரவு மெய்க்காதல் தொண்டர் திருவேடம் நேரே தோன்றியது என்று தொழுதே, அண்டரும் போற்ற அணைந்து அங்கு அரசும் எதிர்வந்திறைஞ்சி' என ஞானசம்பந்தர் புராணத்து (தி. 12 பு. 28 ப. 271) வருதலின், வந்து கொண்டிருந்த நாவரசரைப் பிள்ளையார் முன் தொழ, அரசும் எதிர் தொழ அவரைத்தம் திருக் கரங்களால் எடுத்துத் தழுவி 'எம் அப்பரே' என்று மனம் நெகிழ்ந்து போற்றி மகிழ்வாராயினர்.

அம்பிகைசெம் பொற்கிண்ணத் தமுதஞா
னங்கொடுப்ப அழுகை தீர்ந்த
செம்பவள வாய்ப்பிள்ளை திருநாவுக்
கரசரெனச் சிறந்த சீர்த்தி
எம்பெருமக் களும்இயைந்த கூட்டத்தில்
அரனடியார் இன்பம் எய்தி
உம்பர்களும் போற்றிசைப்பச் சிவம்பெருகும்
ஒலிநிறைத்தார் உலகம் எல்லாம்.

[ 183]


உமையம்மையார் செம்பொன் கிண்ணத்தில் ஞான அமுதத்தை ஊட்ட, அதனால் அழுகை நீங்கிய பவளம் போலும் திருவாயினையுடைய ஞானசம்பந்தரும், திருநாவுக்கரசு நாயனாரும் ஆகிய பெருஞ்சிறப்புடைய எம் இரு பெருமக்களும் சேர்ந்த இத்திருக் கூட்டத்தைக் காணும் பேற்றைப் பெற்றதால், சிவனடியார்கள் இன்பம் அடைந்து, தேவர்களும் போற்றி வழிபடுமாறு உலகம் எல்லாம் சிவத்தைப் பெருகுவிக்கும் 'அரகர' என்ற ஒலியை நிறைத்தனர்.
குறிப்புரை:

பிள்ளையார் கழல்வணங்கப் பெற்றேன்என்
றரசுவப்பப் பெருகு ஞான
வள்ளலார் வாகீசர் தமைவணங்கப்
பெற்றதற்கு மகிழ்ச்சி பொங்க
உள்ளநிறை காதலினால் ஒருவர்ஒரு
வரிற்கலந்த உண்மை யோடும்
வெள்ளநீர்த் திருத்தோணி வீற்றிருந்தார்
கழல் வணங்கும் விருப்பின் மிக்கார்.

[ 184]


'ஆளுடைய பிள்ளையாரின் திருவடிகளை வணங்கும் பேற்றைப் பெற்றேன்' என்று திருநாவுக்கரசு நாயனார் மகிழ்ச்சியடைய, திருநாவுக்கரசு நாயனாரை வணங்கப் பெற்றதால் பெருகும் பெருமகிழ்ச்சியை ஞான வள்ளலார் ஆகிய பிள்ளையார் அடைய, உள்ளத்தில் நிறைந்த ஆசையுடன் ஒருவர் மற்றொருவர் உள்ளத்திற் கலந்த உண்மை நிலையோடும், வெள்ளப் பெருக்கில் மிதந்த திருத்தோணியில் வீற்றிருக்கும் இறைவரின் கழல் அணிந்த திருவடிகளை வணங்கும் விருப்பம் மிக்கவராகி,

குறிப்புரை:

அருட்பெருகு தனிக்கடலும் உலகுக் கெல்லாம்
அன்புசெறி கடலுமாம் எனவும் ஓங்கும்
பொருட்சமய முதற்சைவ நெறிதான் பெற்ற
புண்ணியக்கண் ணிரண்டெனவும் புவனம் உய்ய
இருட்கடுவுண் டவர்அருளும் உலகம் எல்லாம்
ஈன்றாள்தன் திருவருளும் எனவும் கூடித்
தெருட்கலைஞா னக்கன்றும் அரசும் சென்று
செஞ்சடைவா னவர்கோயில் சேர்ந்தார் அன்றே.

[ 185]


'அருளால் பெருகி நிற்கும் ஒப்பில்லாத கடலும், உலகனைத்தும் அன்பினால் நிறைவதொரு கடலும், சேர்ந்தன போல வும், உயர்ந்து விளங்கும் பொருண்மையமைந்த சமயங்களில் முதன்மை பெற்று நிற்கும் சைவ நன்னெறியானது பெற்ற புண்ணியக் கண்கள் இரண்டு எனவும், உலகம் உய்தற்காகக் கரிய நஞ்சினை யுண்ட சிவபெருமானது திருவருளும், உலகனைத்தையும் ஈன்ற அன்னையாரது திருவருளும் ஒருங்கிருந்தாற் போலவும், விளங்கிய உயிர்கள் தெளிவடைதற்கேதுவாய கலைஞானத்தையும் அதன் பயனாய சிவஞானத்தையும் ஒருங்கு பெற்ற பிள்ளையாரும், அரசும், பிள்ளையார் இருந்தருளிய திருமாளிகையினின்றும் புறப்பட்டுச் சிவந்த சடையினையுடைய தேவர் தலைவராய சிவபெருமானின் திருக்கோயிலை அடைந்தார்கள்.

குறிப்புரை: அருட்கடல் - பிள்ளையார், அன்புக்கடல் - நாவரசர், அருள் என்னும் அன்பு ஈன் குழவி என்பதால் அன்பு தாயாகும்; அருள் அதன் குழந்தையாகும். பிள்ளையார் அரசரை ஈண்டு அப்பரே என்றழைத்தற்கேற்ப அரசர் பிள்ளையாரைப் பிள்ளாய் எனப் (தி. 12 பு. 28 பா. 616) பின்னர் அழைக்க இருப்பதும் நினைவு கூர்தல் தக்கதாம். ஆதலின் ஈண்டு அவ்விருவரையும் அருட் கடல் என்றும் அன்புக் கடல் என்றும் அழைத்தார். அடுத்துப் புண்ணியக் கண் இரண்டு என்றார். 'காகத்திரு கண்ணிற்கு ஒன்றே மணி கலந்தாங்கு' (தி. 8 திருக்கோவையார், 71) என்பதால் காண்டலில் இரு கண்களும் ஒரு நோக்குடையவாகும். பெருமானைக் கண்டு மகிழ்தலிலும், சைவ நன்னெறியைக் காத்தலிலும் இருவரும் ஒரு நோக்கினராதலை அவரவர் தம் வரலாற்றால் அறியத்தகும். அடுத்து, இருட்கடுவுண்டவர் அருளும் உலகம் எல்லாம் ஈன்றாள் தன் திருவருளும் எனக்குறிப்பிடு கின்றார். இறைவி இறைவனின் வேறல்லள். 'அருளது சத்தியாகும் அரன் தனக்கு' (சித்தியார், சூ. 5 பா. 9) என்னும் ஞான நூலும் ஆதலின் பிள்ளையாரும் நாவரசரும் மெய்வடிவில் வேறாகத் தோன்றினும், உணர்வில் ஒன்றாவர் என்பது பெறப்படும். 'இருவரே மெய்வடிவில் ஏந்திழை நல்லார் ஒருவரே தம்மில் உயிர்' என வருவதும் காண்க. இவ்வாற்றான் இம்மூவகை உவமைகளும், உள்ள நிறைகாதலினால் ஒருவர் ஒருவரிற் கலந்து நிற்கும் உண்மையை விளக்கி நிற்பனவாதல் அறியலாம். வரலாற்றில் இவர்கள் இருவரும் மும்முறை கூடுதற்கு ஏற்ப, மூவகை உவமைகள் அமைந்திருப்பதும் அறிந்து மகிழ்தற்குரியதாம்.

Go to top
பண்பயில்வண் டறைசோலை சூழுங் காழிப்
பரமர்திருக் கோபுரத்தைப் பணிந்துள் புக்கு
விண்பணிய ஓங்குபெரு விமானந் தன்னை
வலங்கொண்டு தொழுதுவிழுந் தெழுந்த எல்லைச்
சண்பைவரு பிள்ளையார் அப்பர் உங்கள்
தம்பிரா னாரைநீர் பாடீர் என்னக்
கண்பயிலும் புனல்பொழிய அரசும் வாய்மைக்
கலைபயிலும் மொழிபொழியக் கசிந்து பாடி.

[ 186]


இசை பாடுகின்ற வண்டுகள் ஒலிக்கின்ற சோலை கள் சூழ்ந்த சீகாழியில் இறைவரின் திருக்கோபுரத்தை வணங்கி, உள்ளே புகுந்து, வானமும் பணியத் தக்கவாறு உயர்ந்து விளங்கும் விமானத்தை வலமாக வந்து வணங்கிக் கீழே விழுந்து எழுந்தபோது, சீகாழிப்பதியில் தோன்றிய ஆளுடைய பிள்ளையார் 'அப்பரே! நீவிர் உங்கள் தம்பிரானரைப் பாடுங்கள்' என்று கூற நாவுக்கரசரும் பெருகிய நீர் கண்களில் பொழிய, மெய்ப்பொருளாய திருவருள் நலம் பொருந்திட, மெய்த்திரு மொழிகளை உள்ளம் உருகப் பாடி.

குறிப்புரை:

பெரியபெரு மாட்டியுடன் தோணி மீது
பேணிவீற் றிருந்தருளும் பிரான்முன் நின்று
பரிவுறுசெந் தமிழ்மாலை பத்தி யோடும்
பார்கொண்டு மூடியெனும் பதிகம் போற்றி
அரியவகை புறம்போந்து பிள்ளை யார்தம்
திருமடத்தில் எழுந்தருளி அமுது செய்து
மருவியநண் புறுகேண்மை அற்றை நாள்போல்
வளர்ந்தோங்க உடன்பலநாள் வைகும் நாளில்.

[ 187]


உமையம்மையாருடன் திருத்தோணியில் வீற்றி ருக்கும் தோணியப்பரின் திருமுன்பு நின்று, அன்புகூரும் செந்தமிழ் மாலையாகப் பத்திமை மிகப் 'பார் கொண்டு மூடி' எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடி, அங்கிருந்து நீங்குதற்கரிய வகையால் வெளியில் வந்து, திருஞானசம்பந்தரின் திருமடத்தில் இருந்து அமுது உண்டருளிப் பொருந்திய நண்புடன் கூடிய கேண்மையானது அன்று போலவே என்றும் வளருமாறு உடனாகப் பல நாள்கள் இருந்த காலத்தில்.

குறிப்புரை: இறைவன் திருமுன்பு பாடியருளியது 'பார் கொண்டு மூடி' (தி. 4 ப. 82) எனத் தொடங்கும் திருவிருத்தப் பதிகமாகும்.

அத்தன்மை யினில்அரசும் பிள்ளை யாரும்
அளவளா வியமகிழ்ச்சி அளவி லாத
சித்தநெகிழ்ச் சியினோடு செல்லும் நாளில்
திருநாவுக் கரசர்திரு வுள்ளந் தன்னில்
மைத்தழையும் மணிமிடற்றார் பொன்னி நாட்டு
மன்னியதா னங்களெல்லாம் வணங்கிப் போற்ற
மெய்த்தெழுந்த பெருங்காதல் பிள்ளை யார்க்கு
விளம்புதலும் அவரும்அது மேவி நேர்வார்.

[ 188]


அங்ஙனம் நாவரசரும் ஞானசம்பந்தரும் ஒருவ ருடன் ஒருவர் உரையாடியதால் அடைந்த மகிழ்ச்சி அளவின்றிப் பெருக, மன நெகிழ்ச்சியுடன் செல்லும் நாள்களில், நஞ்சு பொருந்திய அழகான கழுத்தையுடைய சிவபெருமான், காவிரி பாயும் சோழ நாட்டில் நிலை பெற இருந்தருளும் பதிகளை எல்லாம் வணங்கிப் போற்றவேண்டும் எனும் உள்ளத்தெழுந்த பெருங்காதலை நாவரசர் ஞானசம்பந்தருக்குக் கூறுதலும், அவரும் அதனை ஏற்பாராய்.

குறிப்புரை: இவர்கள் இருவரும் இப்பதியிலிருந்த பொழுது அப்பர் பாடிய பிற பதிகங்கள்: 1. 'படையார் மழு' (தி. 4 ப. 83) எனத் தொடங்கும் திருவிருத்தம். (இப்பதிகத்துள் இப்பாடல் ஒன்றே கிடைத்துள்ளது) 2. 'மாதியன்று' (தி. 5 ப. 45) எனத் தொடங்கும் திருக்குறுந்தொகை.

ஆண்டஅர செழுந்தருளக் கோலக் காவை
அவரோடும் சென்றிறைஞ்சி அன்பு கொண்டு
மீண்டருளி னார்அவரும் விடைகொண் டிப்பால்
வேதநா யகர்விரும்பும் பதிக ளான
நீண்டகருப் பறியலூர் புன்கூர் நீடூர்
நீடுதிருக் குறுக்கைதிரு நின்றி யூரும்
காண்தகைய நனிபள்ளி முதலா நண்ணிக்
கண்ணுதலார் கழல்தொழுது வணங்கிச் செல்வார்.

[ 189]


திருநாவுக்கரசர் எழுந்தருளவே அவருடன் சென்று திருக்கோலக்காவைப் பணிந்து அன்பு விடைபெற்று ஞானசம்பந்தர் திரும்பினார். நாவுக்கரசரும் ஞானசம்பந்தரிடம் விடைபெற்றுக் கொண்டு மேலும் மறைமுதல்வரான சிவபெருமான் விரும்பி எழுந்தருளியிருக்கும் பதிகளாய பெருமைமிக்க திருக்கருப் பறியலூர், திருப்புன்கூர், திருநீடுர், திருக்குறுக்கை வீரட்டம், திருநின் றியூர், காணும் தகைமையுடைய திருநனிபள்ளி என்ற இவை முதலான பதிகளைச் சேர்ந்து நெற்றிக்கண் உடையவரின் திருவடிகளை வணங்கி மேற்செல்பவராய்.

குறிப்புரை: திருக்கோலக்காவில் அப்பர் அருளிய பதிகம் கிடைத் திலது. இனி இப்பாடலில் குறிக்கப்பட்ட திருப்பதிகள் ஆறனுள் திருக் கருப்பறியலூரில் அருளிய பதிகம் கிடைத்திலது. அடுத்து இருக்கும் திருப்புன்கூர், திருநீடுர் ஆகிய இரு பதிகளுக்கும் ஒருங்கியைந்தவாறு ஒரு பதிகம் உள்ளது. அது 'பிறவாதே தோன்றிய'(தி. 6 ப. 11) எனத் தொடங்கும் திருத்தாண்டகம் ஆகும். திருக்குறுக்கை வீரட்டத்திற்கு இரு பதிகங்கள் கிடைத்து உள்ளன. 1. 'ஆதியிற் பிரமனார்' (தி. 4 ப. 49)- திருநேரிசை; 2. 'நெடியமால்' (தி. 4 ப. 50) - திருநேரிசை. இவற்றுள் முன்னைய பதிகத்தில் பாடல் தோறும் வரலாறுகள் அமைந்துள்ளன. இரண்டாவது பதிகத்தில் இரண்டே பாடல்கள் உள்ளன. திருநின்றியூரில் அருளிய திருக்குறுந்தொகைப் பதிகம் 'கொடுங்கண் வெண்டலை' (தி. 5 ப. 23) என்பதாம். திருநனிபள்ளியில் அருளிய பதிகம் 'முற்றுணை ஆயினானை' (தி. 4 ப. 70) எனத் தொடங்கும் திருநேரிசையாம். இனி, இப்பாடற்கண் நனிபள்ளி முதலா நண்ணி என வருதலின் வேறு பிற பதிகளும் தொழுது சென்றமை விளங்குகின்றது. அப்பதிகளும் பாடி யருளிய பதிகங்களும்: 1. திருக்குரக்குக்கா: 'மரக்கொக்காம்' (தி. 5 ப. 75) - திருக்குறுந்தொகை. 2. புள்ளிருக்கு வேளூர்: (அ). 'வெள்ளெருக்கு' (தி. 5 ப. 79) - திருக்குறுந்தொகை; (ஆ). 'ஆண்டானை' (தி. 6 ப. 54) - திருத்தாண்டகம். 3. திருவெண்காடு: (அ). 'பண்காட்டி' (தி. 5 ப. 49) - திருக்குறுந்தொகை (ஆ). 'தூண்டுசுடர்' (தி. 6 ப. 35) - திருத்தாண்டகம். 4. திருச்சாய்க்காடு: (அ) 'தோடுலாமலர்' (தி. 4 ப. 65) - திருநேரிசை. (ஆ). 'வானத்து இளமதியும்' (தி. 6 ப. 82) - திருத்தாண்டகம். 5. திருவலம்புரம்: (அ). 'தெண்டிரை' (தி. 4 ப. 55) - திருநேரிசை (ஆ). 'மண்ணளந்த' (தி. 6 ப. 58) - திருத்தாண்டகம்.

மேவுபுனற் பொன்னிஇரு கரையும் சார்ந்து
விடையுயர்த்தார் திருச்செம்பொன் பள்ளி பாடிக்
காவுயரு மயிலாடு துறைநீள் பொன்னிக்
கரைத்துருத்தி வேள்விக்குடி எதிர்கொள் பாடி
பாவுறு செந் தமிழ்மாலை பாடிப் போற்றிப்
பரமர்திருப் பதிபலவும் பணிந்து போந்தே
ஆவுறும்அஞ் சாடுவார் கோடி காவில்
அணைந்துபணிந் தாவடுதண் டுறையைச் சார்ந்தார்.

[ 190]


நீர் இடையறாது பொருந்திய காவிரி ஆற்றின் இரு கரைகளிலும் சேர்ந்து, ஆனேற்றுக் கொடியை உயர்த்திய சிவ பெருமானின் திருச்செம்பொன்பள்ளியினைப் பாடிச் சோலைகள் உயர்ந்து சூழ்ந்த திருமயிலாடுதுறையையும், காவிரியின் இரு கரைகளிலும் உள்ள திருத்துருத்தி - திருவேள்விக்குடியையும், திருஎதிர்கொள்பாடியையும் தொழுது செந்தமிழ்ப் பதிகங்களான பாமாலைகளால் போற்றி, இறைவரின் திருப்பதிகள் பலவற்றையும் பணிந்து சென்று, ஆன் ஐந்தையும் ஆடும் சிவபெருமானின் திருக் கோடிக்காவை அடைந்து, வணங்கிச் சென்று, திருவாவடுதுறையைச் சேர்ந்தார்.

குறிப்புரை: இங்கு முதற்கண் குறிக்கப்பட்ட திருப்பதிகள் ஐந்தாம். இவ்விடங்களில் பாடப்பெற்ற திருப்பதிகங்கள்: 1. திருச்செம்பொன் பள்ளி: இது இக்காலத்துச் செம்பொனார்கோயில் என வழங்கப் பெறுகிறது. (அ). 'ஊனினுள் உயிரை' (தி. 4 ப. 29) - திருநேரிசை. (ஆ) 'கானறாத' (தி. 5 ப. 36) - திருக்குறுந்தொகை. 2. திருமயிலாடுதுறை: 'கொள்ளும் காதல்' (தி. 5 ப. 39) - திருக்குறுந்தொகை. 3+4. திருத்துருத்தியும் திருவேள்விக்குடியும்: இறைவன் பகலில் திருத்துருத்தியிலும் இரவில் வேள்விக்குடியிலும் எழுந்தருளியிருப்பர். இதனால் இவ்விரு திருப்பதிகளையும் இணைத்தே ஞானசம்பந்தரும் சுந்தரரும் பாடியுள்ளனர். நாவரசர் திருத்துருத்தி ஒன்றற்கே பதிகம் பாடியுள்ளார். 'பொருத்திய' (தி. 4 ப. 42) - திருநேரிசை. 5. திருஎதிர்கொள்பாடிக்கு உரிய பதிகம் கிடைத்திலது. இனி, இப்பதிகளோடு 'பரமர் திருப்பதி பலவும் பணிந்து போந்தே' என ஆசிரியர் அருளுவதால், இதுபொழுது பாடிய பதிகள் வேறு பிறவும் உளவாம் எனத் தெரிகிறது. அவையாவன: 1. திருஅன்னியூர் : 'பாறலைத்த' (தி. 5 ப. 8) - திருக்குறுந்தொகை. 2. திருமணஞ்சேரி: 'பட்டநெற்றியர்' (தி. 5 ப. 87) - திருக்குறுந்தொகை.
இப்பாடலில் ஆசிரியர் நிறைவாக இரு பதிகளைக் குறிக்கின் றார். அவை: 1. திருக்கோடிக்கா: (அ). 'நெற்றிமேல்' (தி. 4 ப. 51) - திருநேரிசை. (ஆ). 'சங்குலாம்' (தி. 5 ப. 78) - திருக்குறுந்தொகை. (இ). கண்டலஞ்சேர் (தி. 6 ப. 81) - திருத்தாண்டகம். 2. திருவாவடு துறை: இப்பதியில் அருளிய பதிகங்கள் வரும் பாடலில் குறிக்கப் பெறுகின்றன.

Go to top
ஆவடுதண் டுறையாரை அடைந்துய்ந் தேன்என்
றளவில் திருத் தாண்டகமுன் அருளிச் செய்து
மேவுதிருக் குறுந்தொகைநே ரிசையும் சந்த
விருத்தங்க ளானவையும் வேறு வேறு
பாவலர்செந் தமிழ்த்தொடையால் பள்ளித் தாமம்
பலசாத்தி மிக்கெழுந்த பரிவி னோடும்
பூவலயத் தவர்பரவப் பலநாள் தங்கிப்
புரிவுறுகைத் திருத்தொண்டு போற்றிச் செய்வார்.

[ 191]


'திருவாவடுதுறையில் வீற்றிருக்கும் இறைவரை அடைந்து உய்ந்தேன்' என்ற கருத்துடைய அளவுபடாத திருத் தாண்டகத்தை முதலில் பாடிப், பின் திருக்குறுந்தொகையும், திரு நேரிசையும், சந்த விருத்தங்களும் வெவ்வேறு பாக்களின் தன்மை மிக்க செந்தமிழ் மாலைகளாலாய திருப்பள்ளித் தாமங்கள் பலவற் றையும் சாத்தி, மிகுதியாய் மேன் மேலும் எழுந்த அன்பினோடும் உலகம் போற்றுமாறு பல நாள்கள் அங்குத் தங்கி, இடை விடாது நினைந்து செய்யும் திருத்தொண்டான உழவாரப் பணியையும் போற்றிச் செய்து வந்தார்.

குறிப்புரை: திருவாவடுதுறை: இத்திருப்பதிக்கு நாவரசர் இருமுறை எழுந்தருளியுள்ளார் (தி. 12 பு. 21 பா. 191, 293) இதுபொழுது எழுந்தரு ளுவது முதன் முறையாகும். (அ). 'நம்பனை நால்வேதம்' (தி. 6 ப. 46) - திருத்தாண்டகம் (ஆ). 'நிறைக் கவாலியள்' (தி. 5 ப. 29) - திருக்குறுந் தொகை. (இ). 'மஞ்சனே' (தி. 4 ப. 57) - திருநேரிசை. (ஈ). 'திருவே யென் செல்வமே' (தி. 6 ப. 47) - திருத்தாண்டகம். இவற்றுள் முன்னையதான 'நம்பனை' எனத் தொடங்கும் திருத்தாண்டகம், 'ஆவடு தண்டுறையுள் மேய அரனடியே அடி நாயேன் அடைந்துய்ந்தேனே' என நிறைவு பெறுவதால் இதுவே முதற்கண் பாடப்பட்டதாகும். ஆதலின் ஆசிரி யரும் 'முன்னருளிச் செய்து' என்றார். சந்த விருத்தங்கள் ஆனவையும் 'வேறு வேறு . . . . . . சாத்தி' என ஆசிரியர் குறிப்பதற்கேற்ப உள்ள பதிகங்கள் எவையும் கிடைத்தில.

எறிபுனல்பொன் மணிசிதறுந் திரைநீர்ப் பொன்னி
இடைமருதைச் சென்றெய்தி அன்பி னோடு
மறிவிரவு கரத்தாரை வணங்கி வைகி
வண்டமிழ்ப்பா மாலைபல மகிழச் சாத்திப்
பொறியரவம் புனைந்தாரைத் திருநாகேச் சுரத்துப்
போற்றியருந் தமிழ்மாலை புனைந்து போந்து
செறிவிரைநன் மலர்ச்சோலைப் பழையா றெய்தித்
திருச்சத்தி முற்றத்தைச் சென்று சேர்ந்தார்.

[ 192]


பின், அலை எறியும் நீரால் பொன்னையும் மணிகளையும் கொழிக்கும் அலைகளையுடைய காவிரிக் கரையில் உள்ள திருவிடைமருதூரைச் சென்றடைந்து, மான் கன்றைக் கையில் உடைய இறைவரை அன்பு மிக வணங்கி, அங்கே தங்கி, இசையாலும், பொருண்மையாலும் வளமை மிக்க தமிழ்ப் பதிக மாலை பலவற்றை யும் மகிழ்ந்து பாடிப் போற்றி, புள்ளிகளையுடைய பாம்புகளை அணிந்த இறைவரைத் திருநாகேச்சுரத்தில் வணங்கி அரிய தமிழ் மாலை பாடிச் சென்று, மணம் நிரம்பிய நல்ல மலர்களையுடைய பூஞ்சோலைகள் சூழ்ந்த பழையாறை எனும் திருப்பதியை அடைந்து பின் திருச்சத்திமுற்றத்தை அடைந்தார்.

குறிப்புரை: இப்பாடலில் திருச்சத்திமுற்றத்தை அடைதற்கு முன் குறிக்கப் பெற்ற திருப்பதிகள் மூன்றாம். இவற்றில் அருளிய திருப்பதிகங்கள்: 1. திருவிடைமருதூர்: (அ). 'காடுடை' (தி. 4 ப. 35)- திருநேரிசை. (ஆ). 'பாசம் ஒன்று இலராய்' (தி. 5 ப. 14) - திருக்குறுந்தொகை. (இ). 'பறையின் ஓசையும்' (தி. 5 ப. 15) - திருக்குறுந்தொகை. (ஈ). 'சூலப்படை உடையார்' (தி. 6 ப. 16)- திருத்தாண்டகம். (உ). 'ஆறுசடைக்கணிவர்' (தி. 6 ப. 17) - திருத்தாண்டகம். 2. திருநாகேச்சரம்: (அ). 'கச்சைசேர்' (தி. 4 ப. 66)- திருநேரிசை. (ஆ). 'நல்லர்'(தி. 5 ப. 52) - திருக்குறுந்தொகை. (இ). 'தாயவனை'(தி. 6 ப. 66) - திருத்தாண்டகம். 3. திருப்பழையாறை: இத்திருப்பதிக்கு நாவரசர் இருமுறை எழுந்தருளுகின்றார். (தி. 12 திருநாவுக்கரசர் புராணம், 215) இதுபொழுது பதிகம் அருளப் பெறவில்லை.

சென்று சேர்ந்து திருச்சத்தி
முற்றத் திருந்த சிவக்கொழுந்தைக்
குன்ற மகள்தன் மனக்காதல்
குலவும் பூசை கொண்டருளும்
என்றும் இனிய பெருமானை
இறைஞ்சி இயல்பில் திருப்பணிகள்
முன்றில் அணைந்து செய்துதமிழ்
மொழிமா லைகளும் சாத்துவார்.

[ 193]


சென்றவர், திருச்சத்திமுற்றம் என்ற பதியில் வீற்றிருக்கும் சிவக்கொழுந்தீசரை, மலையரசன் மகளாரான உமை அம்மையாரின் உள்ளத்தில் எழுந்த அன்பால் விளங்கும் பூசனையை என்றும் ஏற்றருளுகின்ற இனியவரான இறைவரைத் தொழுது, திருமுற்றத்தினை அடைந்து, தம் இயல்பாய்ச் செய்துவரும் திருப் பணிகளான உழவாரப் பணிகளைச் செய்து, சொல் மாலைகளையும் சாத்துவாராய்,

குறிப்புரை:

கோவாய் முடுகி என்றெடுத்துக்
கூற்றம் வந்து குமைப்பதன்முன்
பூவார் அடிகள் என்தலைமேற்
பொறித்து வைப்பாய் எனப்புகன்று
நாவார் பதிகம் பாடுதலும்
நாதன் தானும் நல்லூரில்
வாவா என்றே அருள்செய்ய
வணங்கி மகிழ்ந்து வாகீசர்.

[ 194]


'கோவாய் முடுகி' எனத் தொடங்கிக் கூற்றம் வந்து உயிரைக் கொண்டு போதற்கு முன்பு, பூவார்ந்த உம் திருவடியை என் தலைமேற் பொறித்து வைத்தருளுக! என விண்ணப்பிக்கும் நாவில் நிறைந்த திருப்பதிகத்தைப் பாடவும், இறைவரும் 'நீ திருநல்லூருக்கு வா' எனக் கூறியருள, திருநாவுக்கரசரும் மகிழ்ந்து வணங்கி.

குறிப்புரை: இவ்வாறு விண்ணப்பித்த பதிகத்தின் முதற்பாடல்:
கோவாய் முடுகி யடுதிறற் கூற்றங் குமைப்பதன்முன்
பூவா ரடிச்சுவ டென்மேற் பொறித்துவை போகவிடில்
மூவா முழுப்பழி மூடுங்கண் டாய்முழங் குந்தழற்கைத்
தேவா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.
-தி. 4 ப. 96 பா. 1என்பதாம். இப்பாடற் கருத்தையே ஆசிரியர் சேக்கிழார் 'கூற்றம் வந்து குமைப்பதன் முன் பூவாரடிகளென்றலை மேற்பொறித்து வைப்பாய்' எனக் குறித்தருளுகின்றார். பூவார் அடிகள் - மலரனைய திருவடிகள், அடியார்கள் இட்ட மலர்கள் பொருந்திய திருவடிகள் என இருபொருள் பட நின்றது. 'கோவாய் முடுகி' என வழங்கும் இத்திருப்பதிகம் திருச்சத்திமுற்றத்திலும், 'திருவடி என் தலைமேற் வைத்தார்' எனும் குறிப்புடைய பதிகம் திருநல்லூரிலும் இருத்தலின், 'நல்லூருக்கு வா வா' என்று அருளினன் என வரலாற்றை அமைப்பாராயினர் ஆசிரிரியர் சேக்கிழார். வா வா என்ற அடுக்கு விரைவு குறித்து நின்றது.

நன்மைபெரு கருள்நெறியே
வந்தணைந்து நல்லூரின்
மன்னுதிருத் தொண்டனார்
வணங்கிமகிழ்ந் தெழும்பொழுதில்
உன்னுடைய நினைப்பதனை
முடிக்கின்றோம் என்றவர்தம்
சென்னிமிசைப் பாதமலர்
சூட்டினான் சிவபெருமான்.

[ 195]


உலகுயிர்களுக்கெல்லாம் நன்மை பெருகுதற் கேதுவாய திருவருளின் வழியே நல்லூருக்கு வந்து சேர்ந்து, நிலையான திருத்தொண்டை ஆற்றிவரும் நாவரசரும் வணங்கி மகிழ்ந்து எழும் பொழுதில் சிவபெருமானாரும், 'உம் நினைவை யாம் முடிக்கின்றோம்' என்று அருள் செய்து, திருநாவுக்கரசரின் தலைமீது தம் திருவடிகளைச் சூட்டியருளினார்.
குறிப்புரை:

Go to top
நனைந்தனைய திருவடிஎன்
தலைமேல்வைத் தார்என்று
புனைந்ததிருத் தாண்டகத்தால்
போற்றிசைத்துப் புனிதர்அருள்
நினைந்துருகி விழுந்தெழுந்து
நிறைந்துமலர்ந் தொழியாத
தனம்பெரிதும் பெற்றுவந்த
வறியோன்போல் மனம்தழைத்தார்.

[ 196]


'நனைந்தனைய திருவடி என் தலைமேல் வைத்தார்' எனும் பொருள் அமைந்த திருத்தாண்டகத்தால் போற்றித் துதித்துப், புனிதரான இறைவரின் திருவருளை எண்ணி மனம் உருகி, நிலத்தில் விழுந்து வணங்கி எழுந்து, உள்ள நிறைவும் மலர்ச்சியும் பெற்றுக், குறையாத செல்வத்தைப் பெரிதும் பெற்றுக் களிக்கும் வறியவன் போல மனம் மகிழ்ந்தார்.

குறிப்புரை: 'நனைந்தனைய திருவடி என்தலைமேல் வைத்தார்' (தி. 6 ப. 14 பா. 1) எனும் குறிப்புடைய பாடல், நினைந்துருகும் அடி யாரை எனத் தொடங்கும் திருப்பாடலாகும், இத்தொடக்கத் திருத் தாண்டகத்தில் வரும் பதினொரு பாடல்களிலும் திருவடிச் சிறப்பும் அதனைத் தம் தலைமேல் வைத்த கருணைக்குறிப்பும் காணக்கிடக் கின்றன. தம் இல்லத்திற்கு வந்தவர் வாகீசர் என அறிந்து வணங்கிய அப்பூதிஅடிகளார், தம் மகிழ்ச்சிப் பெருக்கிற்கு 'அற்றவர்கள் அருநிதி யம் பெற்றார்போல்' (தி. 12 பு. 2பா. 18) எனப் பின்னர்ச் சேக்கிழார் அருளுவதும் இங்கு நினைவு கூரத் தக்கதாம்.

நாவுக்கு மன்னர்திரு
நல்லூரில் நம்பர்பால்
மேவுற்ற திருப்பணிகள்
மேவுறநா ளும்செய்து
பாவுற்ற தமிழ்மாலை
பலபாடிப் பணிந்தேத்தித்
தேவுற்ற திருத்தொண்டு
செய்தொழுகிச் செல்லுநாள்.

[ 197]


நாவரசர், திருநல்லூரில் வீற்றிருக்கும் சிவ பெருமானிடம் மனம் பொருந்தத் திருப்பணிகள் பலவற்றை நாளும் செய்தும், தமிழ்மாலை பலவற்றையும் பாடி வணங்கிப் போற்றியும், தெய்வத் திருத்தொண்டைச் செய்துவரும் நாள்களில்,

குறிப்புரை: தமிழ்மாலை பல பாடிய குறிப்பு இதனால் பெறப்படு கின்றது எனினும் 'அட்டுமின்' (தி. 4 ப. 97)எனத் தொடங்கும் திருவிருத்தப் பதிகம் ஒன்றே இதுபொழுது கிடைக்கப் பெற்றுள்ளது.

கருகாவூர் முதலாகக்
கண்ணுதலோன் அமர்ந்தருளும்
திருவாவூர் திருப்பாலைத்
துறைபிறவும் சென்றிறைஞ்சிப்
பெருகார்வத் திருத்தொண்டு
செய்துபெருந் திருநல்லூர்
ஒருகாலும் பிரியாதே
உள்ளுருகிப் பணிகின்றார்.

[ 198]


நெற்றியில் திருவிழியையுடைய சிவபெருமான் வீற்றிருக்கின்ற திருக்கருகாவூர் முதலாகவுள்ள திருஆவூர், திருப் பாலைத்துறை முதலாய பிற பதிகளுக்கும் சென்று வணங்கி, ஆர்வம் பெருகும் திருத்தொண்டுகளைச் செய்து, திருநல்லூரை ஒரு காலமும் பிரியாது உள்ளம் நெகிழ்ந்துருகி அங்குத் தங்கியிருப்பவர்.

குறிப்புரை: இப்பாடற்கண் குறிக்கப் பெற்ற திருப்பதிகளுள் திரு ஆவூருக்கு உரிய பதிகம் கிடைத்திலது. ஏனைய இரண்டாம்: 1. திருக் கருகாவூர்: 'குருகாம்' (தி. 6 ப. 15) - திருத்தாண்டகம். 2. திருப்பாலைத் துறை: 'நீலமாமணி' (தி. 5 ப. 51) - திருக்குறுந்தொகை.
இனிப் 'பிறவும் சென்றிறைஞ்சி' என்பதால் குறிக்கத்தகும் பதிகள் மூன்றாம்: 1. திருஅவளிவண நல்லூர்: - 'தோற்றினான்' (தி. 4 . 59)- திரு நேரிசை. 2. திருவெண்ணியூர்: (அ). 'முத்தினை' (தி. 5 ப. 17) - திருக்குறுந்தொகை. (ஆ). 'தொண்டிலங்கும்' (தி. 6 ப. 59) - திருக்குறுந் தொகை. 3. திருப்பூவனூர்: 'பூவனூர்ப் புனிதன்' (தி. 5 ப. 65) - திருக்குறுந்தொகை.

ஆளுடைய நாயகன்தன்
அருள்பெற்றங் ககன்றுபோய்
வாளைபாய் புனற்பழனத்
திருப்பழன மருங்கணைந்து
காளவிடம் உண்டிருண்ட
கண்டர்பணிக் கலன்பூண்டு
நீள்இரவில் ஆடுவார்
கழல்வணங்க நேர்பெற்றார்.

[ 199]


தம்மை ஆளாகவுடைய இறைவரின் திருவருளைப் பெற்று, அங்கிருந்தும் புறப்பட்டுச் சென்று, வாளை மீன்கள் பாயும் நீர்வளமுடைய திருப்பழனத்தைச் சேர்ந்து, திருநீலகண்டரும், பாம்புகளை அணிந்து ஊழிக் காலத்தில் ஆடுபவருமான இறைவரின் திருவடிகளை நேரே வணங்கும் பேற்றை அடைந்தார்.

குறிப்புரை: இங்கு அருளிய திருப்பதிகங்கள் ஐந்தாம்.
1. 'ஆடினார் ஒருவர்' (தி. 4 ப. 36) - திருநேரிசை. 2. 'மேவித்து நின்று' (தி. 4 ப. 87) - திருவிருத்தம். 3. 'அருவனாய்' (தி. 5 ப. 35) - திருக்குறுந்தொகை. 4. 'அலையார் கடல்' (தி. 6 ப. 36) - திருத்தாண் டகம். 5. பழந்தக்க ராகத்தில் அமைந்த 'சொன்மாலை' (தி. 4 ப. 12) என்ற பதிகம் திங்களூருக்குச் சென்று திரும்பியபின்னர்ப் பாடப் பெற்றதாம்.

அப்பதியைச் சூழ்ந்ததிருப்
பதியில்அர னார்மகிழும்
ஒப்பரிய தானங்கள்
உள்ளுருகிப் பணிந்தணைவார்
மெய்ப்பொருள்தேர்
நாவினுக்கு வேந்தர்தாம் மேவினார்
செப்பருஞ்சீர் அப்பூதி
அடிகளூர் திங்களூர்.

[ 200]


திருப்பழனத்தைச் சார்ந்துள்ள திருப்பதிகளில் சிவபெருமான் மகிழ்ந்து வீற்றிருக்கும் ஒப்பற்ற திருக்கோயில்கள் பல வற்றையும் உள்ளம் உருகிப் பணிந்து செல்லும் மெய்ப் பொருளைத் தேர்ந்து தெளிந்தவரான நாவரசர், சொலற்கரிய சிறப்புடைய அப்பூதி அடிகளார் வாழ்ந்திருக்கும் திங்களூரை அடைந்தார்.

குறிப்புரை: இங்குக் குறிக்கப் பெறும் கோயில்கள் பல எவையென அறியக் கூடவில்லை.

Go to top
அந்தணரின் மேம்பட்ட
அப்பூதி அடிகளார்
தந்தனய ருடன்சாலை
கூவல்குளந் தருதண்ணீர்ப்
பந்தர்பல ஆண்டஅர
செனும்பெயரால் பண்ணினமை
வந்தணைந்த வாகீசர்
கேட்டவர்தம் மனைநண்ண.

[ 201]


அந்தணர்களுக்கெல்லாம் மேம்பட்ட அப்பூதி அடிகளார், தம் மைந்தர்களுடன், சாலைகள், கிணறு, குளம், மரம், தண்ணீர்ப்பந்தல் முதலான பல அறங்களையும், 'ஆண்ட அரசு' என்னும் திருப்பெயரால் அமைத்தமையை, அங்கு வந்து சேர்ந்த நாவரசர் கண்டும் கேட்டும் அறிந்து அவரது திருமனையை அடைய.
குறிப்புரை: அந்தணரின் மேம்பட்ட அப்பூதி அடிகளார் என்ற அளவில் ஈண்டுக் கூறிய ஆசிரியர், அவர்தம் மேம்பாடுகளையும் தொண்டுகளையும் அவர் வரலாற்றில் பின் அறிய வைத்துள்ளார்.

மற்றவரும் மனமகிழ்ந்து
மனைவியார் மைந்தர்பெருஞ்
சுற்றமுடன் களிகூரத்
தொழுதெழுந்து சூழ்ந்துமொழிக்
கொற்றவரை அமுதுசெயக்
குறைகொள்வார் இறைகொள்ளப்
பெற்றபெருந் தவத்தொண்டர்
திருவுள்ளம் பெறப்பெற்றார்.

[ 202]


அப்பூதி அடிகளாரும் உள்ளம் மகிழ்ந்து, மனைவி, மைந்தர், முதலாய பெருஞ்சுற்றத்துடன் மகிழ்ச்சி மீதூரத் தொழுது எழுந்து, சூழ வந்து, நாவுக்கரசரைத் தம் திருமனையில் அமுது செய்யுமாறு வேண்டிக் கொள்வாராய், அவர்தம் இசைவை வேண்டி நிற்க, தாமே வந்து அரிதில் கிடைக்கப் பெற்ற பெரிய தவமுடையரான நாவரசரின் இசைவைப் பெறும் பேற்றை அடைந்தார்.
குறிப்புரை: இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

காண்டகைமை இன்றியும்முன்
கலந்தபெருங் கேண்மையினார்
பூண்டபெருங் காதலுடன்
போனகமுங் கறியமுதும்
வேண்டுவன வெவ்வேறு
விதங்கள்பெற விருப்பினால்
ஆண்டஅர சமுதுசெயத்
திருவமுதாம் படிஅமைத்து.

[ 203]


இதுகாறும் நேரிடையாய் முன் காணும் தன்மை இல்லாதிருந்தும், உணர்ச்சிவயத்தால் ஒன்றுபட்ட பெருங்காதலுடன், திருவமுதும், கறியமுது வகைகளும் முதலாக வேண்டுவனவற்றை வெவ்வேறு வகையில் விருப்பத்தால், ஆண்ட அரசுகள் உண்பதற் குரிய வகையில் உணவாகும்படியாய்ச் சமைத்து,

குறிப்புரை: புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும். -திருக்குறள், 785
என்பர் திருவள்ளுவர். அவ்வகையில் அப்பூதியார் நாவரசரைக் கண் டும், கலந்தும் மகிழார் ஆயினும் உணர்ச்சி வயத்தால் ஒன்று பட்ட வராய் அவர்மீது பத்திமை கொண்டிருந்தார். முன் காண்தகைமை யின்றியும் என மாறிக் கூட்டுக. சங்ககாலப் புலவர் பிசிராந்தையார், கோப்பெருஞ்சோழர் மேல் வைத்த அன்பு ஈண்டு நினைவுகூரத் தக்கதாம்.

திருநாவுக் கரசமுது
செய்தருள மற்றவர்தம்
பெருநாமஞ் சாத்தியஅப்
பிள்ளைதனை அழைத்தன்பு
தருஞானத் திருமறையோர்
தண்டலையின் வண்கதலிக்
குருநாளக் குருத்தரிந்து
கொண்டுவரத் தனிவிட்டார்.

[ 204]


அன்பு பொருந்திய ஞானத் திருமறையவரான அப்பூதி அடிகள், நாவுக்கரசர் அமுது செய்தருள்வதற்காக, அவர்தம் திருப்பெயர் சூட்டப் பெற்ற மூத்த பிள்ளையை அழைத்துத் தோட் டத்தில் வளம் வாய்ந்த வாழையின் நிறம் பொருந்திய தண்டினை யுடைய குருத்தை அரிந்து கொண்டு வருமாறு பணிப்பவர், உடன் எவரையும் அனுப்பாது தனித்துச் சென்று வருமாறு அனுப்பினார்.
குறிப்புரை: இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

ஆங்கவனும் விரைந்தெய்தி
அம்மருங்கு தாழாதே
பூங்கதலிக் குருத்தரியப்
புகும்அளவில் ஒருநாகம்
தீங்கிழைக்க அதுபேணான்
திருவமுது செய்தருள
ஓங்குகத லிக்குருத்துக்
கொண்டொல்லை வந்தணைந்தான்.

[ 205]


அதுபொழுது மூத்த திருநாவுக்கரசான அம் மகனும் விரைவாகத் தோட்டத்திற்குச் சென்று, அச்செயலில் காலம் தாழ்த்தாமல் அழகான வாழைக் குருத்தை அரியப்புகும் அளவில், பாம்பு ஒன்று தீண்டிட, அதைப் பொருட்படுத்தாது, அரசர் உணவு உண்பதற்காக அரிந்த வாழைக் குருத்தைக் கொண்டு, விரைவில் வந்து சேர்ந்தான்.

குறிப்புரை:

Go to top
தீயவிடந் தலைக்கொள்ளத்
தெருமந்து செழுங்குருத்தைத்
தாயர்கரத் தினில்நீட்டித்
தளர்ந்துதனைத் தழல்நாகம்
மேயபடி உரைசெய்யான்
விழக்கண்டு கெட்டொழிந்தேம்
தூயவரிங் கமுதுசெயத்
தொடங்கார்என் றதுஒளித்தார்.

[ 206]


அங்ஙனம் விரைவாக வந்த அம்மைந்தன் தீய நஞ்சு தன் தலைக்கேற மயங்கிச் செழுமையான குருத்தைத் தன் தாயாரின் கையில் தந்து, தளர்ந்து, தன்னைத் தீயனைய பாம்பு தீண்டிய செய்தியைக் கூறாதவனாய்க் கீழே விழுந்தான். அதனைத் தாயாரும், தந்தையாரும் கண்டு, 'கெட்டொழிந்தோம்! புனிதரான நாவுக்கரசர் இதனால் இங்கு அமுது செய்யத் தொடங்கார்!' என்று மனத்தில் எண்ணிப் பாம்பு தீண்டிய செய்தியை மறைத்தவராய்,

குறிப்புரை:

தம்புதல்வன் சவம்மறைத்துத்
தடுமாற்றம் இலராகி
எம்பெருமான் அமுதுசெய
வேண்டுமென வந்திறைஞ்ச
உம்பர்பிரான் திருத்தொண்டர்
உள்ளத்தில் தடுமாற்றம்
நம்பர்திரு வருளாலே
அறிந்தருளி நவைதீர்ப்பார்.

[ 207]


தம் மைந்தனின் சடலத்தை மறைத்து அதனால், எவ்வித மனத் தடுமாற்றமும் இல்லாதவராய், நாவுக்கரசரிடம் வந்து 'எம்பெருமானே! அமுது உண்டருள வேண்டும்' என வணங்கிச் சொல்ல, நாவரசரும், திருவருளால் தேவர் தம் தலைவரான சிவ பெருமானின் தொண்டரான அப்பூதியடிகளாரின் திருவுள்ளத்தில் ஒரு தடுமாற்றம் இருப்பதை அறிந்து, அத்துன்பத்தை நீக்குவாராய்.
குறிப்புரை:

அன்றவர்கள் மறைத்ததனுக்
களவிறந்த கருணையராய்க்
கொன்றைநறுஞ் சடையார்தங்
கோயிலின்முன் கொணர்வித்தே
ஒன்றுகொலாம் எனப்பதிகம்
எடுத்துடையான் சீர்பாடப்
பின்றைவிடம் போய்நீங்கிப்
பிள்ளையுணர்ந் தெழுந்திருந்தான்.

[ 208]


அன்று அவர்கள் இவ்வாறு தம் மைந்தனின் இறந்த உடலை மறைத்துச் செய்த அன்பின் திறத்துக்கு அளவற்ற கருணை உடையவராய், அச்சடலத்தைக் கொன்றை மலர்மாலையைச் சூடிய மணமுடைய திருச்சடையாரின் திருக்கோயில் முன்பு கொணரச் செய்து, 'ஒன்றுகொலாம்' எனத் தொடங்கிய திருப்பதிகத்தில் சிவபெருமானின் திருவருளைப் பாடப், பின்னர் வந்து தங்கிய நஞ்சானது நீங்கிப்போகவே, அம்மகன் உறக்கத்தினின்றும் விழித்து எழுந்தவன் போன்று எழுந்திருந்தான்,

குறிப்புரை: 'ஒன்றுகொலாம்' (தி. 4 ப. 18) எனத் தொடங்கும் இத்திருப்பதிகம் ஒன்று, இரண்டு, மூன்று எனப் பத்து வரை அடுக்கி நிற்கும் அழகும் பெருமானின் திருவருட் செயலைப் பலபட எடுத் துரைக்கும் அருமையும் உடையதாம். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

அருந்தனயன் உயிர்பெற்ற
அதுகண்டும் அமுதுசெயா
திருந்ததற்குத் தளர்வெய்தி
இடருழந்தார் துயர்நீங்க
வருந்துமவர் மனைப்புகுந்து
வாகீசத் திருமுனிவர்
விருந்தமுது செய்தருளி
விருப்பினுடன் மேவுநாள்.

[ 209]


தம் அரிய மகன் உயிர் பெற்று எழுந்த அதனைப் பார்த்தும் தாம் அமுது உண்ணாமல் தாழ்த்து இருக்க நேர்ந்தமைக்கு உள்ளம் தளர்ந்து வருந்தும் அப்பூதியார், அவர்தம் மனைவியார் முதலியவரின் துன்பம் நீங்கும் பொருட்டு, அவர்தம் இல்லத்திற்கு வந்து, நாவுக்கரசரான முனிவர், அவர்கள் அன்புடனே அளித்த விருந்து அமுதை உண்டருளி அவர்களுடன் விருப்புடன் தங்கி யிருந்தார். அந்நாள்களில்.

குறிப்புரை:

திங்களூர் தனில்நின்றும்
திருமறையோர் பின்செல்லப்
பைங்கண்விடைத் தனிப்பாகர்
திருப்பழனப் பதிபுகுந்து
தங்குபெருங் காதலொடுந்
தம்பெருமான் கழல்சார்ந்து
பொங்கியஅன் பொடுவணங்கி
முன்னின்று போற்றிசைப்பார்.

[ 210]


அப்பூதியார் திங்களூரினின்றும் தம்மைப் பின் பற்றி வரப், பசுமையான கண்களையுடைய ஆனேற்றை ஊர்தியாக உடைய ஒப்பற்ற சிவபெருமானின் திருப்பழனப் பதியுள் புகுந்து, நாவுக்கரசர் பெருங்காதலுடன் தம் பெருமானின் திருவடிகளைச் சார்ந்து, மீதூர்ந்த அன்புடன் வணங்கித் திருமுன்பு நின்று வணங்கியவராய்.

குறிப்புரை:

Go to top
புடைமாலை மதிக்கண்ணிப்
புரிசடையார் பொற்கழற்கீழ்
அடைமாலைச் சீலமுடை
அப்பூதி அடிகள்தமை
நடைமாணச் சிறப்பித்து
நன்மைபுரி தீந்தமிழின்
தொடைமாலைத் திருப்பதிகச்
சொல்மாலை பாடினார்.

[ 211]


மாலைக்காலத்தில் தோன்றும் பிறைமதியின் மாலையை ஒரு மருங்கில் கொண்ட சடையையுடைய இறைவரின் அழகிய திருவடிகளின் கீழ், அடைதற்குரிய தன்மையாகும் பெரும் பேற்றினையுடைய அப்பூதியடிகளாரின் நாள் ஒழுக்கத்தை (வேள்வி செய்து வரும் பாங்கினை) உயர்வாகப் பாராட்டி, நலம் மிகுந்த இனிய தமிழின் மாலையான திருப்பதிகச் சொன் மாலையைப் பாடினார்.

குறிப்புரை: இத்திருப்பதிகம் 'சொல் மாலை பயில்கின்ற' (தி. 4 ப. 12) எனத் தொடங்கும் பழந்தக்கராகப் பதிகமாகும். இப்பதிகத்தில் பத்தாவது பாடலில்,
'அஞ்சிப் போய்க் கலிமெலிய வழலோம்பு மப்பூதி
குஞ்சிப்பூ வாய்நின்ற சேவடியாய் கோடியையே. '
(தி. 4 ப. 12 பா. 10) என வரும் பகுதியை நினைவு கூர்ந்து, 'அடைமாலைச் சீலமுடை அப்பூதியடிகள் தமை நடைமாணச் சிறப்பித்து' என ஆசி ரியர் கூறுகின்றார். அடைமாலைச் சீலம் - அடைதற்குரிய இயல்பாகிய சீலம். நடைமாணச் சிறப்பித்து - நாள்தொறும் மேற்கொண்டு வரும் ஒழுக்கத்தைச் சிறப்பித்து. இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

எழும்பணியும் இளம்பிறையும்
அணிந்தவரை எம்மருங்குந்
தொழும்பணிமேற் கொண்டருளித்
திருச்சோற்றுத் துறைமுதலாத்
தழும்புறுகேண் மையில்நண்ணித்
தானங்கள் பலபாடிச்
செழும்பழனத் திறைகோயில்
திருத்தொண்டு செய்திருந்தார்.

[ 212]


எழுகின்ற படத்தையுடைய பாம்புகளையும் இளம் பிறையையும் அணிந்த சிவபெருமானை, எங்கும் எல்லாப் பதிக ளிலும் வணங்கும் பணியைத் தலைமேற் கொண்டு, திருச்சோற்றுத் துறை முதலான பதிகளை அடைந்து, அவ்வவ்விடத்தும் உள்ள கோயில்கள் பலவற்றையும் பாடி வணங்கிச், செழுமையான திருப் பழனத்தை அடைந்து, அங்கு இறைவரின் திருக்கோயிலில் செயத்தக்க திருத்தொண்டுகளைச் செய்து வந்தார்.

குறிப்புரை: திருச்சோற்றுத்துறையில் அருளிய பதிகங்கள்: 1. 'பொய் விரா' (தி. 4 ப. 41) - திருநேரிசை. 2. 'காலை எழுந்து' (தி. 4 ப. 85) - திருவிருத்தம். 3. 'கொல்லை ஏற்றினர்' (தி. 5 ப. 33) - திருக்குறுந்தொகை. 4. 'மூத்தவனாய்' (தி. 6 ப. 44) - திருத்தாண்டகம் . இனி, 'தானங்கள் பலபாடி' என்பதால் குறிக்கத் தகும் பதிகள் திருக்கண்டியூர், திருவேதிகுடி, திருச் சக்கரப்பள்ளி, திருவாலந்துறை ஆகலாம். 1. திருக்கண்டியூர், 'வானவர் தானவர்' (தி. 4 ப. 93) - திருவிருத்தம். 2. திருவேதிகுடி 'கையது காலெரி' (தி. 4 ப. 90) - திருவிருத்தம். ஏனைய இருபதிகளுக்குத் திருப்பதிகங்கள் இதுபொழுது கிடைத்தில.

சாலநாள் அங்கமர்ந்து
தந்தலைமேல் தாள்வைத்த
ஆலமார் மணிமிடற்றார்
அணிமலர்ச்சே வடிநினைந்து
சேலுலாம் புனற்பொன்னித்
தென்கரையே றிச்சென்று
கோலநீள் மணிமாடத்
திருநல்லூர் குறுகினார்.

[ 213]


பலநாள்கள் அப்பழனத்தில் தங்கியிருந்து, தம்முடியின் மீது திருவடி சூட்டிய திருநீலகண்டரின் அழகிய மலர்ச் சேவடிகளை எண்ணியவாறு, சேல்மீன்கள் உலவும் நீர் நிறைந்த காவிரியின் தென்கரை வழியே சென்று, அழகு மிக்க நீண்ட மாடக் கோயிலான திருநல்லூரை நாவுக்கரசர் அடைந்தார்.
குறிப்புரை:

அங்கணைந்து தம்பெருமான்
அடிவணங்கி ஆராது
பொங்கியஅன் பொடுதிளைத்துப்
போற்றிசைத்துப் பணிசெயுநாள்
தங்குபெருங் காதலினால்
தாமரைமேல் விரிஞ்சனொடு
செங்கண்மால் அறிவரியார்
திருவாரூர் தொழநினைந்தார்.

[ 214]


அங்குச் சேர்ந்து தம் இறைவரின் திருவடிகளை வணங்கி, மீதூர்ந்த அன்புடன் திளைத்துப் போற்றித் திருப்பணி செய்து வந்தார். அந்நாளில், ஓங்கிய பெருங்காதலால், தாமரையில் இருக்கும் அயனும் சிவந்த கண்களையுடைய திருமாலும் அறிவதற்கரிய சிவ பெருமானின் திருவாரூரைத் தொழுவதற்குத் திருவுளம் கொண்டார்.

குறிப்புரை: 'அன்பொடு திளைத்துப் போற்றிசைத்து' என்பதால் இது பொழுது பாடிய பதிகங்கள் பலவாகலாம் எனினும், இதுபொழுது எவையும் கிடைத்தில.

நல்லூரில் நம்பரருள்
பெற்றுப்போய்ப் பழையாறை
பல்லூர்வெண் தலைக்கரத்தார்
பயிலுமிடம் பலபணிந்து
சொல்லூர்வண் டமிழ்பாடி
வலஞ்சுழியைத் தொழுதேத்தி
அல்லூர்வெண் பிறையணிந்தார்
திருக்குடமூக் கணைந்திறைஞ்சி.

[ 215]


திருநல்லூர் இறைவரிடம் அருள் விடை பெற்றுக் கொண்டு, பழையாறை முதலாக உள்ள பல ஊர்களுக்கும் சென்று, வெண்மையான தலையோட்டைக் கையில் கொண்ட இறைவர் எழுந்தருளியிருக்கும் பல கோயில்களையும் வணங்கி, நல்ல சொற்கள் நிரம்பிய பாக்களைப் பாடி, அதன்பின் திருவலஞ்சுழியை அடைந்து தொழுது ஏத்திச் சென்று, மாலையில் தோன்றும் வெண்பிறையைச் சூடிய இறைவர் எழுந்தருளிய திருக்குடமூக்கினை அணைந்து பணிந்து.

குறிப்புரை: பழையாறையில் இது பொழுது பாடிய பதிகம் கிடைத் திலது. 1. திருவலஞ்சுழி (அ) 'அலையார்' (தி. 6 ப. 72) - திருத்தாண் டகம். (ஆ) 'ஓதமார்' (தி. 5 ப. 66) - திருக்குறுந்தொகை. 2. திருவலஞ் சுழியும் திருக்கொட்டையூரும் - 'கருமணிபோல்' (தி. 6 ப. 73) - திருத் தாண்டகம். 3. திருக்குட மூக்கு - 'பூவணத்தவன்' (தி. 5 ப. 22) - திருக் குறுந்தொகை. 4. குடந்தைக் கீழ்க்கோட்டம் - 'சொல்மலிந்த'(தி. 6 ப. 75) - திருத்தாண்டகம்.

Go to top
நாலூர்தென் திருச்சேறை
குடவாயில் நறையூர்சேர்
பாலூரும் இன்மொழியாள்
பாகனார் கழல்பரவி
மேலூர்தி விடைக்கொடியார்
மேவுமிடம் பலபாடிச்
சேலூர்தண் பணைசூழ்ந்த
தென்திருவாஞ் சியம்அணைந்தார்.

[ 216]


திருநாலூரும், அழகான திருச்சேறையும் திருக் குடவாயிலும், திருநறையூரும் என்ற இத்திருப்பதிகளில் எல்லாம் வீற்றிருக்கின்ற பால்போன்ற இனிய சொற்களையுடைய உமையம் மையாரை ஒரு கூற்றில் கொண்ட இறைவரின் திருவடிகளைப் பணிந்து போற்றிச் சென்று, விடையை ஊர்தியாகவும் கொடியாகவும் கொண்ட இறைவர் வீற்றிருக்கும் பல இடங்களையும் பாடிச் சென்று, சேல் மீன்கள் உலாவும் தண்ணிய வயல்கள் சூழ்ந்த அழகான திருவாஞ்சியத்தை அடைந்தார்.

குறிப்புரை: முதற்கண் குறிக்கப்பட்டிருக்கும் நான்கு திருப்பதிகளுள் திருச்சேறைக்கு மட்டுமே பதிகம் கிடைத்துள்ளது. 'பெருந்திரு' (தி. 4 ப. 73)- திருநேரிசை. 'பூரியாவரும்' (தி. 5 ப. 77) - திருக்குறுந்தொகை 'விடைக்கொடியார் மேவுமிடம் பலபாடி' என்பதால், கடுவாய்க் கரைப்புத்தூர் என்ற பதியை இங்குக் கொள்ளலாம். பதிகம்: 'ஒருத் தனை' - திருக்குறுந்தொகை. திருநாலூர் மயானம், பேணு பெருந்துறை முதலிய பதிகளும் ஆகலாம் என்பர் சிவக்கவிமணியார் (பெரிய. பு. உரை). இதுபொழுது பதிகங்கள் எவையும் கிடைத்தில. திருவாஞ்சி யத்தை அணைந்தார் என்பதால், கிடைத்துள்ள பதிகம் பின்னர்ப் போற்றிப் பாடியதாம். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பெருவாச மலர்ச்சோலைப்
பெருவேளூர் பணிந்தேத்தி
முருகாரும் மலர்க்கொன்றை
முதல்வனார் பதிபிறவும்
திருவாரும் விளமருடன்
சென்றிறைஞ்சி வாகீசர்
மருவாரூர் எரித்தவர்தந்
திருவாரூர் வந்தடைந்தார்.

[ 217]


நாவரசர் நறுமணம் பொருந்திய பூஞ்சோலை கள் சூழ்ந்த திருப்பெருவேளூரைப் போற்றி, வாசனையுடைய கொன்றை மலர்களை அணிந்த இறைவரின் பிற பதிகளையும், திருவிளமரையும் சென்று வணங்கிப், பகைவரின் முப்புரங்களையும் எரித்த சிவபெருமான் வீற்றிருக்கும் திருவாரூருக்கு வந்து சேர்ந்தார்.

குறிப்புரை: 1. திருப்பெருவேளூர் - 'மறையணிநாவினானை' (தி. 4 ப. 60)- திருநேரிசை. 2. திருவிளமர் - இப்பதிக்குரிய பதிகம் கிடைத்திலது. பிற பதிகள் என்பன திருக்கரவீரம் முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார் (பெரிய. பு. உரை). பதிகம் கிடைத்திலது.

ஆண்டஅர செழுந்தருள
ஆரூரில் அன்பர்கள்தாம்
நீண்டசடை முடியார்பால்
நிறைந்தஅருள் பெற்றுடையார்
காண்டகுமா ளிகைமாடங்
கவின்சிறந்தோங் கிடஎங்குஞ்
சேண்திகழ்வீ திகள்பொலியத்
திருமலிமங் கலஞ்செய்தார்.

[ 218]


நாவரசர் எழுந்தருள, அதனை அறிந்த திருவா ரூரில் இருந்த அடியவர்கள் பலரும் நீண்ட சடையையுடைய இறைவ ரின் நிறைந்த திருவருளைப் பெற்றவர்களாதலால், காண்பதற்கு இனிய மாளிகைகளையும் மாடங்களையும் முன்னைவிட அழகு சிறக்க அணிசெய்து, அவ்வழகு தொலைவிலும் விளங்குமாறு வீதிகளை விளக்கமுறச் செய்து திருவுடைய மங்கல அணிகளைச் செய்தனர்.
குறிப்புரை: திருவாரூரில் பிறந்த அடியவர்கள் இறைவனுடைய திருவருளைப் பெற்றவர்களாதலைத் 'திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்' (தி. 7 ப. 39 பா. 10) என்னும் திருவாக்கால் அறியலாம்.

வல்அமண் குண்டர்தம் மாயை
கடந்து மறிகடலில்
கல்லே மிதப்பாகப் போந்தவர்
வந்தார் எனுங்களிப்பால்
எல்லையில் தொண்டர் எயிற்புறஞ்
சென்றெதிர் கொண்டபோது
சொல்லின் அரசர் வணங்கித்
தொழுதுரை செய்தணைவார்.

[ 219]


கொடிய மனவன்மையுடைய சமணர்கள் செய்த மாயையைக் கடந்து, அலைமறிக்கும் கடலில் கல்லையே மிதவை யாகக் கொண்டு கரை ஏறி வந்தவரான பெரியவர் வந்தார் என்ற மகிழ்ச்சியால், அளவற்ற தொண்டர்கள், நகரமதிலின் வெளியே வந்து எதிர்கொண்டபோது, நாவுக்கரசர் அத்தொண்டர்களைத் தொழுது, போற்றி அணைபவராய்,

குறிப்புரை:

பற்றொன் றிலாவரும் பாதகர்
ஆகும் அமணர்தம்பால்
உற்ற பிணியொழிந் துய்யப்போந்
தேன்பெற லாவதொன்றே
புற்றிடங் கொண்டான்தன் தொண்டர்க்குத்
தொண்டராம் புண்ணியமென்
றற்ற உணர்வொடும் ஆரூர்த்
திருவீதி உள்ளணைந்தார்.

[ 220]


புற்றைத்தமக்கு இடனாகக் கொண்டு வீற்றிருக்கும் வன்மீக நாதரின் தொண்டர்களுக்குத் தொண்டராகும் புண்ணிய மாவது, ஒன்றாலும் பற்றத் தகாதவர்களாய்ப் பெரும் பாதகர்களான அமணர்களிடத்திலிருந்துப் பொருந்தியதான நோய் நீங்கி உய்யும் பொருட்டாக வந்து புகுந்தயானும், பெறத்தக்கது ஒன்று ஆகுமோ? என்று சொல்லித் தம் செயல் அற்றவராய்த் திருவாரூர்த் திருவீதியைச் சேர்ந்தார்.

குறிப்புரை: இக்கருத்தமைவுடையது 'குலம்பலம்பா' (தி. 4 ப. 101 பா. 1) எனத் தொடங்கும் திருவிருத்தமாகும், இப் பதிகத்தமைந்த பாடல்கள் பத்திலும் சிறுமையுடைய தமக்கு இவ்வருமையுடைய தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியம் பெறத் தகுமோ? எனக் கனிந்து பாடுகின்றார் நாவுக்கரசர். இப் பொருளமைதியை நினைவு கூர்ந்தே ஆசிரியர் இவ்வாறு அருள்வாராயினர். பிணி - பிணிப்பு; தொடர்பு. அதுவே பெரு நோயானது.

Go to top
சூழுந் திருத்தொண்டர் தம்முடன்
தோரண வாயில்நண்ணி
வாழி திருநெடுந் தேவா
சிரியன்முன் வந்திறைஞ்சி
ஆழி வரைத்திரு மாளிகை
வாயில் அவைபுகுந்து
நீள்சுடர் மாமணிப் புற்றுகந்
தாரைநேர் கண்டுகொண்டார்.

[ 221]


தம்மைச் சூழ்ந்து வந்த அத்தொண்டர்களுடன் தோரணங்கள் தொங்கவிடப்பட்ட வாயிலை அடைந்து, வாழ்வை யுடைய திருவினால் மிக்க தேவாசிரிய மண்டபத்தின் முன்வந்து வணங்கிச், சக்கரவாள மலைபோன்ற திருமாளிகையின் வாயிலுள் புகுந்து, ஒளிவீசும் பெரிய அழகான புற்றில் வீற்றிருக்கும் இறைவரை நேரே கண்டு மகிழ்ந்தார்.
குறிப்புரை:

கண்டு தொழுது விழுந்து
கரசர ணாதிஅங்கங்
கொண்ட புளகங்க ளாக
எழுந்தன்பு கூரக்கண்கள்
தண்டுளி மாரி பொழியத்
திருமூலட் டானர்தம்மைப்
புண்டரி கக்கழல் போற்றித்
திருத்தாண் டகம்புனைந்து.

[ 222]


கண்டு, தொழுது, நிலம் பொருத்த விழுந்து வணங்கிக் கைகால் முதலிய உறுப்புக்கள் எல்லாம் மயிர்க் கூச்சல் ஏற்பட எழுந்து, அன்பு மிகுதலால் கண்களினின்றும் நீர் மழை போலப் பொழியத், திருமூலட்டான இறைவரின் தாமரை போன்ற திரு வடிகளை வழுத்திப் போற்றித் திருத்தாண்டகப் பதிகத்தையும் பாடி,

குறிப்புரை: அருளிய பதிகம் 'கற்றவர்கள்' (தி. 6 ப. 32) எனத் தொடங்கும் திருத்தாண்டகமாகும். இப்பதிகம் முழுதும் போற்றி போற்றி என வருதலின் போற்றித் திருத்தாண்டகமாயிற்று. இதில் போற்றி என்ற தொடர் 108 முறை வருகின்றது.

காண்ட லேகருத் தாய்நினைந்
தென்னுங் கலைப்பதிகம்
தூண்டா விளக்கன்ன சோதிமுன்
நின்று துதித்துருகி
ஈண்டு மணிக்கோயில் சூழ
வலஞ்செய் திறைஞ்சியன்பு
பூண்ட மனத்தொடு நீள்திரு
வாயிற் புறத்தணைந்தார்.

[ 223]


அதன்பின்னர்க் 'காண்டலே கருத்தாய் நினைந்து' (தி. 4 ப. 20) எனும் தொடக்கமுடைய மெய்யுணர்வைத்தரும் பதிகத்தைத் தூண்டா விளக்கைப் போன்ற தன்வயத்தாய ஒளிமிக்க புற்றிடம் கொண்ட பெருமானின் திருமுன்பு நின்று, போற்றி, உள்ளம் உருக அழகிய கோயிலை வலமாகச் சுற்றி வந்து, இறைஞ்சி, அன்பு கொண்ட உள்ளத்துடன் நீண்ட திருவாயிலின் பக்கத்தை அடைந்தார்.
குறிப்புரை: இதுபொழுது அருளிய 'காண்டலே கருத்தாய்' (தி. 4 ப. 20) எனத் தொடங்கும் பதிகம் சீகாமரப் பண்ணில் அமைந்ததாகும். கலைப் பதிகம் - மெய்யுணர்வை வழங்கும் பதிகம். இவ்விரு பாடல் களும் ஒருமுடிபின.

செய்யமா மணியொளிசூழ் திருமுன்றின்
முன்தேவா சிரியன் சார்ந்து
கொய்யுலாம் மலர்ச்சோலைக் குயில்கூவ
மயிலாலும் ஆரூ ராரைக்
கையினால் தொழாதொழிந்து கனியிருக்கக்
காய்கவர்ந்த கள்வ னேன்என்
றெய்தரிய கையறவாந் திருப்பதிகம்
அருள்செய்தங் கிருந்தார் அன்றே.

[ 224]


பின்னர் அவர், சிவந்த மணிகளின் பேரொளி விளங்கும் திருமுற்றத்தின் முன் உள்ள தேவாசிரிய மண்டபத்தைச் சேர்ந்து, அரும்புகள் நிறைந்த பூஞ்சோலைகளில் குயில்கள் கூவவும், மயில்கள் அகவவும் உள்ள திருவாரூரில் வீற்றிருக்கின்ற பெருமா னைக் கைகளைக் கூப்பி வணங்காததால், நான் கனியிருக்கக் காய் கவர்ந்த கள்வன் ஆனேன் எனும் கருத்தால், அடைதற்கு அரிய மிக்க துன்பத்தின் மிகுதியால் திருப்பதிகத்தைப் பாடி, அங்குத் தங்கியிருந்தார்.

குறிப்புரை: கொய் - மலர் அரும்புகள். இப் பதிகத்தில் காணப்படும் பாடல் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பழமொழி அருளப் பெற்றிருப் பதால் இதனைப் பழமொழித் திருப்பதிகம் என அழைப்பர். இவற்றுள் முதல் பாடலில் வரும் பழமொழியே 'கனியிருப்பக் காய் கவர்ந்த கள்வனேன்' என்பதாகும். இப்பாடலின் பின்னிரண்டடிகளை அப்படியே ஆசிரியர் முகந்தெடுத்து மொழிந்துள்ளார். 'மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த' (தி. 4 ப. 5) எனும் பதிகம் காந்தாரப் பண்ணில் அமைந்ததாகும். இவ்விருபாடல்களும் ஒரு முடிபுடையன.

மார்பாரப் பொழிகண்ணீர் மழைவாருந்
திருவடிவும் மதுர வாக்கில்
சேர்வாகுந் திருவாயில் தீந்தமிழின்
மாலைகளுஞ் செம்பொற் றாளே
சார்வான திருமனமும் உழவாரத்
தனிப்படையும் தாமும் ஆகிப்
பார்வாழத் திருவீதிப் பணிசெய்து
பணிந்தேத்திப் பரவிச் செல்வார்.

[ 225]


மார்பு நிறைய வடியும் கண்ணீர் மழையென ஒழுகுகின்ற திருவடிவமும், இனிமையான சொற்களைக் கொண்ட தீந்தமிழ்ப் பதிகம் சேரும் திருவாயும், இறைவரின் சிவந்த பொன் போன்ற திருவடிகளையே சார்பாகக் கொண்ட திருமனமும், திரு உழவாரமான ஒப்பற்ற படையும் ஆகிய இவற்றைக் கொண்டு தாமும் இவையுமேயாய், உலகம் எல்லாம் வாழும் பொருட்டுத் திருவீதிப் பணிகளைச் செய்து வணங்கிப் போற்றிப் பரவி வருவாராய்,

குறிப்புரை:

Go to top
நீடுபுகழ்த் திருவாரூர் நிலவுமணிப்
புற்றிடங்கொள் நிருத்தர் தம்மைக்
கூடியஅன் பொடுகாலங் களில்அணைந்து
கும்பிட்டுக் கோதில் வாய்மைப்
பாடிளம்பூ தத்தினான் எனும்பதிகம்
முதலான பலவும் பாடி
நாடியஆர் வம்பெருக நைந்துமனங்
கரைந்துருகி நயந்து செல்வார்.

[ 226]


புகழ்மிக்க திருவாரூரின்கண் மணிப்புற்றினை இடமாகக் கொண்டு எழுந்தருளியிருக்கும் கூத்தரைப், பொருந்திய அன்புடன் எல்லாக் காலங்களிலும் சென்று வணங்கி, குற்றம் இல்லாத வாய்மையுடைய 'பாடிளம் பூதத்தினான்' எனத் தொடங்கும் பதிகத் தையும், மற்றும் பல பதிகங்களையும் பாடி, உள்ளத்தால் நாடிய ஆசையில் மனங் குழைந்து கரைந்து உருகுபவாராய்,

குறிப்புரை: இது பொழுது அருளிய பதிகங்கள் பன்னிரண்டு. 1. 'பாடிளம் பூதத்தினானும்' (தி. 4 ப. 4) - காந்தாரம். 2. 'சூலப்படையானை' (தி. 4 ப. 19) - சீகா மரம். 3. 'குழல் வலம்' (தி. 4 ப. 53) - திருநேரிசை. 4. 'எப்போதும்' (தி. 5 ப. 6) - திருக்குறுந் தொகை. 5. 'கொக்கரை' (தி. 5 ப. 7) - திருக்குறுந்தொகை. 6. 'உயிராவணம்' (தி. 6 ப. 25) - திருத்தாண்டகம். 7. 'பாதித்தன்' (தி. 6 ப. 26) - திருத்தாண்டகம். 8. 'நீற்றினையும்' (தி. 6 ப. 28) - திருத்தாண்டகம். 9. 'திருமணியை' (தி. 6 ப. 29) - திருத்தாண்டகம். 10. 'எம்பந்த' (தி. 6 ப. 30) - திருத்தாண்டகம். 11. 'இடர்கெடுமாறு' (தி. 6 ப. 31) - திருத்தாண்டகம். 12. ஒருவனாய் (தி. 6 ப. 34) - திருத்தாண்டகம்.

நான்மறைநூற் பெருவாய்மை நமிநந்தி
அடிகள்திருத் தொண்டின் நன்மைப்
பான்மைநிலை யால்அவரைப் பரமர்திரு
விருத்தத்துள் வைத்துப் பாடித்
தேன்மருவுங் கொன்றையார் திருவாரூர்
அரனெறியில் திகழுந் தன்மை
ஆனதிற மும்போற்றி அணிவீதிப்
பணிசெய்தங் கமரும் நாளில்.

[ 227]


நான்மறைகளிலும் மற்ற ஞான நூல்களிலும் பேசப்படும் பெருமை வாய்ந்த வாய்மையால் சிறந்த நமிநந்தி அடிகளின் தொண்டின் நன்மையமைந்த சிறப்பால், பரமரையே போற்றுகின்ற திருவிருத்தப் பதிகத்துள் அவரை வைத்துப் பாடி, தேன் பொருந்திய கொன்றை மலர்களுடைய சிவபெருமான், திருவாரூர் அரன் நெறியில் விளங்க வீற்றிருக்கும் சிறப்பையும் போற்றி, அழகிய திருவீதிப்பணியையும் செய்து அங்கு விரும்பித் தங்கியிருக்கும் காலத்தில்.

குறிப்புரை: 'வேம்பினைப் பூசி' எனத் தொடங்கும் திருவிருத்தத்
தில் வரும் இரண்டாவது பாடல்,
ஆராய்ந் தடித்தொண்ட ராணிப்பொ னாரூ ரகத்தடக்கிப்
பாரூர் பரிப்பத்தம் பங்குனி யுத்திரம் பாற்படுத்தான்
நாரூர் நறுமலர் நாத னடித்தொண்டன் நம்பிநந்தி
நீராற் றிருவிளக் கிட்டமை நீணா டறியும்மன்றே.
-தி. 4 ப. 102 பா. 2 என்பதாகும். இதன்கண் நமிநந்தியடிகள் போற்றப் பெறுவதையே ஆசிரியர் ஈண்டுக் குறித்தருளுகின்றார். திருவாரூர் அரனெறித் திருப் பதிகங்கள்: 1. 'எத்தீப் புகினும்' (தி. 4 ப. 17) - இந்தளம். 2. 'பொருங்கை' (தி. 6 ப. 33) - திருத்தாண்டகம். இவற்றுள் இரண்டாவது பதிகம் திருவாரூர் திருமூலட்டானத்துப் பெருமானையும் நினைவு கூர்ந்து அருளியதாகும்.

நீராருஞ் சடைமுடியார் நிலவுதிரு
வலிவலமும் நினைந்து சென்று
வாராரு முலைமங்கை உமைபங்கர்
கழல்பணிந்து மகிழ்ந்து பாடிக்
காராருங் கறைக்கண்டர் கீழ்வேளூர்
கன்றாப்பூர் கலந்து பாடி
ஆராத காதலினால் திருவாரூர்
தனில்மீண்டும் அணைந்தார் அன்றே.

[ 228]


கங்கையாறு தங்கிய சடைமுடியையுடைய பெருமானின் திருவலிவலத்தையும் நினைந்து சென்று, கச்சை அணிந்த மார்பகத்தையுடைய மங்கையான உமையை ஒரு கூற்றில் கொண்டவரின் திருவடிகளை வணங்கி, மகிழ்ந்து பாடித், திருநீல கண்டரது திருக்கீழ்வேளூர், திருக்கன்றாப்பூர் முதலிய பதிகளுக்கும் சென்று, மனம் கலந்த ஒருமைப்பாட்டுடன் பாடி, நிறைவுறாத ஆசை மிகுதியால் திருவாரூருக்குத் திரும்பவும் வந்தார்.

குறிப்புரை: இத்திருப்பதிகளில் அருளிய பதிகங்கள்: 1. திருவலி வலம்: 'நல்லான்காண்' (தி. 6 ப. 48) - திருத்தாண்டகம். 2. திருக்கீழ் வேளூர்: 'ஆளான' (தி. 6 ப. 67) - திருத்தாண்டகம். 3. திருக்கன்றாப் பூர்: 'மாதினையோர்' (தி. 6 ப. 61) - திருத்தாண்டகம். இத்திருப்பதிக ளோடு, பின்வரும் திருப்பதிகளுக்கும் சென்று பணிந்து திருவாரூ ருக்குச் சென்றிருக்கவேண்டும் என இதுபொழுது இருக்கும் திருப்பதி கங்கள் கொண்டு அறிய முடிகின்றது. அவை 1. திருக்கோளிலி: (அ). 'மைக்கொள்' (தி. 5 ப. 56) - திருக்குறுந்தொகை. (ஆ) 'முன்னமே' (தி. 5 ப. 57) - திருக்குறுந்தொகை. 2. திருப்பேரெயில்: 'மறையும்' (தி. 5 ப. 16) - திருக்குறுந்தொகை. மீண்டும் திருவாரூரை அணைந்து, ஐம்பொறிக ளோடு வாழ இயலாமையை நினைந்து அருளிய திருப்பதிகம். 'படுகுழிப் பவ்வத்தன்ன' (தி. 4 ப. 52) எனத் தொடங்கும் திருநேரிசைப் பதிகம்.

மேவுதிரு வாதிரைநாள் வீதிவிடங்
கப்பெருமாள் பவனி தன்னில்
தேவருடன் முனிவர்கள்முன் சேவிக்கும்
அடியார்க ளுடன்சே வித்து
மூவுலகுங் களிகூர வரும்பெருமை
முறைமையெலாங் கண்டு போற்றி
நாவினுக்குத் தனியரசர் நயக்குநாள்
நம்பர்திரு அருளி னாலே.

[ 229]


பொருந்தும் திருவாதிரைத் திருநாளில் வீதிவிடங்கப் பெருமான் எழுந்தருளிவரும் திருவுலாவில், தேவர்க ளுடனே முனிவர்களுமாகிய கூட்டத்தில் அவர்களுக்கெல்லாம் முன் நின்று வணங்கும் அடியார்களுடனே கூடி வணங்கி, மூன்று உலகங் களும் மகிழ்ச்சி அடைந்திட வருகின்ற அவ்விழாவின் நெறிமுறை களை எல்லாம் கண்டு போற்றி, ஒப்பில்லாத நாவுக்கரசர் விரும்பித் தங்கியிருக்கும் நாள்களில், இறைவரின் திருவருளால்.

குறிப்புரை:

திருப்புகலூர் அமர்ந்தருளுஞ் சிவபெருமான்
சேவடிகள் கும்பிட் டேத்தும்
விருப்புடைய உள்ளத்து மேவியெழுங்
காதல்புரி வேட்கை கூர
ஒருப்படுவார் திருவாரூர் ஒருவாறு
தொழுதகன்றங் குள்ளம் வைத்துப்
பொருப்பரையன் மடப்பாவை இடப்பாகர்
பதிபிறவும் பணிந்து போந்தார்.

[ 230]


திருப்புகலூரில் எழுந்தருளியிருக்கும் சிவ பெருமானின் திருவடிகளைப் போற்றுதற்குரிய விருப்பம் வரப் பெற்ற திருவுள்ளத்தில் பொருந்தி எழுகின்ற காதல் மிக, அங்ஙனமே செல்வ தற்கு எண்ணியவராய்த், திருவாரூரை ஒருவாறாகத் தொழுது, நீங்கித், தம் கருத்தைத் திருவாரூரில் வைத்து, மலையரசன் பாவையாரான உமையம்மையாரை ஒரு கூற்றில் வைத்த பெருமான் எழுந்தருளி யிருக்கும் இடைப்பட்ட பிற பதிகளையும் வணங்கிச் சென்றார்.

குறிப்புரை: திருவாரூரில் தம் கருத்தை வைத்தமைக்கு அடையாளமாகப் பாடப்பெற்ற திருப்பதிகம்: 'கைம்மான' (தி. 6 ப. 24) எனத் தொடங்கும் திருத்தாண்டகம் ஆகும். பிறபதிகளாவன: திருப்பள்ளியின் முக்கூடல், திருவிற்குடி, திருப்பனையூர் முதலாயினவாகலாம். இவற்றுள் முன்னுள்ள பதியொன்றற்கே திருப்பதிகம் உள்ளது. திருப்பள்ளியின் முக்கூடல் : 'ஆராத' (தி. 6 ப. 69) - திருத்தாண்டகம். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

Go to top
அந்நாளில் ஆளுடைய பிள்ளையார்
திருப்புகலி அதன்கண் நின்றும்
பன்னாகப் பூணணிவார் பயின்றதிருப்
பதிபலவும் பணிந்து செல்வார்
புன்னாக மணங்கமழும் பூம்புகலூர்
வந்திறைஞ்சிப் பொருவில் சீர்த்தி
மின்னாரும் புரிமுந்நூல் முருகனார்
திருமடத்தில் மேவுங் காலை.

[ 231]


அதுபொழுது ஞானசம்பந்தர் சீகாழியினின்றும் புறப்பட்டுப் பாம்புகளை அணிந்த சிவபெருமான் வீற்றிருக்கும் திருப்பதிகள் பலவற்றையும் அடைந்து பணிந்து செல்வார், சுரபுன்னை மலர்களின் மணம் கமழும் பூம்புகலூரில் சென்று இறைவனைக் கண்டு ஒப்பற்ற சிறப்புடைய முப்புரிநூல் அணிந்த முருக நாயனாரின் திரு மடத்தில் வீற்றிருக்கும் காலத்தில்.
குறிப்புரை:

ஆண்டஅர செழுந்தருளி அணியாரூர்
மணிப்புற்றில் அமர்ந்து வாழும்
நீண்டசுடர் மாமணியைக் கும்பிட்டு
நீடுதிருப் புகலூர் நோக்கி
மீண்டருளி னாரென்று கேட்டருளி
எதிர்கொள்ளும் விருப்பி னோடும்
ஈண்டுபெருந் தொண்டர்குழாம் புடைசூழ
வெழுந்தருளி எதிரே சென்றார்.

[ 232]


சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்ட நாவுக் கரசர் எழுந்தருளிப் போந்து, அழகு பொருந்திய திருவாரூரில் மணிப் புற்றில் விரும்பி வீற்றிருக்கும் நீண்ட ஒளி பொருந்திய மாமணியினை வணங்கிப் பூம்புகலூருக்கு வந்தருளும் இனிய செய்தியை, ஞான சம்பந்தர் கேட்டறிந்து, அவரை எதிர் கொண்டு வரவேற்கும் விருப்பத்தால், நெருங்கிய தொண்டர் கூட்டம் தம்மைச் சூழ்ந்து வர, எழுந்தருளி எதிரே சென்றார்.

குறிப்புரை: இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

கரண்டமலி தடம்பொய்கைக் காழியர்கோன்
எதிரணையுங் காதல் கேட்டு
வரன்றுமணிப் புனற்புகலூர் நோக்கிவரும்
வாகீசர் மகிழ்ந்து வந்தார்
திரண்டுவருந் திருநீற்றுத் தொண்டர்குழாம்
இருதிறமுஞ் சேர்ந்த போதில்
இரண்டுநில வின்கடல்கள் ஒன்றாகி
அணைந்தனபோல் இசைந்த அன்றே.

[ 233]


நீர்க் காக்கைகள் நிறைந்த பெரிய நீர்நிலைகளை யுடைய சீகாழியில் தோன்றிய ஞானசம்பந்தர், அங்ஙனம் தம்மை எதிர்கொண்டு அணைகின்ற அன்புச் செயலைக் கேட்டு, மணிகளைக் கொழித்து வரும் நீர்வளம் கொண்ட திருப்புகலூரை நோக்கி வருகின்ற நாவரசரும், மனமகிழ்ச்சியுடன் எழுந்தருளி வந்தனர். கூடிப் பெருகி வருகின்ற திருநீற்றுத் தொண்டர் கூட்டம் இருமருங்கும் திரண்ட போதில், நிலவுக்கடல்கள் இரண்டு, ஒன்று கூடி அணைந்தன போல், பொருந்தின. அப்பொழுது.

குறிப்புரை:

திருநாவுக் கரசரெதிர் சென்றிறைஞ்சத்
சிரபுரத்துத் தெய்வ வாய்மைப்
பெருஞான சம்பந்தப் பிள்ளையார்
எதிர்வணங்கி அப்ப ரேநீர்
வருநாளில் திருவாரூர் நிகழ்பெருமை
வகுத்துரைப்பீர் என்று கூற
அருநாமத் தஞ்செழுத்தும் பயில்வாய்மை
அவரு மெதிர் அருளிச் செய்வார்.

[ 234]


எதிர் சென்ற நாவுக்கரசர் வணங்க, சீகாழியில் வந்தருளிய கடவுள்தன்மை பொருந்திய பெருமையுடைய திருஞான சம்பந்தப் பெருமானும் எதிர் வணங்கி, 'அப்பரே! நீர் வரும் நாளில் திருவாரூரில் நிகழும் பெருமையை வகுத்துக் கூறுவீராக!' எனக் கூறச் சிவபெருமானின் திருப்பெயரான திருவைந்தெழுத்தை மிகவும் பயில்கின்ற வாய்மை கொண்ட நாவுக்கரசரும் அருளுவாராய்,

குறிப்புரை:

சித்தம் நிலாவுந் தென்திரு
வாரூர் நகராளும்
மைத்தழை கண்டர் ஆதிரை
நாளின் மகிழ்செல்வம்
இத்தகை மைத்தென் றென்மொழி
கேனென் றுரைசெய்தார்
முத்து விதான மணிப்பொற்
கவரி மொழிமாலை.

[ 235]


உள்ளத்தில் நிலவும் திருவாரூர் நகரத்தை ஆளுகின்ற நீலகண்டரான சிவபெருமானின் திருவாதிரைத் திருநாளில் நிகழும் மகிழ்ச்சிப் பெருக்குடைய செய்திச் செல்வத்தை, இத்தகைய தன்மை கொண்டது என எவ்வாறு கூறுவேன்! என்று, 'முத்து விதான மணிப் பொற்கவரி' (தி. 4 ப. 21) எனத் தொடங்கும் பதிகமான சொல்மாலையைப் பாடினார்.
குறிப்புரை: 'முத்து விதானம்' (தி. 4 ப. 21) எனத் தொடங்கும் இக்குறிஞ்சிப் பண்ணாலாய பதிகம் திருவாரூரில் நிகழ்ந்து வரும் திருவாதிரைச் சிறப்பை மிக அழகாக விளக்கி நிற்பதாகும். இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

Go to top
அம்மொழி மாலைச் செந்தமிழ்
கேளா அணிசண்பை
மைம்மலி கண்டத் தண்டர்
பிரானார் மகனாரும்
கொய்ம்மலர் வாவித் தென்திரு
வாரூர் கும்பிட்டே
உம்முடன் வந்திங் குடன்அமர்
வேன்என் றுரைசெய்தார்.

[ 236]


அந்தச் சொல்மாலையான தமிழ்ப்பதிகத்தைக் கேட்ட அழகிய சீகாழியில் தோன்றிய, கருமை பொருந்திய கழுத் தினையுடைய தேவர் தலைவரின் மகனாரான ஞானசம்பந்தரும், 'அரும்புகள் மலரும் பொய்கைகளையுடைய தென் திருவாரூருக்குச் சென்று வணங்கி, அதன்பின்பு மீண்டு வந்து, உம்முடன் கூடி உடன் அமர்வேன்' என இயம்பினார்.

குறிப்புரை: மேற்கூறப்பட்ட 'முத்து விதானம்' (தி. 4 ப. 21) எனத் தொடங்கும் பதிகத்தைக் கேட்ட அளவிலேயே ஞானசம்பந்தர் திருவாரூருக்குச் சென்று வருவதை மேற்கொண்டார், இதனால், அப்பதிகச் சிறப்பும் அதன்வழி அவருக்கு ஏற்பட்ட ஆர்வச் சிறப்பும் ஒருங்கு விளங்குகின்றன.

மாமதில் ஆரூர் மன்னரை
அங்கு வணங்கச்செந்
தாமரை யோடைச் சண்பையர்
நாதன் தான்ஏக
நாமரு சொல்லின் நாதரும்
ஆர்வத் தொடுபுக்கார்
பூமலர் வாசத் தண்பணை
சூழும் புகலூரில்.

[ 237]


பெரிய மதில் சூழ்ந்த திருவாரூர்த் தியாகராசரை அங்குச் சென்று வணங்குதற்குச் செந்தாமரை மலர்கள் நிறைந்த குளங்களையுடைய சீகாழித் தலைவரான ஞானசம்பந்தர் செல்ல, நாவில் பொருந்தும் வாக்கின் தலைவரான நாவுக்கரசரும் மலர்களின் நறுமணம் கமழும் குளிர்ந்த வயல்களால் சூழப்பட்ட புகலூருக்கு, மீதூர்ந்த விருப்பத்துடன் சென்றார்.
குறிப்புரை:

அத்திரு மூதூர் மேவிய
நாவுக் கரசுந்தம்
சித்தம் நிறைந்தே அன்பு
தெவிட்டுந் தெளிவெள்ளம்
மொய்த்திழி தாரைக் கண்பொழி
நீர்மெய்ம் முழுதாரப்
பைத்தலை நாகப் பூண்அணி
வாரைப் பணிவுற்றார்.

[ 238]


அப்பழமையான ஊரில் வீற்றிருக்கும் திருநாவுக் கரசரும், தம் உள்ளத்தில் நிறைவாகத் தேக்கித் தெளிந்த வெள்ளமாகத் திரண்டு தாரை தாரையாகக் கண்களினின்றும் பொழியும் நீர், உடல் முழுதும் நிரம்பப் பொருந்த, நச்சுப்பையைக் கொண்ட தலையை யுடைய பாம்பை அணிகலனாக அணிந்த சிவபெருமானைப் பணிந்தார்.
குறிப்புரை:

தேவர் பிரானைத் தென்புக
லூர்மன் னியதேனைப்
பாவியல் மாலைச் செந்தமிழ்
பாடிப் பரிவோடும்
மேவிய காலந் தோறும்
விருப்பிற் கும்பிட்டே
ஓவுதல் ஓவு திருப்பணி
செய்தங் குறைகின்றார்.


[ 239]


தேவர்களுக்கெல்லாம் தலைவராய், அழகிய புகலூரில் நிலைபெற்று எழுந்தருளியிருக்கும் தேன் போன்றவரைப், பாக்களின் இயல்பு முற்றும் பொருந்திய தமிழ் மாலைகளைப் பாடி, அன்புடனே பொருந்திய காலங்களில் எல்லாம் விருப்புடன் வணங்கி, நீங்குதல் இல்லாத திருப்பணிகளைச் செய்து கொண்டு, அங்குத் தங்குவாராகி,

குறிப்புரை: இதுபொழுது அருளிய பதிகங்கள்: 1. 'பகைத்திட்டார்' (தி. 4 ப. 54) - திருநேரிசை. 2. 'செய்யர்' (தி. 4 ப. 16) - இந்தளம். 3. 'துன்னக்கோவணம்' (தி. 5 ப. 46) - திருக்குறுந்தொகை.

சீர்தரு செங்காட் டங்குடி
நீடுந் திருநள்ளா
றார்தரு சோலை சூழ்தரு
சாந்தை அயவந்தி
வார்திகழ் மென்முலை யாளொரு
பாகன் திருமருகல்
ஏர்தரும் அன்பால் சென்று
வணங்கி இன்புற்றார்.


[ 240]


அப்பெருமான் எழுந்தருளியிருக்கும் சிறப்பு உடைய திருச்செங்காட்டங்குடி, செல்வம் மிகும் திருநள்ளாறு, பூமரங்கள் நிறைந்த சோலைகள் சூழந்த திருச்சாத்தமங்கையிலுள்ள அயவந்தி, கச்சுப் பொருந்திய மார்பகங்களையுடைய அம்மையை ஒரு கூற்றில் கொண்டருளும் சிவபெருமானின் திருமருகல் ஆகிய திருப்பதிகளை எல்லாம் அன்புடன் சென்று வணங்கி இன்பம் அடைந்தார்.

குறிப்புரை: இப்பதிகளில் அருளிய பதிகங்கள்: 1. திருச்செங் காட்டங்குடி: 'பெருந்தகையை' (தி. 6 ப. 84) - திருத்தாண்டகம். 2. திருநள்ளாறு: (அ). 'உள்ளாறாத' (தி. 5 ப. 68) - திருக்குறுந்தொகை. (ஆ). 'ஆதிக்கண்' (தி. 6 ப. 20) - திருத்தாண்டகம். 3. திருமருகல்: 'பெருகலாம்' (தி. 5 ப. 88) - திருக்குறுந்தொகை. திருச்சாத்தமங்கைக்குரிய பதிகம் கிடைத்திலது. இவ்விரு பாடல்களும் ஒரு முடிபு உடையன.

Go to top
அப்படிச் சின்னாள் சென்றபின்
ஆரூர் நகராளும்
துப்புறழ் வேணிக் கண்ணுத
லாரைத் தொழுதிப்பால்
மெய்ப்பொருள் ஞானம் பெற்றவர்
வேணு புரத்தெங்கள்
பொற்புரி முந்நூல் மார்பரும்
வந்தார் புகலூரில்.

[ 241]


அவ்வகையில் சிலநாள்கள் சென்றனவாகப், பின்பு திருவாரூர்த் திருநகரை ஆளும் பவளம் போன்ற சடையை யுடைய நெற்றிக்கண்ணரான இறைவரைத் தொழுது கொண்டு, மெய்ப் பொருளாய ஞானத்தை உண்டருளிய சீகாழியில் தோன்றிய முப்புரி நூல் அணிந்த மார்பினரான எம் ஆளுடைய பிள்ளையாரும், திருப் புகலூருக்கு வந்தருளினார்.

குறிப்புரை:

பிள்ளையார் எழுந்தருளப்
பெருவிருப்பால் வாகீசர்
உள்ளம்மகிழ்ந் தெதிர்கொண்டங்
குடனுறையு நாளின்கண்
வள்ளலார் சிறுத்தொண்டர்
மற்றவர்பால் எழுந்தருள
எள்ளருஞ்சீர் நீலநக்கர்
தாமும்எழுந் தருளினார்.

[ 242]


ஞானசம்பந்தர் அங்ஙனம் வந்தருள, பெரு விருப்புடன் நாவுக்கரசரும் உள்ளம் மகிழ்ந்து அவரை எதிர் கொண்டு அழைத்து வந்து திருப்புகலூரில் அவருடன் தங்கியிருந்தார். அந் நாள்களில், வள்ளலாரான சிறுத்தொண்டர் அவ்விரு பெருமக்கள் இடத்தும் வந்தருள, பின் கெடுதல் இல்லாத சிறப்புடைய நீலநக்க நாயனாரும் அங்கு வந்தருளினார்.

குறிப்புரை:

ஆங்கணையும் அவர்களுடன்
அப்பதியில் அந்தணராம்
ஓங்குபுகழ் முருகனார்
திருமடத்தில் உடனாகப்
பாங்கில்வரும் சீரடியார்
பலருமுடன் பயில்கேண்மை
நீங்கரிய திருத்தொண்டின்
நிலையுணர்ந்து நிகழ்கின்றார்.

[ 243]


அவ்வாறு வந்த சிறுத்தொண்ட நாயனார், திருநீலநக்க நாயனார், ஆகிய இருவரோடும், அத் திருப்பதியில் வாழும் அந்தணரான மிக்க புகழையுடைய முருக நாயனாரின் திருமடத்தில், ஒன்று கூடியவராய், அத் திருக்கூட்டத்தில் ஒருங்கிருக்கும் சிறப்பையுடைய அடியவர் பலரும் உடன் இருக்க, அன்பின் சிறப்பால் வரும் நீங்குதற்கரிய திருத்தொண்டின் நிலைமையுணர்ந்து போற்றுவாராய்.

குறிப்புரை:

திருப்பதிகச் செழுந்தமிழின்
திறம்போற்றி மகிழ்வுற்றுப்
பொருப்பரையன் மடப்பாவை
இடப்பாகர் பொற்றாளில்
விருப்புடைய திருத்தொண்டர்
பெருமையினை விரித்துரைத்தங்
கொருப்படுசிந் தையினார்கள்
உடனுறைவின் பயன்பெற்றார்.


[ 244]


திருப்பதிகங்களான செழுந்தமிழின் இசைத் திறனைப் பாடி மகிழ்ந்து, மலையரசனின் மகளாரான உமையம்மையாரை இட மருங்கில் கொண்டருளும் சிவபெருமானின் பெருமையை விரிவாகப் பேசி, அதனால் ஒன்றிய மனம் உடையவராய், அடியார் உடன் உறைதலால் வரும் சிவசிந்தனையாகிய பெரும் பயனைப் பெற்றனர்.

குறிப்புரை: பெருமானின் பொருள்சேர் புகழை நினைந்தும், உரைத்தும் திருவடிகளை வணங்கியும் வாழ்தலே, அடியவர்களின் செய்கையாகும். அச் செய்கையை அடியவர் பலருடனும் இருந்து செய்தல் உடனுறைவின் பயனாகும். 'சிரிப்பார், களிப்பார்' (தி. 8 ப. 21 பா. 9) எனவரும் திருவாசகமும் காண்க. இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

அந்நாளில் தமக்கேற்ற
திருத்தொண்டின் நெறியாற்ற
மின்னார்செஞ் சடைஅண்ணல்
மேவுபதி எனைப்பலவும்
முன்னாகச் சென்றேத்தி
முதல்வன்தாள் தொழுவதற்குப்
பொன்னாரும் மணிமாடப்
பூம்புகலூர் தொழுதகன்றார்.

[ 245]


அத்தகைய நாள்களில் தங்களுக்கு ஏற்றதான திருத்தொண்டினைச் செய்வதற்காக, மின்னல் என விளங்கும் சிவந்த சடையையுடைய சிவபெருமான் வீற்றிருக்கும் திருப்பதிகள் பல வற்றிற்கும் முற்படச் சென்று போற்றிப் பெருமானின் திருவடிகளைத் தொழுவதன் பொருட்டு, அழகிய மணிகளையுடைய மாளிகைகள் நிறைந்த பூம்புகலூரைத் தொழுது புறப்படுவாராய்,

குறிப்புரை:

Go to top
திருநீல நக்கடிகள்
சிறுத்தொண்டர் முருகனார்
பெருநீர்மை அடியார்கள்
பிறரும்விடை கொண்டேக
ஒருநீர்மை மனத்துடைய
பிள்ளையா ருடன்அரசும்
வருநீர்செஞ் சடைக்கரந்தார்
திருஅம்பர் வணங்கினார்.

[ 246]


திருநீலநக்கரும், சிறுத்தொண்ட நாயனாரும் பெருமையுடைய மற்ற அடியார்களும் மற்றவர்களும் விடைபெற்றுக் கொண்டு செல்ல, ஒன்றுபட்ட உள்ளத்தவர்களான ஆளுடைய பிள்ளையாரும், ஆளுடைய அரசும், வானினின்று இறங்கிவரும் கங்கைப் பெருக்கைச் சிவந்த சடையில் மறைந்து வைத்த இறைவரின் திருஅம்பர்த் திருப்பதியை வணங்கினர்.

குறிப்புரை: திருவம்பருக்குரிய திருப்பதிகம் கிடைத்திலது. இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

செங்குமுத மலர்வாவித்
திருக்கடவூர் அணைந்தருளிப்
பொங்கியவெங் கூற்றடர்த்த
பொன்னடிகள் தொழுதேத்திக்
குங்குலியக் கலயனார்
திருமடத்தில் குறைவறுப்ப
அங்கவர்பால் சிவனடியா
ருடன்அமுது செய்தார்கள்.

[ 247]


சிவந்த ஆம்பல் மலர்கள் மலரும் பொய்கைகளை யுடைய திருக்கடவூரினைச் சேர்ந்து, சினம் மிகுந்து வந்த கூற்றுவனை உதைத்த இறைவரின் அழகிய திருவடிகளை வணங்கி, குங்குலியக் கலய நாயனாரின் திருமடத்தில் எழுந்தருள, அவருடன் இருந்தருளிய ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும், சிவனடியார்களுடன் உணவு கொண்டருளினர்.

குறிப்புரை: இது பொழுது பாடியருளிய பதிகங்கள்: 1. 'பொள்ளத்த' (தி. 4 ப. 31) - திருநேரிசை. 2. 'மருட்டுயர்' (தி. 4 ப. 107) - திருவிருத்தம். 3. 'மலைக்கொளானை' (தி. 5 ப. 37) - திருக்குறுந்தொகை.

சீர்மன்னுந் திருக்கடவூர்த்
திருமயா னமும்வணங்கி
ஏர்மன்னும் இன்னிசைப்பாப்
பலபாடி இனிதமர்ந்து
கார்மன்னுங் கறைக்கண்டர்
கழலிணைகள் தொழுதகன்று
தேர்மன்னும் மணிவீதித்
திருவாக்கூர் சென்றணைந்தார்.


[ 248]


அவ்விருவரும், சீர்மை பொருந்திய திருக் கடவூர்த் திருமயானம் என்ற திருப்பதிக்கும் சென்று வணங்கி, அழகு உடைய இனிய இசை கொண்ட தேவாரப் பாடல்கள் பலவற்றையும் பாடி வணங்கி, இனிதாய் அங்கு வீற்றிருந்தருளி, மேகத்தின் தன்மை பொருந்திய நீலகண்டரின் திருவடிகளை வணங்கி, அங்கிருந்து புறப்பட்டுத் தேர் பொருந்திய திருஆக்கூரைச் சென்று சேர்ந்தனர்.

குறிப்புரை: திருக்கடவூர்த் திருமயானத்தில் 'இன்னிசையாப் பலபாடி' என்றாரேனும் இதுபொழுது ஒரு திருப்பதிகமே கிடைத்து உள்ளது. 'குழைகொள்' (தி. 5 ப. 38) - திருக்குறுந்தொகை.

சார்ந்தார்தம் புகலிடத்தைத்
தான்தோன்றி மாடத்துக்
கூர்ந்தார்வம் உறப்பணிந்து
கோதில்தமிழ்த் தொடைபுனைந்து
வார்ந்தாடுஞ் சடையார்தம்
பதிபலவும் வணங்கியுடன்
சேர்ந்தார்கள் தம்பெருமான்
திருவீழி மிழலையினை.

[ 249]


தம்மைவந்து அடைந்தவர்க்கு அடைக்கலந் தந்து ஆட்கொள்ளும் சிவபெருமானை, அப்பதியில் உள்ள 'தான் தோன்றி மாடம்' என்னும் கோயிலினுள் கண்டு, மிகுந்த அன்பு பொருந்த வணங்கி, குற்றம் இல்லாத தமிழ்த் தொடை மாலை பாடி, அங்கிருந்து புறப்பட்டு, அசைந்து ஆடும் சடையுடைய இறைவர் வீற்றிருந்தருளும் பதிகள் பலவற்றையும் போய் வணங்கிப், பின்னர் அவ்விருவரும் தம் பெருமானின் திருவீழிமிழலையைச் சேர்ந்தனர்.

குறிப்புரை: இப்பதிகளில் அருளிய பதிகம்: 'முடித்தாமரை' - திருத் தாண்டகம். பதிபலவும் என ஆசிரியர் கூறுதற்கு இயைய திருமீயச் சூர், திருவன்னியூர் ஆகிய பதிகளைக் கொள்ளலாம். 1. திருமீயச்சூர் இளங்கோயில்: 'தோற்றும் கோயிலும்' (தி. 5 ப. 11)- திருக்குறுந் தொகை. 2. திருவன்னியூர்: 'காடு கொண்டரங்கா' (தி. 5 ப. 26) - திருக் குறுந்தொகை.

வீழி மிழலை வந்தணைய
மேவு நாவுக் கரசினையும்
காழி ஞானப் பிள்ளையையும்
கலந்த உள்ளக் காதலினால்
ஆழி வலவன் அறியாத
அடியார் அடியார் அவர்களுடன்
வாழி மறையோர் எதிர்கொண்டு
வணங்க வணங்கி உள்புக்கார்.

[ 250]


திருவீழிமிழலையில் வந்து, முதற்கண் சேர்ந்த நாவுக்கரசரையும், பின்னால் வந்த ஞானசம்பந்தப் பெருமானையும் அன்பு கலந்த உள்ளத்தில் எழுந்த ஆசையால், சக்கரப் படையை உடைய திருமாலும் அறியாத சிவபெருமானின் அடியார்களும் அவர் தம் அடியார்களும் மறையோர்களும் நகர்ப் புறத்து வந்து எதிர்கொண்டு வணங்கத், தாங்களும் அவர்களை வணங்கித் திருப்பதியுள் புகுந்தனர்.

குறிப்புரை: வாழி - அசைநிலை.

Go to top
மாட வீதி அலங்கரித்து
மறையோர் வாயின் மணிவிளக்கு
நீடு கதலி தழைப்பூகம்
நிரைத்து நிறைபொற் குடமெடுத்துப்
பீடு பெருகும் வாகீசர்
பிள்ளை யாரும் தொண்டர்களும்
கூட மகிழ்ந்து விண்ணிழிந்த
கோயில் வாயில் சென்றணைந்தார்.

[ 251]


அந்தணர்கள் மாட வீதியினை அணிசெய்து, தம் மாளிகையின் வாயில்களில் மணி விளக்குகளையும், வாழைகளையும், இலை செறிந்த பாக்குகளையும் நிரல்பட வைத்தும், நீர் நிறைந்த பொற் குடங்களை ஏந்தியும், பெருமை மிக்க நாவுக்கரசர், ஆளுடைய பிள்ளையார், தொண்டர்கள் ஆகியோர் அங்கு வந்து கூடும்படி மகிழ்ந்து, விண்ணிழி விமானத்தையுடைய திருக்கோயி லின் வாயிலை அடைந்தார்கள்.

குறிப்புரை:

சென்றுள் புகுந்து திருவீழி
மிழலை அமர்ந்த செங்கனகக்
குன்ற வில்லி யார்மகிழ்ந்த
கோயில் வலமா வந்துதிரு
முன்றில் வணங்கி முன்னெய்தி
முக்கட் செக்கர்ச் சடைமவுலி
வென்றி விடையார் சேவடிக்கீழ்
விழுந்தார் எழுந்தார் விம்மினார்.

[ 252]


சென்று, திருவீழிமிழலையை விரும்பி வீற்றிருக் கும் செம்பொன் மேருமலையை வில்லாகவுடைய சிவபெருமான் மகிழ்ந்த கோயிலை வலமாக வந்து, முற்றத்தே வணங்கி, திருமுன்பு சேர்ந்து, மூன்று கண்களையும் சிவந்த வானம் போன்ற சடைமுடி யையும் வெற்றி பொருந்திய ஆனேற்றூர்தியையும் உடைய அப்பெருமானின் திருவடியின் கீழே விழுந்து எழுந்து நாவுக்கரசர் விம்மினார்.

குறிப்புரை:

கைகள் குவித்துக் கழல்போற்றிக்
கலந்த அன்பு கரைந்துருக
மெய்யில் வழியுங் கண்ணருவி
விரவப் பரவுஞ் சொல்மாலை
செய்ய சடையார் தமைச்சேரார்
தீங்கு நெறிசேர் கின்றார்என்
றுய்யு நெறித்தாண் டகம்மொழிந்தங்
கொழியாக் காதல் சிறந்தோங்க.

[ 253]


இரு கைகளையும் தலைமீது குவித்து, திருவடிகளை வணங்கி, உள்ளமானது நிரம்பிக் கலந்த அன்பால் கரைந்து உருகத், திருமேனியில் வழியும் கண்ணீர் அருவியைப் போல் ஆக, துதிக்கின்ற சொல்மாலையான பதிகம், 'சிவந்த சடையையுடைய பெருமானை அடையாதவர் தீ நெறிக்கே சேர்கின்றார்' என்னும் கருத்துடையதாய உய்யும் நெறியைக் காட்டும் திருத்தாண்டகத்தைப் பாடி, அங்கிருந்து நீங்க முடியாத காதல் மேலே ஓங்கி எழ.

குறிப்புரை: இம்முடிபு உடைய திருப்பதிகம் 'போரானை' (தி. 6 ப. 50) எனத் தொடங்கும் திருத்தாண்டகமாகும். பாடல்தொறும் 'திருவீழிமிழலை யானைச் சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே' எனும் முடிபு உடைமையின் அதனையே போந்த கருத்தாக ஆசிரியர் ஈண்டுக் கூறுவாராயினர்.

முன்னாள் அயனுந் திருமாலும்
முடியும் முதலும் காணாத
பொன்னார் மேனி மணிவெற்பைப்
பூநீர் மிழலை யினில்போற்றிப்
பன்னாள் பிரியா நிலைமையினால்
பயிலக் கும்பிட் டிருப்பாராய்
அந்நாள் மறையோர் திருப்பதியில்
இருந்தார் மெய்ம்மை அருந்தவர்கள்.

[ 254]


முற்காலத்தில் நான்முகனும் திருமாலும் முடியும் அடியும் அறிய இயலாத, நீண்ட பொன்னார் மேனியையுடைய மணி மலையான இறைவரை, அழகிய நீர்வளம் கொண்ட திருவீழிமிழலை யில் வணங்கிப், பல நாள்களும் பிரியாது இருக்கும் பண்பால், நாவுக் கரசர், நாளும் வழிபட்டுக் கொண்டிருக்கும் அக்காலத்தில் மறையவர் வாழும் அப்பதியில் மெய்த்தவர்களான அவ்விருவரும், அடியார் களும் தங்கியிருந்தனர்.
குறிப்புரை: இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

சீரின் விளங்குந் திருத்தொண்டர்
இருந்து சிலநாள் சென்றதற்பின்
மாரி சுருங்கி வளம்பொன்னி
நதியும் பருவம் மாறுதலும்
நீரின் இயன்ற உணவருகி
நிலவும் பலமன் னுயிர்களெலாம்
பாரின் மலிந்த இலம்பாட்டில்
படர்கூர் வறுமை பரந்ததால்.

[ 255]


சீர்மை மிக்க திருத்தொண்டர்கள் இவ்வாறு சில நாள்கள் இருந்து கழிந்த பின்னர், மழைவளம் சுருங்கியதால், வளம் உடைய காவிரி நீர், வரும் பருவத்தில் வாராது மாறுதல் அடைய, அதனால் நீரால் விளையத்தக்க உணவுப் பொருள்கள் குறைய, உணவை முதன்மையாகக் கொண்டு வாழ்கின்ற உயிர்கள் எல்லாம், வறுமை காரணமாகத் துன்ப மிகுதியை அடையுமாறு வறுமை பரவியது.
குறிப்புரை: ஆல் - அசைநிலை,

Go to top
வையம் எங்கும் வற்கடமாய்ச்
செல்ல உலகோர் வருத்தமுற
நையும் நாளில் பிள்ளையார்
தமக்கும் நாவுக் கரசருக்கும்
கையில் மானும் மழுவுமுடன்
காணக் கனவில் எழுந்தருளிச்
செய்ய சடையார் திருவீழி
மிழலை உடையார் அருள்செய்வார்.

[ 256]


உலகம் எங்கும் பஞ்சம் நிலவ, உலகத்துயிர்கள் பசியால் வருந்தத் துன்புற்று வாழும் நாளில், சிவந்த சடையை யுடையவரான திருவீழிமிழலையில் வீற்றிருக்கும் இறைவர், தம் கைகளில் மானும் மழுவும் காணும்படியாக, ஞானசம்பந்தருக்கும் நாவுக்கரசருக்கும் கனவில் தோன்றி அருள் செய்வாராய்.

குறிப்புரை:

கால நிலைமை யால்உங்கள்
கருத்தில் வாட்ட முறீர்எனினும்
ஏல உம்மை வழிபடுவார்க்
களிக்க அளிக்கின் றோம்என்று
கோலங் காண எழுந்தருளிக்
குலவும் பெருமை இருவர்க்கும்
ஞாலம் அறியப் படிக்காசு
வைத்தார் மிழலை நாயகனார்.

[ 257]


வறுமை காரணத்தால் உண்டாகும் வேறுபாட்டால் உங்கள் கருத்தில் வாட்டமடைய மாட்டீர்கள் எனினும், உங்களை வழிபட்டு வரும் அடியார்களுக்குத் தருவதற்காக உங்களுக்கு அளிக்கின்றோம் எனக் கூறி, தம் திருக்கோலம் முழுமை யும் அவர்கள் கண்டு கொண்டிருக்கும் பொழுதே மறைந்து, திருவீழி மிழலை இறைவர், விளங்கும் பெருமையுடைய பெருமக்களுக்காக உலகம் அறியும்படி படிக்காசு வைத்தருளினார்.
குறிப்புரை: இவ்விரு பாடல்களும் ஒரு முடிபுடையன.

விண்ணின் றிழிந்த விமானத்தின்
கிழக்கும் மேற்கும் பீடத்தில்
அண்ணல் புகலி ஆண்டகையார்
தமக்கும் ஆண்ட அரசினுக்கும்
நண்ணும் நாள்கள் தொறுங்காசு
படிவைத் தருள நானிலத்தில்
எண்ணில் அடியா ருடன்அமுது
செய்தங் கிருந்தார் இருவர்களும்.

[ 258]


வானத்தினின்றும் இறங்கிய விமானமான அக்கோயிலின் கிழக்கிலும் மேற்கிலுமாக இறைவன் திருமுன்பு உள்ள பீடங்களில், முறையே ஞானசம்பந்தருக்கும், நாவுக்கரசருக்கும், வணங்க வரும் நாள்தோறும் பெருமையுடைய வீழிமிழலை நாதர், படியாகக் காசை வைத்தருள, இவ்வுலகத்தில் உள்ள எண்ணற்ற அடி யார்களுடன் உணவு உண்டு அவ்விருவரும் அங்குத் தங்கியிருந்தனர்.

குறிப்புரை: கிழக்கில் உள்ள பீடம் இறைவரின் திருமுன்பு உள்ளதாகும். மேற்கிலுள்ள பீடம் இறைவர் திருமுன்பிற்கு நேராகப் பின்புறம் உள்ளதாகும்,

அல்லார் கண்டத் தண்டர்பிரான்
அருளால் பெற்ற படிக்காசு
பல்லா றியன்ற வளம்பெருகப்
பரமன் அடியா ரானார்கள்
எல்லாம் எய்தி உண்கவென
இரண்டு பொழுதும் பறைநிகழ்த்திச்
சொல்லால் சாற்றிச் சோறிட்டார்
துயர்கூர் வறுமை தொலைத்திட்டார்.

[ 259]


கரிய கழுத்தையுடைய தேவ தேவரான இறைவரின் திருவருளால், படியாய்ப் பெற்ற காசினால் பலவாறாகப் பொருந்திய வளங்கள் பலவும் நிறைந்திருப்ப, 'முழுமுதற் கடவுளான சிவபெருமானின் அடியவர் எல்லாரும் வந்து உணவு உண்ணுக' என நாளின் இருபோதும் பறைசாற்றி உணவு இட்டனர். அதனால் துன்பம் மிகும் வறுமை நோயைத் தொலைத்திட்டனர்.

குறிப்புரை: எல்லாரும் என்பது எல்லாம் என நின்றது.

ஈசர் மிழலை இறையவர்பால்
இமையப் பாவை திருமுலைப்பால்
தேசம் உய்ய உண்டவர்தாம்
திருமா மகனார் ஆதலினால்
காசு வாசி யுடன்பெற்றார்
கைத்தொண் டாகும் அடிமையினால்
வாசி யில்லாக் காசுபடி
பெற்று வந்தார் வாகீசர்.

[ 260]


திருஞானசம்பந்தர் உமையம்மையாரின் திருமுலைப் பாலை, உலகம் உய்யும் பொருட்டு உண்ட திருமா மகனார் ஆதலால், ஈசரான மிழலை நாதரிடத்துக் குற்றம் உடைய காசினைத் திருஞானசம்பந்தர் பெற்றார். கைத் திருத்தொண்டு செய் கின்ற அடிமையானவர் ஆதலால் அக்குற்றம் இல்லாத காசினைத் திருநாவுக்கரசர் பெற்றார்.
குறிப்புரை: வாசி - குற்றம்; வட்டம் கொடுத்தல். அதனைக் கொடுத் துப் பெறுதலாவது உரிய தொகையில் சிறுதொகை யொன்றைக் கழித்துக் கொண்டு பெறுதல், 'கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும்' எனத் தம்மையும் உளப்படுத்திக் கொண்டு கூறுதலின் ஆளுடைய பிள்ளையாரும் கைத்தொண்டு செய்துவரும் பான்மையர் எனத் தெரியவருகிறது. எனினும் அத்தொண்டை நாவரசருக்கே உரித்தாக்கிக் கூறுதல், அக் கைத்தொண்டில் உழவாரப் பணிசெய்து வந்த வல்வினை நோக்கிக் கூறியதாம். அன்னதோர் வல்வினை யின்றி மலர்தூவல் வழிபடல் போன்ற மெல் வினைகளையே பிள்ளையார் செய்து வந்தமையின் இங்ஙனம் கூறினார்.
ஆதியை அர்ச்சித்தற் கங்கமும் அங்கங்கே
தீதில் திறம்பலவும் செய்வனவும் - வேதியனே
நல்வினையாம் என்றேம் நமக்கும்எளி தானவற்றை
மெல்வினையே என்றதுநாம் வேறு. -திருக்களிற். 17
எனவரும் ஞானநூற் கூற்றும் காண்க.

Go to top
ஆறு சடைமேல் அணிந்தருளும்
அண்ணல் வைத்த படிக்காசால்
ஈறி லாத பொருளுடைய
இருவ ருடைய திருமடங்கள்
சோறு நாளுந் தொண்டர்மகிழ்ந்
துண்ண உண்ணத் தொலையாதே
ஏறு பெருமை புவிபோற்ற
இன்புற் றிருக்கும் அந்நாளில்.

[ 261]


கங்கையாற்றைச் சடைமீது அணிந்து விளங்கும் பெருமையுடைய இறைவர் வைத்த படிக்காசின் பேரருளால், முடிவு இல்லாத பொருளைப் பெற்றவர்களான இரு பெருமக்களின் மடங் களிலும், தொண்டர்கள் மகிழ்ந்து நாளும் சோறு உண்ண உண்ணக் குறைவின்றி ஓங்கி வளரும் பெருமையை உலகம் போற்ற இன்பம் அடைந்திருந்த அந்த நாள்களில்,

குறிப்புரை:

காலந் தவறு தீர்ந்தெங்கும்
கலிவான் பொழிந்து புனல்கலந்து
ஞாலம் எல்லாம் குளிர்தூங்கி
உணவு பெருகி நலஞ்சிறப்ப
மூல அன்பர் இருவர்களும்
மொழிமா லைகளும் பலசாத்தி
நீல கண்டர் உறைபதிகள்
பிறவும் வணங்க நினைவுற்றார்.

[ 262]


கால நிலைமையால் ஏற்பட்ட வறுமை நீங்கி, ஒலிக்கும் மேகம் மழை பொழிந்து நீர் பெருகிப் பரவி உலகம் எங்கும் குளிர்ச்சி மிகுந்து, உணவுப் பொருள்கள் பெருக விளைந்து, நன்மை பெருக, அதனால் உலகம் நன்மை அடைவதற்குக் காரணமாக நின்ற அப்பெருமக்கள் இருவரும், மொழிமாலையான தேவாரப் பதிகங்கள் பலவற்றையும் பாடிச் சாத்தித், திருநீலகண்டரான இறைவர் எழுந் தருளியிருக்கும் பிற திருப்பதிகளுக்கும் சென்று வணங்க வேண்டும் என்று எண்ணினர்.

குறிப்புரை: இது பொழுது நாவரசர் சாத்திய மொழி மாலைகள்: 1. 'பூதத்தின்' (தி. 4 ப. 64) - திருநேரிசை 2. 'வான்சொட்ட' (தி. 4 ப. 95) - திருவிருத்தம் 3. 'என்பொனே' (தி. 5 ப. 13) - திருக்குறுந்தொகை 4. 'கயிலாய' (தி. 6 ப. 51) - திருத்தாண்டகம் 5. 'கண்ணவன் காண்' (தி. 6 ப. 52) - திருத்தாண்டகம் 6. 'மானேறு' (தி. 6 ப. 53) - திருத்தாண்டகம் 7. 'கரைந்து' (தி. 5 ப. 12) - திருக்குறுந்தொகை. இவ்விரு பாடல்களும் ஒரு முடிபுடையன.

வாய்ந்த மிழலை மாமணியை
வணங்கிப் பிரியா விடைகொண்டு
பூந்தண் புனல்சூழ் வாஞ்சியத்தைப்
போற்றிப் புனிதர் வாழ்பதிகள்
ஏய்ந்த அன்பி னாலிறைஞ்சி
இசைவண் டமிழ்கள் புனைந்துபோய்ச்
சேர்ந்தார் செல்வத் திருமறைக்கா
டெல்லை இல்லாச் சீர்த்தியினார்.

[ 263]


அரிதில் கிடைக்கப் பெற்ற திருவீழிமிழலையின் பெருமணியாம் இறைவரை வணங்கிப் பிரிய இயலாத நிலையில் விடை பெற்றுக் கொண்டு, அழகான குளிர்ந்த நீரினாலே சூழப்பட்ட திருவாஞ்சியத்திற்குச் சென்று வழிபட்டு, வினையின் நீங்கி விளங்கிய அறிவினனாய சிவபெருமான் வெளிப்பட நிலையாய் எழுந்தருளிய மற்ற திருப்பதிகளையும் அன்பினால் இறைஞ்சித் தொழுது, இசையும் வளமையுமுடைய தமிழ்ப் பதிகங்களைப் பாடி, மேற் சென்று, அளவில்லாத சிறப்புடையராய அப்பெருமக்கள் இருவரும், செல்வம் மிக்க திருமறைக்காட்டைச் சென்றடைந்தனர்.
குறிப்புரை: நாவரசர் திருவாஞ்சியத்திற்கு முன்னரும் (பா. 216) எழுந்தருளியிருப்பினும், ஆசிரியர் சேக்கிழார் ஆங்கு அணைந்தார் என்ற அளவிலேயே கூறியுள்ளனர். இம்முறை எழுந்தருளிய பொழுது திருவாஞ்சியத்தைப் போற்றி என்பதால் இதுபொழுது பதிகத்தைப் பாடினர் என்றலே பொருந்துவதாம். அப்பதிகம்: 'படையும் பூதமும்' (தி. 5 ப. 67) - திருக்குறுந்தொகை. 'புனிதர் வாழ்பதிகள் . . . . . . . . வண் டமிழ்கள் புனைந்து' என்பதால் திருவாஞ்சியத்திற்கும் திருமறைக் காட்டிற்கும் இடையில் உள்ள பல பதிகளையும் ஞானசம்பந்தரொடு இவரும் சேர்ந்து சென்றிருப்பதால், அங்கெல்லாம் பதிகங்கள் பாடியே சென்றிருக்க வேண்டும். அப்பதிகளாக அறிவன: திருத்தலையாலங் காடு, திருச்சாத்தங்குடி, திருக்கரவீரம், திருவிளமர், திருக்காறாயில், திருத்தேவூர், திருநெல்லிக்கா, திருக்கைச்சினம், திருத்தெங்கூர், திருக்கொள்ளிக்காடு, திருக்கோட்டூர், திருவெண்டுறை, திருத்தண் டலை நீணெறி, திருக்களர் என்பனவாம். (தி. 12 பு. 28 பா. 575) எனி னும் இப்பதிகளுள் திருத்தலையாலங்காடு என்ற பதிக்கு மட்டுமே திருப்பதிகம் கிடைத்துள்ளது, அப்பதிகம்: 'தொண்டர்க்கு' (தி. 6 ப. 79) - திருத்தாண்டகம்.

மன்றல் விரவு மலர்ப்புன்னை
மணஞ்சூழ் சோலை உப்பளத்தின்
முன்றில் தோறுஞ் சிறுமடவார்
முத்தங் கொழிக்கும் மறைக்காட்டுக்
குன்ற வில்லி யார்மகிழ்ந்த
கோயில் புகுந்து வலங்கொண்டு
சென்று சேர்ந்தார் தென்புகலிக்
கோவும் அரசுந் திருமுன்பு.

[ 264]


மணம் கமழும் மலர்களையுடைய புன்னையின் நறுமணம் பொருந்திய சோலைகளையுடைய உப்பளத்தின் முற்றங்கள் எங்கும், சிறுமியர் முத்துக்களைக் கொழிக்கும் சிறப்புடைய திருமறைக் காட்டில், பொன்மயமான மேருமலையை வில்லாகக் கொண்ட இறைவர் மகிழ்ந்து வீற்றிருக்கின்ற கோயிலுள் புகுந்து, வலமாக வந்து, அழகிய சீகாழித் தலைவரான ஞானசம்பந்தரும், நாவரசரும் திரு வாயில் திருமுன்பு அடைந்தனர்.
குறிப்புரை:

பரவை ஓதக் கழிக்கானற்
பாங்கு நெருங்கும் அப்பதியில்
அரவச் சடைஅந் தணனாரை
அகில மறைகள் அர்ச்சனைசெய்
துரவக் கதவந் திருக்காப்புச்
செய்த அந்நாள் முதல்இந்நாள்
வரையும் அடைத்தே நிற்கின்ற
மணிநீள் வாயில் வணங்குவார்.

[ 265]


கடற்கரையில் நீரைக் கொண்ட கழிக்கானல் சூழ நெருங்கியுள்ள அத்திருப்பதியில், பாம்பு ஆடுகின்ற திருச்சடையை யுடைய மறையவரான சிவபெருமானை மறைகள் வழிபட்டு வலிய கதவினைத் திருக்காப்பிட்டு மூடிய அந்நாள் முதலாக, இந்நாள் வரையிலும் திறவாது அடைத்தவாறே இருக்கின்ற அழகிய நீண்ட திருவாயிலை வணங்குபவர்கள்,

குறிப்புரை: கானல் - மணற்பரப்பும் அங்குள்ள தாவரமும்.

Go to top
தொல்லை வேதந் திருக்காப்புச்
செய்த வாயில் தொடர்வகற்ற
வல்ல அன்பர் அணையாமை
மருங்கோர் வாயில் வழியெய்தி
அல்லல் தீர்ப்பார் தமையருச்சிப்
பார்கள் தொழுவா ராம்படிகண்
டெல்லை யில்லாப் பெரும்புகழார்
இதனை அங்குக் கேட்டறிந்தார்.

[ 266]


பழைய மறைகள் திருக்காப்பிட்ட திருவாயில் பூட்டிய நிலையை நீக்கவல்ல அன்பர்கள் வாராததால், அதன் அருகேயுள்ள ஒரு வாயிலின் வழியே சென்று, உயிர்க்குற்ற துயர் அனைத்தையும் நீக்க வல்ல சிவபெருமானை, அன்பர்களாய்த் தொழுவார்கள் மேற்கொள்ளும் முறைமையைப் பார்த்து, அளவற்ற பெரும் புகழையுடைய ஞானசம்பந்தரும், நாவரசரும் அச் செய்தியை அங்குள்ளவர்கள் கூறக் கேட்டு அறிந்தனர்.
குறிப்புரை: இவ்விரு பாடல்களும் ஒரு முடிபுடையன.

ஆங்கப் பரிசை அறிந்தருளி
ஆழித் தோணி புரத்தரசர்
ஓங்கு வேதம் அருச்சனைசெய்
உம்பர் பிரானை உள்புக்குத்
தேங்கா திருவோம் நேர்இறைஞ்சத்
திருமுன் கதவந் திருக்காப்பு
நீங்கப் பாடும் அப்பரென
நீடுந் திருநா வுக்கரசர்.

[ 267]


அதுபொழுது அவ்வியல்பை அவர்கள் அறிந்து, கடல் வெள்ளத்தில் மிதந்த திருத்தோணிபுரத்து மன்னரான ஆளுடைய பிள்ளையார், 'அப்பரே உயர்ந்த மறைகள் வழிபட்ட தேவ தேவரான இறைவனைக் காணக் கோயிலுள் புகுந்து, தடையின்றி நாம் இருவரும் நேர் வாயிலில் வணங்குதற்காகத், திருமுன்புள்ள கதவு திருக்காப்பு நீங்குமாறு பாடியருளுக' எனச் சொல்ல, புகழ்மிக்க நாவரசரும்,

குறிப்புரை:

உண்ணீர் மையினால் பிள்ளையார்
உரைசெய் தருள அதனாலே
பண்ணி னேரு மொழியாள்என்
றெடுத்துப் பாடப் பயன்துய்ப்பான்
தெண்ணீர் அணிந்தார் திருக்காப்பு
நீக்கத் தாழ்க்கத் திருக்கடைக்காப்
பெண்ணீர் இரக்கம் ஒன்றில்லீர்
என்று பாடி இறைஞ்சுதலும்.

[ 268]


ஞானசம்பந்தப் பெருமான் உள்ளத்தில் பொருந் திய அன்பால் இவ்வாறு உரைத்தருள, அதனை ஏற்று, 'பண்ணின் நேர் மொழியாள்' (தி. 5 ப. 10) எனத் தொடங்கிப் பாடவும் இறைவன் அப்பதிகப் பாடலின் பயனைத் துய்க்கும் பொருட்டுத் திருக்கதவைத் திருக்காப்பு நீக்கித் திறப்பதற்குத் தாழ்க்கத், திருக்கடைக் காப்பில், 'எண்ணீர்! இரக்கம் ஒன்று இல்லீர்' என்று நாவரசர் பாடி வணங்கிய அளவில்.

குறிப்புரை: இதுபொழுது அருளிய பதிகம் 'பண்ணின் நேர் மொழியாள்' (தி. 5 ப. 10) எனத் தொடங்கும் திருக்குறுந்தொகைப் பதிகமாகும். இப்பதிகத்தில் வரும் பத்துப் பாடல்களிலும் கதவு திறந்தருள வேண்டிய குறிப்புக்கள் உள்ளன. பதினோராவது பாடல் 'அரக்கனை விரலால் அடர்த்திட்ட நீர் இரக்கம் ஒன்றிலீர்' எனும் குறிப்போடு அமைந்துள்ளது. இத்தொடரே ஆசிரியர் சேக்கிழார், பத்துப் பாடல்கள் வரையிலும் கதவம் திறக்கப்படவில்லை என உணரக் கருவியாயிற்று. இனி அவர் கதவம் திறவாமைக்குரிய காரணத்தைத் திரு வருட் குறிப்பால் உணர்ந்த நிலையில், 'பயன் துய்ப்பான் தெண்ணீர் அணிந்தார் திருக்காப்பு நீக்கத் தாழ்க்க' என்றருளினார். பயன் துய்ப்பான் - நாவரசரின் பாடற் சுவையைத் துய்த்துக் கொண்டிருந் தமையின். அவ்வகையில் திருவுள்ளம் பற்றியிருந்தார்க்கு 'இரக்கம் ஒன்றிலீர்' எனும் வலியதொரு தொடர் திருச்செவிபடக் கதவு திறக்கத் திருவுள்ளம் பற்ற நேர்ந்தது. நாளும் தம் வழிபாட்டு நிறைவில் திருச்சிலம்போசை கேட்டுவந்த சேரமான் பெருமாள் நாயனாருக்கு ஒரு நாள் அவ்வோசை காலந்தாழ்த்துக் கேட்ப, நாயனாரும் அதற்குரிய காரணத்தை அறிதற்கு இறைவனிடம் விண்ணப்பிக்க, இறைவனும்,
'மன்றி னிடைநங் கூத்தாடல் வந்து வணங்கி வன்றொண்டன்
ஒன்றும் உணர்வால் நமைப் போற்றி உரைசேர் பதிகம்
பாடுதலால், நின்று கேட்டு வரத் தாழ்த்தோம்' (தி. 12 பு. 37 பா. 44)
என்று அருளினார் என்பது அவர் வரலாற்றால் அறியப்படுவ தொன்றாம். அவ்வரலாறு இங்கு நினைவு கூரத்தக்கதாம். இவ்வாறன்றிப் பண்ணின் நேர் மொழியாளாய உமை அம்மையாரின் மொழிகளின் பயனைத் துய்த்துக் கொண்டிருந்தமை யின் இறைவன் கதவு திறக்கத் திருவுளம் பற்றவில்லை என்றல் எள்ளளவும் பொருந்தாதாம்.

வேத வனத்தின் மெய்ப்பொருளின்
அருளால் விளங்கு மணிக்கதவங்
காதல் அன்பர் முன்புதிருக்
காப்பு நீங்கக் கலைமொழிக்கு
நாதர் ஞான முனிவருடன்
தொழுது விழுந்தார் ஞாலத்துள்
ஓத ஒலியின் மிக்கெழுந்த
தும்பர் ஆர்ப்பும் மறையொலியும்.

[ 269]


திருமறைக்காட்டில் விளங்கும் மெய்ப்பொருளாகிய இறைவரின் திருவருளினால், விளங்கும் மணிக்கதவமானது, பத்திமையுடைய அன்பர்களின் முன் திருக்காப்பு நீங்கவே, கலை மொழியின் வேந்தரான ஞான முனிவர் சம்பந்தருடன் தொழுது, விழுந்து பணிந்தார். உலகில் கடலோசையை விடத் தேவர்களின் மகிழ்வொலியும் மறைஒலியும் கூடி மேலே எழுந்தன.

குறிப்புரை: இம்மூன்று பாடல்களும் ஒரு முடிபுடையன.

அன்பர் ஈட்டங் களிசிறப்ப
ஆண்ட அரசும் சிவக்கன்றும்
இன்ப வெள்ளத் திடைமூழ்கி
எழுந்துள் புகுந்து தம்பெருமான்
முன்பு பணிந்து போற்றிசைத்துப்
பரவி மொழிமா லைகள்பாடி
என்பு கரைய உள்ளுருகி
இறைஞ்சி அரிதிற் புறத்தணைந்தார்.

[ 270]


அடியவர்கள் கூட்டமானது பெருமகிழ்ச்சி அடைய, ஞானசம்பந்தரும் நாவரசரும் பேரின்பப் பெருக்கில் திளைத்து, எழுந்து உள்ளே புகுந்து, தம் பெருமானின் திருமுன்பு பணிந்து போற்றிப் பதிகங்களைப் பாடி, எலும்பும் கரைய மனம் உருகிப் பணிந்து, அங்கிருந்து அரிதாய் நீங்கிக் கோயில் வாயிலின் வெளியே வந்தனர்.

குறிப்புரை: இதுபொழுது நாவரசர் அருளிய பதிகம்: 'ஓதமால் கடல்'(தி. 5 ப. 9) என்பது திருக்குறுந்தொகை.

Go to top
புறம்பு நின்ற வாகீசர்
புனிதர் அருளால் இக்கதவந்
திறந்தும் அடைத்துஞ் செல்லுநெறி
திருந்த மலையாள் திருமுலையிற்
கறந்த ஞானங் குழைத்தமுது
செய்த புகலிக் கவுணியரை
நிறைந்த கதவம் அடைக்கும்வகை
நீரும் பாடி அருளுமென.

[ 271]


கோயிலின் வாயில் புறத்து வந்தணைந்த நாவரசர், இறைவரின் திருவருளால் இக்கதவு திறக்கவும் அடைக்கவுமாய நெறியில் இயங்கத் திருவுளம் கொண்டவராய், உமையம்மையாரின் திருமுலைப் பாலில் சிவஞானம் குழைத்துண்ட சீகாழியில் தோன்றிய ஞானசம்பந்தரைப் பார்த்து, அருளால் நிறைந்த இக்கதவம் அடைக்கும் வகையை நீரும் அருளுக எனக் கூற.

குறிப்புரை:

சண்பை ஆளுந் தமிழ்விரகர்
தாமும் திருநா வுக்கரசர்
பண்பின் மொழிந்த உரைகொண்டு
பதிகம் பாடும் அவ்வளவில்
கண்பொற் பமைந்த நுதற்காள
கண்டர் அருளால் கடிதுடனே
திண்பொற் கதவந் திருக்காப்புச்
செய்த தெடுத்த திருப்பாட்டில்.


[ 272]


சீகாழித் தலைவரான ஞானசம்பந்தரும் நாவுக்கரசர் அன்பால் கூறியருளியவாறே, பதிகம் பாடிய அவ்வள வில், கண்ணின் அழகமைந்த நெற்றியினையுடைய இறைவரின் அருளால், மிகுந்த விரைவுடன் பதிகம் தொடங்கிய முதல் திருப் பாட்டிலேயே, திண்மையும் அழகும் உடைய திருக்கதவு திருக்காப்புக் கொண்டது.
குறிப்புரை: இவ்விரு பாடல்களும் ஒரு முடிபுடையன.

அதுகண் டுடைய பிள்ளையார்
தாமும் ஆண்ட அரசும்மகிழ்ந்
திதுநம் பெருமான் அருள்செய்யப்
பெற்றோம் என்றங் கிறைஞ்சியபின்
பதிகம் நிரம்பப் பிள்ளையார்
பாடித் தொழுது பணிவுற்றார்
எதிர்பொற் றிருவா யிலின்வழக்கம்
என்றும் நிகழ்ச்சி எய்தியதால்.

[ 273]


அவ்வளவில் திருக்காப்புக் கொண்டமையைப் பார்த்து, ஞானசம்பந்தரும் நாவுக்கரசரும் மகிழ்ந்து, 'நம் இறைவன் இதனை அருள் செய்ய நாம் பெற்றோம்' என வணங்கினர். பின்பு, ஞானசம்பந்தர் தொடங்கிய பதிகத்தைப் பாடி முடித்தார். இறைவரின் திருமுன்பு உள்ள அவ்வாயிற் கதவம் திறக்கவும், மூடவுமான நிலையில் அன்று முதல் என்றும் நிகழலாயிற்று.

குறிப்புரை:

அங்கு நிகழ்ந்த அச்செயல்கண்
டடியார் எல்லாம் அதிசயித்துப்
பொங்கு புளகம் எய்திடமெய்
பொழியுங் கண்ணீர் பாய்ந்திழிய
எங்கும் நிகரொன் றில்லாத
இருவர் பாதம் இறைஞ்சினார்
நங்கள் புகலிப் பெருந்தகையும்
அரசும் மடத்தில் நண்ணியபின்.


[ 274]


அவ்விடத்து நிகழ்ந்த அச்செயலைப் பார்த்த தொண்டர்கள் எல்லோரும் அதிசயம் அடைந்து, உடல் முழுவதும் மயிர்க் கூச்செறியக், கண்களினின்றும் அன்பு நீர் பொழிந்து வழிய, எங்கும், எந்த ஒன்றாலும் ஒப்பில்லாத அவ்விரு பெருமக்களின் திருவடிகளையும் வணங்கினர். பின் நம் சீகாழித் தலைவரும் நாவரசரும் திருமடத்தைச் சேர்ந்தனர்.

குறிப்புரை:

அரிதில் திறக்கத் தாம்பாட
அடைக்க அவர்பா டியஎளிமை
கருதி நம்பர் திருவுள்ளம்
அறியா தயர்ந்தேன் எனக்கவன்று
பெரிதும் அஞ்சித் திருமடத்தில்
ஒருபால் அணைந்து பேழ்கணித்து
மருவும் உணர்வில் துயில்கொண்டார்
வாய்மை திறம்பா வாகீசர்.

[ 275]


தாம் கதவு திறக்குமாறு மிக அரிதில் முயன்று பாடவும், கதவு திருக்காப்புக் கொள்ள ஞானசம்பந்தர் பாடியதன் எளிமையையும் பார்த்து 'இறைவரின் திருவுள்ளக் கிடக்கையை அறியாமல் அயர்ந்தேன்' என்று கவலையடைந்து, மிகவும் அச்சம் கொண்டு, அம் மடத்தின் ஒரு பக்கத்தில் அணைந்து, கண்களை மூடிக் கொண்டு, உணர்வுடைய நிலையில் துயில்வாரான உண்மை நிலையின் வழுவாத நாவரசர்.

குறிப்புரை: இப்பாடல் முதல் 'பாடும் தமிழ்' எனத் தொடங்கும் பா. 1546ஆவது வரை உள்ள வரலாற்றை ஆசிரியர் சேக்கிழார், கூறியிருப்பதற்கு அடித்தளமாயிருப்பது, நாவரசர் அருளிய 'எங்கே என்னை' எனத் தொடங்கும் திருவாய்மூர்த் திருப்பதிகமே ஆகும். அப்பதிகத்தில் வரும் இரண்டாவது பாடலில் 'உன்னி யுன்னி உறங்கு கின்றேனுக்கு' (தி. 5 ப. 50 பா. 2) எனவரும் தொடரே 'திருவுள்ளம் அறியா தயர்ந்தேன் எனக் கவன்று . . . . துயில்கொண்டார்' (பா. 275) எனச் சேக்கிழார் அருளுதற்குக் காரணமாயிற்று.

Go to top
மன்னுஞ் செல்வ மறைக்காட்டு
மணியின் பாதம் மனத்தின்கண்
உன்னித் துயிலும் பொழுதின்கண்
உமையோர் பாகம் உடையவர்தாம்
பொன்னின் மேனி வெண்ணீறு
புனைந்த கோலப் பொலிவினொடுந்
துன்னி அவர்க்கு வாய்மூரில்
இருப்போந் தொடர வாவென்றார்.

[ 276]


செல்வம் பொருந்திய திருமறைக்காட்டின் மணியைப் போன்றவரான இறைவனின் திருவடிகளை மனத்தில் கொண்டு உறங்கும் பொழுது, பொன்னார்ந்த மேனியில் வெண்ணீறு பூசிய திருக்கோலப் பொலிவுடனே உமையம்மையாரை ஒரு கூற்றில் கொண்ட இறையவர் தாமே எழுந்தருளி 'நாம் திருவாய்மூரில் இருப்போம். அங்குத் தொடர்ந்து வா!' எனத் திருவாய் மலர்ந் தருளினார்.
குறிப்புரை: எங்கே யென்னை யிருந்திடந் தேடிக்கொண்
டங்கே வந்தடை யாள மருளினார்
தெங்கே தோன்றுந் திருவாய்மூர்ச் செல்வனார்
அங்கே வாவென்று போனா ரதென்கொலோ.
(தி. 5 ப. 50 பா. 1) எனவரும் திருக்குறுந்தொகைப் பதிகமே இவ்வாறு வரலாறு அமைதற்கு அடித்தளம் ஆயிற்று.

போதம் நிகழ வாஎன்று
போனார் என்கொல் எனப்பாடி
ஈதெம் பெருமான் அருளாகில்
யானும் போவேன் என்றெழுந்து
வேத வனத்தைப் புறகிட்டு
விரைந்து போக அவர்முன்னே
ஆதி மூர்த்தி முன்காட்டும்
அவ்வே டத்தால் எழுந்தருள.

[ 277]


நாவரசர் அறிதுயிலினின்று விழிப்பு நிலை எய்த, 'என்னை அங்கே வா என்று சொல்லிச் சென்றார். அஃது என்னவோ!' என்ற கருத்துக் கொண்ட திருக்குறுந்தொகைப் பதிகம் பாடி 'இதுவே எம்பெருமானின் அருளாக அமையுமாயின் அவ்வாணையின் படியே நானும் போவேன்!' என்று துணிந்து எழுந்து, திருமறைக்காடு புறகிடுமாறு விரைவாகச் சென்றார். செல்ல, ஆதி முதல்வரான இறைவர் தாம் முன்பு காட்டிய அதே திருவடிவோடு அவர்தம் முன்பு எழுந்தருளிப் போக,

குறிப்புரை: தஞ்சே கண்டேன் தரிக்கிலா தாரென்றேன்
அஞ்சே லுன்னை யழைக்கவந் தேனென்றார்
உஞ்சே னென்றுகந் தேயெழுந் தோட்டந்தேன்
வஞ்சே வல்லரே வாய்மூ ரடிகளே. (தி. 5 ப. 50 பா. 3) எனவரும் மூன்றாவது பாடல் இறைவன் முன்செல, நாவரசர் பின் சென்றமைக்கு அரணாகின்றது.

சீரார் பதியி னின்றெழுந்து
செல்லுந் திருநா வுக்கரசர்
ஆரா அன்பில் ஆரமுதம்
உண்ண எய்தா வாறேபோல்
நீரார் சடையார் எழுந்தருள
நெடிது பின்பு செல்லுமவர்
பேரா ளரைமுன் தொடர்ந்தணையப்
பெறுவார் எய்தப் பெற்றிலரால்.

[ 278]


சிறந்த அத்திருப்பதியினின்றும் புறப்பட்டுச் செல்லும் நாவரசர், அயராத அன்பினால் நிறைந்த அமுதம் கையில் கிடைக்கப் பெற்றும் வாயில் உண்ணக் கிடைக்காதவாறு போலக், கங்கை பொருந்திய சடையுடைய பெருமான் முன்னே செல்ல, நெடுந் தொலைவு பின்னே தொடர்ந்து செல்பவர், பெருமையுடைய அவரை அணைய முயன்றும் எய்தப் பெற்றிலர்.
குறிப்புரை: கைக் கெட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது முதுமொழி. அதனை வைத்தே இங்ஙனம் ஆசிரியர் கூறுவாராயினர். பெருமான் திருவடிவு கொண்டு தம் முன்பு செல்ல, இவரும் அவரை யணைய முயன்றும், எய்த முடியவில்லை என்பது கருத்து.
கழியக் கண்டிலேன் கண்ணெதிரே கண்டேன்
ஒழியப் போந்திலே னொக்கவே யோட்டந்தேன்
வழியிற் கண்டிலேன் வாய்மூ ரடிகள்தம்
சுழியிற் பட்டுச் சுழல்கின்ற தென்கொலோ. (தி. 5 ப. 50 பா. 4) எனவரும் நான்காவது பாடல் முதல் ஏழாவது பாடல் வரை உள்ள பகுதி இப்பாடற் கருத்தமைவதற்கு நிலைக்களனாய் உள்ளன.

அன்ன வண்ணம் எழுந்தருளி
அணித்தே காட்சி கொடுப்பார்போல்
பொன்னின் கோயில் ஒன்றெதிரே
காட்டி அதனுட் புக்கருளத்
துன்னுந் தொண்டர் அம்மருங்கு
விரைந்து தொடரப் போந்தபடி
மன்னும் புகலி வள்ளலார்
தாமுங் கேட்டு வந்தணைந்தார்.


[ 279]


சிவபெருமான் அங்ஙனம் எழுந்தருளி, அருகில் காட்சி தருபவர் போல் பொன்மயமான திருக்கோயில் ஒன்றை அவருக்கு முன்னதாகத் தோற்றுவித்து, அதற்குள் புகுந்தருளினார். அவரை அடைய நெருங்கி வரும் நாவரசர் விரைவாக அவரைத் தொடரவும் இவ்வாறு அவர் சென்றதை நிலை பெற்ற சீகாழித் தலைவரான ஞானசம்பந்தரும் கேட்டு அங்கு வந்து சேர்ந்தார்.

குறிப்புரை:

அழைத்துக் கொடுபோந் தணியார்போல்
காட்டி மறைந்தார் எனஅயர்ந்து
பிழைத்துச் செவ்வி அறியாதே
திறப்பித் தேனுக் கேயல்லால்
உழைத்தா மொளித்தால் கதவந்தொண்
டுறைக்கப் பாடி அடைப்பித்த
தழைத்த மொழியார் உப்பாலார்
தாமிங் கெப்பால் மறைவதென.

[ 280]


'என்னை வா என்று அழைத்துக் கொண்டு வந்து அருகில் கூட வருபவரைப் போலக் காட்டி மறைந்து விட்டார்' என எண்ணித், 'தங்கள் செவ்வியை அறியாமல் கதவு திறக்கச் செய்த பிழையுடைய எனக்குப் பக்கத்திலிருந்து தாங்கள் மறைந்து அருள லாமே அல்லாது, திருத்தொண்டின் உறைப்பு விளங்கப் பாடி அக் கதவைக் காப்புக் கொள்ளுமாறு செய்த, செழுமை வாய்ந்த செஞ்சொற் களையுடைய ஞானசம்பந்தர் இடையே உள்ளார், அவருக்குத் தாங்கள் இனி மறைந்தருளுவது எங்ஙனம்?'' என்று பாட,

குறிப்புரை: உப்பால் - தொலைவுக்கும் அருகிற்கும் இடைப்பட்ட இடம்.
திறக்கப் பாடிய என்னினுஞ் செந்தமிழ்
உறைப்புப் பாடி யடைப்பித்தா ருந்நின்றார்
மறைக்க வல்லரோ தம்மைத் திருவாய்மூர்ப்
பிறைக்கொள் செஞ்சடை யாரிவர் பித்தரே. (தி. 5 ப. 50 பா. 8) என வரும் பாடல் இக்கருத்தமைவிற்கு அரணாகின்றது.

Go to top
மாட நீடு திருப்புகலி
மன்னர் அவர்க்கு மாலயனும்
நேடி இன்னங் காணாதார்
நேரே காட்சி கொடுத்தருள
ஆடல் கண்டு பணிந்தேத்தி
அரசுங் காணக் காட்டுதலும்
பாட அடியார் என்றெடுத்துப்
பரமர் தம்மைப் பாடினார்.


[ 281]


மாளிகைகள் பொருந்திய சீகாழியின் மன்னவ ரான ஞானசம்பந்தருக்கு, மாலும் அயனும் தேடி இன்னமும் காண முடியாதவரான சிவபெருமான் வெளிப்பட்டு நேரே காட்சி தந்தருள, அக்கூத்தைப் பிள்ளையார் பார்த்துப் பணிந்து, துதித்து, நாவுக்கரசரும் காணுமாறு காட்டியருளுதலும், நாவரசர் கண்டு 'பாட அடியார்' எனத் தொடங்கி இறைவனைப் பாடிட.

குறிப்புரை: உடன்வந்த தமக்கு இறைவன் மறையினும், பிள்ளை யாருக்கு மறைக்கத் தகுமோ? என நாவரசர் விண்ணப்பிக்க, இறைவனும் அவருக்குக் காட்சி கொடுத்தருளினன். கண்ட பிள்ளையார் தாமும் அத்திருவடிவைக் கண்டமையைக் காட்ட அரசரும் மீண்டும் கண்டு மகிழ்ந்தனர். அந்நிலையில் 'பாட அடியார்' (தி. 6 ப. 77) எனத் தொடங்கும் அரிய பதிகத்தைப் பாடினர். திருமறைக்காட்டிலிருந்து திருவாய்மூர் வரை நாவரசரை அழைத்து வந்த இறைவனே, திருவாய்மூர் அணுக மறைந்தருளினன். அந்நிலையிலேயே, இறைவன் தனக்கு மறைப்பினும் இடையில் வந்திருக்கும் பிள்ளையாருக்கும், மறைக்கப் போமோ என விண்ணப்பிக்க, இறைவனும் அவருக்குக் காட்ட, அவரும் தாம் கண்டமையை இவருக்குக் காட்ட நேர்ந்தது.

பாடுந் தமிழ்மா லைகள்கொண்டு
பரமர் தாமும் எழுந்தருள
நீடுந் திருவாய் மூரடைந்து
நிலவுங் கோயில் வலஞ்செய்து
சூடும் பிறையார் பெருந்தொண்டர்
தொழுது போற்றித் துதிசெய்து
நாடுங் காதல் வளர்ந்தோங்க
நயந்தந் நகரில் உடனுறைந்தார்.

[ 282]


இவ்வகையில் பாடிய தமிழ்ப் பதிகங்களை ஏற்றுக் கொண்டருளிய சிவபெருமான் எழுந்தருள, பிறையைச் சூடும் சிவபெருமானின் தொண்டரான நாவரசர், நீடும் திருவாய்மூரை அடைந்து, நிலை பெற்ற கோயிலை வலம் வந்துதொழுதும் போற்றியும் துதி செய்தும் அன்பு பெருக விரும்பி அத்திருநகரில் ஞானசம்பந் தருடன் வீற்றிருந்தார்.
குறிப்புரை:

ஆண்ட அரசும் பிள்ளையார்
உடனே அங்கண் இனிதமர்ந்து
பூண்ட காதல் பொங்கியெழ
வாய்மூர் அடிகள் அடிபோற்றி
மூண்ட அன்பின் மொழிமாலை
சாத்தி ஞான முனிவரொடு
மீண்டு வந்து திருமறைக்காட்
டெய்தி விமலர் தாள்பணிந்தார்.

[ 283]


நாவரசர் ஞானசம்பந்தருடனே அத்திருப் பதியில் இனிதாய் வீற்றிருந்து பொருந்திய காதல் மேன்மேல் எழுந்து பொங்கத் திருவாய்மூர்ப் பெருமானின் திருவடிகளை வணங்கி, மிக்க அன்பால் திருப்பதிகத் தமிழ் மாலைகளைப் பாடியருளி, ஞான முனிவரான சம்பந்தரோடும் போந்தருளித் திருமறைக்காட்டை அடைந்து, வினையின் நீங்கி விளங்கியருளும் இறைவரின் திருவடி களைப் பணிந்தார்.

குறிப்புரை: இதுபொழுது திருவாய்மூரில் அருளிய பதிகம் கிடைத்திலது.

ஆதி முதல்வர் தமைப்பணிந்தங்
கான பணிசெய் தமருநாள்
சீத மதிவெண் குடைவளவர்
மகளார் தென்னன் தேவியார்
கோதில் குணத்துப் பாண்டிமா
தேவி யார்முன் குலச்சிறையார்
போத விட்டார் சிலர்வந்தார்
புகலி வேந்தர் தமைக்காண.

[ 284]


ஆதி முதல்வரான திருமறைக்காட்டு இறைவரை வணங்கித், தம்மால் இயன்ற திருப்பணிகளைச் செய்து கொண்டு அங்கு அரசர் வீற்றிருக்கும் நாள்களில், குளிர்ந்த சந்திரன் போன்ற வெண்கொற்றக் குடையினையுடைய சோழருக்கு மகளாரும், பாண்டி மன்னருக்கு மனைவியாரும் ஆன குற்றம் இல்லாத குணத்தில் சிறந்த பாண்டிமா தேவியாராலும், அவர் திருமுன்பு பணி செய்துவரும் குலச்சிறையாராலும் செல்ல விடுக்கப்பட்ட சிலர், சீகாழித் தலைவரான ஞானசம்பந்தரைக் காண்பதற்காக வந்தனர்.

குறிப்புரை:

வந்து சிவனார் திருமறைக்கா
டெய்தி மன்னு வேணுபுரி
அந்த ணாளர் தமக்கறிவித்
தவர்பால் எய்தி அடிவணங்கச்
சிந்தை மகிழ்ந்து தீதின்மை
வினவத் தீங்கும் முளவாமோ
இந்த உலகம் உயவந்தீர்
இருதாள் நினைவார்க் கென்றுரைப்பார்.

[ 285]


அங்ஙனம் அனுப்பப்பட்டவர்கள் வந்து, சிவபெருமான் விரும்பி எழுந்தருளியிருக்கும் திருமறைக் காட்டில் ஞானசம்பந்தரின் திருமடத்தை அடைந்து, நிலைபெற்ற சீகாழியின் மறையவர் பெருமானான ஆளுடைய பிள்ளையாருக்குத் தாம் வந்த செய்தியைத் தெரிவித்து, அவர் ஆணையின் வண்ணம் அவர் முன்பு சேர்ந்து, அவருடைய திருவடிகளை வணங்க, அவர் திருவுள்ளம் மகிழ்ந்து 'அனைவரும் தீதிலராய் உள்ளனரோ?' என்று வினவ, 'இவ்வுலகம் உய்யத் தோன்றியருளிய தங்கள் திருவடிகளை நினைப் பவர்க்குத் தீமையும் உண்டோ?' எனத் தொடங்கிச் சொல்பவர் ஆகி.

குறிப்புரை:

Go to top
சைவ நெறிவை திகம்நிற்கச்
சழக்கு நெறியைத் தவமென்னும்
பொய்வல் அமணர் செயல்தன்னைப்
பொறுக்க கில்லோம் எனக்கேட்டே
அவ்வன் தொழிலோர் செயல்மாற்றி
ஆதி சைவ நெறிவிளங்கத்
தெய்வ நீறு நினைந்தெழுந்தார்
சீர்கொள் சண்பைத் திருமறையோர்.

[ 286]


'மறைகளில் சொல்லப்பட்ட சைவ நெறியானது என்றும் விளங்கி நிற்க, குற்றம் உடைய அவநெறியைத் தவநெறி என்று கூறும் பொய்ம்மையில் வல்ல சமணர்களின் கொடிய செயல் களைப் பொறுக்க இயலாதவர் ஆனோம்' என்று கூறக் கேட்ட பிள்ளையார், அக்கொடிய செயல்களை மாற்றி முதன்மையான சைவநெறி விளங்க வேண்டும் என்று, தெய்வ நீற்றின் துணையை நினைந்து கொண்டு, சிறப்புடைய சீகாழித் தலைவரான ஞானசம்பந்தர் அங்குச் செல்லத் துணிந்தாராக.

குறிப்புரை:

ஆய பொழுது திருநாவுக்
கரசு புகலி ஆண்டகைக்குக்
காய மாசு பெருக்கியுழல்
கலதி அமணர் கடுவினைசெய்
மாயை சாலம் மிகவல்லார்
அவர்மற் றென்னை முன்செய்த
தீய தொழிலும் பலகெட்டேன்
செல்ல இசையேன் யான்என்றார்.

[ 287]


அவ்வமயத்தில் நாவரசர், சீகாழி ஆண் டகையாரான ஞானசம்பந்தரிடம் 'உடலின் அழுக்கைக் கழுவாமல் பெருக்கியவாறே திரியும் தீயவரான சமணர்கள், கொடுமை செய்யும் வஞ்சனைகளில் மிகவும் வல்லவர்கள்; அவர்கள் எனக்கு முன் நாள்களில் செய்த கொடுமைகளும் பல ஆகும். ஆதலின் தாங்கள் அங்குச் செல்ல நான் ஒருப்படேன்' என்று அருள் செய்தார்.

குறிப்புரை: இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபுடையன.

என்று கூற எல்லையிலா
நீறு போற்றும் இருவரையும்
சென்று காணும் கருத்துடையேன்
அங்குத் தீங்கு புரிஅமணர்
நின்ற நிலைமை அழிவித்துச்
சைவ நெறிபா ரித்தன்றி
ஒன்றுஞ் செய்யேன் ஆணைஉம
தென்றார் உடைய பிள்ளையார்.

[ 288]


நாவரசர் இவ்வாறு கூறக்கேட்ட ஞானசம்பந்தர், 'அளவில்லாத பெருமை பொருந்திய திருநீற்றைப் போற்றுகின்ற அவ்விரு பெருமக்களையும் அங்குச் சென்று காணும் கருத்து டையேன். அத்தீமைகளைச் செய்கின்ற சமணர்களின் நிலைமையை அழிவித்துச் சைவ நெறியை வளர்த்தன்றி வேறு ஒரு செயல் செய்ய மாட்டேன்! உம் ஆணை!' என்று அருளிச் செய்தவராய்,

குறிப்புரை: 'நனிபள்ளி உள்க வினை கெடுதல் ஆணை நமதே' (தி. 2 ப. 84 பா. 11) என முன்னரும், 'ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே' (தி. 2 ப. 85 பா. 11) எனப் பின்னரும் கூறியருளும் பிள்ளையார், ஈண்டு ஆணை உமதே என அரசர் மீது வைத்துக் கூறியது, தாம் மதுரைக்குப் போதற்கு ஒருப்படாத அவரை ஒருப்படுத்தவும், அவ்வாறு செல்வதும், உம் ஆணை வழியன்றி என்னளவிலன்று என்பதன் மூலம் அவர்தம் ஆணையைப் பெறவுமாம். உமது ஆணை துணைநிற்கும் என்பது கருத்து.

போமா துணிந்து நீர்அங்குப்
போதப் போதா அவ்வமணர்
தீமா யையினை யானேபோய்ச்
சிதைத்து வருகின் றேன்என்ன
ஆமா றெல்லாம் உரைத்தவரை
மறுக்க மாட்டா தரசிருப்பத்
தாமா தரவால் தமிழ்நாட்டில்
போனார் ஞானத் தலைவனார்.

[ 289]


பாண்டி நாட்டுக்குச் செல்ல ஒருப்பட்ட ஞான சம்பந்தர், நீவிரும் அங்கு வருதல் வேண்டா, அச்சமணர்களின் தீய வஞ்சனைகயெல்லாம் யானே சென்று அழிவித்து வருகின்றேன் என்று கூற, அவர்தம் எழுச்சியையும் உணர்ச்சியையும் மறுக்க மாட்டாதவர் ஆகி, நாவுக்கரசர் அங்குத் தங்க, சிவஞானத் தலைவர் ஆன சம்பந்தர் அவரைப் பிரிந்து தாம் மட்டும் பெருகிய அன்புடன் பாண்டி நாட்டிற்குச் சென்றார்.

குறிப்புரை: இவ்விரு பாடல்களும் ஒருமுடிபுடையன.

வேணு புரக்கோன் எழுந்தருள
விடைகொண் டிருந்த வாகீசர்
பூணும் அன்பால் மறைக்காட்டில்
புனிதர் தம்மைப் போற்றிசைத்துப்
பேணி இருந்தங் குறையுநாள்
பெயர்வார் வீழி மிழலையமர்
தாணு வின்தன் செய்யகழல்
மீண்டுஞ் சார நினைக்கின்றார்.

[ 290]


சீகாழித் தலைவரான ஞானசம்பந்தர் அந்நிலை யில் பாண்டி நாட்டிற்கு எழுந்தருளவே, அவரிடம் விடை கொண்டு அங்குத் தங்கியிருந்த திருநாவுக்கரசரும், தாம் கொண்ட அன்பினால் திருமறைக்காட்டில் வீற்றிருக்கும் இறைவனை வணங்கிப் போற்றி செய்து, அங்கு வீற்றிருந்த அமயத்து, அங்கிருந்தும் புறப்பட்டுச் செல்வாராகித் திருவீழிமிழலையில் வீற்றிருக்கும் சிவபெருமானின் சிறந்த திருவடிகளை மீளவும் அடைந்து வணங்க நினைப்பவராய்.

குறிப்புரை: இதுபோது மறைக்காட்டுப் புனிதர் தம்மைப் போற்றிசைத்த பதிகங்கள்: 1. 'இந்திரனோடு' (தி. 4 ப. 33) - திருநேரிசை. 2. 'தேரையும் மேல் கடாவி' (தி. 4 ப. 34) - திருநேரிசை. 3. 'தூண்டு சுடரனைய' (தி. 6 ப. 23) - திருத்தாண்டகம்.

Go to top
சோலை மறைக்காட் டமர்ந்தருளுஞ்
சோதி அருள்பெற் றகன்றுபோய்
வேலை விடமுண் டவர்வீழி
மிழலை மீண்டுஞ் செல்வன் என
ஞாலம் நிகழ்ந்த நாகைக்கா
ரோணம் பிறவுந் தாம்பணிந்து
சாலு மொழிவண் டமிழ்பாடித்
தலைவர் மிழலை வந்தடைந்தார்.

[ 291]


சோலைகள் சூழ்ந்த திருமறைக்காட்டில் விரும்பி வீற்றிருக்கும் பேரொளிப் பிழம்பாய சிவபெருமானின் திருவருளைப் பெற்று, அங்கிருந்து நீங்கிச் சென்று, கடலில் தோன்றிய நஞ்சினை உண்ட சிவபெருமானின் திருவீழிமிழலையை மீண்டும் அடைவேன் என்று எண்ணிய நிலையில், உலகில் விளங்கிய திருநாகைக்காரோ ணத்தையும், அப்பதி முதலாய பிற பதிகளையும் வணங்கிச் சால்பு டைய மொழிகளால் ஆய திருப்பதிகங்களைப் பாடித் தலைவரின் திருவீழிமிழலையை அடைந்தார்.
குறிப்புரை: திருநாகைக்காரோணத்தில் அருளிய பதிகங்கள்: 1. 'மனைவிதாய்' (தி. 4 ப. 71) - திருநேரிசை. 2. 'வடிவுடை மாமலை' (தி. 4 ப. 103) - திருவிருத்தம். 3. 'பாணத்தான்' (தி. 5 ப. 83) - திருக்குறுந்தொகை. 4. 'பாரார் பரவும்' (தி. 6 ப. 22) - திருத்தாண்டகம். பிற பதிகளாவன: 1. திருப்பயற்றூர் - 'உரித்திட்டார்' (தி. 4 ப. 32) - திருநேரிசை. 2. திருக்கொண்டீச்சரம்: 'வரைகிலேன்' (தி. 4 ப. 67) - திருநேரிசை. 'கண்ட பேச்சினில்' (தி. 5 ப. 70) - திருக்குறுந்தொகை. இவ்விரு பாடல்களும் ஒருமுடிபுடையன.

வீழி மிழலை தனைப்பணிந்து
வேத முதல்வர் தாமிருப்ப
ஆழி வலமேந் தியஅரியால்
ஆகா சத்தின் நின்றிழிந்த
வாழி மலர்ந்த கோயில்தனில்
மன்னும் பொருளைப் போற்றிசைத்துத்
தாழும் நாளிற் பிறபதியும்
பணியுங் காதல் தலைநிற்பார்.

[ 292]


திருவீழிமிழலையை அடைந்த நாவரசர், அப் பதியின் புறத்திருந்தவாறே வணங்கிச் சென்று, மறையின் முதல்வரான சிவபெருமான் வீற்றிருப்பதற்காகத் திருமாலால் விண்ணுலகத்தில் நின்றும் விமானத்தோடு கீழே கொணரப்பட்டு நிலைபெற விளங்கிய கோயிலில் விளங்கும் இறைவரைப் போற்றி விரும்பியிருந்த அக் காலத்தில், அவர் அங்குள்ள பிறபதிகளையும் வணங்க வேண்டும் என்ற ஆசையுடையராய்,

குறிப்புரை:

பூவிற் பொலியும் புனற்பொன்னிக்
கரைபோய்ப் பணிவார் பொற்பமைந்த
ஆவுக் கருளும் ஆவடுதண்
டுறையார் பாதம் அணைந்திறைஞ்சி
நாவுக் கரசர் ஞானபோ
னகர்க்குச் செம்பொன் ஆயிரமும்
பாவுக் களித்த திறம்போற்றிப்
போந்து பிறவும் பணிகின்றார்.

[ 293]


இவ்வுலகத்தில் விளங்கும், நீரையுடைய காவிரி யாற்றின் கரை வழியாய்ச் சென்று, பல பதிகளையும் வணங்கியவாறே செல்பவரான நாவுக்கரசர், பசு வடிவத்துடன் பூசித்த உமையம்மையா ருக்கு அருள் செய்த திருவாவடுதுறை இறைவரின் திருவடிகளைச் சேர்ந்து வணங்கி, ஞான அமுதுண்ட காழிப்பெருமானுக்கு அவரது பாடலுக்காக அங்கே இறைவர் ஆயிரம் பொற்காசுகளை வழங்கி யருளிய திறத்தை வைத்துப் போற்றி, அங்கிருந்து புறப்பட்டுப் பிற பதிகளையும் வணங்கிச் செல்லலானார்.
குறிப்புரை: திருவாவடுதுறையில் அருளிய பதிகம், 'மாயிரு ஞாலம் எல்லாம்' எனத் தொடங்கும் திருநேரிசைப் பதிகமாகும். இப்பாடலில், ''காயிரும் பொழில்கள் சூழ்ந்த கழுமல வூரர்க் கம்பொன் ஆயிரம் கொடுப்பர் போலும் ஆவடு துறைய னாரே. '' (தி. 4 ப. 56 பா. 1) என வருவதை நினைவு கூர்ந்தே ஆசிரியர் சேக்கிழார், 'ஞானபோன கர்க்குச் சொம்பொன் ஆயிரமும் பாவுக்களித்த திறம் போற்றி' என்று அருளுகின்றார். பிற பதிகளாவன: 1. திருக்கோழம் பம்: 'வேழம் பத்தைவர்' (தி. 5 ப. 64) - திருக்குறுந்தொகை. 2. திரு நல்லம்: 'கொல்லத் தான்' (தி. 5 ப. 43) - திருக்குறுந்தொகை. இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

செய்ய சடையார் பழையாறை
எய்த அதனில் செல்பொழுதின்
மையல் அமணர் மறைத்தவட
தளியின் மன்னுஞ் சிவனாரைக்
கைகள் கூப்பித் தொழுதருளக்
கண்ட வாற்றால் அமணர்கள்தம்
பொய்கொள் விமானம் எனக்கேட்டுப்
பொறாத உள்ளம் மிகப்புழுங்கி.

[ 294]


அங்ஙனம் செல்பவரான நாவரசர், சிவந்த சடையையுடைய சிவபெருமான் எழுந்தருளிய பழையாறை என் னும் பதியைச் சேரச் செல்லும் பொழுது, மயக்கமுடைய சமணர்கள் மறைத்த பழையாறை வடதளிக் கோயிலில் வீற்றிருந்தருளும் சிவ பெருமானை, நாவரசர் கைகூப்பித் தொழுத அளவில், திருவருட் குறிப்பால் திருவுள்ளத்துள் உணர்ந்த உணர்வுமீதூர, அது சமணர்கள் வஞ்சனையால் செய்த விமானம் என்று அங்குள்ளவரிடம் கேட்டுப், பொறுக்க இயலாத திருவுள்ளத்தில் புழுக்கம் அடைந்து.
குறிப்புரை:

அந்த விமானந் தனக்கருகா
ஆங்கோர் இடத்தின் பாங்கெய்திக்
கந்த மலருங் கடிக்கொன்றை
முடியார் செய்ய கழலுன்னி
மந்த அமணர் வஞ்சனையால்
மறைத்த வஞ்சம் ஒழித்தருளிப்
பந்தங் கொண்ட குண்டர்திறம்
பாற்றும் என்று பணிந்திருப்பார்.

[ 295]


அங்ஙனம் அறிந்த அளவில், பொய்மை கொண்ட விமானத்தின் அண்மையில், ஆங்கு ஓரிடத்தின் அருகாகச் சேர்ந்து, நறுமணமுடைய இதழ்கள் விரிந்த கொன்றை மாலையைச் சூடிய முடியையுடைய சிவபெருமானின் திருவடிவை நினைந்து, 'அறிவற்ற சமணர்கள் வஞ்சனையால் மறைத்த வஞ்சகத்தை ஒழித்து, உலகியல் வழிக்கட்டுண்டு கிடக்கும் அச்சமணர்களின் திறத்தை அழிப்பீராக!' என வேண்டி வணங்கியிருப்பவர்,

குறிப்புரை:

Go to top
வண்ணங் கண்டு நான்உம்மை
வணங்கி யன்றிப் போகேனென்
றெண்ண முடிக்கும் வாகீசர்
இருந்தார் அமுது செய்யாதே
அண்ண லாரும் அதுவுணர்ந்தங்
கரசு தம்மைப் பணிவதற்குத்
திண்ண மாக மன்னனுக்குக்
கனவில் அருளிச் செய்கின்றார்.

[ 296]


'நான் உம் திருமேனியினைக் கண்ணால் கண்டால் அன்றி அப்பால் செல்ல மாட்டேன்' என்று முறையிட்டு, உறுதி கொண்டு, தம் நினைவை எண்ணியபடி முடிக்கும் நாவரசர் உணவு கொள்ளாமல் இருப்ப, இறைவரும் அதனைத் தம் திருவுள்ளத்துள் கொண்டு, அத்திருப்பதியில் நாவரசர் வணங்குவ தற்காக, மன்னனுக்குக் கனவில் தோன்றி உறுதிபெற அருள் செய் கின்றவராய்,

குறிப்புரை:

அறிவில் அமணர் நமைமறைப்ப
இருந்தோம் என்றங் கடையாளக்
குறிகள் அறியச் செய்தருளி
நம்மை அரசு கும்பிடுவான்
நெறியில் அமணர் தமையழித்து
நீக்கிப் போக்கென் றருள்புரியச்
செறிவில் அறிவுற் றெழுந்தவனுஞ்
செங்கை தலைமேற் குவித்திறைஞ்சி.

[ 297]


'அறிவற்ற சமணர்கள் நம் கோயிலை மறைக்க நாம் அதனுள்ளே இருந்தோம்' என்றருளி, அவ்விடத்தைக் காணக் கூடிய அடையாளக் குறிகளையும் அருள் செய்து, 'நம்மை நாவரசு வணங்குவதற்காக, நன்னெறியில் ஒழுகாத சமணர்களை அழித்து, அங்கிருந்து அகலச் செய்வாயாக!' என்று அருள் செய்தார். துயில் நீங்கி எழுந்த அரசனும் அதனை உளங்கொண்ட அளவில் தன் செங் கையைத் தலைமீது கூப்பி வணங்கிப் பின்.
குறிப்புரை:

கண்ட வியப்பு மந்திரிகட்
கியம்பிக் கூடக் கடிதெய்தி
அண்டர் பெருமான் அருள்செய்த
அடையா ளத்தின் வழிகண்டு
குண்டர் செய்த வஞ்சனையைக்
குறித்து வேந்தன் குலவுபெருந்
தொண்டர் தம்மை அடிவணங்கித்
தொக்க அமணர் தூர்அறுத்தான்.

[ 298]


தான் கனவில் கண்ட வியப்பான காட்சியை அமைச்சர்களுக்குச் சொல்லி, அவர்களுடன் தானும் விரைவாய் அவ் விடத்திற்குச் சென்றவன், கனவில் பெருமான் அருளிய அடையாளங் களின் வழியே சென்று, அங்குச் சிவ வடிவத்தைப் பார்த்தான்; சமண ராகிய கீழானவர்கள் செய்த வஞ்சனையை வெளிப்படச் செய்த நாவரசரின் திருவடிகளை வணங்கி, அங்கிருந்த சமணர்களான தூருகளை அழித்தான்.
குறிப்புரை: 'மூக்கினால் முரன்று ஓதி அக்குண்டிகை, தூக்கினார் குலந்தூ ரறுத்தே தனக்கு ஆக்கினார் அணி ஆறை வடதளி' (தி. 5 ப. 58 பா. 2) எனவரும் பகுதி இவ்வரலாற்றிற்கு அரணாகின்றது. அரசன் பெயர், நாடு, காலம் ஆகியன அறிதற்கியன்றில.

ஆனை இனத்தில் துகைப்புண்ட
அமணா யிரமும் மாய்ந்ததற்பின்
மேன்மை அரசன் ஈசர்க்கு
விமான மாக்கி விளக்கியபின்
ஆன வழிபாட் டர்ச்சனைக்கு
நிபந்தம் எல்லாம் அமைத்திறைஞ்ச
ஞான அரசும் புக்கிறைஞ்சி
நாதர் முன்பு போற்றுவார்.

[ 299]


யானையினால் அழிக்கப்பட்ட சிறிய புதர்போல் மன்னனின் பணியாளர்களினால் அழிக்கப்பட்ட அச்சமணர் பள்ளியில் தங்கிய ஆயிரம் சமணர்களும் அழிந்த பின்பு, மன்னன் சிவபெருமானுக்கு உரிய விமானத்தையும் ஆக்கி உரியவாறு விளங்கச் செய்து, சிவாகமத்தில் விதித்த முறைப்படி வழிபடுதற்கான பூசனைக்கு வேண்டிய பொருள்களையெல்லாம் அறக்கட்டளைகளாக வகுத்து அமைத்துப் பின் நாவரசரை வணங்கினான். ஞான வள்ளலான நாவரசரும் அக் கோயிலுக்குள் சென்று இறைவரின் திருமுன்பு நின்று போற்றுவாராய்,

குறிப்புரை: 'வாயிருந் தமிழே படித்து ஆளுறா ஆயிரம் சமணும் அழிவாக் கினான் பாயிரும் புனல் ஆறை வடதளி' (தி. 5 ப. 58 பா. 9) என வரும் பாடற் பகுதியே இவ்வரலாற்றிற்கு அரணாகின்றது.

தலையின் மயிரைப் பறித்துண்ணுஞ்
சாதி அமணர் மறைத்தாலும்
நிலையி லாதார் நிலைமையினால்
மறைக்க ஒண்ணு மோஎன்னும்
விலையில் வாய்மைக் குறுந்தொகைகள்
விளம்பிப் புறம்போந் தங்கமர்ந்தே
இலைகொள் சூலப் படையார்சேர்
இடங்கள் பிறவுந் தொழஅணைவார்.

[ 300]


'தம் தலை மயிரைப் பறித்தலும், நின்று உண்ணும் இயல்பும் கொண்ட கூட்டத்தவரான சமணர்கள் மறைத்தாலும், மெய்ம்மையுணராத அவர்கள் தம் சிற்றறிவினால் மறைத்து வைத்திட முடியுமோ!' என்னும் கருத்துக் கொண்ட விலை மதிப்பதற்கரிய வாய்மையுடைய திருக்குறுந்தொகையைப் பாடியருளினார். பின்பு அங்குத் தங்கியிருந்த நாவரசரும் மூவிலை வடிவான சூலப்படை ஏந்திய சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் பிற பதிகளையும் வணங்கச் செல்லலானார்.
குறிப்புரை: இது பொழுது பாடிய திருப்பதிகம்: திருக்குறுந்தொகை. தலையெ லாம்பறிக் குஞ்சமண் கையருள்
நிலையி னான்மறைத் தால்மறைக் கொண்ணுமே
அலையி னார்பொழி லாறை வடதளி
நிலையி னானடி யேநினைந் துய்ம்மினே. -தி5 ப. 58 பா. 1
என வரும் இப்பதிக முதற் பாடலை இப்பாடல் முகந்து நிற்கின்றது. இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

Go to top
பொங்கு புனலார் பொன்னியினில்
இரண்டு கரையும் பொருவிடையார்
தங்கும் இடங்கள் புக்கிறைஞ்சித்
தமிழ்மா லைகளுஞ் சாத்திப்போய்
எங்கும் நிறைந்த புகழாளர்
ஈறில் தொண்டர் எதிர்கொள்ளச்
செங்கண் விடையார் திருவானைக்
காவின் மருங்கு சென்றணைந்தார்.

[ 301]


பொங்கி வருகின்ற காவிரியின் இருமருங்கும் உள்ள, போர் செய்யவல்ல ஆனேற்றை ஊர்தியாகக் கொண்ட சிவபெருமான் நிலைபெற்று விளங்கி வீற்றிருக்கும், பல பதிகளுக்கும் சென்று வணங்கி, தமிழ் மாலைகளையும் சாத்தி வரும் எங்கும் நிறைந்த புகழையுடைய அவர், மேலும் சென்று அளவற்ற தொண்டர்கள் பலரும் வந்து எதிர் கொள்ளச், செங்கண் விடையையுடைய இறை வரின் திருவானைக்கா என்ற பதியின் அருகே சென்று சேர்ந்தார்.
குறிப்புரை: இத்திருப்பதியிலிருந்து திருவானைக்காவிற்குச் செல் லும் வரையிலும் பொன்னியின் இருகரைகளிலும் உள்ள திருப் பதிகளை வணங்கிச் சென்றார் என ஆசிரியர் குறித்தருளுகின்றார். அத்திருப் பதிகளாவன: 1. திரு இன்னம்பர்: (அ) 'விண்ணவர்' (தி. 4 ப. 72) - திருநேரிசை. (ஆ) 'மன்னும்மலை' (தி. 4 ப. 100) - திரு விருத்தம். (இ) 'என்னிலாரும்' (தி. 5 ப. 21) - திருக்குறுந்தொகை. (ஈ) 'அல்லிமலர்' (தி. 6 ப. 89) - திருத்தாண்டகம். 2. திருப்புறம்பயம்: 'கொடிமாட' (தி. 6 ப. 13) - திருத்தாண்டகம். 3. திருவிசயமங்கை: 'குசையும்' (தி. 5 ப. 71) - திருக்குறுந்தொகை. 4. திருவாப்பாடி: 'கடலகம்' (தி. 4 ப. 48) - திரு நேரிசை. 5. திருப்பந்தணை நல்லூர்: 'நோதங்கம்' (தி. 6 ப. 10) - திருத் தாண்டகம். 6. திருக்கஞ்சனூர்: 'மூவிலைநல்' (தி. 6 ப. 90) - திருத்தாண்டகம். 7. திருமங்கலக்குடி: 'தங்கலப்பிய' (தி. 5 ப. 73) - திருக்குறுந்தொகை. 8. தென்குரங்காடு துறை: 'இரங்கா' (தி. 5 ப. 63) - திருக்குறுந்தொகை. 9. திருநீலக்குடி: 'வைத்தமாடும்' (தி. 5 ப. 72) - திருக்குறுந்தொகை. 10. திருக்கருவிலிக் கொட்டிட்டை: 'மட்டிட்ட' (தி. 5 ப. 69) - திருக்குறுந்தொகை. 11. திரு அரிசிற்கரைப்புத்தூர்: 'முத்தூரும்' (தி. 5 ப. 61) - திருக்குறுந்தொகை. 12. திருச்சிவபுரம்: 'வானவன்காண்' (தி. 6 ப. 87) - திருத்தாண்டகம். 13. திருக்கானூர்: 'திருவின் நாதனும்' (தி. 5 ப. 76) - திருக்குறுந் தொகை. 14. திருஅன்பில்ஆலந்துறை: 'வானம் சேர்' (தி. 5 ப. 80) -திருக்குறுந்தொகை 15. திருஆலம்பொழில்: 'கருவாகி' (தி. 6 ப. 86) - திருத்தாண்டகம். 16. மேலைத்திருக்காட்டுப்பள்ளி: 'மாட்டுப்பள்ளி' (தி. 5 ப. 84) - திருக்குறுந்தொகை.

சிலந்திக் கருளுங் கழல்வணங்கிச்
செஞ்சொல் மாலை பலபாடி
இலங்கு சடையார் எறும்பியூர்
மலையும் இறைஞ்சிப் பாடியபின்
மலர்ந்த சோதி திருச்சிராப்
பள்ளி மலையுங் கற்குடியும்
நலங்கொள் செல்வத் திருப்பராய்த்
துறையுந் தொழுவான் நண்ணினார்.

[ 302]


நாவரசர் திருவானைக்காவில் சிலந்திக்கு அரு ளிய இறைவரின் திருவடிகளை வணங்கி, பலசெஞ்சொல் மாலை களைப் பாடி, விளங்கும் சடையையுடைய சிவபெருமான் எழுந்த ருளியிருக்கும் திருவெறும்பியூர் மலையையும் வணங்கித் திருப் பதிகம் பாடினார். பின்பு விரிந்த பேரொளியையுடைய திருச்சிராப் பள்ளி மலையையும், திருக்கற்குடி மலையையும், நன்மையுடைய திருப்பராய்த்துறையையும் வணங்கும் பொருட்டுச் செல்லலானார்.
குறிப்புரை: 1. திருவானைக்காவில் அருளிய பதிகங்கள்: (அ) 'கோனைக்காவி' (தி. 5 ப. 31) - திருக்குறுந்தொகை. (ஆ) 'எத்தாயர்' (தி. 6 ப. 62) - திருத்தாண்டகம். (இ) 'முன்னானை' (தி. 6 ப. 63) - திருத் தாண்டகம். 2. திருவெறும்பியூர்: (அ) 'விரும்பியூறு' (தி. 5 ப. 74) - திருக்குறுந்தொகை. (ஆ) 'பன்னிய செந்தமிழ்' (தி. 6 ப. 91) - திருத் தாண்டகம். 3. திருச்சிராப்பள்ளி: 'மட்டுவார்' (தி. 5 ப. 85) - திருக்குறுந் தொகை. 4. திருக்கற்குடி: 'மூத்தவனை' (தி. 6 ப. 60) - திருத்தாண்டகம். 5. திருப்பராய்த்துறை: 'கரப்பர்' (தி. 5 ப. 30) - திருக்குறுந் தொகை.

மற்றப் பதிகள் முதலான
மருங்குள் ளனவுங் கைதொழுது
பொற்புற் றமைந்த திருப்பணிகள்
செய்து பதிகங் கொடுபோற்றி
உற்ற அருளால் காவிரியை
ஏறி ஒன்னார் புரமெரியச்
செற்ற சிலையார் திருப்பைஞ்ஞீ
லியினைச் சென்று சேர்கின்றார்.

[ 303]


திருப்பராய்த்துறையை வணங்கியவராய், மேலும் அத்திருப்பதியின் அருகிலுள்ள பிறபதிகளையும் வணங்கி, அழகமைந்த கைத்தொண்டுகளையும் ஆற்றி, திருப்பதிகம் பாடிப் போற்றித், திருவருளால் காவிரியாற்றைக் கடந்து, முப்புரங்களும் அழியுமாறு எரித்த இறைவர் வீற்றிருக்கும் திருப்பைஞ்ஞீலியைச் சென்று சேர்கின்ற நாவரசர்.
குறிப்புரை: அருகிலுள்ள பிறபதிகள்: 1. திருக்கடம்பந்துறை: 'முற்றிலா' (தி. 5 ப. 18) - திருக்குறுந்தொகை. 2. திருவாட்போக்கி: 'காலபாசம்' (தி. 5 ப. 86) - திருக்குறுந்தொகை.

வழிபோம் பொழுது மிகஇளைத்து
வருத்தம் உறநீர் வேட்கையொடும்
அழிவாம் பசிவந் தணைந்திடவும்
அதற்குச் சித்தம் அலையாதே
மொழிவேந் தருமுன் எழுந்தருள
முருகார் சோலைப் பைஞ்ஞீலி
விழியேந் தியநெற் றியினார்தந்
தொண்டர் வருத்தம் மீட்பாராய்.

[ 304]


வழியில் செல்லும் பொழுது மிகவும் இளைப் படைந்து வருத்தம் உற, நீர் வேட்கையுடன் அழிவு செய்யும் பசியும் வந்துறவும் அதற்கு மனந்தளராது நாவரசர் முன்னோக்கிச் செல்ல, நறுமணம் பொருந்திய சோலைகளையுடைய திருப்பைஞ்ஞீலி என்ற பதியுள் வீற்றிருக்கும் நெற்றிக் கண்ணையுடைய சிவபெருமான், தம் தொண்டரின் வருத்தத்தை நீக்குபவராய்,

குறிப்புரை:

காவுங் குளமும் முன்சமைத்துக்
காட்டி வழிபோங் கருத்தினால்
மேவுந் திருநீற் றந்தணராய்
விரும்பும் பொதிசோ றுங்கொண்டு
நாவின் தனிமன் னவர்க்கெதிரே
நண்ணி இருந்தார் விண்ணின்மேல்
தாவும் புள்ளும் மண்கிழிக்குந்
தனிஏ னமுங்காண் பரியவர்தாம்.

[ 305]


விண்ணில் பறக்கும் அன்னப்பறவையும், மண்ணைத் தோண்டும் பன்றியுமான அயனும் மாலும் காண்பதற்கு அரியவரான அப்பெருமான், ஒரு சோலையையும் ஒரு குளத்தையும் படைத்து, வழிகாட்டிச் செல்லும் எண்ணம் உடையவராய், திருநீற்றை அணிந்த அந்தணராகி, விரும்பும் கட்டுச் சோற்றினையும் எடுத்துக் கொண்டு, நாவரசர் வரும் வழியில் தங்கியிருந்தார்.
குறிப்புரை:

Go to top
அங்கண் இருந்த மறையவர்பால்
ஆண்ட அரசும் எழுந்தருள
வெங்கண் விடைவே தியர்நோக்கி
மிகவும் வழிவந் திளைத்திருந்தீர்
இங்கென் பாலே பொதிசோறுண்
டிதனை உண்டு தண்ணீர்இப்
பொங்கு குளத்தில் குடித்திளைப்புப்
போக்கிப் போவீர் எனப்புகன்றார்.

[ 306]


அவ்வாறு அங்கிருந்த அந்தணரிடம் நாவரசரும் வந்து சேர, கொடிய கண்களையுடைய ஆனேற்றினை ஊர்தியாக வுடைய இறைவர், அவரைப் பார்த்து, 'வழி வந்த வருத்தத்தால் மிகவும் இளைப்பை அடைந்தீர்; இங்கு என்னிடத்தில் உள்ள கட்டுச் சோற் றினை உண்டும், இக் குளத்தின் நீரைப் பருகியும் உம் இளைப்பைப் போக்கிக் கொள்வீர்!' எனக் கூறியருளினாராக.
குறிப்புரை:

நண்ணுந் திருநா வுக்கரசர்
நம்பர் அருள்என் றறிந்தார்போல்
உண்ணும் என்று திருமறையோர்
உரைத்துப் பொதிசோ றளித்தலுமே
எண்ண நினையா தெதிர்வாங்கி
இனிதா அமுது செய்தினிய
தண்ணீர் அமுது செய்தருளித்
தூய்மை செய்து தளர்வொழிந்தார்.

[ 307]


வந்தடைந்த நாவரசரும், 'இது இறைவரின் திருவருள்!' எனக் கொண்டு, முன்னம் அறிமுகமானவர் போல் காட்டி 'உண்பீராக' எனக் கூறி வேதியரான இறைவர், கட்டுச் சோற்றை அளித்தவுடனே, மேற்கொண்டு எதனையும் எண்ணாதவராய் ஏற்றுக் கொண்டு, இனிய உணவையுண்டு, நீரையும் பருகித் தூய்மையும் செய்து, தம் தளர்வை நீக்கிக் கொண்டார்.
குறிப்புரை: இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

எய்ப்பு நீங்கி நின்றவரை
நோக்கி இருந்த மறையவனார்
அப்பால் எங்கு நீர்போவ
தென்றார் அரசும் அவர்க்கெதிரே
செப்பு வார்யான் திருப்பைஞ்ஞீ
லிக்குப் போவ தென்றுரைப்ப
ஒப்பி லாரும் யான்அங்குப்
போகின் றேன்என் றுடன்போந்தார்.

[ 308]


இளைப்பு நீங்கிய நாவரசரை அங்கு வந்திருந்த அந்தணரான இறைவர் பார்த்து, 'இனி நீவிர் எங்குச் செல்கின்றீர்?' என வினவினார். நாவரசரும் அதற்கு மறுமொழி கூறுவாராய், 'யான் திருப்பைஞ்ஞீலிக்குச் செல்லவுள்ளேன்' எனக் கூற, ஒப்பில்லாத இறைவரான அந்தணரும், 'யானும் அவ்விடத்திற்கே செல்கின்றேன்' என்று கூறி உடன் சென்றார்.
குறிப்புரை:

கூட வந்து மறையவனார்
திருப்பைஞ் ஞீலி குறுகியிட
வேடம் அவர்முன் மறைத்தலுமே
மெய்ம்மைத் தவத்து மேலவர்தாம்
ஆடல் உகந்தார் அடியேனைப்
பொருளா அளித்த கருணைஎனப்
பாடல் புரிந்து விழுந்தெழுந்து
கண்ணீர் மாரி பயில்வித்தார்.

[ 309]


உடன் வந்த மறையவர், திருப்பைஞ்ஞீலியை அணுக, அதுவரையில் காட்டி வந்த உருவத்தை அவர் முன்பு மறைத்துக் கொள்ளவும், மெய்த்தவமுடைய நாவரசர், 'கூத்தை விரும்பிச் செய்யும் பெருமான் அடியேனையும் ஒரு பொருளாக வைத்து இவ்வாறு எனக்கு அளித்த பெருங்கருணை இருந்தவாறு தான் என்னே!' எனப் பதிகம் பாடிக் கீழே விழுந்து வணங்கி எழுந்து, கண்ணீர் மழை பொழிய இன்ப வெள்ளத்துள் திளைத்தனர்.
குறிப்புரை: இதுபொழுது அருளிய திருப்பதிகம் கிடைத்திலது.

பைஞ்ஞீ லியினில் அமர்ந்தருளும்
பரமர் கோயில் சென்றெய்தி
மைஞ்ஞீ லத்து மணிகண்டர்
தம்மை வணங்கி மகிழ்சிறந்து
மெய்ஞ்ஞீர் மையினில் அன்புருக
விரும்புந் தமிழ்மா லைகள்பாடிக்
கைஞ்ஞீ டியதந் திருத்தொண்டு
செய்து காதல் உடனிருந்தார்.

[ 310]


திருப்பைஞ்ஞீலியில் விரும்பி எழுந்தருளி யிருக்கும் இறைவரின் கோயிலை அடைந்து, கரிய அழகிய நீல நிறம் பொருந்திய கழுத்தினையுடைய இறைவரை வணங்கி, மிகக் களிப் படைந்து, உண்மைப் பண்பின் நீடிய அன்பானது உள்ளுருக விரும்பும் தமிழ் மாலைகளைப் பாடிச் சிறப்புடைய கைத்திருத்தொண்டைச் செய்து அன்பு மீதூர அப்பதியில் தங்கியிருந்தார்.
குறிப்புரை: தமிழ் மாலைகள் பாடி என்றாரேனும் இது பொழுது கிடைத்திருக்கும் திருப்பதிகம் ஒன்றேயாம். அஃது, 'உடையர் கோவணம்' (தி. 5 ப. 41) எனும் திருக்குறுந்தொகையாகும்.

Go to top
நாதர் மருவுந் திருமலைகள்
நாடும் பதிகள் பலமிகவும்
காதல் கூரச் சென்றிறைஞ்சிக்
கலந்த இசைவண் டமிழ்பாடி
மாதொர் பாகர் அருளாலே
வடபால் நோக்கி வாகீசர்
ஆதி தேவர் அமர்ந்ததிரு
வண்ணா மலையை நண்ணினார்.

[ 311]


நாவரசர் இறைவர் வீற்றிருந்தருளும் திருமலைகளையும், வழிபடுதற்குரியவெனக் குறிக்கொளத்தக்க மிகப் பலவாய பதிகளையும், மிக்க அன்பு பொருந்தச் சென்று வணங்கி, இசை கலந்த விருப்பம் மிக்க தமிழ்ப் பதிகங்களைப் பாடி, உமையொரு கூறனாம் பெருமானின் திருவருளால், வடக்குத் திக்கு நோக்கிச் சென்று, முதன்மையுடைய தேவரான சிவபெருமான் வீற்றிருந்தரு ளும் திருவண்ணாமலையை அடைந்தார்.

குறிப்புரை: இங்குக் குறிக்கப்படும் திருமலைகள்: திருஈங்கோய் மலை, கொல்லி மலையில் அறப்பள்ளி, நயினார் மலை, கஞ்ச மலை, பச்சை மலையில் இருக்கு வேளூர், தீர்த்த மலை முதலாயினவாகலாம். பதிகள் பல என்று குறிக்கத் தகுவன: புலிவலம், திருத்தலையூர், நெற்குன்றம். தோழூர், ஏழூர் முதலானவையாகலாம் என்றும், நாடும் என்பதற்கு நாடுகள் எனப் பொருள் கொண்டு, கொங்கு நாடு, திருமுனைப்பாடி நாடு முதலியனவாகலாம் என்றும் சிவக்கவிமணி யார் (பெரிய. பு. உரை) கருதுவர். எனினும் குறிப்பாக அறியத்தக்க நிலையில் பதிகம் பெற்றிருந்தன எவை எனத் தெரிந்தில. கொங்கு நாட்டிலுள்ள திருப்பாண்டிக் கொடுமுடிக்கு நாவரசர் பதிகம் ஒன்றுள் ளது. அதனை ஈண்டுக் கொள்ளலாம். அப்பதிகம்: 'சிட்டனைச் சிவன்' (தி. 5 ப. 81) எனத் தொடங்கும் திருக்குறுந்தொகை.

செங்கண் விடையார் திருவண்ணா
மலையைத் தொழுது வலங்கொண்டு
துங்க வரையின் மிசையேறித்
தொண்டர் தொழும்புக் கெதிர்நிற்கும்
அங்கன் அரசைப் பணிந்தெழுந்து
திளைத்துத் திருநா வுக்கரசர்
தங்கு பிறப்பே வீட்டினுக்கு
மேலாம் பெருமை சாதித்தார்.

[ 312]


நாவுக்கரசர் சிவந்த விழிகளையுடைய ஆனேற்றை ஊர்தியாகக் கொண்ட சிவபெருமானின் திருவண்ணா மலையை வணங்கி, பெருமை பொருந்திய மலைமீது ஏறித் தொண் டர்கள் அன்பு கூர்ந்து செய்யும் அடிமைத் திறத்திற்கு முன்னின்றருளும் அருளுடைய அரசரான சிவபெருமானை வணங்கி எழுந்து இன்பத் தில் மூழ்கி, இங்ஙனம் வழிபட்டு உலகில் தங்கும் பிறவியே இவ் வுலகை நீங்கித் தங்கும் வீடு பேற்றிற்கும் மேலானது என்ற பெருமை யைத் திருவுளம் கொண்டார்.

குறிப்புரை: துங்கம் - பெருமை. 'மண்ணிலே வந்த பிறவியே எனக்கு வாலிதாம் இன்பமாம்' (தி. 12 சரு. 1-5 பா. 107) எனவரும் திருவாக்கும் காண்க. இதுபொழுது அருளிய பதிகம்: 'பட்டிஏறுகந்து' (தி. 5 ப. 5) - திருக்குறுந்தொகை.

அண்ணா மலைமேல் அணிமலையை
ஆரா அன்பின் அடியவர்தங்
கண்ணார் அமுதை விண்ணோரைக்
காக்கக் கடலில் வந்தெழுந்த
உண்ணா நஞ்சம் உண்டானைக்
கும்பிட் டுருகுஞ் சிந்தையுடன்
பண்ணார் பதிகத் தமிழ்பாடிப்
பணிந்து பரவிப் பணிசெய்தார்.

[ 313]


அண்ணாமலையின் மீது அழகிய மலையாக விளங்கியருளும் பெருமானை, அடங்காத அன்புடைய அடியவர்கள் தம் கண்ணால் அநுபவிக்கும் அமுதம் போன்றவரைத், தேவர்களைக் காத்தற்காகப் பாற்கடலில் எழுந்து வந்த யாவராலும் உண்ணத்தகாத நஞ்சை உண்டருளிய பெருமானை, வணங்கி உருகும் உள்ளத் தோடும் பண் நிறைந்த தமிழ்த் திருப்பதிகத்தைப் பாடிப் பணிந்து போற்றி செய்து திருப்பணிகள் செய்தார்.

குறிப்புரை: 'கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடி'(தி. 8 ப. 7 பா. 4), 'கண்ணகத் தேநின்று களிதரு தேனே' (தி. 8 ப. 20 பா. 9) எனவரும் திருவாக்குகளும் காண்க. இது பொழுது பாடிய பதிகத் தமிழ் மாலைகள்: 1. 'ஓதிமாமலர்கள்' (தி. 4 ப. 63) - திருநேரிசை. 2. 'வட்டனை' (தி. 5 ப. 4) - திருக்குறுந்தொகை.

பணியார் வேணிச் சிவபெருமான்
பாதம் போற்றிப் பணிசெயுநாள்
மணியார் கண்டத் தெம்பெருமான்
மண்மேல் மகிழும் இடமெங்கும்
தணியாக் காதல் உடன்சென்று
வணங்கித் தக்க பணிசெய்வார்
அணியார் தொண்டைத் திருநாட்டில்
அருளால் அணைவார் ஆயினார்.

[ 314]


பாம்புகளை அணிந்த சிவபெருமானின் திருவடி களை வணங்கித் திருப்பணிகளைச் செய்து வரும் நாள்களில், நீலநிறத்தைக் கழுத்தில் உடைய எம் இறைவர், இந்நிலவுலகில் மகிழ்ந்து வீற்றிருக்கும் பதிகள் எங்கும் போய்த் தணியாத காதலுடன் வணங்கி, ஏற்ற திருப்பணிகளைச் செய்பவரான நாவரசர், அழகிய திருத்தொண்டை நாட்டில் திருவருள் செலுத்தச் செல்பவராய்.

குறிப்புரை: 'இடம் எங்கும்' என்பதால் அத்திருப்பதிகள், திருக் கோவலூர் வீரட்டம், திருவாமாத்தூர், திருமுண்டீச்சுரம், முதலியன வாகலாம் என்பர் சிவக்கவிமணியார் (பெரிய. பு. உரை). இவற்றை வணங்கியமை 148ஆவது பாடலிலும் குறிக்கப்பெற்றுளது.

காதல் செய்யுங் கருத்தினுடன்
காடும் மலையும் கான்யாறும்
சூத மலிதண் பணைப்பதிகள்
பலவுங் கடந்து சொல்லினுக்கு
நாதர் போந்து பெருந்தொண்டை
நன்னாட் டெய்தி முன்னாகச்
சீத மலர்மென் சோலைசூழ்
திருவோத் தூரில் சென்றடைந்தார்.

[ 315]


அன்பு மிகும் பணிகள் பலவற்றையும் செய்யும் கருத்துடனே, காடுகளையும் மலைகளையும் காட்டாறுகளையும் மாஞ்சோலைகள் நிறைந்த குளிர்ந்த வயல்களையுடைய நகரங்கள் பலவற்றையும் கடந்து, நாவரசர், பெரிய தொண்டை நாட்டை அடைந்து, முதலில் குளிர்ந்த மென்மையான மலர்கள் நிறைந்த பூஞ்சோலைகளால் சூழப்பட்ட திருவோத்தூரைச் சென்றடைந்தார்.

குறிப்புரை: காடு என்பன, நடு நாட்டின் வடபாகத்திலும் அதனை அடுத்துத் தொண்டை நாட்டுத் தென்மேற்குப் பாகத்திலும் உள்ள சிறு காடுகள் என்றும், மலைகள் செஞ்சிமலை, நெடுங்குன்றம், வெண் குன்றம் ஆகியன என்றும், ஆறுகள் துரிஞ்சிலாறு, வராகநதி, சேயாறு முதலியன என்றும் சிவக்கவிமணியார் (பெரிய. பு. உரை) குறிப்பர். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபுடையன.

Go to top
செக்கர்ச் சடையார் திருவோத்தூர்த்
தேவர் பிரானார் தங்கோயில்
புக்கு வலங்கொண் டெதிர்இறைஞ்சிப்
போற்றிக் கண்கள் புனல்பொழிய
முக்கட் பிரானை விரும்புமொழித்
திருத்தாண் டகங்கள் முதலாகத்
தக்க மொழிமா லைகள்சாத்திச்
சார்ந்து பணிசெய் தொழுகுவார்.

[ 316]


சிவந்த சடையை உடையவரான சிவபெருமா னின் திருவோத்தூரில் வீற்றிருந்தருளுகின்ற இறைவரின் கோயிலுக்குள் புகுந்து வலமாக வந்து, திருமுன்பு வணங்கி, போற்றி செய்து, கண்கள் இன்பக் கண்ணீர் சொரிய நின்று, மூன்று கண்களை யுடைய அப்பெருமானை விரும்பிப் பாடுகின்ற தாண்டகங்கள் முதலான தகுந்த சொன்மாலைகளைப் பாடிச் சாத்தி, சிவபெருமானுக் குத் திருப்பணிகளைச் செய்து வருவாராய்.

குறிப்புரை: இதுபொழுது அருளிய திருத்தாண்டகம் முதலான சொல்மாலைகள் எவையும் கிடைத்தில.

செய்ய ஐயர் திருவோத்தூர்
ஏத்திப் போந்து செழும்புவனம்
உய்ய நஞ்சுண் டருளும்அவர்
உறையும் பதிகள் பலவணங்கித்
தையல் தழுவக் குழைந்தபிரான்
தங்குந் தெய்வப் பதியென்று
வையம் முழுதும் தொழுதேத்தும்
மதில்சூழ் காஞ்சி மருங்கணைந்தார்.


[ 317]


(நாவரசர்) சிவந்த சடையையுடைய இறைவரின் திருவோத்தூரினை வணங்கி, அங்கிருந்து புறப்பட்டுச் சென்று, செழுமையான உலகங்கள் எல்லாம் உய்யுமாறு நஞ்சை உண்டருளிய அப்பெருமான் இனிதாய் அமர்ந்தருளியிருக்கும் பல திருப்பதிகளை யும் போற்றிச் சென்று, உமையம்மையார் தழுவத் திருமேனியைக் குழைந்து காட்டிய சிவபெருமான் வீற்றிருக்கும் தெய்வத் திருப்பதி என உலகங்கள் எல்லாம் வணங்கிப் போற்றுகின்ற மதில் சூழ்ந்த காஞ்சி நகரத்தினை அடைந்தார்.

குறிப்புரை: இவ்விரு பாடல்களும் ஒரு முடிபுடையன.

ஞாலம் உய்யத் திருவதிகை
நம்பர் தம்பேர் அருளினால்
சூலை மடுத்து முன்னாண்ட
தொண்டர் வரப்பெற் றோமென்று
காலை மலருங் கமலம்போற்
காஞ்சி வாணர் முகமெல்லாம்
சால மலர்ந்து களிசிறப்பத்
தழைத்த மனங்கள் தாங்குவார்.

[ 318]


உலகம் உய்யும் பொருட்டுத் திருவதிகைப் பெருமானார் தம் பேரருளினால் சூலை நோயைத் தந்து நேரே ஆட் கொள்ளப்பட்ட அடியவரான நாவரசர், 'இங்கு எழுந்தருளி வரும் பேறு பெற்றோம்' என்று எண்ணிய காஞ்சி நகரத்தில் உள்ள அடியவர்கள், தம் முகங்கள் எல்லாம் காலை மலரும் தாமரை என மிக மலர்ந்து மகிழ்ச்சி மீதூரத் தழைத்த மனத்துடன்.

குறிப்புரை:

மாட வீதி மருங்கெல்லாம்
மணிவா யில்களில் தோரணங்கள்
நீடு கதலி யுடன்கமுகு
நிரைத்து நிறைபொற் குடந்தீபம்
தோடு குலவு மலர்மாலை
சூழ்ந்த வாசப் பந்தர்களும்
ஆடு கொடியு முடனெடுத்தங்
கணிநீள் காஞ்சி அலங்கரித்தார்.

[ 319]


மாட வீதிகள் பக்கங்களில் உள்ள அழகிய வாயில்களில் எங்கும், தோரணங்களையும் பொருந்தும் வாழை மரங்களுடனே பாக்கு மரங்களையும் நிரல்படக் கட்டி, நிறைகுடங் களையும், விளக்குகளையும், இதழ்கள் பொருந்திய மலர் மாலைகளை யுடைய நறுமணப்பந்தர்களையும் ஆடும் கொடிகளையும் எடுப்பித்து, அங்கு அழகிய நீண்ட காஞ்சிமாநகரத்தை மேலும் அழகுபடுத்தினர்.

குறிப்புரை: இவ்விரு பாடல்களும் ஒருமுடிபுடையன.

தொண்டர் ஈண்டி எதிர்கொள்ள
எழுந்து சொல்லுக் கரசர்பால்
கொண்ட வேட்கைப் பொலிவினொடுங்
குலவும் வீதிப் பணிசெய்யும்
அண்டர் அறிதற் கரியதிரு
அலகு முதலாம் அவையேந்தி
இண்டை புனைந்த சடைமுடியார்க்
கன்பர் தம்மை எதிர்கொண்டார்.

[ 320]


தாம் விரும்பி மேற்கொண்ட திருவேடப் பொலிவழகுடன் வரவேற்பதற்காக, நாவுக்கரசர் வரும் வழியில் தொண்டர்கள் பலரும் திரண்டு சென்று, விளங்கும் திருவீதிப் பணி செய்யும் தேவரும் அறிவதற்கு அரிய திருவலகு முதலியவற்றை எடுத் துக் கொண்டு, இண்டை மாலை சூடிய சடையையுடைய பெருமா னுக்கு அன்பரான அவரை எதிர்கொண்டனர்.

குறிப்புரை: எதிர்கொள்வதற்குரிய மங்கலப் பொருள்களில் திருவலகையும் கொள்ளல் பண்டைய மரபாகும்.

Go to top
எதிர்கொண் டிறைஞ்சுஞ் சீரடியார்
தம்மை இறைஞ்சி எழுந்தருளி
மதில்கொண் டணிந்த காஞ்சிநகர்
மறுகுட் போந்து வானநதி
குதிகொண் டிழுந்த சடைக்கம்பர்
செம்பொற் கோயில் குறுகினார்
அதிர்கொண் டலைநேர் மணிமிடற்றார்
ஆண்ட திருநா வுக்கரசர்.

[ 321]


ஒலிக்கும் மேகம் போன்ற அழகிய கழுத்தினை யுடைய இறைவரால் ஆட்கொள்ளப்பட்ட நாவரசர், எதிர் கொண்டு வரவேற்று வணங்கும் சிறந்த அடியவரைத் தாமும் எதிரே வணங்கி, மதில் சூழ்ந்த அழகிய காஞ்சி நகரத்தின் திருவீதியுள் புகுந்து வானத் திருக்கும் கங்கை மேல் எழும் சடையை உடைய ஏகம்பருடைய செம்பொன் கோயிலை அடைந்தார்.

குறிப்புரை:

திருவா யிலினைப் பணிந்தெழுந்து
செல்வத் திருமுன் றிலைஅணைந்து
கருவார் கச்சி ஏகம்பர்
கனக மணிமா ளிகைசூழ்ந்து
வருவார் செம்பொன் மலைவல்லி
தழுவக் குழைந்த மணிமேனிப்
பெருவாழ் வினைமுன் கண்டிறைஞ்சிப்
பேரா அன்பு பெருகினார்.

[ 322]


கோபுரத்தின் கண்ணுள்ள திருவாயிலில், கீழே விழுந்து வணங்கி எழுந்து, உள்ளே சென்று, செல்வம் நிறைந்த முற்றத்தை அடைந்து, அருட்கருவையுடைய கச்சி மாநகரத்தின் ஏகம்பநாதரின் அழகிய பொன் மாளிகையினை வலம் வருபவரான நாவுக்கரசர், செம்பொன் மலையரசனின் மகளாரான காமாட்சி யம்மையார் தழுவக் குழைந்து காட்டிய அழகிய திருமேனியை யுடைய பெருவாழ்வான ஏகம்பரை முன்பு கண்டு வணங்கிப் பேராத அன்பு மிக்கவரானார்.

குறிப்புரை:

வார்ந்து சொரிந்த கண்ணருவி
மயிர்க்கால் தோறும் வரும்புளகம்
ஆர்ந்த மேனிப் புறம்பலைப்ப
அன்பு கரைந்தென் புள்ளலைப்பச்
சேர்ந்த நயனம் பயன்பெற்றுத்
திளைப்பத் திருவே கம்பர்தமை
நேர்ந்த மனத்தில் உறவைத்து
நீடும் பதிகம் பாடுவார்.

[ 323]


பெருகி வழியும் கண்ணீர் மழையானது மயிர்க்கால் எங்கும் நிறைந்து திருமேனியின் புறத்தை அலைக்கவும், அன்பு மேலீட்டினால் உள்ளமானது கரைந்து எலும்பினுள்ளும் அலைக்கவும், பொருந்திய கண்கள் தமக்குரிய தக்க பயனைப் பெற்றுத் திளைக்கவும், ஏகம்பநாதரைப் பொருந்திய மனத்தினுள் வைத்துக் கொண்டு, நீடும் திருப்பதிகம் அருளுவாராகி.

குறிப்புரை: 'கரவாடும் வன்னெஞ்சர்க்கு' (தி. 4 ப. 7) எனத் தொடங்கும் பதிகம் காந்தாரப் பண்ணில் அமைந்ததாகும். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபுடையன.

கரவாடும் வன்னெஞ்சர்க்
கரியானை என்றெடுத்துப்
பரவாய சொல்மாலைத்
திருப்பதிகம் பாடியபின்
விரவார்தம் புரம்எரித்த
விடையவனார் வெள்ளெயிற்றின்
அரவாரம் புனைந்தவர்தந்
திருமுன்றிற் புறத்தணைந்தார்.

[ 324]


'கரவாடும் வன்நெஞ்சர்க் கரியானை' என்று எடுத்துத் தொடங்கிப் போற்றுதலான சொன்மாலைத் திருப்பதிகத்தைப் பாடிய பின்னர், பகைவரின் முப்புரங்களை எரித்தவரும் வெண்மை யான பற்களையுடைய பாம்பு மாலையை அணிந்தவருமான இறைவர் கோயிலின் முன் பக்கத்தை நாவரசர் அடைந்தார்.

குறிப்புரை:

கையார்ந்த திருத்தொண்டு
கழியமிகுங் காதலொடும்
செய்யாநின் றேஎல்லாச்
செந்தமிழ்மா லையும்பாடி
மையார்ந்த மிடற்றர்திரு
மயானத்தை வலங்கொண்டு
மெய்யார்வ முறத்தொழுது
விருப்பினொடு மேவுநாள்.

[ 325]


கையால் நிரம்பச் செய்துவரும் உழவாரத் திருத் தொண்டை மிகப் பெரும் பத்திமையுடன் செய்து கொண்டே, பற்பல யாப்பு வகையானும் பண் வகையானும் ஆய எல்லா வகையான தமிழ்ப் பதிகங்களையும் பாடி, திருநீலகண்டரின் கச்சித் திருமயானத் தையும் வலமாக வந்து, மெய்மை நிரம்பிய ஆர்வம் பெருகத்தொழுது, விருப்புடன் அங்குத் தங்கியிருந்த நாள்களில்.

குறிப்புரை: இது பொழுது அருளிய பதிகங்கள்: 1. 'நம்பனை' (தி. 4 ப. 44) - திருநேரிசை. 2. 'ஓதுவித்தாய்' (தி. 4 ப. 99) - திருவிருத்தம். 3. 'பண்டு செய்த' (தி. 5 ப. 47) - திருக்குறுந்தொகை. 4. 'பூமேலானும்' (தி. 5 ப. 48) - திருக்குறுந்தொகை. சென்ற பாடலில் காந்தாரப் பண்ணுடைய பதிகம் பாடினமையும், 328ஆவது பாடலில் தாண்டகம் பாடினமையும் குறிக்கப்படுகின்றன. இப்பாடலில் எஞ்சிய மூவகை யாப்பு அமைவும் பாடியமை குறிக்கப்பட்டுள்ளது. இவ்வகையில் எல்லாச் செந்தமிழ் மாலையும் பாடியுள்ளமை அறிய இயலுகின்றது. இவையன்றித் திருமுறைகள் ஏழனுள்ளும் போற்றப்பட்டுள்ள சிறப்பு இப்பதிக்குரிய தாகும். இவ்வாறான சிறப்புத் திருவாரூருக்கும் உண்டு.

Go to top
சீர்வளரு மதில்கச்சி
நகர்த்திருமேற் றளிமுதலா
நீர்வளருஞ் சடைமுடியார்
நிலவியுறை ஆலயங்கள்
ஆர்வமுறப் பணிந்தேத்தி
ஆய்ந்ததமிழ்ச் சொல்மலரால்
சார்வுறுமா லைகள்சாத்தித்
தகுந்தொண்டு செய்திருந்தார்.

[ 326]


சீர்மை மிக்க மதில்களையுடைய திருக்கச்சி மேற்றளி முதலாகக் கங்கை தங்கிய சடைமுடியார் நிலைபெற வீற்றிருக்கும் கோயில்கள் பலவற்றையும் ஆர்வத்துடன் வணங்கி, ஆய்ந்த தமிழ்ச் சொல் மாலைகளால் ஆய திருப்பதிகங்களைச் சாத்தித் தக்க தொண்டுகளைச் செய்த வண்ணம் அங்கே தங்கியிருந்தார்.

குறிப்புரை: திருக்கச்சித் திருமேற்றளியில் அருளிய பதிகம் 'மறை யது பாடி' (தி. 4 ப. 43) எனத் தொடங்கும் திருநேரிசைப் பதிகம் ஆகும். ஆலயங்கள் - எவ்வெக் கோயில்கள் எனத் தெரியவில்லை. இவ்விரு பாடல்களும் ஒருமுடிபுடையன.

அந்நகரில் அவ்வண்ணம்
அமர்ந்துறையும் நாளின்கண்
மன்னுதிரு மாற்பேறு
வந்தணைந்து தமிழ்பாடிச்
சென்னிமிசை மதிபுனைவார்
பதிபலவுஞ் சென்றிறைஞ்சித்
துன்னினார் காஞ்சியினைத்
தொடர்ந்தபெருங் காதலினால்.

[ 327]


இவ்வாறு காஞ்சி நகரத்தில் நாவரசர் இருந்தருளிய பொழுது, நிலை பெற்ற திருமாற்பேற்றுக்குச் சென்று திருப்பதிகம் பாடி, தலையில் பிறைச்சந்திரனை அணிந்த சிவபெரு மானின் திருப்பதிகள் பலவற்றிற்கும் சென்று வணங்கி, முன் தொடர்ந்த பெருங்காதல் காரணமாக மீளவும் காஞ்சி நகரத்தை வந்து சேர்ந்தார்.

குறிப்புரை: திருமாற்பேற்றில் அருளிய பதிகங்கள்: 1. 'மாணிக் குயிர்' (தி. 4 ப. 108) - திருவிருத்தம். 2. 'பொருமாற்றின்' (தி. 5 ப. 59) - திருக்குறுந்தொகை. 3. 'எதும் ஒன்றும்' (தி. 5 ப. 60) - திருக்குறுந் தொகை. 4. 'பாரானை' (தி. 6 ப. 80) - திருத்தாண்டகம். பதிபலவும் எனக் குறிப்பன திருவூறல், திருவிற்கோலம், இலம்பையங்கோட்டூர் முதலாயனவாகலாம் என்பர் சிவக்கவிமணியார் (பெரிய. பு. உரை). பதிகங்கள் எவையும் கிடைத்தில.

ஏகம்பன் காண்அவனென்
எண்ணத்தான் எனப்போற்றிப்
பாகம்பெண் ணுருவானைப்
பைங்கண்விடை உயர்த்தானை
நாகம்பூண் உகந்தானை
நலம்பெருகுந் திருநீற்றின்
ஆகந்தோய் அணியானை
அணைந்துபணிந் தின்புற்றார்.

[ 328]


'கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத் தானே' என்று போற்றி இடமருங்கில் உமையம்மையாரையுடைய இறைவரைப், பசிய கண்களையுடைய ஆனேற்றை ஊர்தியாக வுடையவரை, பாம்புகளை அணிந்தவரை, நன்மை பெருகும் திருநீற்றை நிறையப் பூசிய திருமேனியின் அழகு உடையவரைச் சேர்ந்து வணங்கி, நாவுக்கரசர் இன்பம் அடைந்தார்.

குறிப்புரை: 'ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே' என நிறைவுறும் குறிப்புடைய திருத்தாண்டகங்கள் இரண்டாம். அவை: 1. 'கூற்றுவன் காண்' (தி. 6 ப. 64) - திருத்தாண்டகம். 2. 'உரித்தவன் காண்' (தி. 6 ப. 65) - திருத்தாண்டகம்.

திருக்கச்சி ஏகம்பம்
பணிந்தேத்தித் திங்களார்
நெருக்கச்செஞ் சடைக்கணிந்தார்
நீடுபதி தொழநினைவார்
வருக்கைச்செஞ் சுளைபொழிதேன்
வயல்விளைக்கும் நாட்டிடைப்போய்ப்
பருக்கைத்திண் களிற்றுரியார்
கழுக்குன்றின் பாங்கணைந்தார்.

[ 329]


திருக்காஞ்சியிலுள்ள ஏகம்பரை வணங்கிப் போற்றி, பிறைச்சந்திரனைத் தம் செறிந்த செஞ்சடைக் கற்றையில் அணிந்த இறைவர் நிலைபெற எழுந்தருளியுள்ள மற்றப் பதிகளுக்கும் சென்று தொழுது வணங்க எண்ணியவராய்ப், பலாவின் கனிகளின் செம்மையான சுளைகள் பொழிந்த தேன் பெருகி வயலில் உள்ள பயிரை விளையச் செய்யும் அந்நாட்டில் சென்று, பருத்த கையை உடைய வலிய யானையின் தோலையுடையவரின் திருக்கழுக் குன்றத்தின் அருகே சேர்ந்தார்.

குறிப்புரை:

நீடுதிருக் கழுக்குன்றில்
நிருத்தனார் கழல்வணங்கிப்
பாடுதமிழ்த் தொடைபுனைந்து
பாங்குபல பதிகளிலுஞ்
சூடுமிளம் பிறைமுடியார்
தமைத்தொழுது போற்றிப்போய்
மாடுபெருங் கடலுடுத்த
வான்மியூர் வந்தணைந்தார்.

[ 330]


நாவரசர் நிலைத்த செல்வம் உடைய கழுக் குன்றத்தில் வீற்றிருக்கும் கூத்தப் பெருமானின் திருவடிகளை வணங்கி, அருந்தமிழ் மாலையைப் பாடி, அருகிலுள்ள பல திருப்பதி களுக்கும் சென்று, பிறையைச் சூடும் திருமுடியினையுடைய இறைவரை வணங்கிப் போற்றி, மேலும் சென்று, கடலால் சூழப்பட்ட திருவான்மியூர் என்னும் திருப்பதியைச் சேர்ந்தார்.

குறிப்புரை: திருக்கழுக்குன்றத்தில் அருளிய பதிகம் 'மூவிலை வேல்' (தி. 6 ப. 92) எனத் தொடங்கும் திருத்தாண்டகம் ஆகும். பாங்கு பலபதிகள் என்பன, திருவன் பார்த்தான் பனங்காட்டூர், திருமாகறல், திருவிடைச்சுரம், திருக்கச்சூராலக்கோயில் முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார் (பெரிய. பு. உரை). பதிகங்கள் எவையும் கிடைத்தில.

Go to top
திருவான்மி யூர்மருந்தைச்
சேர்ந்துபணிந் தன்பினொடும்
பெருவாய்மைத் தமிழ்பாடி
அம்மருங்கு பிறப்பறுத்துத்
தருவார்தங் கோயில்பல
சார்ந்திறைஞ்சித் தமிழ்வேந்தர்
மருவாரும் மலர்ச்சோலை
மயிலாப்பூர் வந்தடைந்தார்.

[ 331]


திருவான்மியூரில் வீற்றிருக்கும் மருந்தீசரைச் சேர்ந்து பணிந்து, அன்புடன் பெருவாய்மை பொருந்திய தமிழ்ப் பதிகம் பாடி, அதன் அருகிலுள்ள பிறவியை அறுத்து வீடு பேற்றை அருளுதற்குரிய இறைவரின் பல திருப்பதிகளையும் அடைந்து, வணங்கி, தமிழ் மன்னரான நாவுக்கரசர் மணம் நிறைந்த பூஞ்சோலைகள் சூழ்ந்த மயிலாப்பூரை வந்தடைந்தார்.

குறிப்புரை: திருவான்மியூரில் அருளியது 'விண்ட மாமலர்' (தி. 5 ப. 82) எனத் தொடங்கும் திருக்குறுந்தொகைப் பதிகமாகும். இறைவர் பெயர் மருந்தீசர் ஆதலின் மருந்து நாதர் என்றார். கோயில் பல என்பன நெடுங்குன்றம், குன்றத்தூர், திருநின்றவூர், திருவேற்காடு, நெற்குன்றம், திருவலிதாயம் முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவி மணியார் (பெரிய. பு. உரை). பதிகங்கள் எவையும் கிடைத்தில.

வரைவளர்மா மயிலென்ன
மாடமிசை மஞ்சாடும்
தரைவளர்சீர்த் திருமயிலைச்
சங்கரனார் தாள்வணங்கி
உரைவளர்மா லைகள்அணிவித்
துழவாரப் படையாளி
திரைவளர்வே லைக்கரைபோய்த்
திருவொற்றி யூர்சேர்ந்தார்.

[ 332]


மலைமீது வளரும் பெரிய மயிலைப் போல மாடங்களின் மீது மேகம் தவழ்கின்ற, உலகில் வளரும் சிறப்பை உடைய திருமயிலாப்பூரில் வீற்றிருக்கின்ற பெருமானின் திருவடி களை வணங்கி, உரை பெருகும் தமிழ் மாலைகளைச் சாத்தி, உழ வாரப் படையையுடைய நாவரசர், அலைகள் தவழ்கின்ற கடற்கரை வழியே சென்று திருவொற்றியூரை அடைந்தார்.

குறிப்புரை: மயிலாப்பூரில் 'உரைவளர் மாலைகள் அணிவித்து' என்பதற்கேற்பப் பல பதிகங்களை நாவரசர் அருளியிருத்தல் வேண் டும். எனினும் இதுபொழுது எவையும் கிடைத்தில.

ஒற்றியூர் வளநகரத்
தொளிமணிவீ திகள்விளக்கி
நற்கொடிமா லைகள்பூகம்
நறுங்கதலி நிரைநாட்டிப்
பொற்குடங்கள் தூபங்கள்
தீபங்கள் பொலிவித்து
மற்றவரை எதிர்கொண்டு
கொடுபுக்கார் வழித்தொண்டர்.

[ 333]


வளமை வாய்ந்த திருவொற்றியூர் நகரின் ஒளிபொருந்திய அழகிய வீதிகளை விளக்கி, நல்ல கொடிகளையும், மாலைகளையும், பாக்கும் வாழைகளுமான இவற்றையும் நிரல்பட நாட்டி, பொன்னால் ஆன நிறைகுடங்களையும், நறுமணப் புகை களையும், விளக்குகளையும் அழகுற அமைத்துத் தொண்டர்கள் நாவுக்கரசரை வரவேற்று நகரினுள்ளே அழைத்துச் சென்றனர்.

குறிப்புரை:

திருநாவுக் கரசரும்அத்
திருவொற்றி யூர்அமர்ந்த
பெருநாகத் திண்சிலையார்
கோபுரத்தை இறைஞ்சிப்புக்
கொருஞானத் தொண்டருடன்
உருகிவலங் கொண்டடியார்
கருநாமந் தவிர்ப்பாரைக்
கைதொழுது முன்வீழ்ந்தார்.

[ 334]


திருநாவுக்கரசரும் அந்தத் திருவொற்றியூரில் அமர்ந்தருளும் பெரிய மலையாகிய வலியவில்லை உடைய பெரு மானின் கோபுரத்தை வணங்கி, உள்ளே புகுந்து, ஒருமையுணர்வாய ஞானத்தையுடைய அத்தொண்டர்களுடன், உள்ளம் உருகி, வலம் வந்து, அடியவரின் பிறவிப் பிணிப்பைத் தவிர்க்கும் பெருமானைக் கைதொழுது திருமுன்பு விழுந்து வணங்கியவர்.

குறிப்புரை:

எழுதாத மறைஅளித்த
எழுத்தறியும் பெருமானைத்
தொழுதார்வ முறநிலத்தில்
தோய்ந்தெழுந்தே அங்கமெலாம்
முழுதாய பரவசத்தின்
முகிழ்த்தமயிர்க் கால்மூழ்க
விழுதாரை கண்பொழிய
விதிர்ப்புற்று விம்மினார்.

[ 335]


எழுதாத மறைகளை வழங்கியருளிய எழுத் தறியும் பெருமானைத் தொழுது, அன்புமிகப் பெற்று, நிலம் தோய வணங்கி, எழுந்து உடல் முழுதும் மயிர்க் கூச்செறியத் திளைத்துக் கண்கள் தாரையாய் நீரைப் பொழிய, உடல் விதிர்த்து விம்மியவராய்.

குறிப்புரை:

Go to top
வண்டோங்கு செங்கமலம்
எனஎடுத்து மனமுருகப்
பண்தோய்ந்த சொற்றிருத்தாண்
டகம்பாடிப் பரவுவார்
விண்தோய்ந்த புனற்கங்கை
வேணியார் திருவுருவங்
கண்டோங்கு களிசிறப்பக்
கைதொழுது புறத்தணைந்தார்.

[ 336]


'வண்டோங்கு செங்கமலம்'(தி. 6 ப. 45) எனத் தொடங்கி, உள்ளுருகப் பண் பொருந்திய சொற்களான திருத்தாண் டகப் பதிகத்தைப் பாடிப் போற்றுபவர், வானிலுள்ள கங்கையைச் சடையில் வைத்த இறைவரின் திருவடிவைக் கண்டு, பெருகிய இன்பம் மிகக் கைதொழுது கோயிலின் புறத்தை அடைபவராய்.

குறிப்புரை: 'வண்டோங்கு செங்கமலம்' (தி. 6 ப. 45) எனத் தொடங்கும் இத்திருப்பதிகம் இறைவன் திருமுன்னிலையில் அருளியதாகும்.

விளங்குபெருந் திருமுன்றில்
மேவுதிருப் பணிசெய்தே
உளங்கொள்திரு விருத்தங்கள்
ஓங்குதிருக் குறுந்தொகைகள்
களங்கொள்திரு நேரிசைகள்
பலபாடிக் கைதொழுது
வளங்கொள்திருப் பதியதனில்
பலநாள்கள் வைகினார்.

[ 337]


விளங்கும் பெருமையையுடைய திருமுற்றத்தில் பொருந்திய திருப்பணிகள் செய்து, உளங்கொண்ட திருவிருத்தங் களும், பொருட்பொதிவால் ஓங்கி நிற்கும் திருக்குறுந்தொகைகளும், மிடற்றை இடனாகக் கொண்டு பாடப்படும் திருநேரிசைகளும் ஆகிய பலவற்றையும் பாடிக், கைகளால் தொழுது, வளம் பொருந்திய அத் திருவொற்றியூரில் பல நாள்கள் தங்கியிருந்தார்.

குறிப்புரை: திருவிருத்தங்கள், திருக்குறுந்தொகைகள், திருநேரிசை கள் பலபாடி என ஆசிரியர் பன்மைச் சொற்களால் குறித்திருப்பதால் ஒவ்வொரு யாப்பு அமைவிலும் பற்பல பதிகங்களை அருளியிருக்க வேண்டும் எனத் தெரிகிறது. எனினும் இதுபொழுது கிடைத்திருக்கும் பதிகங்கள் நான்கேயாம். அவை: 1. 'வெள்ளத்தை' - (தி. 4 ப. 45) திருநேரிசை. 2. 'ஓம்பினேன்' (தி. 4 ப. 46) - திருநேரிசை. 3. 'செற்றுக் களிற்று' (தி. 4 ப. 86) - திருவிருத்தம். 4. 'ஒற்றியூரும்' (தி. 5 ப. 24) - திருக்குறுந்தொகை. இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.

அங்குறையு நாளின்கண்
அருகுளவாம் சிவாலயங்கள்
எங்குஞ்சென் றினிதிறைஞ்சி
ஏத்துமவர் இறையருளால்
பொங்குபுனல் திருவொற்றி
யூர்தொழுது போந்துமையாள்
பங்குடையார் அமர்ந்ததிருப்
பாசூராம் பதியணைந்தார்.

[ 338]


அங்குத் தங்கியிருந்த நாள்களில் அருகிலுள்ள சிவபெருமானின் திருக்கோயில்கள் எங்கும் சென்று, வணங்கி, வழி படுகின்ற அவர், பெருமானின் அருளால் பெரிதும் நீரையுடைய திரு வொற்றியூரைத் தொழுது போய், உமையை ஒரு கூற்றில் கொண்ட சிவ பெருமான் வீற்றிருக்கின்ற 'திருப்பாசூர்' என்ற பதியை அடைந்தார்.

குறிப்புரை: அருகுளவாம் சிவாலயங்கள் வடதிருமுல்லைவாயில், திருக்கள்ளில், புண்ணியகோடீசுவரர் கோயில், ஞாயிறு முதலாயின வாகலாம் என்பர் சிவக்கவிமணியார் (பெரிய. பு. உரை). பதிகங்கள் எவையும் கிடைத்தில.

திருப்பாசூர் நகரெய்திச்
சிந்தையினில் வந்தூறும்
விருப்பார்வம் மேற்கொள்ள
வேயிடங்கொண் டுலகுய்ய
இருப்பாரைப் புரமூன்றும்
எரித்தருள எடுத்ததனிப்
பொருப்பார்வெஞ் சிலையாரைத்
தொழுதெழுந்து போற்றுவார்.


[ 339]


'திருப்பாசூர்' என்ற பதியை அடைந்து, உள்ளத்தில் ஊறுகின்ற விருப்பம் மீதூர, உலகம் உய்யும் பொருட்டு அப்பதியில் மூங்கிலை இடனாகக் கொண்டு வெளிப்பட எழுந்தருளி யிருப்பவரான இறைவரை, முப்புரங்கள் எரிந்திடவும், அதில் அன்பர் மூவர்க்கும் அருள்செய்யவும் எடுத்த ஒப்பற்ற மேரு என்ற வில்லை யுடையவரைக், காலுற வணங்கித் தொழுபவராய்.

குறிப்புரை:

முந்திமூ வெயில்எய்த
முதல்வனார் எனவெடுத்துச்
சிந்தைகரைந் துருகுதிருக்
குறுந்தொகையும் தாண்டகமும்
சந்தநிறை நேரிசையும்
முதலான தமிழ்பாடி
எந்தையார் திருவருள்பெற்
றேகுவார் வாகீசர்.

[ 340]


'முந்தி மூவெயில் எய்த முதல்வனார்' எனத் தொடங்கி, உள்ளம் கரைந்துருகும் தன்மையுடைய திருக்குறுந் தொகைப் பதிகத்தையும், திருத்தாண்டகப் பதிகத்தையும், சந்தம் நிறைந்த திருநேரிசை முதலான தமிழ்ப் பதிகங்களையும் பாடி, நாவுக்கரசர், எம் இறைவரின் திருவருளைப் பெற்றவராய்ச் செல் கின்றார்.

குறிப்புரை: சந்த நிறை நேரிசையும் முதலான தமிழ் பாடி - எனவே, திருநேரிசை, திருவிருத்தம், திருத்தாண்டகம், திருக்குறுந்தொகை முதலாய பதிகங்களும் பிற பண்ணமைவான பதிகங்கள் பலவும் அருளியிருக்கலாம் எனத் தெரிகிறது.
எனினும் இதுபொழுது கிடைத்திருக்கும் பதிகங்கள் இரண்டேயாம். அவை: 1. 'முந்திமூவெயில்' (தி. 5 ப. 25) - திருக்குறுந் தொகை. 2. 'விண்ணாகி' (தி. 6 ப. 83) - திருத்தாண்டகம்.

Go to top
அம்மலர்சீர்ப் பதியைஅகன்
றயல்உளவாம் பதிஅனைத்தின்
மைம்மருவுங் களத்தாரை
வணங்கிமகிழ் வொடும்போற்றி
மெய்ம்மைநிலை வழுவாத
வேளாள விழுக்குடிமைச்
செம்மையினார் பழையனூர்த்
திருஆல வனம்பணிந்தார்.

[ 341]


அவ்வழகிய சிறந்த திருப்பதியை நீங்கி, அருகில் உள்ள பதிகள் எல்லாவற்றிற்கும் சென்று நஞ்சு விளங்கும் கழுத்தினை உடைய இறைவரை வணங்கி, மகிழ்வோடும் போற்றிப் பின்னர், மெய்ம்மை நிலையினின்றும் சற்றும் தவறாத மேன்மையும், நெறியில் வாழும் தூய குடிமையும் செம்மையும் உடையவர்களான வேளாளர் கள் வாழ்கின்ற பழையனூர்த் திருவாலங்காட்டைப் பணிந்தவராய்.

குறிப்புரை: அயலுளவாம் பதிகளாவன திருவள்ளூர், திருவெண் பாக்கம் முதலியனவாகலாம் என்பர் சிவக்கவிமணியார் (பெரிய. பு. உரை). பதிகங்கள் கிடைத்தில.

திருவாலங் காடுறையுஞ்
செல்வர்தாம் எனச்சிறப்பின்
ஒருவாத பெருந்திருத்தாண்
டகம்முதலாம் ஓங்குதமிழ்ப்
பெருவாய்மைத் தொடைமாலை
பலபாடிப் பிறபதியும்
மருவார்வம் பெறவணங்கி
வடதிசைமேல் வழிக்கொள்வார்.

[ 342]


'திருவாலங்காடு உறையும் செல்வர் தாமே' என நிறைவுறும், என்றும் நீங்காத சிறப்பையுடைய பெருந்திருத் தாண்டகப் பதிகம் முதலாக ஓங்கும் பெருவாய்மைத் தமிழ் மாலைகள் பலவற் றையும் பாடிப் பிறபதிகளையும் பொருந்திய ஆர்வம் மீதூர வணங்கி, அங்கிருந்து வடதிசை நோக்கிச் செல்வாராய்.
குறிப்புரை: 'திருவாலங்காடுறையும் செல்வர் தாமே' என நிறைவுறும் திருப்பதிகம் 'ஒன்றா வுலகனைத்தும்' (தி. 6 ப. 78) எனத் தொடங்கும் திருத்தாண்டகமாகும். இத் தாண்டகம் முதலாகத் 'தொடை மாலை பல பாடி' என்றாரேனும் இதுபொழுது கிடைத்திருக்கும் பதிகம் ஒன்றேயாம். அது 'வெள்ளநீர்' (தி. 4 ப. 68) எனத் தொடங்கும் திருநேரிசைப் பதிகம் ஆகும். பெருந்திருத்தாண்டகம் எனச் சேக்கிழார் குறிப்பன இத் திருப்பதிகமும், 'அரியானை' (தி. 6 ப. 1) எனத் தொடங்கும் தில்லைத் திருத்தாண்டகமுமாம்.

பல்பதியும் நெடுங்கிரியும்
படர்வனமுஞ் சென்றடைவார்
செல்கதிமுன் அளிப்பவர்தந்
திருக்காரிக் கரைபணிந்து
தொல்கலையின் பெருவேந்தர்
தொண்டர்கள்பின் உம்பர்குழாம்
மல்குதிருக் காளத்தி
மாமலைவந் தெய்தினார்.

[ 343]


பல பதிகளிலும், பெரிய மலைகளிலும், படர்ந்த காடுகளிலும் சென்று அடைவாராகி, உயிர்க்குரிய வீடுபேற்றை வழங்கியருளுபவராய இறைவர் வீற்றிருந்தருளுகின்ற திருக்காரிகரை என்ற பதியை வணங்கிப், பழமையான கலை ஞானங்களின் வேந்தரான நாயனார், தேவர் கூட்டங்கள் தொண்டர்களின் பின்னே நிறைவுற வரும் திருக்காளத்தி என்ற பெரிய மலையைச் சென்று அடைந்தார்.

குறிப்புரை: பல்பதி என்பன திருத்தணிகை, வளைகுளம் முதலி யன. நெடுங்கிரி என்பன நகரி மலை, குன்றவர்த்தனம், இராசி குண்டாமலை முதலியன. படர்வனம் என்பது இம் மலைகளினி டையே உள்ள பரந்த காடுகள். இவ்வாறு விளக்குவர் சிவக்கவிமணி யார் (பெரிய. பு. உரை). இவை ஐந்து பாடல்களும் ஒரு முடிபுடையன. பதிகம் கிடைக்காத திருக்காரிக்கரை வைப்புத் திருப்பதியாம்.

பொன்முகலித் திருநதியின்
புனிதநெடுந் தீர்த்தத்தில்
முன்முழுகிக் காளத்தி
மொய்வரையின் தாழ்வரையில்
சென்னியுறப் பணிந்தெழுந்து
செங்கண்விடைத் தனிப்பாகர்
மன்னுமலை மிசையேறி
வலங்கொண்டு வணங்குவார்.

[ 344]


நாவரசர் பொன்முகலி என்ற ஆற்றின் தூய நீரில் முழுகித், திருக்காளத்தித் தொடர் மலைகளின் தாழ்வரையில், தலையானது நிலம் பொருந்த வணங்கி எழுந்து, சிவந்த கண்களை உடைய ஆனேற்றினை ஊர்தியாகக் கொண்ட ஒப்பற்ற சிவபெருமான் நிலையாய் எழுந்தருளியிருக்கும் அம்மலையின் மீது ஏறி வலம் கொண்டு வணங்குபவராய்,

குறிப்புரை:

காதணிவெண் குழையானைக்
காளத்தி மலைக்கொழுந்தை
வேதமொழி மூலத்தை
விழுந்திறைஞ்சி எழுந்துபெருங்
காதல்புரி மனங்களிப்பக்
கண்களிப்பப் பரவசமாய்
நாதனைஎன் கண்ணுளான்
எனுந்திருத்தாண் டகம்நவின்றார்.

[ 345]


காதில் அணிந்த வெண்மையான சங்கினாலாய குழையை உடையவரைத், திருக்காளத்தி மலையின் கொழுந்து போல்பவரை, மறை மொழியின் மூலமானவரைக் கீழே விழுந்து வணங்கி எழுந்து, மீதூர்ந்த அன்புடைய மனம் களிப்படையவும், கண்கள் களிக்கவும் தம்வயம் இழந்த நிலையில் இறைவரை வணங்கி, 'என் கண் உளான்' என்ற நிறைவுடைய திருத்தாண்டகத்தைப் பாடி யருளினார்.

குறிப்புரை: இங்குக் குறிக்கப் பெற்ற தாண்டகம், 'விற்றூண் ஒன்றில் லாத' (தி. 6 ப. 8) எனும் முதற் குறிப்புடையதாகும்.

Go to top
மலைச்சிகரச் சிகாமணியின்
மருங்குறமுன் னேநிற்கும்
சிலைத்தடக்கைக் கண்ணப்பர்
திருப்பாதம் சேர்ந்திறைஞ்சி
அலைத்துவிழுங் கண்ணருவி
ஆகத்துப் பாய்ந்திழியத்
தலைக்குவித்த கையினராய்த்
தாழ்ந்துபுறம் போந்தணைந்தார்.

[ 346]


மலையுச்சியில் முடிமணியாய் முளைத்து எழுந்தருளிய இறைவரின் அருகில், பொருந்த முன்பு நிற்கும் வில் ஏந்திய கையையுடைய கண்ணப்ப நாயனார் திருவடிகளை அணைந்து வணங்கிப், பெருகி வரும் கண்ணீர், அருவி எனத் திருமேனியில் பாய்ந்து இழியத், தலைமீது கூப்பிய கைகளுடன் வணங்கி வெளியே வந்து சேர்ந்தார்.

குறிப்புரை: மேற்கூறிய திருத்தாண்டகத்தில் (தி. 6 ப. 8), பதினொன் றாவது பாடலில் 'கண்ணாரக் காண்பார்க்கோர் காட்சியான் காண்' எனக் கூறப் பெறும் அநுபவம் கண்ணப்பர் கண்ட அநுபவமாயிருத் தலும் அறியத் தக்கது.

சேணிலவு திருமலையில்
திருப்பணியா யினசெய்து
தாணுவினை அம்மலைமேல்
தாள்பணிந்த குறிப்பினால்
பேணுதிருக் கயிலைமலை
வீற்றிருந்த பெருங்கோலம்
காணுமது காதலித்தார்
கலைவாய்மைக் காவலனார்.

[ 347]


மிகவும் உயர்ந்த அம்மலையில் திருத் தொண்டுகளைச் செய்து இறைவரை வழிபட்ட குறிப்பின் காரணமாக, எல்லோராலும் விரும்பத் தகும் திருக்கயிலையில் வீற்றிருந்தருளும் பெருமானார் திருக்கோலத்தைக் கண்டு மகிழ விரும்பினார், கலை களையும் அவற்றின் உண்மையையும் உணர்ந்த நாவரசர்.

குறிப்புரை: காழிப் பிள்ளையாருக்கும் சுந்தரருக்கும் இத்திருப் பதியே தம் செலவு நயப்பில் வடபுல எல்லையாயிற்று. நாவுக்கரசருக்கு இத் திருப்பதியிலிருந்து திருக்கயிலாயம் சென்று வணங்கும் விருப்பம் உளவாகத் திருக்கயிலைக் காட்சியைத் திருவையாற்றில் காணநேர்ந் தது. சுந்தரருக்குத் திருவருளால் வெள்ளை யானையின் மீது திருக் கயிலை செல்லவும், பெருமானை வணங்கித் மகிழவும் நேர்ந்தது. ஞானசம்பந்தருக்கு மண்ணுலகத்தில் உள்ள திருநல்லூர்ப் பெருமணத் திலேயே இறைக்காட்சியைக் காணவும், இறை ஒளியுடன் ஒன்றவும் நேர்ந்தது. 'ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணமும் ஆதிமாண்பும் கேட்பான் புகில் அளவில்லை' (தி. 3 ப. 54 பா. 4) என்பதே அறியத் தக்கதாம்.

அங்கண் மாமலை மேல்ம ருந்தை
வணங்கி யாரரு ளான்மிகப்
பொங்கு காதலின் உத்த ரத்திசை
மேல்வி ருப்பொடு போதுவார்
துங்க மால்வரை கானி யாறு
தொடர்ந்த நாடு கடந்தபின்
செங்கண் மால்விடை அண்ணல் மேவு
திருப்ப ருப்பதம் எய்தினார்.

[ 348]


அருள்நோக்கம் மீதூர்ந்த அத்திருமலையின் மீது வீற்றிருக்கும் மருந்தான இறைவரை வணங்கி, அவருடைய நிறைந்த திருவருள் பெற்றமையால், மேன்மேல் மிகவும் பொங்கும் காதலால் வடதிசை நோக்கிச் செல்வாராய்ப் பெரியனவாய மலை களையும் காட்டாறுகளையும் தம்மகத்துக் கொண்ட நாடுகளைக் கடந்து சென்று பின், சிவந்த கண்களையுடைய ஆனேற்றின் மீது வீற்றிருந்தரு ளும் சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் திருப்பருப்பதத்தைச் சேர்ந்தார்.

குறிப்புரை: திருப்பருப்பதம் - இது ஷ்ரீபர்வதம் எனவும் , ஷ்ரீசைலம் எனவும் வழங்கும்; ஆந்திர மாநிலத்தில் கர்நூல் மாவட்டத்தில் நந்தியாற்றுக்கு அருகில் உள்ளது. திருப்பதியிலிருந்து 500 கிமீ. தொலைவில் உள்ளது. பன்னிரண்டு ஜோதிலிங்கத் திருப்பதி களுள் இதுவும் ஒன்று. மூவர் பதிகங்களும் பெற்ற சிறப்புடையது. சுந்தரர் சீபர்ப்பதம் எனக் குறிப்பர்.

மான விஞ்சையர் வான நாடர்கள்
வான்இ யக்கர்கள் சித்தர்கள்
கான கின்னரர் பன்ன காதிபர்
காம சாரிக ளேமுதல்
ஞான மோனிகள் நாளும் நம்பரை
வந்தி றைஞ்சி நலம்பெறுந்
தான மான திருச்சி லம்பை
வணங்கி வண்டமிழ் சாற்றினார்.

[ 349]


வன்மை பொருந்திய வித்தியாதரரும், விண்ணுலகத் தேவர்களும், வானத்தில் இயங்கும் இயக்கர்களும், சித்தர்களும், பாடுதலில் வல்ல கின்னரர்களும், நாக உலகத்தவரும், தம் விருப்பின்படி உலவுகின்ற தேவ இனத்தவரும் என்றிவர்கள் முதலாகச் சிவஞானிகளும் நாள்தோறும் வந்து இறைவரை வணங்கி நன்மை அடைகின்ற இடமான திருப்பருப்பதத்தை வணங்கி, வளம் மிக்க தமிழ் மாலையைப் பாடியருளினார்.

குறிப்புரை: இத்திருப்பதியில் அருளிய பதிகம் - 'கன்றினார்' (தி. 4 ப. 58) எனத் தொடங்கும் திருநேரிசைப்பதிகமாகும். மானவிஞ்சை - வலிமை பொருந்திய வித்தைகள். அவற்றில் வல்லுநராதலின் 'விஞ்சை யர்' எனப்பட்டனர். இயக்கர் - யக்ஷர் என்பது வடமொழித் திரிபு. இவர்கள் விண்ணிலியங்குபவர். உயிர்களைப் பிணித்துத் தம் இச்சை வழி இயக்குபவர். கானம் - இசை; கானகின்னரர் - இசையில் வல்ல வர்; தேவ இனத்தவருள் ஒருசாரார். காம சாரிகள் - தம் இச்சைவழி உலவ வல்லவர்கள். இவர்களும் தேவ இனத்தவருள் ஒருவர் ஆவர்.

அம்ம ருங்குக டந்து போமவர்
ஆர்கொள் சூல அயிற்படைச்
செம்மல் வெண்கயி லைப்பொ ருப்பைநி
னைந்தெ ழுந்ததொர் சிந்தையால்
எம்ம ருங்குமொர் காத லின்றி
இரண்டு பாலும் வியந்துளோர்
கைம்ம ருங்கணை யுந்தெ லுங்கு
கடந்து கன்னடம் எய்தினார்.

[ 350]


அங்கிருந்து அகன்றுபோகின்றவர் முத்தலைச் சூலமான படையை ஏந்திய, ஆத்தி மாலையைச் சூடிய இறைவரின் வெண்மையான திருக்கயிலாய மலையையே நினைந்து எழுந்ததொரு ஒருப்பட்ட சிந்தையினால், வேறுபிற பற்றுகள் எவையும் இன்றி இருமருங்கிலும் தம் ஆர்வம் கண்டு வியப்புக் கொண்ட அடியார்கள் அருகில் வந்து சேர, தெலுங்கு நாட்டைக் கடந்து கருநாடக (கன்னட) நாட்டை அடைந்தவராய்.

குறிப்புரை: கன்னட நாட்டில் திருக்கோகரணத்தை வணங்கி அருளிய பதிகம் 'சந்திரனும் தண்புனலும்' (தி. 6 ப. 49) எனத்தொடங்கும் திருத்தாண்டகமாகும்.

Go to top
கருந டங்கழி வாகஏகிய
பின்க லந்தவ னங்களும்
திருந தித்துறை யாவை
யும்பயில் சேண்நெ டுங்கிரி
வட்டையும் பெருந லங்கிளர்
நாடும் எண்ணில பிற்ப
டச்செறி பொற்பினால் வருநெ
டுங்கதிர் கோலு சோலைய
மாள வத்தினை நண்ணினார்.

[ 351]


அந்நாட்டின் எல்லை முடிந்த பின், அவ்வவ் விடத்தும் வந்துள்ள நாடுகளும் ஆற்றின் துறைகள் எல்லாமும் பயின்று, நெடுந்தொலைவாக நீண்டு செல்கின்ற மலை வழிகளும், பெருநலங்களைத் தரும் நாடுகளும் ஆகிய இவை எண்ணில்லாதவை பிற்பட்டொழியுமாறு, மரங்கள் செறிந்து அழகுற வளர்ந்த இயல்பால் மேல்வரும் ஞாயிறு வலமாகச் செல்கின்ற பூஞ்சோலைகளை உடைய மாளவ நாட்டை அடைந்தவராய்.

குறிப்புரை:

அங்கு முற்றிஅ கன்று போகி
அருஞ்சு ரங்கள் இகந்துசென்
றெங்கு மிக்க அறங்கள் நீடும்
இலாட பூமி யிகந்துபோய்
மங்குல் சுற்றிய வெற்பி னோடு
வனங்கள் யாறு கடந்தயற்
பங்க யப்பழ னத்து மத்திம
பைதி ரத்தினை எய்தினார்.

[ 352]


அவ்விடத்தை முழுமையாகக் கடந்து பின் அரிய பல காடுகளைக் கடந்து சென்று, எங்கெங்கும் மிகுதியான அறச் சாலைகள் அமைந்துள்ள இலாட நாட்டையும் கடந்து சென்று, மேகங்கள் சூழ்ந்த உயர்ந்த மலைகளுடனே காடுகளையும் ஆறுகளை யும் கடந்து, அருகில் தாமரைகள் மலரும் வயல்களை யுடைய மத்திம பைதிரம் என்னும் நாட்டை அடைந்தவராய்,

குறிப்புரை: இலாட நாடு - வங்காள நாட்டின் தென் மேற்குப் பகுதியாகும். இந் நாட்டிலுள்ளாரின் அறச்செயல் கண்டு மகிழ்தற் குரியது. மத்திம பைதிரம் - மத்தியப் பிரதேசம்.

அன்ன நாடுக டந்து கங்கை
அணைந்து சென்று வலங்கொளும்
மின்னு வேணியர் வார ணாசி
விருப்பி னோடு பணிந்துடன்
பின்ன ணைந்தவர் தம்மை அங்கண்
ஒழிந்து கங்கை கடந்துபோய்
மன்னு காதல்செய் நாவின் மன்னவர்
வந்து கற்சுரம் முந்தினார்.


[ 353]


அந்நாட்டையும் கடந்து, கங்கையாறு அணுகி வலமாக வரும் ஒளி பொருந்திய சடையையுடைய சிவபெருமான் எழுந்தருளியுள்ள வாரணாசியை (காசியை) விருப்புடன் வணங்கி வழிபட்டுத், தம்முடன் பின்பற்றி வந்த அடியவர்களை அவ்விடத்தில் விடுத்துக், கங்கைக் கரையை விட்டு மேற்சென்று, மீதூர்ந்த பத்திமை பூண்ட நாவுக்கரசர் மலைப் பகுதியை அடைந்தார்.

குறிப்புரை: வாரணாசி - வரணை, அசி என்னும் இருநதிகள், இப்பதியை வடக்கும் தெற்குமாகச் சூழ்ந்து வருவதால் இப்பெயர் பெற்றதென்பர். விருப்பினோடு பணிந்தவர் பதிகம் அருளி இருத்தல் வேண்டும் என்றாலும் அது கிடைத்திலது. உடன் வந்தவர்களின் இளைப்பும் மேலும் அவர்கள் வர இயலாமையும் கருதி அவர்களை விடுத்துத் தாமே செல்லத் திருவுள்ளங் கொண்டார். இந்நான்கு பாடல்களும் ஒரு முடிபுடையன.

மாக மீதுவ ளர்ந்த கானக
மாகி எங்கும் மனித்தரால்
போக லாநெறி யன்றி யும்புரி
கின்ற காதல் பொலிந்தெழச்
சாக மூலப லங்கள் துய்ப்பன
வுந்த விர்ந்து தனித்துநேர்
ஏகி னாரிர வும்பெ ருங்கயி
லைக்கு லக்கிரி எய்துவார்.

[ 354]


வானளாவ உயர்ந்த பெருங்காடாகி எங்கும் மனிதர்களால் சேரற்கு அரிய வழியாய் இருந்தபோதும், இடைவிடாது எழும் காதல் மிகுந்து மேல் ஓங்குவதால், இலைகளும் சருகுகளும், கிழங்குகளும் பழங்களும் என்னும் இவற்றை உண்பதையும் விடுத்துத் தனியாய், நேரே பெரிய கயிலாயமான ஒப்பில்லாத மலையை அடை யும் பொருட்டு, இரவிலும் தங்காது மேற்செல்வாராகி.

குறிப்புரை: சாகம் - இலை; உதிர்சருகு, மூலம் - வேர், கிழங்குகள். பலம் - கனிகள்.

ஆய வாரிரு ளின்கண் ஏகுமவ்
அன்பர் தம்மைஅ ணைந்துமுன்
தீய வாயவி லங்கு வன்தொழில்
செய்ய அஞ்சின நஞ்சுகால்
வாய நாகம ணிப்ப ணங்கொள்வி
ளக்கெ டுத்தன வந்துகால்
தோய வானவ ராயி னுந்தனி
துன்ன ருஞ்சுரம் முன்னினார்.

[ 355]


அத்தகைய செறிந்த இருளில் மேற்செல்லும் அன்பரைத், தீய விலங்குகள் நெருங்கிக் கொடுஞ்செயலைச் செய்ய அஞ்சின. நஞ்சை உமிழும் வாயையுடைய பாம்புகள் தம் படங்களில் உள்ள மணிகளை ஏந்தி விளக்கெடுத்தன. தேவர்களே எனினும் இங்கு வந்து கால் வைத்துப் பெயர்த்துத் தனியே சேர்வதற்கு அஞ்சுகின்ற காடுகளை நாவரசர் முன் அடைந்தனராக,

குறிப்புரை: ஆர் இருள் - செறிந்த இருள், நிலப் பிளப்புக்களில் நிழல் புகும் இடம் என்றது தற்குறிப்பேற்றம். பகலவனின் கதிர்கள் அப்பிளப்பில் நுழைவது, அங்குச் சென்றும் அந்நிழலைத் தவிர்க்கக் கருதியது போலும். இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

Go to top
வெங்க திர்ப்பக லக்க டத்திடை
வெய்ய வன்கதிர் கைபரந்
தெங்கு மிக்கபி ளப்பி னாகர்தம்
எல்லை புக்கெரி கின்றன
பொங்க ழல்தெறு பாலை வெந்நிழல்
புக்க சூழல் புகும்பகல்
செங்க திர்க்கனல் போலும் அத்திசை
திண்மை மெய்த்தவர் நண்ணினார்.

[ 356]


அக்காட்டில், கொடிய பகலில், கதிரவனின் கதிர்கள், மிகவும் எப்பக்கமும் பரவுவதால் எங்கும் மிகுதியாய் உள்ள நிலப் பிளவுகளிடையே, கீழே நாகர் உலக எல்லை வரை புகுந்து எரிக்கின்றன. பொங்கும் வெப்பத்தினால் அழிவு செய்யும் பாலையினது வெவ்விய புகுந்த இடத்தில் புகும் அப்பகலோனின் செவ்விய கதிர்களின் வெம்மையை ஒத்துள்ள அத்திசையில் திண்மையுடைய மெய்த்தவத்தவரான நாவரசர் சென்றடைந்தார்.

குறிப்புரை: இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

இங்ங னம்இர வும்ப கற்பொழு
தும்ம ருஞ்சுரம் எய்துவார்
பங்க யம்புரை தாள்ப ரட்டள
வும்ப சைத்தசை தேயவும்
மங்கை பங்கர்தம் வெள்ளி மால்வரை
வைத்த சிந்தை மறப்பரோ
தங்க ரங்க ளிரண்டு மேகொடு
தாவி ஏகுதல் மேவினார்.

[ 357]


இவ்வாறு இரவும் பகலும் கடப்பதற்கரிய பெருஞ் சுரத்தில் செல்பவரான நாவரசர், தாமரை மலர் போன்ற தம் திருவடிகள் கணைக்கால்வரை தேய்ந்து போகவும், உமையொரு கூறரின் பெரிய வெள்ளி மலையின் மீது ஊன்றிய நினைவை மறந்து விடுவரோ? மறவாத நிலையில் தம் இரு கைகளையுமே கொண்டு தாவிச் செல்வாராகி.

குறிப்புரை: பரடு - கணைக்கால்.

கைக ளும்மணி பந்த சைந்துற
வேக ரைந்து சிதைந்தபின்
மெய்க லந்தெழு சிந்தை அன்பின்
விருப்பு மீமிசை பொங்கிட
மொய்க டுங்கனல் வெம்ப ரற்புகை
மூளு மத்த முயங்கியே
மைகொள் கண்டர்தம் அன்பர் செல்ல
வருந்தி உந்தினர் மார்பினால்.

[ 358]


கைகளும் மணிக்கட்டுகளும் அசைந்து போகும் படி தேய்ந்து சிதைந்த பின்பு, மெய்யுடன் கலந்து எழும் அன்பு மிகுதியால் ஆய பெருவிருப்பம் மீதூர, நெருங்கிய தீப்போலும் பரற் கற்களின் புகை எழும் வழியை அடைந்து, கருநிறம் பொருந்திய திருக் கழுத்தினையுடைய சிவபெருமானின் அடியவரான நாவரசர், மேலும் செல்வதற்காக மார்பால் வருத்தத்துடன் உந்திச் சென்றவராய்,

குறிப்புரை: மீமிசை - மேன் மேலும்.

மார்ப முந்தசை நைந்து சிந்தி
வரிந்த என்பு முரிந்திட
நேர்வ ருங்குறி நின்ற சிந்தையின்
நேசம் ஈசனை நேடுநீடு
ஆர்வம் அங்குயிர் கொண்டு கைக்கும்
உடம்ப டங்கவும் ஊன்கெடச்
சேர்வ ரும்பழு வம்பு ரண்டு
புரண்டு சென்றனர் செம்மையோர்.

[ 359]


மார்புத் தசைகள் தேய்ந்து சிதற, ஒன்றுடன் ஒன்று வரிந்து கட்டப்பட்ட எலும்புகளும் முரிந்த நிலையில், அடைதற்கரிய குறிக்கோளினின்றும் தளராத உள்ளத்தே கொண்டிருந்த அன்பினால், சிவபெருமானை நாடிக் காண வேண்டும் என்ற நிலைத்த ஆர்வ மானது, அங்கு உயிரால் செலுத்துகின்ற உடல் முழுதும் தசைகள் கெடும் படியாய்ச் சேர்வதற்கு அரிய காட்டில் செம்மை நெறி நிற்பவரான நாவுக்கரசர் புரண்டு புரண்டு செல்வாராய்.

குறிப்புரை: பழுவம் - மலைக்காடு.

அப்பு றம்புரள் கின்ற நீளிடை
அங்கம் எங்கும் அரைந்திடச்
செப்ப ருங்கயி லைச்சி லம்படி
சிந்தை சென்றுறு மாதலால்
மெய்ப்பு றத்தில் உறுப்ப ழிந்தபின்
மெல்ல உந்து முயற்சியுந்
தப்பு றச்செய லின்றி அந்நெறி
தங்கி னார்தமி ழாளியார்.

[ 360]


அதன்பின்பு, மேலும் புரண்டு செல்கின்ற நீண்ட வழியின் இடையில், உடல் முழுதும் தேய்ந்து போகவே, செல்வதற் கரிய கயிலாயமலையில் திருவுள்ளம் போய்ச் சேருமாதலால், திரு மேனியின் புறத்து உறுப்புக்கள் அழிந்த பின்பு மெல்ல மெல்ல உந்திச் செல்லும் முயற்சியும் நீங்கிட, வேறு செய்யும் செயல் அற்றவராய் அந்நெறியில் தமிழ் வல்லுநரான நாவுக்கரசு நாயனார் தங்கியிருந்தார்.

குறிப்புரை: இந்நான்கு பாடல்களும் ஒரு முடிபின.

Go to top
அன்ன தன்மையர் கயிலையை
அணைவதற் கருளார்
மன்னு தீந்தமிழ் புவியின்மேற்
பின்னையும் வழுத்த
நன்னெ டும்புனல் தடமும்ஒன்
றுடன்கொடு நடந்தார்
பன்ன கம்புனை பரமரோர்
முனிவராம் படியால்.

[ 361]


அத்தன்மையினரான நாவுக்கரசர், நிலையான இனிய தமிழ்ப் பதிகங்களால் உலகில் மேலும் தம்மைப் போற்றி செய்யும் பொருட்டாகக் கயிலையைச் சென்று அடைவதற்கு அருள் செய்யாதவராய், நல்ல பெரிய நீர் மிக்க ஒரு பொய்கையையும் உளவாக்கிக் கொண்டு தாம் முனிவர் வடிவில் பாம்பைச் சூடிய சிவ பெருமான் நடந்து வந்தாராய்,

குறிப்புரை:

வந்து மற்றவர் மருங்குற
அணைந்துநேர் நின்று
நொந்து நோக்கிமற் றவர்எதிர்
நோக்கிட நுவல்வார்
சிந்தி இவ்வுறுப் பழிந்திட
வருந்திய திறத்தால்
இந்த வெங்கடத் தெய்திய
தென்என இசைத்தார்.

[ 362]


நாவரசர் அருகில் பொருந்தச் சேர்ந்து, நேரே நின்று வருந்தி, அவரைப் பார்த்து, அவரும் தம்மை எதிர் நோக்கச் சொல்பவராய், 'உம் உடல் உறுப்புகள் எல்லாம் சிந்தி அழிந்திடுமாறு வருந்திய நிலையில், இக்கொடிய பாலையில் வந்தது என்ன காரணம் பற்றி?' என வினவினார்.

குறிப்புரை: இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

மாசில் வற்கலை ஆடையும்
மார்பில்முந் நூலுந்
தேசு டைச்சடை மவுலியும்
நீறும்மெய் திகழ
ஆசின் மெய்த்தவ ராகிநின்
றவர்தமை நோக்கிப்
பேச உற்றதோர் உணர்வுற
விளம்புவார் பெரியோர்.

[ 363]


அழுக்கற்ற மரவுரி ஆடையும், திருமார்பில் முப் புரிநூலும், ஒளி பொருந்திய சடைமுடியும், திருமேனியில் விளங்கும் திருநீறும் ஆக, குற்றமில்லாத மெய்ம் முனிவராய் நின்ற இறைவரைப் பார்த்துப் பெரியோரான நாவுக்கரசர் பேசுதற்குப் பொருந்திய ஓர் உணர்ச்சி தோன்ற உரைப்பாராய்.

குறிப்புரை:

வண்டு லாங்குழல் மலைமக
ளுடன்வட கயிலை
அண்டர் நாயகர் இருக்கும்அப்
பரிசவர் அடியேன்
கண்டு கும்பிட விருப்பொடுங்
காதலின் அடைந்தேன்
கொண்ட என்குறிப் பிதுமுனி
யேஎனக் கூற.

[ 364]


'வண்டுகள் உலவும் கூந்தலையுடைய உமை யம்மையாருடன் கயிலை மலையில் சிவபெருமான் எழுந்தருளி யிருக்கும் அத்தன்மையை, அவருடைய அடியவனான நான் கண்டு வணங்க வேண்டும் என்ற விருப்புடன், வந்துள்ளேன், முனிவரே! என் உளம் கொண்ட குறிப்பு இதுவாகும்' என்று சொல்ல.

குறிப்புரை:

கயிலை மால்வரை யாவது
காசினி மருங்கு
பயிலும் மானுடப் பான்மையோர்
அடைவதற் கெளிதோ
அயில்கொள் வேற்படை அமரரும்
அணுகுதற் கரிதால்
வெயில்கொள் வெஞ்சுரத் தென்செய்தீர்
வந்தென விளம்பி.


[ 365]


'பெரிய கயிலை மலையானது இவ்வுலக மக்கள் சென்றடைதற்கு எளியதோ? கூர்மையான வேற்படையையுடைய தேவர் முதலியவரும் சென்று அடைய இயலாத அருமையுடைய தாகும். வெம்மை மிக்க கொடிய இப்பாலை நிலத்திடை வந்து என்ன செயல் செய்து விட்டீர்!' என்பாராய்,

குறிப்புரை:

Go to top
மீளும் அத்தனை உமக்கினிக்
கடன்என விளங்கும்
தோளும் ஆகமும் துவளுமுந்
நூல்முனி சொல்ல
ஆளும் நாயகன் கயிலையில்
இருக்கைகண் டல்லால்
மாளும் இவ்வுடல் கொண்டுமீ
ளேன்என மறுத்தார்.

[ 366]


இங்கிருந்து மீண்டு செல்வதே இனி உமக்குக் கடனாகும் என்று, விளங்கும் தோளிலும் மேனியிலும் கிடந்து துவள்கின்ற முப்புரி நூலையுடைய முனிவரான இறைவர் உரைக்க, 'என்னை அடிமையாகவுடைய தலைவராய், சிவபெருமான் திருக் கயிலையில் இருக்கும் கோலத்தைக் கண்டு வணங்கியபின் அல்லது அழியும் இயல்புடைய இவ்வுடலுடன் திரும்பிச் செல்ல ஒருப்படேன்' என்று திருநாவுக்கரசர் மறுத்தனராக.

ஆங்கு மற்றவர் துணிவறிந்
தவர்தமை அறிய
நீங்கு மாதவர் விசும்பிடைக்
கரந்துநீள் மொழியால்
ஓங்கு நாவினுக் கரசனே
எழுந்திர்என் றுரைப்பத்
தீங்கு நீங்கிய யாக்கைகொண்
டெழுந்தொளி திகழ்வார்.

[ 367]


அவ்விடத்தே அவர் கொண்டிருக்கும் துணிவை உலகம் அறிந்து உய்யுமாறு தாம் எண்ணி, அவர், தம்மை இன்னார் என அறிந்து கொள்ளுமாறு நீங்குகின்ற முனிவரான இறைவர், விண்ணில் மறைந்து, நீண்ட தம் மொழியில் வான்வழியாக, 'உயர்ந்த நாவுக் கரசனே! எழுந்திரு!' எனக் கூறினர். அந்நிலையில் ஊறுகள் எல்லாம் நீங்கிய உடலுடனே எழுந்து ஒளியில் விளங்குவார் ஆகி,

குறிப்புரை:

அண்ண லேஎனை ஆண்டுகொண்
டருளிய அமுதே
விண்ணி லேமறைந் தருள்புரி
வேதநா யகனே
கண்ணி னால்திருக் கயிலையில்
இருந்தநின் கோலம்
நண்ணி நான்தொழ நயந்தருள்
புரிஎனப் பணிந்தார்.

[ 368]


'பெருமை பொருந்திய தலைவரே! எனை ஆண்டு கொண்டருளிய அமுதே! விண்ணினிடமாக மறைந்து அருள் செய்யும் நான்மறையின் தலைவனே! திருக்கயிலை மலையில் வீற்றிருந்தருளும் நும் திருக்கோலத்தை நான் கண்ணால் கண்டு வணங்கும்படியாக விரும்பி அருள் செய்வீராக!' என வேண்டியவாறு கீழே விழுந்து பணிந்தாராக,

குறிப்புரை:

தொழுதெ ழுந்தநற் றொண்டரை
நோக்கிவிண் தலத்தில்
எழுபெ ருந்திரு வாக்கினால்
இறைவர்இப் பொய்கை
முழுகி நம்மைநீ கயிலையில்
இருந்தஅம் முறைமை
பழுதில் சீர்த்திரு வையாற்றிற்
காண்எனப் பணித்தார்.

[ 369]


அவ்வாறு வணங்கி எழுந்து நின்ற நல்தொண்ட ரான அரசரைப் பார்த்து, வான் ஒலியாய தம் பெருவாக்கினால், 'இப்பொய்கையில் மூழ்கி, நாம் திருக்கயிலையில் வீற்றிருக்கும் அம்முறையை, குற்றம் இல்லாத சிறப்புடைய திருவையாற்றிலே சென்று காண்பாயாக!' என்று பெருமானாரும் பணித்தருளினார்.

குறிப்புரை: இவ்வேழு பாடல்களும் ஒரு முடிபின.

ஏற்றி னார்அருள் தலைமிசைக்
கொண்டெழுந் திறைஞ்சி
வேற்று மாகிவிண் ணாகிநின்
றார்மொழி விரும்பி
ஆற்றல் பெற்றவர் அண்ணலார்
அஞ்செழுத் தோதிப்
பாற்ற டம்புனற் பொய்கையில்
மூழ்கினார் பணியால்.

[ 370]


மேற்கூறியவாறு அருளிய ஆனேற்றினை ஊர்தி யாக உடைய சிவபெருமானின் திருவருளைத் தலைமேற் கொண்டு, எழுந்து வணங்கி, 'வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி' எனத் தொடங்கும் திருப்பதிகங்கொண்டு விருப்புடன் வழிபட்டுத் திருவருள் வன்மை பெற்ற நாயனார், இறைவரின் திருவைந்தெழுத்தை ஓதியவாறு, இறைவர் தம் ஆணைப்படி புனித நீர்ப் பொய்கையில் மூழ்கினார்.

குறிப்புரை: 'வேற்றாகி, விண்ணாகி'' (தி. 6 ப. 55) எனத் தொடங் கும் இத் தாண்டகம், பாடல் தொறும் 'கயிலை மலையானே போற்றி போற்றி' எனும் நிறைவுடையதாகும். ஒவ்வொரு பாடலிலும் போற்றி எனும் சொல் ஒன்பது இடங்களில் இடம் பெற்றுள்ளது. இதனால் இத்திருப்பதிகம் போற்றித் திருத்தாண்டகம் எனப் பெயர் பெற்றது. இவ்வகையில் அமைந்த தாண்டகங்கள் மேலும் இரண்டுள. அவை திருவையாற்றில் பாடப் பெற்றனவாம். (பா. 381 காண்க. )

Go to top
ஆதி தேவர்தந் திருவருள்
பெருமையார் அறிவார்
போத மாதவர் பனிவரைப்
பொய்கையில் மூழ்கி
மாதொர் பாகனார் மகிழும்ஐ
யாற்றிலோர் வாவி
மீது தோன்றிவந் தெழுந்தனர்
உலகெலாம் வியப்ப.


[ 371]


முதல் தேவரான சிவபெருமானின் திருவருட் பெருமையை எவர் அறிவார்? உலகமெல்லாம் வியப்பு அடையுமாறு ஞானத்தவமுனிவரான நாவுக்கரசு நாயனார் பனிமலையில் விளங் கிய அப்பொய்கையில் முழ்கி, உமையம்மையாரை ஒரு கூற்றில் கொண்ட சிவபெருமான் மகிழ்ந்து வீற்றிருக்கும் திருவையாற்றில் ஒரு பொய்கையின் மேல் வந்து எழுந்தார்.

குறிப்புரை: கயிலைச் சாரலிலுள்ள ஒரு பொய்கையில் முழ்கிய வர், ஐயாற்றில் உள்ள ஒரு பொய்கையில் தோன்றவந்தது, மனித முயற்சிக்கும் நினைவிற்கும் அப்பாற்பட்ட, திருவருள் வயப்பட்ட தாகும். ஆதலின் ஆசிரியர் 'ஆதிதேவர் தம் திருவருட் பெருமை யாரறிவார்' எனத் தொடங்கி, இவ்வருட் செயலைக் கூறுவாராயினர்.
இப்பொய்கை, திருவையாற்றில் திருக்கோயிலின் வடமேற் கில் உள்ளதாகும். சமுத்திர தீர்த்தம், உப்பங்குட்டைப் பிள்ளையார் கோயில் குளம் என்றெல்லாம் இக்காலத்தே அழைக்கப் பெறுகிறது.

வம்பு லாமலர் வாவியின்
கரையில்வந் தேறி
உம்பர் நாயகர் திருவருட்
பெருமையை உணர்வார்
எம்பி ரான்தருங் கருணைகொல்
இதுஎன இருகண்
பம்பு தாரைநீர் வாவியிற்
படிந்தெழும் படியார்.

[ 372]


மணம் கமழும் மலர்கள் பொருந்திய பொய்கை யின் கரையில் வந்து மேல் ஏறி, சிவபெருமானின் பெருமையைத் தம் அநுபவத்தின் உணர்பவராகி, ''எம் இறைவர் அருளும் கருணையோ இது'' என்று இரு கண்களினின்றும் பொங்கித் தாரையாய் வழிகின்ற கண்ணீரின் பொய்கையுள் மூழ்கி எழுகின்ற தன்மை உடையவர் போன்றவராய் ஆகி,

குறிப்புரை: இதுகாறும் நாவரசர் இறைவனின் அருட்பொய்கை யில் மூழ்கி வந்தது, தாம் இறைவரிடத்துச் செலுத்தும் அன்புப் பொய்கையில் மூழ்கி வந்த வகையினாலாம். இறைவர் இவருக்கு அருளியது அருளாக, இவர் அவருக்குக் கொடுத்தது அன்பாக அமைந்தமை எண்ணி மகிழ்தற்குரியது.

மிடையும் நீள்கொடி வீதிகள்
விளங்கிய ஐயா
றுடைய நாயகர் சேவடி
பணியவந் துறுவார்
அடைய அப்பதி நிற்பவுஞ்
சரிப்பவு மான
புடைஅ மர்ந்ததந் துணையொடும்
பொலிவன கண்டார்.

[ 373]


நெருங்கிய நீண்ட கொடிகள் கட்டிய வீதிகளால் சிறப்புற்று விளங்கும் திருவையாற்றில் எழுந்தருளியிருக்கும் இறை வரின் திருவடிகளை வணங்கும் குறிப்பில் வருகின்ற நாவுக்கரசர், அது பொழுது நிற்பனவும் நடப்பனவுமாய உயிர்கள் அனைத்தும், அருகில் விளங்கி நிற்கும் தத்தம் துணையுடன் கூடி விளங்கும் தோற்றத்தைக் கண்டனராகி.

குறிப்புரை: துணை என்றது பெண்ணும் ஆணும் ஒருவற்கு மற்றவர் துணை எனக் கருதத்தக்கது.

பொன்ம லைக்கொடி யுடன்அமர்
வெள்ளியம் பொருப்பில்
தன்மை யாம்படி சத்தியுஞ்
சிவமுமாஞ் சரிதைப்
பன்மை யோனிகள் யாவையும்
பயில்வன பணிந்தே
மன்னு மாதவர் தம்பிரான்
கோயில்முன் வந்தார்.

[ 374]


அழகிய திருக்கயிலை மலையில், கொடி என விளங்கும் பார்வதியம்மையாருடன் விரும்பி வீற்றிருக்கும் தன்மையை, இங்கும் காணும் வண்ணம், சத்தியும் சிவமும் ஆகிய தன்மையில், பற்பல உயிர்களின் பிறப்பு விளங்கும் முறைமையைக் கண்டு வணங்கியவாறே, நிலை பெற்ற முனிவரான திருநாவுக்கரசர் தம் இறைவரது திருக்கோயில் முன் வந்தார்.

குறிப்புரை: முன்னைய பாடலில், நாவரசர் அனைத்துயிர்களையும் ஆணும் பெண்ணுமாகக் கண்ட அநுபவத்தைக் கூறினார்; இப்பாடலில் அவை சத்தியும் சிவமுமாகக் காணும் அநுபவத்தைக் கூறினார்.
சத்தியுஞ் சிவமு மாய தன்மையிவ் வுலக மெல்லாம்
ஒத்தொவ்வா ஆணும் பெண்ணும் உணர்குண குணியு மாகி
வைத்தன னவளால் வந்த வாக்கமிவ் வாழ்க்கை யெல்லாம்
இத்தையு மறியார் பீட லிங்கத்தி னியல்பு மோரார்.
-சிவஞானசித்தி. சுபக். சூ. 1 பா. 69எனவரும் மெய்ந்நூற் கருத்தையும் காண்க.

காணும் அப்பெருங் கோயிலுங்
கயிலைமால் வரையாய்ப்
பேணு மால்அயன் இந்திரன்
முதற்பெருந் தேவர்
பூணும் அன்பொடு போற்றிசைத்
தெழும்ஒலி பொங்கத்
தாணு மாமறை யாவையுந்
தனித்தனி முழங்க.


[ 375]


தோன்றும் அப்பெரிய கோயிலே பெரிய கயிலாய மலையாக, இறைவரின் தொண்டிற்கு ஆளாக எதிர் நோக்கி இருக்கும் திருமால், நான்முகன், இந்திரன் முதலான தேவர்கள் அனைவரும் உள்ளத்துக் கொண்டு அன்புடன் வழிபட, அதனால் எழுகின்ற ஒலிகள் எங்கும் தனித் தனியே ஒலிக்கவும், நிலைபெற்ற மறைகள் யாவும் தனித் தனியே முழங்கவும்.

குறிப்புரை: தாணு - நிலைபெற்ற பொருள்.

Go to top
தேவர் தானவர் சித்தர்விச்
சாதரர் இயக்கர்
மேவு மாதவர் முனிவர்கள்
புடையெலாம் மிடையக்
காவி வாள்விழி அரம்பையர்
கானமும் முழவும்
தாவில் ஏழ்கடல் முழக்கினும்
பெருகொலி தழைப்ப.

[ 376]


தேவர்களும், அசுரர்களும், சித்தர்களும், வித்தியாதரர்களும், இயக்கர்களும், பொருந்தும் மாதவர்களும், மாமுனிவர்களும் என்னும் இவர்கள், பக்கங்களில் எங்கும் திரண்டு நிறைந்து விளங்கவும், குவளை மலரையும் வாளையும் போன்ற கண்களையுடைய தேவ அரம்பையர்களின் பாடலும் முழவு ஒலியும் அழிவில்லாத ஏழு கடல்களின் ஒலியினும் மிகுதியாகப் பேரொலி செய்யவும்.

குறிப்புரை:

கங்கை யேமுதல் தீர்த்தமாங்
கடவுள்மா நதிகள்
மங்க லம்பொலி புனற்பெருந்
தடங்கொடு வணங்க
எங்கும் நீடிய பெருங்கண
நாதர்கள் இறைஞ்சப்
பொங்கி யங்களால் பூதவே
தாளங்கள் போற்ற.

[ 377]


கங்கை முதலான தூய தெய்வத் தன்மையுடைய பெரிய நதிகள் பலவும் மங்கல நீர் நிறைந்த பெரும் பொய்கைகளாக வந்து வணங்கவும், எவ்விடத்தும் பரந்த பெரிய சிவகணத் தலைவர் கள் வணங்கவும், ஒலியால் மிகும் பலவகை இயங்களையும் முழக்கிப் பூத கணங்களும் பேய்க்கணங்களும் போற்றவும்.

குறிப்புரை: வேதாளம் - பேய்க்கணங்கள்: இவை சிவகணங்களுள் ஒருவகையின. சிவபுண்ணியச் செயலுடையன.

அந்தண் வெள்ளிமால் வரையிரண்
டாம்என அணைந்தோர்
சிந்தை செய்திடச் செங்கண்மால்
விடைஎதிர் நிற்ப
முந்தை மாதவப் பயன்பெறு
முதன்மையால் மகிழ்ந்தே
நந்தி எம்பிரான் நடுவிடை
யாடிமுன் நணுக.

[ 378]


அழகும் குளிர்ச்சியும் பொருந்திய பெரிய வெள்ளி மலைகள் இரண்டாம் என்று அங்கு வந்தவர்கள் எண்ணுமாறு சிவந்த கண்களையுடைய பெரிய ஆனேறு முன்னே நிற்கவும் முன்னாளில் அத்திருப்பதியில் செய்த பெருந்தவப் பயனாகப் பெறும் முதன்மையால் மகிழ்ந்து நந்தியெம் பெருமான், சிவபெருமானுக்கும் அவரை வழிபட வரும் அடியவர்களுக்கும் நடுவில் நடந்து இறைவன் திருமுன்னிலையில் நிற்கவும்.

குறிப்புரை: நந்தியெம் பெருமான் இறைவனின் ஆணைவழி நின்று வருபவர்க்கு வழிபாடு செய்விக்கும் பொறுப்புடையர் ஆதலின், அவரை 'நடு இடை யாடி' என்றார். நடு - இறைவர்க்கும் வழிபடு வார்க்கும் நடு. இடையாடி - இருதிறத்தார் தம் குறிப்பிற்கும் ஏற்பப் பணிபுரிதல், 'வந்து இறை அடியிற் றாழும்' (திருவிளை. கடவுள், 5) எனவரும் பரஞ்சோதியார் திருவாக்கும் காண்க. வெள்ளி வெற்பு இரண்டு. 1. ஆனேற்றூர்தி. 2. கயிலை மலை. உயர்வும் தகவும் பெற நிற்றல் பற்றி இங்ஙனம் கூறினார்.

வெள்ளி வெற்பின்மேல் மரகதக்
கொடியுடன் விளங்கும்
தெள்ளு பேரொளிப் பவளவெற்
பெனஇடப் பாகம்
கொள்ளு மாமலை யாளுடன்
கூடவீற் றிருந்த
வள்ள லாரைமுன் கண்டனர்
வாக்கின்மன் னவனார்.


[ 379]


வெள்ளி மலைமீது மரகதக் கொடியுடனே விளங்கும் தெளிந்த பேரொளியுடைய பவளமலை என்று கூறும் படியாய் இட மருங்கில் உமையம்மையாருடன் வீற்றிருந்தருளும் வள்ளலாரான சிவபெருமானைத் திருநாவுக்கரசு நாயனார் தம் கண் முன்னம் கண்டார்.

குறிப்புரை: வெள்ளி வெற்பு - கயிலைமலை. மரகதக் கொடி - உமை யம்மையார். பவள மலை - சிவபெருமான். இவ்வைந்து பாடல்களும் ஒரு முடிபுடையன.

கண்ட ஆனந்தக் கடலினைக்
கண்களால் முகந்து
கொண்டு கைகுவித் தெதிர்விழுந்
தெழுந்துமெய் குலைய
அண்டர் முன்புநின் றாடினார்
பாடினார் அழுதார்
தொண்ட னார்க்கங்கு நிகழ்ந்தன
யார்சொல வல்லார்.

[ 380]


அவ்வாறு கண்ட ஆனந்தக் கடலைத் தம் இருகண்களாலும் முகந்து கொண்டவராய்க் கைகளைத் தம் தலைமீது குவித்துத், திருமுன்பு விழுந்து, பின் எழுந்து உடலெல்லாம் அசையும் படி உலகுயிர்கட்கெல்லாம் தலைவரான சிவபெருமான் திருமுன்பு நின்று கொண்டு, திருநாவுக்கரசு நாயனார் ஆடினார், பாடினார், அழுதார். அத்தொண்டருக்கு அங்கு அதுபொழுது நிகழ்ந்தனவாகிய வியத்தகு மெய்ப் பாடுகளைச் சொல்ல வல்லார் யார்? எவரும் இலர்.

குறிப்புரை: இதுபோது பாடிய நேரிசை, 'கனகமா வயிரமுந்து' (தி. 4 ப. 47) எனத் தொடங்கும் பதிகமாம்.

Go to top
முன்பு கண்டுகொண் டருளின்ஆர்
அமுதுண்ண மூவா
அன்பு பெற்றவர் அளவிலா
ஆர்வம்முன் பொங்கப்
பொன்பி றங்கிய சடையரைப்
போற்றுதாண் டகங்கள்
இன்பம் ஓங்கிட ஏத்தினார்
எல்லையில் தவத்தோர்.

[ 381]


தம்முன் நேரே கண்டு கொண்டு, திருவருளாய அவ்வரிய அமுதத்தை உண்ணுதற்கேற்ற அளவற்ற அன்பையுடைய வரும், எல்லையற்ற தவத்தையுடையவருமான நாயனார், அளவில் லாத ஆசை முன்னே ததும்பப் பொன் நிறமாய சடையை யுடைய சிவபெருமானைப் போற்றும் திருத்தாண்டகங்களை இன்பம் பெருகப் பாடியருளினார்.

குறிப்புரை: இது பொழுது பாடிய திருத்தாண்டகங்கள் இரண்டாம். 1. 'பொறையுடைய' (தி. 6 ப. 56) 2. 'பாட்டான நல்ல' (தி. 6 ப. 57) ஆகிய இவ்விரு திருத்தாண்டகங்களும் கயிலைக் காட்சியை இறை யருளால் திருவையாற்றில் கண்டு மகிழ்ந்தபொழுது அருளியவையாம். இவ்விரு பாடல்களும் ஒரு முடிபுடையன.

ஆய வாறுமற் றவர்மனங்
களிப்புறக் கயிலை
மேய நாதர்தந் துணையொடும்
வீற்றிருந் தருளித்
தூய தொண்டனார் தொழுதெதிர்
நிற்கஅக் கோலம்
சேய தாக்கினார் திருவையா
றமர்ந்தமை திகழ.

[ 382]


இவ்வாறாக, நாயனாரின் உள்ளம் மகிழுமாறு திருக்கயிலையில் வீற்றிருக்கும் இறைவர் தம் துணைவியாருடன் வீற்றிருந்தருள, தூயவரான திருத்தொண்டனார் வணங்கிய வண்ணம் நின்று கொண்டிருக்க, திருவையாற்றில் எழுந்தருளியிருக்கும் தன்மை வெளிப்பட விளங்குமாறு, முன் காட்டியருளிய அக்கயிலைக் கோலத்தைச் சேய்மையாகுமாறு மறைத்தருளினார்.

குறிப்புரை:

ஐயர் கோலம்அங் களித்தகன்
றிடஅடித் தொண்டர்
மையல் கொண்டுளம் மகிழ்ந்திட
வருந்திமற் றிங்குச்
செய்ய வேணியர் அருளிது
வோஎனத் தெளிந்து
வையம் உய்ந்திடக் கண்டமை
பாடுவார் மகிழ்ந்து.


[ 383]


சிவபெருமான் இவ்வாறாகத் திருக்கயிலையில் இருந்த கோலத்தை அங்குக் காணும்படி அளித்து மறைத்தருளினாராக, திருவடித் தொண்டை மேற்கொண்டிருந்த திருநாவுக்கரசு நாயனார் மயங்கி, உள்ளத்தில் முன்போலவே இன்னும் மகிழ்ச்சி பெற்றிருக்கும் வண்ணம் வேண்டி, வருந்தி 'இனி இங்குச் சிவந்த சடையையுடைய இறைவரின் திருவருள் இவ்வகையதோ?' என்று தெளிவு கொண்டு, உலகம் உய்யும் பொருட்டுத் தாம் கண்ட அவ்வருட் செய்தியை மகிழ்வுடன் பாடுவாராகி.

குறிப்புரை:

மாதர்ப் பிறைக்கண்ணி யானை
மலையான் மகளொடும் என்னும்
கோதறு தண்டமிழ்ச் சொல்லால்
குலவு திருப்பதி கங்கள்
வேத முதல்வர்ஐ யாற்றில்
விரவுஞ் சராசரம் எல்லாங்
காதல் துணையொடுங் கூடக்
கண்டேன் எனப்பாடி நின்றார்.

[ 384]


'மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும்' எனத் தொடங்குகின்ற, குற்றம் அற்ற தண்ணிய தமிழ்ச் சொல்லால் ஆய திருப்பதிகத்தை 'மறை முதல்வரான இறைவரைத் திருவையாற்றிலே, பொருந்தி நடப்பனவும் நிற்பனவுமான உயிர்கள் யாவும் காதல் பொருந்திய தம் துணைகளுடனே இயைந்து வரக் கண்டேன்' என்னும் கருத்துப் படப் பாடினார்,

குறிப்புரை: 'மாதர்ப் பிறைக் கண்ணியானை' (தி. 4 ப. 3 பா. 1) எனத் தொடங்கும் பதிகம் காந்தாரப் பண்ணில் அமைந்ததாகும். இப்பாடலில் 'யாதும் சுவடுபடாமல் ஐயாறு அடைகின்ற போது' எனவரும் பகுதி, கயிலையிலிருந்து திருவையாற்றிற்குச் சுவடு படாமல் வந்த அருமையைப் புலப்படுத்துகின்றது.
சரம் - இயங்குவன. அசரம் - நிற்பன. இவ்வரிய திருப்பதிகத் தில் வரும் உயிர்ப் பெயர்கள் யாவும் இயங்குவனவே. இவையனைத் தும் அம்மையும் அப்பனுமாக நாவரசருக்குக் காட்சியளிப்பதோடு, இவை இயங்கும் திருவையாற்றுத் திருக்கோயிலும் பிறதிருக்கோயில் களும் ஆகிய அனைத்தும் உலகமே உருவமாக யோனிகள் உறுப்ப தாக விளங்கும் அம்மையப்பரின் திருக்கோலமாகக் காட்சி தருகின்றன.
நோக்குவ அனைத்தும் அவையே போல்வதான நிலை பேரின்பக் காட்சிக்கும் உண்டு ஆதலின் சராசரங்கள் எல்லாம் காதல் துணையொடும் கூடக் கண்டேன் என்றார்.
இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.


கண்டு தொழுது வணங்கிக்
கண்ணுத லார்தமைப் போற்றிக்
கொண்ட திருத்தாண் டகங்கள்
குறுந்தொகை நேரிசை அன்பின்
மண்டு விருத்தங்கள் பாடி
வணங்கித் திருத்தொண்டு செய்தே
அண்டர் பிரான்திரு வையா
றமர்ந்தனர் நாவுக் கரசர்.


[ 385]


இவ்வாறு திருநாவுக்கரசு நாயனார் கண்டும் தொழுதும் வணங்கியும் நெற்றிக் கண்ணையுடைய சிவபெருமானைப் போற்றியும், திருத்தாண்டகங்களும் திருக்குறுந்தொகையும், திருநேரி சையும் அன்புடைய திருவிருத்தங்களும் முதலான பதிகங்களைப் பாடியும் திருத்தொண்டுகளைச் செய்த வண்ணம் திருவையாற்றில் தங்கியிருந்தார்.

குறிப்புரை: இது பொழுது அருளிய பதிகங்கள்: 1. தாண்டகங்கள்: (அ) 'ஆரார் திரிபுரங்கள்' (தி. 6 ப. 37) (ஆ) 'ஓசை ஒலியெலாம்' (தி. 6 ப. 38) 2. குறுந்தொகைகள்: (அ) 'சிந்தைவாய்தல்' (தி. 5 ப. 27) (ஆ) 'சிந்தை வண்ணத்த ராய்' (தி. 5 ப. 28) 3. திருநேரிசை: (அ) 'கங்கையை' (தி. 4 ப. 38) (ஆ) 'குண்டனாய்' (தி. 4 ப. 39) (இ) 'தானலாது' (தி. 4 ப. 40) 4. விருத்தங்கள்: (அ) 'அந்திவட்டத்து' (தி. 4 ப. 98) (ஆ) 'குறுவித்தவா' (தி. 4 ப. 91) (இ) 'சிந்திப் பரியன' (தி. 4 ப. 92) 5. பண்: 'விடகிலேன்' (தி. 4 ப. 13) - பழந்தக்கராகம்.

Go to top
நீடிய அப்பதி நின்று
நெய்த்தான மேமுத லாக
மாடுயர் தானம் பணிந்து
மழபாடி யாரை வணங்கிப்
பாடிய செந்தமிழ் மாலை
பகர்ந்து பணிசெய்து போற்றித்
தேடிய மாலுக் கரியார்
திருப்பூந் துருத்தியைச் சேர்ந்தார்.


[ 386]


நிலைபெற்ற அப்பதியாய திருவையாற்றில் இருந்தும், திருநெய்த்தானம் முதலாக அருகில் உள்ள பதிகளை எல்லாம் வணங்கித், திருமழபாடிக்குச் சென்று இறைவரை வணங்கிச் செந்தமிழ் மாலையாகிய திருப்பதிகம் பாடித் திருப்பணிகளையும் செய்து போற்றி, பின்பு தேடிய மாலுக்கும் அரியவரான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருப்பூந்துருத்தியை அடைந்தார்.

குறிப்புரை: திருநெய்த்தானத்தில் அருளிய பதிகங்கள்: 1. 'கால னை' (தி. 4 ப. 37) - திருநேரிசை. 2. 'பாரிடம்' (தி. 4 ப. 89) - திரு விருத்தம். 3. 'கொல்லியான்' (தி. 5 ப. 34) - திருக்குறுந்தொகை. 4. 'வகையெலாம்' (தி. 6 ப. 41) - திருத்தாண்ட கம். 5. 'மெய்த்தானத்து' (தி. 6 ப. 42) - திருத்தாண்டகம்.
நெய்த்தானமே முதலாக மாடுயர்தானம் என்பதால் கொள் ளப்படும் திருப்பதிகள், திருப்பெரும்புலியூர் முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார் (பெரிய. பு. உரை). எனினும் திருப்பதிகங் கள் கிடைத்தில.

சேர்ந்து விருப்பொடும் புக்குத்
திருநட மாளிகை முன்னர்ச்
சார்ந்து வலங்கொண் டிறைஞ்சித்
தம்பெரு மான்திரு முன்பு
நேர்ந்த பரிவொடுந் தாழ்ந்து
நிறைந்தொழி யாஅன்பு பொங்க
ஆர்ந்தகண் ணீர்மழை தூங்க
அயர்வுறுந் தன்மைய ரானார்.

[ 387]


அப்பதியை அடைந்த நாவரசர் விருப்புடன் அதனுள் புகுந்து, இறைவர் அருட்கூத்து இயற்றி வெளிப்பட எழுந் தருளியிருக்கும் கோயிலைச் சார்ந்து, வலம் வந்து வணங்கி, தம் பெருமானின் முன் தாழ்ந்து வணங்கி, உள் நிறைந்து நீங்காத அன்பு மீதூரப் பெருக, அதனால் நிறைந்து வெளியாகும் கண்ணீர் மழை பொழிய, தம் வயமிழந்த நிலையை அடைந்தவராய்,

குறிப்புரை:

திருப்பூந் துருத்தி அமர்ந்த
செஞ்சடை யானைஆன் ஏற்றுப்
பொருப்பூர்ந் தருளும் பிரானைப்
பொய்யிலி யைக்கண்டேன் என்று
விருப்புறு தாண்டகத் தோடு
மேவிய காதல் விளைப்ப
இருப்போந் திருவடிக் கீழ்நாம்
என்னுங் குறுந்தொகை பாடி.

[ 388]


திருப்பூந்துருத்தியில் விரும்பி வீற்றிருந்தருளும் சிவந்த சடையை உடைய சிவபெருமானை, 'ஆனேறாய பெரு மலையின் மீது எழுந்தருளி வரும் பெருமானை, 'பொய்யிலியைக் கண்டேன்' (தி. 6 ப. 43) என்று விருப்பம் பொருந்தும் திருத்தாண்டகத் துடன், பொருந்திய அன்பு மேன்மேல் விளைய 'இருப்போம் சேவடிக் கீழ் நாம்' எனும் கருத்துடைய (தி. 5 ப. 32) பதிகத்தைப் பாடி.

குறிப்புரை: 'பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே' எனும் நிறைவுத் தொடரைப் பாடல்தொறும் பெற்றுவரும் திருத் தாண்டகம் 'நில்லாத நீர்' (தி. 6 ப. 43) எனத் தொடங்கும் திருப்பதிக மாகும்.
'கொடிகொள்' (தி. 5 ப. 32) எனத் தொடங்கும் பதிகம், பாடல் தொறும் திருப்பூந்துருத்தியில் எழுந்தருளியிருக்கும் பெருமானின் 'சேவடிக் கீழ் நாம் இருப்பதே' எனும் தொடரை நிறைவாகக் கொண் டுள்ளதாகும். இதனையே சேக்கிழார்,'இருப்போம் சேவடிக் கீழ் நாம்' எனும் கருத்தமைவுபடக் குறிக்கின்றார்.

அங்குறை யுந்தன்மை வேண்டி
நாமடி போற்றுவ தென்று
பொங்கு தமிழ்ச்சொல் விருத்தம்
போற்றிய பாடல் புரிந்து
தங்கித் திருத்தொண்டு செய்வார்
தம்பிரா னார்அருள் பெற்றுத்
திங்களும் ஞாயிறும் தோயும்
திருமடம் அங்கொன்று செய்தார்.

[ 389]


அத்திருப்பதியில், சிலகாலம் தங்கியிருக்க வேண்டும் என்னும் உட்குறிப்பு நிகழ, 'நாமடி போற்றுவதே' என்ற கருத்துடன், பொங்கும் தமிழ்ச் சொற்களால் ஆய திருவிருத்தப் பதிகத் தைப் பாடி, அப்பதியில் கைத் தொண்டு செய்வாராகி, தம் பெருமா னின் அருளைப் பெற்று, திங்களும் ஞாயிறும் தோயும் உயர்வான தொரு திருமடத்தை அவ்விடத்துச் சமைத்தார்.

குறிப்புரை: 'நாமடி போற்றுவது' எனப் பாடல்தொறும் நிறைவு கொள்ளும் திருவிருத்தம், 'மாலினை' (தி. 4 ப. 88) எனத் தொடங்கும் திருப்பதிகமாகும். இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின

பல்வகைத் தாண்டகத் தோடும்
பரவுந் தனித்தாண் டகமும்
அல்லல் அறுப்பவர் தானத்
தடைவு திருத்தாண் டகமும்
செல்கதி காட்டிடப் போற்றுந்
திருஅங்க மாலையும் உள்ளிட்
டெல்லையில் பன்மைத் தொகையும்
இயம்பினர் ஏத்தி இருந்தார்.

[ 390]


பலவகைப் பொருளுடைய தாண்டகத்துடன் சிவபெருமானைப் போற்றுகின்ற தனித்திருத்தாண்டகமும், பிறவித் துன்பத்தைப் போக்குகின்ற சிவபெருமான் விளக்கமாக எழுந்தருளும் இடங்களைக் கூறும் அடைவுத் திருத்தாண்டகமும், உயிர்கள் நிறைவாகச் சேர்தற்குரிய கதியை அடைதற்காக வழிபடத்தக்க 'திருவங்க மாலையும்' என்னும் இவை உள்ளிட்ட அளவில்லாத பலவகைத் தொகைப் பதிகங்களையும் அருளிச் செய்தவராய்ப் போற்றி அங்கே எழுந்தருளியிருந்தார்.

குறிப்புரை: 1. பலவகைத் திருத்தாண்டகம்: 'நேர்ந்து ஒருத்தி' (தி. 6 ப. 93) எனத் தொடங்குவதாகும். இதில் பூந்துருத்தி, நெய்த்தானம் முதலிய ஒன்பது பதிகளிலும் எழுந்தருளியிருக்கும் இறைவனை வணங்கி வழிபட, உயிர், பாச நீக்கமும் சிவப்பேறும் பெறல் எளிதாம் எனும் கருத்து வலியுறுத்தப்படுகின்றது. ஒரு திருப்பதியன்றி ஒன்பது திருப்பதிகள் குறிக்கப் பெறுதலானும், பல கருத்துகளைக் கூறுவதாலும் இறுதிப்பாட்டில் அஞ்செழுத்து ஓதப்பெறுவதாலும் பலவகைத் திருத்தாண்டகமாயிற்று.
2. தனித் திருத்தாண்டகம்: 'அப்பன் நீ அம்மை நீ' (தி. 6 ப. 95) இத்திருத் தாண்டகத்தில் வரும் பொருள் அமைவு, தனித்தனியாக ஒன்று ஒன்றோடு வரும் பொருள் இயைபு இன்றி வருதலின் தனித் திருத்தாண்டகமாயிற்று.
3. அடைவுத் திருத்தாண்டகம்: 'பொருப் பள்ளி' (தி. 6 ப. 71) எனத் தொடங்குவது. இறைவன் எழுந்தருளியிருக்கும் திருப்பதிகள் பலவற் றுள்ளும் பெயரால் ஒருமையுற்றிருக்கும் திருப்பதிகளைப் பாடல் தொறும் குறித்துப் போற்றியிருத்தலின் அடைவுத் திருத்தாண்டகம் எனப் பெயர் பெறுவதாயிற்று. அடைவு ஒருமையுற்ற பதிகளின் அடைவு.
4. திருஅங்கமாலை: 'தலையே நீ வணங்காய்' (தி. 4 ப. 9) எனத் தொடங்கும் சாதாரிப் பண் அமைந்த திருப்பதிகமாகும். உடலு றுப்புகள் பலவற்றையும் இறைவனை வணங்குமாறு பணித்தலின் இப் பெயர் பெறுவதாயிற்று.
5. பன்மைத் தொகைப் பதிகங்கள்: (அ) மனத் தொகைத் திருக்குறுந்தொகை: 'பொன்னுள்ளத் திரள்' (தி. 5 ப. 96) (ஆ) சித்தத் தொகைத் திருக்குறுந்தொகை: 'சிந்திப்பார்' (தி. 5 ப. 97) (இ) உள்ளத் தொகைத் திருக்குறுந்தொகை: 'நீறலைத்ததோர்' (தி. 5 ப. 98) (ஈ) காலபாசத் திருக் குறுந்தொகை: 'கண்டுகொள்ளரி' (தி. 5 ப. 92) (உ) மறக்கிற்பனே எனும் குறுந்தொகை: 'காசனைக் கனலை' (தி. 5 ப. 93) (ஊ) தொழற்பாலதே எனும் குறுந்தொகை: 'அண்டத்தானை' (தி. 5 ப. 94) (எ) இலிங்கபுராணக் குறுந்தொகை: 'புக்கணைந்து' (தி. 5 ப. 95) (ஏ) ஆதிபுராணக் குறுந்தொகை: 'வேதநாயகன்' (தி. 5 ப. 100) (ஐ) பாவநாசத் திருக்குறுந்தொகை: 'பாவமும் பழிபற்றற' (தி. 5 ப. 99) (ஒ) தனித்திருக்குறுந்தொகை: (1) 'ஒன்று பிறை' (தி. 5 ப. 89) (2) 'ஏயிலானை(தி. 5 ப. 91). ' இவை பொருட்டொடர் பின்றித் தனித்த னியே பல் வகைப் பொருண்மையிலமைந்த கருத்துக்களைக் கூறுதலா னும், குறுந்தொகை யாப்பமைவில் உள்ளதாலும் பன்மைத் தொகை எனப் பெயர் பெறுவனவாயின.

Go to top
பொன்னிவலங் கொண்டதிருப்
பூந்துருத்தி அவர்இருப்பக்
கன்மனத்து வல்அமணர்
தமைவாதில் கட்டழித்துத்
தென்னவன்கூன் நிமிர்த்தருளித்
திருநீற்றின் ஒளிகண்டு
மன்னியசீர்ச் சண்பைநகர்
மறையவனார் வருகின்றார்.


[ 391]


காவிரியாறு வலமாகச் சூழ்கின்ற திருப்பூந் துருத்தியில் அவர் இருப்ப, கல் போன்ற மனமுடைய கடிய மனத்தை யுடைய வலிய சமணர்களை வாதில் வென்று, அவர்களின் பொய்ம் மையான சூழ்ச்சிகளை அழித்துப், பாண்டியனின் கூனை நிமிர்த்தி, அருளுரை வழங்கி, திருநீற்றின் விளக்கம் ஓங்கச் செய்து, நிலையான சிறப்புக் கொண்ட சீகாழியில் தோன்றியருளிய மறையவரான திரு ஞானசம்பந்தர் வருவாராய்.

குறிப்புரை:

தீந்தமிழ்நாட் டிடைநின்றும்
எழுந்தருளிச் செழும்பொன்னி
வாய்ந்தவளந் தருநாட்டு
வந்தணைந்தார் வாக்கினுக்கு
வேந்தர்இருந் தமைகேட்டு
விரைந்தவர்பால் செல்வன்எனப்
பூந்துருத்தி வளம்பதியின்
புறம்பணையில் வந்தணைந்தார்.


[ 392]


இனிய தமிழ் நாடான பாண்டி நாட்டினின்றும் புறப்பட்டு, செழிப்பையுடைய காவிரியாற்றின் வளத்தால் வளங்கள் பலவற்றையும் தரும் சோழநாட்டில் வந்து சேர்ந்தவரான ஞான சம்பந்தர், திருநாவுக்கரசு நாயனார் திருப்பூந்துருத்தியில் வீற்றிருக்கும் செய்தியைக் கேட்டு விரைவாய் அங்குச் சென்று சேர்வேன்! என்று எண்ணித், திருப்பூந்துருத்தியின் புறத்தேயுள்ள வயல்கள் சூழ்ந்த இடத்தில் வந்து சேர்ந்தார்.

குறிப்புரை: இவ்விருபாடல்களும் ஒருமுடிபுடையன.

சண்பைவருந் தமிழ்விரகர்
எழுந்தருளத் தாங்கேட்டு
மண்பரவும் பெருங்கீர்த்தி
வாகீசர் மனமகிழ்ந்து
கண்பெருகுங் களிகொள்ளக்
கண்டிறைஞ்சுங் காதலினால்
எண்பெருகும் விருப்பெய்த
எழுந்தருளி எதிர்சென்றார்.


[ 393]


சீகாழிப் பதியில் தோன்றிய தமிழ் வல்லுநரான ஞானசம்பந்தர் எழுந்தருளி வர, அந் நற்செய்தியை உலகம் போற்றும் புகழையுடைய நாவரசர் தாம் கேட்டு, மனம் மகிழ்ந்து கண்களால் காணும் களிப்பு மிக, நேரில் கண்டு கும்பிட வேண்டும் என்னும் அவாவினால் உள்ளத்தில் பெருகும் விருப்பம் பொருந்த எதிரே சென்றார்.

குறிப்புரை:

காழியர்கோன் வரும்எல்லை
கலந்தெய்திக் காதலித்தார்
சூழுமிடைந் திடுநெருக்கிற்
காணாமே தொழுதருளி
வாழியவர் தமைத்தாங்கும்
மணிமுத்தின் சிவிகையினைத்
தாழும்உடல் இதுகொண்டு
தாங்குவன்யான் எனத்தரித்தார்.

[ 394]


சீகாழியின் தலைவரான ஞானசம்பந்தர் வருகின்ற அதுபொழுது, திருக்கூட்டத்துடன் கூடிச்சேர்ந்து அன்பு உடையவராகிச் சூழ்ந்து, நெருங்கிய கூட்டத்தின் நெருக்கத்துள் ஞானப்பிள்ளையார் தம்மைக் காணாத வண்ணம், அவரை வணங்கி, உலகினர்க்கு வாழ்வு தரவந்த பிள்ளையாரைத் தாங்கும் முத்துச் சிவிகையைத் தாங்கி வருபவருடன் தாழ்ந்த இவ்வுடலைக் கொண்டு 'நானும் சுமப்பன்' எனும் நினைவுடையராய்.

குறிப்புரை:

வந்தொருவர் அறியாமே
மறைத்தவடி வொடும்புகலி
அந்தணனார் ஏறியெழுந்
தருளிவரும் மணிமுத்தின்
சந்தமணிச் சிவிகையினைத்
தாங்குவா ருடன்தாங்கிச்
சிந்தைகளிப் புறவருவார்
தமையாருந் தெளிந்திலரால்.

[ 395]


பிள்ளையாருடன் வந்து கொண்டிருக்கும் எவரும் அறியாதவாறு, மறைத்த வடிவுடன், சீகாழி அந்தணரான ஞானசம்பந்தர் எழுந்தருளிவரும் அழகான மணிச் சிவிகையைச் சுமப்பவர்களுடன் தாமும் ஒருவராய்த் தாங்கித், தம் உள்ளம் மிக மகிழ்ச்சி பொருந்த வருவாரான திருநாவுக்கரசு நாயனாரை ஒருவரும் அறிந்து கொண்டாரிலர்.

குறிப்புரை: இவ்விருபாடல்களும் ஒருமுடிபுடையன.

Go to top
திருஞான மாமுனிவர்
அரசிருந்த பூந்துருத்திக்
கருகாக எழுந்தருளி
எங்குற்றார் அப்பர்என
உருகாநின் றுஉம்அடியேன்
உம்அடிகள் தாங்கிவரும்
பெருவாழ்வு வந்தெய்தப்
பெற்றிங்குற் றேன்என்றார்.

[ 396]


திருஞானப் பெருமுனிவராகிய சம்பந்தர், திருநாவுக்கரசு நாயனார் வீற்றிருந்த திருப்பூந்துருத்திக்கு அருகில் எழுந்தருளிச் சிவிகையில் இருந்தவாறே அப்பர் எங்குற்றார்? என்று வினவ, உள்ளம் மிகவுருகி, 'உம் அடியவன் உம் திருவடிகளைச் சுமக்கும் பெருவாழ்வு பெற்று இங்கு இருக்கின்றேன்' என்று சிவிகையைத் தாங்கி வரும் அந் நிலையிலேயே விடை பகர்ந்தார்.

குறிப்புரை:

பிள்ளையார் அதுகேளாப்
பெருகுவிரை வுடன்இழிந்தே
உள்ளமிகு பதைப்பெய்தி
உடையஅர சினைவணங்க
வள்ளலார் வாகீசர்
அவர்வணங்கா முன்வணங்கத்
துள்ளுமான் மறிக்கரத்தார்
தொண்டரெலாந் தொழுதார்த்தார்.

[ 397]


திருஞானசம்பந்தர் அம்மொழிகளைக் கேட்ட அளவில், மிகுவிரைவுடன், கீழே இழிந்தருளித், திருவுள்ளத்தில் அச்சத்துடன் பொருந்திய பதைப்பை அடைந்து, ஆளுடைய அரசரை வணங்க, வள்ளலாரான திருநாவுக்கரசரும் அவர் வணங்குவதற்கு முன்னம் தாம் அவரை வணங்க, அவ்வருள் நிகழ்ச்சியைக் காணும் பேறு பெற்ற, துள்ளும் மானைக் கையில் ஏந்திய சிவபெருமானின் அடியவர் அனைவரும் வணங்கி 'அரகர' என்ற ஒலியை எழுப்பினர்.

குறிப்புரை:

கழுமலக்கோன் திருநாவுக்
கரசருடன் கலந்தருளிச்
செழுமதியந் தவழ்சோலைப்
பூந்துருத்தித் திருப்பதியின்
மழுவினொடு மான்ஏந்து
திருக்கரத்தார் மலர்த்தாள்கள்
தொழுதுருகி இன்புற்றுத்
துதிசெய்தங் குடனிருந்தார்.

[ 398]


சீகாழித் தலைவரான ஞானசம்பந்தர் திருநாவுக் கரசு நாயனாருடன் கூடிப் பிறைச்சந்திரன் தவழும் வளமுடைய சோலைகள் சூழ்ந்த திருப்பூந்துருத்தி எனும் திருப்பதியில் எழுந் தருளியிருக்கும் மழுவுடன் மானை ஏந்தும் திருக்கையையுடைய இறைவரின் மலரடிகளை வணங்கி, மனம் உருகி இன்பம் அடைந்து, போற்றிசெய்து, அப் பதியில் உடன் எழுந்தருளியிருந்தார்.

குறிப்புரை:

வல்அமணர் தமைவாதில்
வென்றதுவும் வழுதிபால்
புல்லியகூன் நிமிர்த்ததுவும்
தண்பொருந்தப் புனல்நாட்டில்
எல்லையிலாத் திருநீறு
வளர்த்ததுவும் இருந்தவத்தோர்
சொல்லஅது கேட்டுவந்தார்
தூயபுகழ் வாகீசர்.

[ 399]


கொடிய சமணர்களை வாதில் வென்றதையும், பாண்டியனிடத்தில் முன்பு பொருந்தி இருந்த கூனை நிமிர்த்தியமை யையும், தண்ணிய வைகை ஆற்றின் நீர் பாயும் பாண்டிய நாட்டில் அள வில்லாத சிறப்புடைய திருநீற்றின் நெறியைப் பெருகச் செய்ததையும், பெருந்தவத்தையுடைய பிள்ளையார் எடுத்துக் கூற, அதனைத் தூய புகழையுடைய திருநாவுக்கரசர் கேட்டுத் திருவுள்ளம் மகிழ்ந்தார்.

குறிப்புரை:

பண்புடைய பாண்டிமா
தேவியார் தம்பரிவும்
நண்புடைய குலச்சிறையார்
பெருமையும்ஞா னத்தலைவர்
எண்பெருக வுரைத்தருள
எல்லையில்சீர் வாகீசர்
மண்குலவு தமிழ்நாடு
காண்பதற்கு மனங்கொண்டார்.


[ 400]


கற்பும் பத்திமையும் உடைய மங்கையர்க் கரசியாரின் அன்பின் திறத்தையும், அடியவரிடத்துப் பெருநட்புக் கொண்டுவாழும் குலச்சிறையாரின் பெருமையையும் ஞானசம்பந்தர் விருப்பம் மிகக் கூறியருள, நாவரசர், அளவற்ற சிறப்பினையுடைய தமிழ்நாடு எனக் கூறப்படும் பாண்டி நாட்டைப் போய்க் காண்பதற்கு விருப்பம் கொண்டவர் ஆனார்.

குறிப்புரை:

Go to top
பிரமபுரத் திருமுனிவர்
பெருந்தொண்டை நன்னாட்டில்
அரனுறையுந் தானங்கள்
அணைந்திறைஞ்சிப் பாடுவதற்
குரனுடைய திருநாவுக்
கரசர் உரை செய்தருளப்
புரமெரித்தார் திருமகனார்
பூந்துருத்தி தொழுதகன்றார்.

[ 401]


காழியில் தோன்றிய ஞானசம்பந்தரிடம் பெருமை வாய்ந்த தொண்டை நாட்டில் சிவபெருமான் விரும்பி எழுந்தருளியிருக்கும் திருப்பதிகளை அணைந்து வணங்கித் தேவாரப் பதிகங்களைப் பாடியருளுமாறு, திருத்தொண்டின் உறைப்புடைய திருநாவுக்கரசர் சொல்லியருள, அதன்படி இசைந்து, முப்புரங்களை எரித்த சிவபெருமானின் மகனாரான ஞானசம்பந்தரும் திருப்பூந் துருத்தியை வணங்கிப் புறப்பட்டார்.

குறிப்புரை:

ஆண்டஅர சங்கணர்சீர்
அருள்பெற்றப் பதிநின்றும்
பாண்டிநாட் டெழுந்தருளும்
பான்மையராய்த் தென்திசைபோய்க்
காண்டகைய திருப்புத்தூர்
பணிந்தேத்திக் கதிர்மதியம்
தீண்டுகொடி மதில்மதுரைத்
திருவால வாய்சேர்ந்தார்.

[ 402]


இறைவரால் ஆட்கொள்ளப்பட்ட நாவுக்கரசர் சிவபெருமானின் அருளைப் பெற்றவாறு, அத்திருப்பூந்துருத்தியி னின்றும் நீங்கிப் பாண்டி நாட்டிற்குச் செல்லத் திருவுளம் கொண்டவ ராய்த் தென்திசை நோக்கிச் சென்று, காணத்தக்க சிறப்பையுடைய திருப்புத்தூரினை வணங்கிப் போற்றி, திங்களின் கதிர்கள் தங்குதற்கு இடமான கொடிகள் கட்டப்பட்டு விளங்கும் மதிலையுடைய திருவாலவாயினை அடைந்தார்.

குறிப்புரை: திருப்புத்தூரில் அருளிய பதிகம் 'புரிந்தமரர்' (தி. 6 ப. 76) எனத் தொடங்கும் திருத்தாண்டகமாகும்.

சென்றணைந்து மதுரையினில்
திருந்தியநூற் சங்கத்துள்
அன்றிருந்து தமிழாராய்ந்
தருளியஅங் கணர்கோயில்
முன்றிலினை வலங்கொண்டு
முன்னிறைஞ்சி உள்புக்கு
வன்றனிமால் விடையாரை
வணங்கிமகிழ் வொடுந்திளைத்தார்.

[ 403]


இவ்வாறு சென்று சேர்ந்த திருநாவுக்கரசர் மதுரை நகரத்துள் சென்று, திருத்தகு நூல்களில் வல்லுநர்களான புலவர் பெருமக்கள் கூடிய சங்கத்தினுள், முன் நாளில் வீற்றிருந்து தமிழை ஆராய்ந்தருளிய இறைவரின் திருக்கோயிலின் திருமுற்றத்தை வலமாகச் சூழ்ந்து, வெளியே திருமுன்பு விழுந்து வணங்கிக் கோயிலுக்குள் புகுந்து, வலிய ஒப்பில்லாத பெரிய ஆனேற்றை யுடைய சொக்கநாதப் பெருமானை வணங்கி மகிழ்ச்சியுள் மூழ்கி, இன்பப் பெரு வெள்ளத்துள் திளைத்தார்.

குறிப்புரை:

எய்தியபே ரானந்த
இன்பத்தின் இடைஅழுந்தி
மொய்திகழுஞ் சடையானை
முளைத்தானை என்றெடுத்துச்
செய்தவத்தோர் தாண்டகச்செந்
தமிழ்பாடிப் புறத்தணைவார்
கைதொழுது பணிந்தேத்தித்
திருவுள்ளங் களிசிறந்தார்.

[ 404]


அங்ஙனம் தாம் பொருந்திய இன்ப அநுபவமான பெருவெள்ளத்துள் முழுகித், தொகுதியாக இணைந்து விளங்கும் திருச்சடையை உடைய பெருமானை 'முளைத்தானை'(தி. 6 ப. 19) எனத் தொடங்கும் திருத்தாண்டகத் தமிழ்ப் பதிகத்தால் போற்றிப், புறத்தே செல்பவராகி, செய்யும் தவத்தை உடையவரான நாயனார் கைகளால் தொழுது வணங்கித் துதித்துத் திருவுள்ளத்தில் பெரு மகிழ்ச்சி அடைந்தார்.

குறிப்புரை:

சீர்திகழும் பாண்டிமா
தேவியார் திருநீற்றின்
சார்வடைய கூன்நிமிர்ந்த
தென்னவனார் தம்முடனே
பார்பரவுங் குலச்சிறையார்
வாகீசர் தமைப்பணிவுற்
றாரகிலாக் காதல்மிக
அடிபோற்ற அங்கிருந்தார்.

[ 405]


சிறப்புடன் விளங்கும் மங்கையர்கரசியாருடன் திருநீற்றின் சார்பு அடைந்ததால் கூன் நிமிரப் பெற்ற நின்றசீர் நெடுமாறனார் என்னும் இவர்களுடனே, உலகம் போற்றும் குலச் சிறையாரும் தம்மை வந்து பணிந்து அளவிலாது பெருகிய காதல் மிகத் தம் திருவடிகளைப் போற்றி நிற்கத், திருநாவுக்கரசு நாயனார் அங்கு வீற்றிருந்தருளினார்.

குறிப்புரை:

Go to top
திருவால வாய்அமர்ந்த
செஞ்சுடரைச் செழும்பொருள்நூல்
தருவானை நேரிசையும்
தாண்டகமும் முதலான
பெருவாய்மைத் தமிழ்பாடிப்
பேணுதிருப் பணிசெய்து
மருவார்தம் புரம்எரித்தார்
பூவணத்தை வந்தடைந்தார்.

[ 406]


திருவாலவாயில் வீற்றிருக்கும் செஞ்சுடரைச், செழுமையான அகப்பொருள் நூலை வழங்கியருளியவரைத் திரு நேரிசையும், திருத்தாண்டகமும் முதலான பெருவாய்மை பொருந்திய தமிழ்ப் பதிகங்களைப் பாடி, விரும்பும் திருப்பணிகளைச் செய்து அதன்பின் பகைவரின் முப்புரங்களை எரித்த சிவபெருமானின் திருப்பூவணத்தை அடைந்தவராய்.

குறிப்புரை: இறைவர் அருளிய அகப்பொருள் நூல் இறையனார் களவியலாகும். நேரிசையும், தாண்டகமும் முதலாய பல பதிகங்களை அருளினார் என்றாரேனும், இது பொழுது கிடைத்து இருக்கும் பதிகம் ஒன்றேயாம்: அது 'வேதியா' (தி. 4 ப. 62) எனத் தொடங்கும் திருநேரிசைப் பதிகமாகும்.

கொடிமாடம் நிலவுதிருப்
பூவணத்துக் கோயிலினுள்
நெடியானுக் கறிவரியார்
நேர்தோன்றக் கண்டிறைஞ்சி
வடிவேறு திரிசூலத்
தாண்டகத்தால் வழுத்திப்போய்ப்
பொடிநீடு திருமேனிப்
புனிதர்பதி பிறபணிவார்.

[ 407]


கொடிகள் நிலவும் மாடங்கள் நிறைந்த திருப் பூவணத்தின் கோயிலுள், திருமாலுக்கும் அரியவரான சிவபெருமான் வெளிப்பட்டருளக் கண்டு வணங்கி, 'வடிவேறு திரிசூலம்' எனத் தொடங்கும் திருத்தாண்டகப் பதிகத்தால் போற்றி செய்து, திருநீறு நிறைந்த திருமேனியையுடைய புனிதரான சிவபெருமானின் திருப்பதி கள் பிறவற்றையும் போய்ப் பணிவாராய்,

குறிப்புரை: 'வடிவேறு திரிசூலம் தோன்றும் தோன்றும்' (தி. 6 ப. 18) எனத் தொடங்கும் அப்பதிகத்தில், பூவணத்தின் புனிதனாரைத் தாம் கண்டவாறு போற்றி மகிழ்கின்றார் நாவரசர். அவற்றுள் 'பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்' என வருவதைப், 'பொடிநீடு புனிதர்' என இப்பாடற்கண் வைத்து நினைவு கூருகின்றார் ஆசிரியர்.

தென்னிலங்கை இராவணன்தன்
சிரம்ஈரைந் துந்துணித்த
மன்னவனாம் இராமனுக்கு
வரும்பெரும்பா தகந்தீர்த்த
பிஞ்ஞகனைத் தொழுவதற்கு
நினைந்துபோய்ப் பெருமகிழ்ச்சி
துன்னிமனங் கரைந்துருகத்
தொழுதெழுந்தார் சொல்லரசர்.

[ 408]


தென்திசையில் உள்ள இலங்கை மன்னனான இராவணனின் தலைகள் பத்தையும் துண்டித்து விழச் செய்த மன்ன னான இராமனுக்கு, அதனால் விளைய வரும் தீங்கினைத் தீர்த்தரு ளிய திருஇராமேச்சுரத்துப் பெருமானைப் போய் வணங்க நினைந்து சென்று, மகிழ்ச்சி மீதூர மனம் கரைந்து உருகித் திருநாவுக்கரசர் தொழுது எழுந்தவராய்.

குறிப்புரை:

தேவர்தொழுந் தனிமுதலைத்
திருவிரா மேச்சுரத்து
மேவியசங் கரனைஎதிர்
நின்றுவிருப் புறுமொழியால்
பாவுதிரு நேரிசைகள்
முதலான தமிழ்பாடி
நாவரசர் திருத்தொண்டு
நலம்பெருகச் செய்தமர்ந்தார்.

[ 409]


வானவர் வணங்கும் ஒப்பில்லாத முதல்வரை, திருஇராமேச்சுரத்தில் வீற்றிருக்கும் சங்கரரைத் திருமுன்பு நின்று விருப்பம் மிக்க சொற்களால் நிறைந்த திருநேரிசை முதலான தமிழ்ப் பதிகங்களைப் பாடித் திருநாவுக்கரசர், நன்மை பொருந்தும் திருத் தொண்டைச் செய்து, அங்குத் தங்கியிருந்தார்.

குறிப்புரை: சங்கரன் என்றார், ஆன்மாவுக்கு உள்ளிருக்கும் தீங்கினை நீக்கி, இன்பம் அளித்தலின். தமிழ்ப் பதிகங்கள் பலபாடி, என்றாரேனும் இது பொழுது கிடைத்திருக்கும் திருப்பதிகம் ஒன்றே யாம். அது 'பாசமும் கழிக்க' (தி. 4 ப. 61) எனத் தொடங்கும் திரு நேரிசைப் பதிகம் ஆகும். இராமாயணத்தைக் கம்பர் பாடுதற்கு, வால்மீகியாரின் வாக்கின்றிச் சங்க இலக்கியங்கள் முதலாக நம் திருமுறைகள் ஈறாகவுள்ள நூல்களும் முன்னோடியாக அமைந்து உள்ளமை, இத்திருப்பதிக்குரிய திருப்பதிகத்தானும், இதுபோன்று வரும் பிற பதிகப் பாடல்களாலும் அறியலாம். இந்நான்கு பாடல் களும் ஒருமுடிபின.

அங்குறைந்து கண்ணுதலார்
அருள்சூடி அகன்றுபோய்ப்
பொங்குதமிழ்த் திருநாட்டுப்
புறம்பணைசூழ் நெல்வேலி
செங்கண்விடை யார்மன்னுந்
திருக்கானப் பேர்முதலா
எங்குநிகழ் தானங்கள்
எல்லாம்புக் கிறைஞ்சுவார்.

[ 410]


அவ்விராமேச்சுரத்தில் பலநாள்கள் தங்கி இருந்து, சிவபெருமானின் திருவருளைப் ஏற்றவாறு விடைபெற்று, அங்கிருந்து நீங்கிப் போய்ப், பொங்கும் தமிழ்த் திருநாட்டில் புறமெல்லாம் மருத நிலம் சூழப்பட்ட திருநெல்வேலிக்கும், சிவந்த கண்களையுடைய ஆனேற்று ஊர்தியினரான இறைவர் வீற்றிருந் தருளும் 'திருக் கானப்பேர்' முதலாக, அந்நாட்டில் உள்ள திருப்பதிகள் பலவற்றிற்கும் சென்று தொழுபவராகி.
குறிப்புரை: திருநெல்வேலி, திருக்கானப்பேர் ஆகிய இடங்களில் பாடிய பதிகங்கள் எவையும் கிடைத்தில. எங்கும் 'நிகழ்தானங்கள்' என்பதற்கேற்ப, நாவரசர் வணங்கிப் போற்றிய பிறபதிகள் எவை எனத் தெரிந்தில.

Go to top
தொழுதுபல வகையாலும்
சொற்றொடைவண் டமிழ்பாடி
வழுவில்திருப் பணிசெய்து
மனங்கசிவுற் றெப்பொழுதும்
ஒழுகியகண் பொழிபுனலும்
ஓவாது சிவன்தாள்கள்
தழுவியசிந் தையில்உணர்வுந்
தங்கியநீர் மையிற்சரித்தார்.

[ 411]


பல திருப்பதிகளுக்கும் சென்று வணங்கிப் பல வகையாலும் அமைந்த சொற்றொடைகளான வளமுடைய தமிழ்ப் பதிகங்களைப் பாடிக், குற்றமற்ற திருப்பணிகளைச் செய்து, உள்ளம் உருகி, எக்காலத்திலும் நீர் ஒழுகும் கண்களையும் சிவபெருமானின் திருவடிகளை இடைவிடாது உணர்ச்சியில் தழுவிக் கொண்ட சிந்தையுமாக இவ்வாறு ஒழுகி வந்தார்.

குறிப்புரை: சரித்தார் - ஒழுகினார். இதுபொழுது வணங்கிய பதிகள் எவை எனத் தெரிந்தில. இவ்விரு பாடலகளும் ஒருமுடிபின.

தேம்பொழில்சூழ் செந்தமிழ்நாட்
டினில்எங்குஞ் சென்றிறைஞ்சிப்
பாம்பணிவார் தமைப்பணிவார்
பொன்னிநா டதுஅணைந்து
வாம்புனல்சூழ் வளநகர்கள்
பின்னும்போய் வணங்கியே
பூம்புகலூர் வந்தடைந்தார்
பொய்ப்பாசம் போக்குவார்.

[ 412]


தேன் நிறைந்த பொழில்கள் சூழ்ந்த செந்தமிழ் நாட்டில் எவ்விடத்திற்கும் சென்று, ஆங்காங்குள்ள பாம்பு அணியும் இறைவரை வணங்கியவராய், பொன்னியாறு பாயும் சோழ நாட்டைச் சேர்ந்து, முன்பு வணங்கி மகிழ்ந்த, தாவும் நீரையுடைய வளநகர்கள் பலவற்றிற்கும் இது பொழுதும் சென்று வணங்கி, பொய்யான பற்றை ஒழிப்பவரான திருநாவுக்கரசர் பூம்புகலூர் என்னும் திருப்பதிக்கு வந்தடைந்தார்.

குறிப்புரை:

பொய்கைசூழ் பூம்புகலூர்ப்
புனிதர்மலர்த் தாள்வணங்கி
நையுமனப் பரிவோடு
நாள்தோறுந் திருமுன்றில்
கைகலந்த திருத்தொண்டு
செய்துபெருங் காதலுடன்
வைகுநாள் எண்ணிறந்த
வண்டமிழ்மா லைகள்மொழிவார்.

[ 413]


நீர் நிலைகள் சூழ்ந்த பூம்புகலூரில் வீற்றிருந் தருளும் இறைவரின் மலரடிகளை வணங்கி, நெகிழ்ந்து கரையும் மனத்து எழும் அன்புடனே, நாள்தோறும், திருமுற்றத்தில் அன்புடைய கைத்திருத்தொண்டுகள் பலவற்றையும் செய்து, மிக்க காதலுடன் தங்கி யிருந்த நாள்களில், எண் இல்லாத வளப்பம் மிக்க தமிழ் மாலைகளை அருளிச் செய்வாராகி.

குறிப்புரை:

நின்றதிருத் தாண்டகமும்
நீடுதனித் தாண்டகமும்
மன்றுறைவார் வாழ்பதிகள்
வழுத்துதிருத் தாண்டகமும்
கொன்றைமலர்ச் சடையார்பால்
குறைந்தடைந்த நேரிசையுந்
துன்றுதனி நேரிசையும்
முதலான தொடுத்துரைத்தார்.

[ 414]


நின்ற திருத்தாண்டகமும், நீடிய தமிழ்த் திருத்தாண்டகப் பதிகங்களும், திருச்சபையில் கூத்தியற்றும் இறைவர் வீற்றிருக்கின்ற திருப்பதிகளை வணங்கிப் போற்றும் கேஷத்திரக் கோவைத் திருத்தாண்டகமும், கொன்றை மலர் சூடிய சடையை யுடைய சிவபெருமானிடம் குறைந்து அடையும் கருத்தினை உட்கொண்ட குறைந்த திருநேரிசைப் பதிகங்களும், பொருந்திய தனித்திரு நேரிசைப் பதிகங்களும் இவை முதலிய பலவற்றையும் பாடி அருளினார்.

குறிப்புரை: இது பொழுது அருளிய பதிகங்கள்: 1. நின்ற திருத்தாண்டகம்: 'இருநிலனாய்' (தி. 6 ப. 94). 2. தனித் திருத்தாண் டகம்: 'ஆமயம் தீர்த்து' (தி. 6 ப. 96). 3. திருத்தலக் கோவைத் திருத்தாண் டகம் (கே்ஷத்திரக் கோவைத் திருத்தாண்டகம்): 'தில்லைச் சிற்றம்பல மும்' (தி. 6 ப. 70). 4. குறைந்த திருநேரிசை: (அ) 'வென்றிலேன்' (தி. 4 ப. 78). (ஆ) 'தம்மானம்' (தி. 4 ப. 79). 5. நினைந்த திருநேரிசை: 'முத்தினை' (தி. 4 ப. 74). 6. தனித்திரு நேரிசை: (அ) 'தொண்டனேன்' (தி. 4 ப. 75). (ஆ) 'மருளவாம்' (தி. 4 ப. 76). (இ) 'கடும்பகல்' (தி. 4 ப. 77). இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

ஆருயிரின் திருவிருத்தம்
தசபுரா ணத்தடைவும்
பார்பரவும் பாவநா
சப்பதிகம் பன்முறையும்
நேர்படநின் றறைகூவுந்
திருப்பதிகம் முதற்பிறவும்
பேரருளின் கடல்அளிக்கும்
பெருமானைப் பாடினார்.

[ 415]


'ஆருயிர்த் திருவிருத்தமும்', 'தசபுராணத்' திருப்பதிகமும், உலகம் போற்றி உய்யும் 'பாவநாசத்' திருப்பதிகமும் பலமுறையும் நேர்படும்படி நின்று இறைவரைக் கருதிச் 'சரக்கறையோ' என்று அறை கூவும் 'சரக்கறைத் திருப்பதிகமும்' என்று இவை முதலான பதிகங்களால், பேரருட்கடலாம் அடியார்க்கு அளிக்கும் சிவபெருமானைப் பாடியருளினார்.

குறிப்புரை: 1. ஆருயிர்த் திருவிருத்தம் - 'எட்டாந் திசைக்கும்' (தி. 4 ப. 84). 2. தசபுராணத் தடைவு - 'பருவரை' (தி. 4 ப. 14), பண்: பழம்பஞ்சுரம். 3. பாவநாசப் திருப்பதிகம் - 'பற்றற்றார்சேர். ' (தி. 4 ப. 15) பண்: பழம்பஞ்சுரம். 4. அறைகூவும் திருப்பதிகங்கள்: (அ) 'சிவனெனும் ஓைu2970?' (தி. 4 ப. 8) பண்: பியந்தைக் காந்தாரம். (ஆ) பசுபதித்திருவிருத்தம்: 'சாம்பலைப் பூசி' (தி. 4 ப. 110). (இ) சரக்கரைத் திருவிருத்தம்: 'விடையும் விடைப்பெரும்' (தி. 4 ப. 111). (ஈ) தனித் திருவிருத்தங்கள்: (1) 'பவளத் தடைவரை' (தி. 4 ப. 113) (2) 'வெள்ளிக் குழை' (தி. 4 ப. 112) (உ) வினாவிடைத் திருத்தாண்டகம்: 'அண்டம் கடந்த' (தி. 6 ப. 97).

Go to top
அந்நிலைமை தனில்ஆண்ட
அரசுபணி செய்யஅவர்
நன்னிலைமை காட்டுவார்
நம்பர்திரு மணிமுன்றில்
தன்னில்வரும் உழவாரம்
நுழைந்தவிடந் தானெங்கும்
பொன்னினொடு நவமணிகள்
பொலிந்திலங்க அருள்செய்தார்.


[ 416]


அந்நிலைமையில் திருநாவுக்கரசர் திருப் பணிசெய்ய, அவருடைய நன்னிலைமையை உலகறியக் காட்டுவார் ஆகச் சிவபெருமான் அழகிய திருமுற்றத்தில் திருப்பணிக்காக உழவாரம் நுழைந்த இடம் எல்லாம் பொன்னினோடு நவமணிகளும் வெளிப்பட்டு விளங்குமாறு அருள் செய்தார்.

குறிப்புரை:

செம்பொன்னும் நவமணியும்
சேண்விளங்க ஆங்கெவையும்
உம்பர்பிரான் திருமுன்றில்
உருள்பருக்கை யுடன்ஒக்க
எம்பெருமான் வாகீசர்
உழவாரத் தினில்ஏந்தி
வம்பலர்மென் பூங்கமல
வாவியினில் புகஎறிந்தார்.

[ 417]


செம்பொன்னும் நவமணிகளும் நெடுந் தொலைவிலும் ஒளி வீச, எம் தலைவரான திருநாவுக்கரசர், சிவ பெருமானின் திருமுன்றிலில் உருள்கின்ற மற்றப் பருக்கைக் கற்களு டன் ஒத்தலால், அவ்விடத்தில் விளங்கிய அவை எல்லாவற்றையும் உழவாரத்தில் ஏந்திச் சென்று, மணம் வீச மலர்கின்ற பூக்களான தாமரைகள் மலரும் பொய்கையில் புகும்படி வீசி ஏறிந்தார்.

குறிப்புரை:

புல்லோடும் கல்லோடும்
பொன்னோடும் மணியோடும்
சொல்லோடும் வேறுபா
டிலாநிலைமை துணிந்திருந்த
நல்லோர்முன் திருப்புகலூர்
நாயகனார் திருவருளால்
வில்லோடு நுதல்மடவார்
விசும்பூடு வந்திழிந்தார்.

[ 418]


புல்லுடனும் கல்லுடனும் பொன்னுடனும் மணிகளுடனும் வேறுபாடு இல்லாமையைத் துணிந்து, மனம் சிறிதும் மாறுதல் இல்லாது இருந்த நல்லோரான நாயனாரின் முன்பு, திருப்புகலூர் இறைவரின் திருவருளால், வில்லைத் தோற்கடிக்கும் புருவங்கள் வளைந்து அசைவதற்கு இடமான நெற்றியையுடைய பெண்கள், வான் உலகத்தினின்றும் வந்து இறங்கினர்.

குறிப்புரை:

வானகமின் னுக்கொடிகள்
வந்திழிந்தால் எனவந்து
தானநிறை சுருதிகளில்
தகும்அலங்கா ரத்தன்மை
கானஅமு தம்பரப்பும்
கனிவாயில் ஒளிபரப்பப்
பானல்நெடுங் கண்கள்வெளி
பரப்பிஇசை பாடுவார்.

[ 419]


விண்ணிலிருந்து மின்னற் கொடிகள் கீழ் இறங்கியவை போல வந்து, உரிய இசைபிறக்கும் இடங்களினின்றும் நிறைந்து வரும் இசையால் உண்டாகும் தக்க இனிமை பொருந்திய இசையமுதத்தைப் பரவச் செய்கின்ற, கொவ்வைக் கனியைப் போன்ற வாயில் ஒளி விளங்க, நீல மலர் போன்ற நீண்ட கண்களை வெளியில் பரப்பி, இசையைப் பாடலானார்.

குறிப்புரை: தாளம் - இசை பிறக்கும் இடம். பானல் - நீலமலர்.

கற்பகப்பூந் தளிரடிபோங்
காமருசா ரிகைசெய்ய
உற்பலமென் முகிழ்விரல்வட்
டணையோடுங் கைபெயரப்
பொற்புறும்அக் கையின்வழி
பொருகயற்கண் புடைபெயர
அற்புதப்பொற் கொடிநுடங்கி
ஆடுவபோல் ஆடுவார்.

[ 420]


கற்பக மரத்தின் இளந்தளிர்கள் போன்ற அடிகளைப் பெயர்த்து, வட்டமாய்ச் சுழன்று, செங்காந்தள் மலரின் அரும்பு போல் மென்மையான விரல்களின் செயல்களால் கைகள் பெயரவும், அழகு பொருந்தும் அக்கைகளின் வழியே பொரும் கயல் மீன் போன்ற கண்கள் புடை பெயர்ந்து செல்லவும், பொன்னால் ஆன கொடிகள் அசைந்து ஆடுவன போல ஆடுவாராகி.

குறிப்புரை: சாரிகை - ஆடல் வகையில் ஒன்று; வட்டமாகச் சுழன்று வருதல். உற்பலம் - செங்கழுநீர். வட்டணை - விரல்களால் காட்டப் படும் அபிநயம்; விரல்களைக் குவித்தும் விரித்தும் சுழற்றியும் காட்டும் நிலை.

Go to top
ஆடுவார் பாடுவார்
அலர்மாரி மேற்பொழிவார்
கூடுவார் போன்றணைவார்
குழல்அவிழ இடைநுடங்க
ஓடுவார் மாரவே
ளுடன்மீள்வர் ஒளிபெருக
நீடுவார் துகிலசைய
நிற்பாரும் ஆயினார்.

[ 421]


ஆடுபவர்களும், பாடுபவர்களும், மலர்களை மழையென மேலே பொழிபவர்களும், தழுவுவார் போல் அருகில் வந்து சேர்பவர்களும், கூந்தல் அவிழவும் இடை துவளவும் ஓடுபவர் களும், மன்மதனுடன் மீள்பவர்களும், காம ஒளி பெருகக் காணும்படி நீண்ட உடை நழுவ நிற்பவர்களும் இவ்வாறு பல திறப்பட்ட செயல் களைச் செய்பவர்கள் ஆயினர்.

குறிப்புரை: இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

இத்தன்மை அரம்பையர்கள்
எவ்விதமும் செயல்புரிய
அத்தனார் திருவடிக்கீழ்
நினைவகலா அன்புருகும்
மெய்த்தன்மை உணர்வுடைய
விழுத்தவத்து மேலோர்தம்
சித்தநிலை திரியாது
செய்பணியின் தலைநின்றார்.

[ 422]


இங்ஙனம் அரம்பையர்கள் எல்லா வகையாலும் காமச்செயல்களைச் செய்யவும், பெருமானின் திருவடிக் கீழ்ப்பதிய வைத்த நினைவு நீங்காத அன்பினால் உருகும் மெய்த்தன்மையுடைய தூயதவத்தில் நிற்கும் மேலோரான நாவுக்கரசர், தம் உள்ளத்தின் நிலைமையினின்று மாறுபடாமல், தாம் செய்துவரும் பணியில் உறைத்து நிற்பாராகி,

குறிப்புரை:

இம்மாயப் பவத்தொடக்காம்
இருவினைகள் தமைநோக்கி
உம்மால்இங் கென்னகுறை
உடையேன்யான் திருவாரூர்
அம்மானுக் காளானேன்
அலையேன்மின் நீர்என்று
பொய்ம்மாயப் பெருங்கடலுள்
எனுந்திருத்தாண் டகம்புகன்றார்.

[ 423]


இம் மாயையின் விளைவாய பிறவிப் பிணைப் பில் வீழ்த்தும் இருவினைகளின் வடிவாய் வந்த அந்நங்கையரைப் பார்த்து, 'உம்மால் இங்கு எனக்கு ஆக வேண்டிய குறை யாது உளது? நான் திருவாரூர்ப் பெருமானுக்கு ஆளானேன். நீங்கள் வலிதே அலைய வேண்டா!' என்ற கருத்துடைய 'பொய்ம் மாயக் கடலுள்' எனத் தொடங்கும் திருத்தாண்டகத் திருப்பதிகத்தைப் பாடினார்.

குறிப்புரை: 'பொய்ம் மாயப் பெருங்கடலில்' (தி. 6 ப. 27) எனத் தொடங்கும் இத்திருத்தாண்டகம், அப்பர் பெருமானின் அரிய பத்திமையையும் உரனுடைமையையும் ஒருங்கு விளக்குவதாகும்.
இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

மாதரவர் மருங்கணைய
வந்தெய்தி மதனவசக்
காதலவர் புரிந்தொழுகுங்
கைதவங்கள் செய்திடவும்
பேதமிலா ஓருணர்விற்
பெரியவரைப் பெயர்விக்க
யாதும்ஒரு செயலில்லா
மையில்இறைஞ்சி எதிரகன்றார்.

[ 424]


அத்தேவ மங்கையர்கள் நாயனாரின் அருகில் வந்து காம வயப்பட்ட காதலை உடையவர் செய்யும் வஞ்சனைகளை யெல்லாம் செய்யவும், தம் நிலையினின்று பிறழாத ஒருமைப்பட்ட உணர்வையுடைய பெரியவரான நாயனாரை, அந்நிலையினின்றும் ஒரு சிறிதும் மாற்றுதற்கு வேறு எவ்விதமான செயலும் செய்ய இயலாமையால், இறைஞ்சி அங்கிருந்தும் அகன்று சென்றனர்.

குறிப்புரை:

இந்நிலைமை உலகேழும்
எய்தஅறிந் தியல்பேத்த
மன்னியஅன் புறுபத்தி
வடிவான வாகீசர்
மின்னிலவும் சடையார்தம்
மெய்ப்பொருள்தான் எய்தவரும்
அந்நிலைமை அணித்தாகச்
சிலநாள்அங் கமர்ந்திருந்தார்.

[ 425]


இந்நிலைமையை ஏழுலகமும் அறிந்து வழிபட நிலைபெற்ற அன்பு பொருந்திய பத்தியின் வடிவாய திருநாவுக்கரசர், ஒளி பொருந்திய சடையையுடைய சிவபெருமானின் மெய்ப் பொருளைப் பொருந்த வருகின்ற அந்நிலைமை அணிமையுடையதாக, சிலநாள்கள் அத்திருப்பதியில் வீற்றிருந்தருளினர்.

குறிப்புரை:

Go to top
மன்னியஅந் தக்கரணம்
மருவுதலைப் பாட்டினால்
தன்னுடைய சரணான
தமியேனைப் புகலூரன்
என்னையினிச் சேவடிக்கீழ்
இருத்திடும்என் றெழுகின்ற
முன்னுணர்வின் முயற்சியினால்
திருவிருத்தம் பலமொழிந்தார்.

[ 426]


இறைவரின் திருவடியில் நிலைபெற்ற அறிவு இச்சை செயற்பாடுகளின் சேர்க்கையால், 'தம்மைப் புகலாக அடைந்த தமியேனான என்னைப் புகலூர் இறைவர் இனித் தமது சேவடியின் கீழ் இருக்கச் செய்வார்' என்ற கருத்துடன் முன்னைப் பிறவியின் உணர்வு சார, அவ்வுள்ள எழுச்சியினால் பல திருவிருத்தங்களைப் பாடினார்.

குறிப்புரை: இக் கருத்துடைய திருப்பதிகம் 'தன்னைச் சரண் என்று' (தி. 4 ப. 105) எனத் தொடங்கும் திருவிருத்தமாகும். இது பொழுது அருளிய திருவிருத்தங்கள் பல எனினும், எவையும் கிடைத்தில.

மண்முதலாம் உலகேத்த
மன்னுதிருத் தாண்டகத்தைப்
புண்ணியா உன்னடிக்கே
போதுகின்றேன் எனப்புகன்று
நண்ணரிய சிவானந்த
ஞானவடி வேயாகி
அண்ணலார் சேவடிக்கீழ்
ஆண்டஅர சமர்ந்திருந்தார்.


[ 427]


இம் மண்ணுலகம் முதலான எல்லா உலகங் களும் போற்றுமாறு நிலைபெறும் திருத்தாண்டக யாப்பிலமைந்ததும், 'புண்ணியா! உன் அடிக்கே போதுகின்றேன்!' எனும் நிறைவு உடையதுமான பதிகத்தைப் பாடிச், சென்று அடைதற்கரிய சிவப் பேறாகும் மேலாய ஞானவடிவேயான சிவபெருமானின் சேவடிக்கீழ் திருநாவுக்கரசர் மிகு விருப்புடன் இருந்தருளினார்.
குறிப்புரை: இந்நிறைவுடைய திருத்தாண்டகம் 'எண்ணுகேன்' (தி. 6 ப. 99) எனத் தொடங்கும் முதல் திருப்பாடல்ஆகும். இப்பதிகப் பாடல் தொறும் அடிகள் 'உன்னடிக்கே போதுகின்றேன்' என்னும் தொடரை அமைத்துப் பாடியுள்ளார். அவர்தம் திருவாக்காக நிறைவாக அமைந்த திருப்பதிகம் இதுவாகும்.
திருநாவுக்கரசர் செய ஆண்டு பங்குனித் திங்கள் உரோகிணி விண்மீன் கூடிய நன்னாளில் (கி. பி. 575 மார்ச்சு, ஏப்ரல்) தோன்றினார் எனவும், நள ஆண்டு சித்திரைத் திங்கள் 12 ஆம் நாள் (கி. பி. 656 ஏப்ரல் 24ஆம் நாள்) தேய்பிறை 10 ஆம் நாள் ஞாயிறு சதய விண்மீன் நாள் அன்று திருப்புகலூர்ப் புண்ணியனார் அடிசேர்ந்தார் எனவும் சாமிக்கண்ணு பிள்ளை அவர்களின் எபிமரீஸ் கூறுகின்றது என, நாயன்மார்கள் வரலாற்றில் பல்வகைச் செய்திகள் என்ற நூலில் வித்துவான் மா. சிவகுருநாதபிள்ளை எழுதியுள்ளார்.

வானவர்கள் மலர்மாரி
மண்நிறைய விண்ணுலகின்
மேனிறைந்த ஐந்துபே
ரியவொலியும் விரிஞ்சன்முதல்
யோனிகளா யினஎல்லாம்
உளநிறைந்த பெருமகிழ்ச்சி
தானிறைந்த சித்திரையிற்
சதயமாந் திருநாளில்.


[ 428]


இவ்வாறு திருநாவுக்கரசர் அமர்ந்திருந்த சித்திரைத் திங்கள் சதயத் திருநாளில், தேவர்கள் சொரிந்த மலர் மழையானது இவ்வுலகில் நிறைய விண்ணுலகில் எங்கும் ஐவகைத் துந்துபிகளின் ஒலிகளும் ஒலிக்கலாயின. நான்முகன் முதலாக அமைந்த எழுவகைப் பிறப்புள் தோன்றிய எல்லா உயிர்களும் தமக்குள் உயிர்க்கு உயிராய் நிறைவாகப் பெற்ற பெருமகிழ்ச்சி தழைய நின்றன.

குறிப்புரை:

அடியனேன் ஆதரவால்
ஆண்டஅர சின்சரிதப்
படியையான் அறிந்தபடி
பகர்ந்தேன்அப் பரமுனிவன்
கடிமலர்மென் சேவடிகள்
கைதொழுது குலச்சிறையார்
முடிவில்புகழ்த் திருத்தொண்டின்
முயற்சியினை மொழிகின்றேன்.

[ 429]


ஆண்ட அரசின் வரலாற்றை, அம்முனிவர் பெரு மானின் மணமுடைய மலர் என மென்மையான சிவந்த திருவடி களைக் கையாரத் தொழுது அத்துணையினால் அவருடைய அடிய வனாகிய யான் அறிந்த வகையால் எடுத்துரைத்தேன். அம்மேலான முனிவரின் மணமுடைய மலர் போன்ற மென்மையான திருவடி களைக் கையாரத் தொழுது, இனிக் குலச்சிறை நாயனாரின் அளவற்ற பெருமையுடைய திருத்தொண்டின் செயற்றிறனைச் சொல்லத் தொடங்குகின்றேன்.

குறிப்புரை:


Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location:

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song